காலம்

எஸ்.எம்.ஏ.ராம்

1.
பொற் காலங்களை
இழந்தாயிற்று;
இழந்தபின்னரே அவை
பொற்காலங்கள்
என்று புலனாயின.
புதிய பொற்காலங்களுக்காகக்
காத்திருப்பதில்
அர்த்தம் இல்லை.
காலம் கருணையற்றது.
பூமியின் அச்சு முறிந்து
அது நிற்கும் என்று
தோன்றவில்லை.
பிரபஞ்சத்தின்
பெருஞ் சுழற்சியில்
தனி மனிதனின்,
ஏன், ஒரு
சமூகத்தின்-
துக்கங்களுக்குக் கூட
மரியாதை இல்லை.

2.
எங்கே ஓடினாலும்
உன்னைத் துரத்தும் உன் நிழல்.
சட்டையைக் கழற்றுவது போலுன்
ஞாபகங்களைக் கழற்றி எறிவது
அத்தனை சாத்தியமல்ல.
தினம் தினம் சேரும்
ஞாபகக் குப்பைகளைச்
சுமந்து கொண்டு
கொட்ட இடமின்றித் தள்ளாடும்
இந்த மொட்டை வண்டி.
இதன் கடையாணி துருப்பிடித்தும்,
இதன் சக்கரங்கள் வலுவிழந்தும்
இதன் பாரம் மட்டும் சீராய்ப்
பெருகிக் குமியும்.
இதன் அச்சு முறிந்து
இது தரை கவ்வுகிற போதும்
இதன் மீதே குவிந்து மூடும்
இதன் ஞாபகக் குப்பை.

3.
சாரதீ, ரதத்தை நிறுத்து
பின்னோக்கிச் செல்.
அங்கங்கே வழியில்
இறைந்து கிடந்த
பவழங்களையும் முத்துக்களையும்
கூழாங்கற்கள் என்று ஏமாந்து
பொறுக்கத் தவறி விட்டேன்.
எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடு.
இந்த முறை தவறாமல்
அவற்றைப் பொறுக்கி எடுத்துச்
சேகரித்துக் கொள்வேன்.
ஆனால், நீ கருணையற்றவன்.
உனக்கு ரதத்தை
முன்னோக்கி மட்டுமே
ஓட்டத் தெரியும்.
உனது முரட்டு ரதத்தின்
முள் சக்கரங்களுக்கும்
முன்னோக்கி மட்டுமே
உருளத் தெரியும்.

4.
அமிர்தத்தைச்
சுரைக்குடுக்கையில்
ஏந்திக்கொண்டு
அழுக்காய் ஒருவன் எதிர் வர,
உதங்கன்* முகம் சுளித்து
அமிர்தத்தைப் பறிகொடுத்தான்.
நான் அமிர்தம் இழந்ததும்
அத்தகைய தருணங்களே.
(*உதங்கரின் கதை மகா பாரதத்தில் வருகிறது)
———————–

Series Navigationகரிகாலன் விருது தேவையில்லைநூல் கொண்டு ஆடும் பொம்மைகள்