கிருதுமால்

ஹரி ராஜா                                    

மழை என்றால் சாதாரண மழை இல்லை. பேய் மழை. மதுரை அப்போதிலிருந்தே வெப்ப பூமி தான். கோடையின் மாலைகளில் வரும் மழைக்காக ஏங்கித் தவிப்பார்கள் மதுரைவாசிகள்.

பெருமழை ஓய்ந்து சிறு தூரலாக மாற்றம் கொண்டிருந்த மாலை நேரம். அன்றைய மாலை குளியலை நதியில் கொள்ளலாம் என்று முடியு செய்தான் சத்திய விரதன். வழக்கத்துக்கு மாறாக தன் பரிவாரங்களைத் தவிர்த்துவிட்டு உரை வாளின் துணையுடன் மாறு வேடத்தில் கிளம்பினான் பாண்டியன். மின்னல் வேகத்தில் நதியின் கரையை அடைந்தது அவன் குதிரை. சூல் கொண்ட மேகங்களினால் நிறைந்திருந்த முன்னிரவு நேரத்து ஆகாயத்துக்குள்ளிருந்து லேசாகத் தலை நீட்டி வெளிச்சத்தையும் ஒருவித மனக் கிளர்ச்சியையும் தந்து கொண்டிருந்த்து நிலவு.

சத்தியவிரதன்  வைகையை விடவும் இந்த நதியையே மிகவும் விரும்பினான். கடம்ப மரங்களும் மூங்கில் காடுகளும் அரணாய் அமைந்த கிருதுமால் நதி மீது தீராக் காதல் கொண்டிருந்தான். கூடல் பெருமானின் பாதம் தொட்டுச் செல்லும் இப்பிரவாகத்தில் நீராடுவதன் மூலம் தன் பாவக் கணக்குகள் தீரக் கூடும் என்று நம்பினான்.

’ஓம்  நமோ நாராயணாய’ என்றவாறே தலையில் நீரைத் தெளித்துக் கொண்டு நதிக்குள் இறங்கினான். மெலிந்த- உயரமான உருவம் ஒன்று நதிக்குள்ளிருந்த நிலவை துரத்திக் கொண்டே சென்று கொண்டிருந்தது. நிலவின் பிம்பம் கலைந்து கொண்டே இருந்த்து. “இப்போது நீ மட்டுமே என் துணை” என்றான் தலை தூக்கிப் பார்த்தவாறே.

நதியின் குளிர்ச்சி அவனுக்குள் புத்துணர்வைக் கொடுத்தது. மார்பளவு நிற்கும் கிருதுமால். அந்தப் பெருமாளையே அணைத்துக் கொள்வது போன்ற நினைப்பும் அது தந்த எல்லையில்லா ஆனந்தமும் அவனைக் கிறங்கடித்த்து. அவன் உடலின் ஒவ்வொரு மயிர்க்கால்களும் குத்திட்டு நின்றன.‘ஓம் நமோ நாராயணாய’ என்று மீண்டும் சொல்லிக் கொண்டே நதிக்குள் மூழ்கினான்.

”சத்தியவிரதா”

கிழக்குத் திசையிலிருந்து வந்த அழைப்பைக் கேட்டு நதிக்குள்ளிருந்து எழுந்தவன் முதலில் கண்டது கூடல் பெருமான் திருக்கோவிலின் கோபுரத்தைத்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எந்தத் திசையிலும் மனிதரின் அரவத்தையே காணவில்லை. பிரம்மைதான் என்ற முடிவுக்கு வந்தான். இம்முறை மூழ்கப் போனவனை மீண்டும் அழைத்தது அந்தக் குரல்.

“சத்தியவிரதா”

திரும்பிப் பார்தவனுக்குள் லேசான பதற்றம். ‘நாராயணா’ என்று  தன்னை அறியாமாலேயே உச்சரித்தன அவனது உதடுகள். வாள் கரையிலிருப்பது மறந்து அவனது கை இடைப் பகுதியைத் துளாவியது.

“இங்கு தானப்பா இருக்கிறேன். என்னைக் கண்டு கொள்ள இயலவில்லையா?

இது என்ன விந்தை! மீன் பேசுமா? இரத்தம் உறைந்து போய் நின்றான் பாண்டிய மன்னன்.

“நீ……நீ……நீயா பேசினாய்?”

“நான் தான் பேசினேன். உனக்காவே இங்கு வந்தேன்”

“யார் நீ?”

கேள்வி கேட்டவனுக்கு தன் சுயத்தைக் காட்டினான் அந்த வேஷதாரி. சங்கு சக்கரத்துடன் விண்ணைப் பிளந்து நின்ற திருமாலின் அடியைத் தேடி மூழ்கினான். சத்தியவிரதன் பாக்கியவான். தாமரைப் பாதங்கள் அவனுக்கு அகப்பட்டது.

”பேரதிர்ஷ்டம் செய்தேன். துன்பங்கள் தொலைந்தன.” அவன் நாவிலிருந்து எந்தவொரு சொல்லும் தெளிவாக வெளிவரவில்லை.

மீண்டும் மீனின் உருவத்தை அடைந்து பாண்டியனுக்கு அஷ்டாட்சர உபதேசத்தை வழங்கினான் அந்தக் கருணா மூர்த்தி.

*********

சன்னல் வழியாக எட்டிப் பார்த்தார் வாசுதேவன். மழை முற்றிலுமாக நின்றிருந்தது. அவர் முடிவுரை வழங்கினார்.

“அதுமட்டுமில்லேடா. அதுலேர்ந்துதான் பாண்டிய ராஜாக்கள் எல்லாம் அவாளோட சின்னமா மீனை வெச்சுண்டா. உண்மையான பக்தியிருந்தா எந்த பேதமும் பாக்க மாட்டான் பரந்தாமன்”

கதை கேட்டுக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனான ரெங்கராஜன் பக்திப் பரவசத்திலிருந்தான். மழலைக் குரலில் அவன் “ஓம் நமோ நாராயணாய” என்று சொல்ல, தன் பெயரனது இரு கன்னங்களிலும் முத்த மழை பொலிந்தார் வாசுதேவ ஐயங்கார்.

அவருக்கு அடிவயிற்றை முட்டிக் கொண்டு வந்தது. கழிவறையை நோக்கி விரைந்தார்.

மேற்கத்திய வகை கக்கூஸில் இருந்து பேரிரிரைச்சலுடன்  வெளியேறிய  அவரது சிறுநீர் கழிவுத்தொட்டியைக் கடந்து அந்தச் சாக்கடையை நோக்கி விரைந்தது. ஆம்! அதே கிருதுமால் தான்.

Series Navigationவளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.