கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்

தென்னாளி.

  கிழவனும் கடலும் என்னும் ஹெமிங்வேவின்  படைப்பு ஒரு குறியீட்டு புதினமாகும்.

சாண்டியாகு என்னும் மீன் பிடிக்கும் கிழவரே புதினத்தின் கதைத் தலைவர். ஒரு மனிதன்  வெற்று அதிஷ்ட்டத்தின் மூலமோ  பிறரது உதவி அல்லது தயவின் மூலமோ ஒருபோதும்வெற்றிக் கனியைப் பரிக்கமுடியாது என்னும் அழுத்தமான செய்தியயே   படைப்பு துள்ளியமாக வலியுறுத்துகிறது.

 லட்சிய வாழ்க்கையில் தடைகள் பல வரினும்

இடையூருகளும் குறுக்கீடுகளும் ஏற்படினும்  ஒரு மனிதன் ஒருபோதும் தான் அடையத் துடிக்கும்  மேலான குறிக்கோளை  கை விடலாகாது என்பதும்,நாம் அடைய விரும்பும் இலக்கு அதி உன்னதமானதாக உச்சமானதாக இருத்தல் வேண்டும் என்பதுமே  இந்தப் புதினம் வாசகனுக்கு உணர்த்தக்கூடிய  செய்தியாகும். எண்ணிய எண்ணியாங்கு எய்துதலில் திண்மையும், ஊக்கமும், செய்யும் கருமத்தில் மூர்க்கமான ஈடுபாடும் ஒரு மனிதனுக்கு இருப்பின் அவன் வெற்றியின் எல்லையை,இமாலய சாதனையை அடையமுடியும் என்பதர்க்கு சாண்டியாகுவின் வெற்றியே சாட்சியாகும்.  வாழ்க்கையே கடல்; யாரும் பிடிக்கமுடியாத மீனே இலக்கு;  மீனாகிய இலக்கை அடைவதைத் தடுக்க சிறு பறவை போன்ற சபல குறுக்கீடுகளும், சுராக்களாகிய பேரிடர்களும் வரினும் கிழவரைப் போல நாமும் தளராமல் பொருள், கருவி, காலம், வினை, இடம் ஆகியவற்றை மூலதனமாக்கி விடாமுயற்சி என்னும் தூண்டிலைக்கொண்டும், நமக்கு அமைந்திருக்கும்  வாய்ப்பு என்னும்    படகின் துணைகொண்டும்  மெய் வருத்தம் பாராமலும்,  பசி நோக்காமலும்,  கண் துஞ்சாமலும்,செவ்வி அருமையைப் பாராமலும், பிறரின் அவமதிப்பை பொருட்ப்படுத்தாமலும் உழைத்திட்டால்? வெற்றியாகிய   மீன் என்ற விலைமதிக்கமுடியா பரிசு கிடைத்தல் உறுதியன்றோ?

 நமக்கு கிடைக்கக் கூடிய வெற்றி மீனின் சில பகுதிகளை ஒரு வேளை சுராக்கள்என்ற துன்ப துயரங்கள்  கொஞ்சம்  பரித்துக்கொண்டாலும் அதனால் இலட்சியவாதிக்கு ஒருபோதும் பாதகமில்லை. இலக்காகிய மீனை ஒருவன் அடைந்துவிட்டால் கிழவரைப் போல இருதியில் அம்மனிதன் அடையக்கூடியது முழு நிறைவென்னும் பேராநந்தமன்றோ? அப்போது அதிஷ்ட்டமற்றவனென்றோ கைய்யாலாகாதவனென்றோ இகழ்ந்தொதுக்கிய ஊர் மக்களைப் போன்றவர்கள் பெருமீனைக் கண்டு அதிசயித்து நின்றதைப்போல வெற்றியாளனின் வெற்றியை   புகழ்வரன்றோ? கிழவருக்கு உதவிக்கு இருந்த சிறுவன் அவனது தந்தையின்  வர்ப்புறுத்தலால் தவிர்க்கமுடியாமலும் விருப்பமின்றியும் பெரியவரை தன்னந்தனியே  விட்டுச் செல்வதைப்போல, நம் வாழ்க்கைப் போராட்டத்திலும் நாம் ”உடன் வருவார்,உற்றுழி  உதவுவார்” என கருதும் சக மனிதரும் சூழ்நிலைக் கைதிகள் அன்றோ? “தன் கைய்யே தனக்குதவி” என்னும் பொன்மொழிக்கு ஒப்ப நமக்கான இலக்கை நாமே தேர்ந்தெடுத்து இருதிவரை உறுதியுடன் போராடலே “வெற்றியின் உண்மை இரகசியம்” என்ற கருத்தாக்கம் இப்புதினத்தின்வழி வெளிப்படுகிறது. புதினத்தில் கிழவரைக்  கண்டு அவரது வயோதிகத்தை முன் நிருத்தி    எள்ளி நகைக்கும் மீனவரைக் குறித்து பெரியவர் கோபம் கொண்டதுமில்லை.  அவருக்காக அனுதாபப்படும் மீனவரின் நிலைக்காக அவர் வருந்தியதுமில்லை. அவர்களால் ஒரு பயனும் விளையப்போவதில்லை என்பது பெரியவருக்கு தெரியும். பெரிய  இலக்கை உடையோரும்ஏளனக் குறல்களையும் அனுதாப அலைகளையும் பொருட்படுத்தலாகாது என்பது கிழவர் வழி இலட்சியவாதி உணரவேண்டிய நடைமுறைப் பாடம்.

புதின வகை அடிப்படையில் நாம் இந்தப் புதினத்தை “குறிக்கோள் உணர்த்தும்  புதினம்”அல்லது ” வாழ்க்கைத் தத்துவ தேடல்  புதினம்” என பகுக்க புதினம் இடமளிக்கிறது.

 படைப்பின் வெற்றிக்கு காரணங்கள் எவை?

 ஹெமிங்வேவுக்கு இந்தப் புதினம் நோபல் பரிசை பெற்றுத் தந்ததாக அறியும்போது {நோபல் பரிசுக்கு நிச்சயம் தகுதியான புதினம்தான் இது} என வாசகன்  எண்ணும் வகையில் புதினம்  அமைந்துள்ளது. குறைவான கதைமாந்தர்கள், அந்தக் கதை மாந்தரை வாசகரின் மனத்தில் அழுத்தமாகப் பதியக் கூடிய வகையில் ஆசிரியர் அமைத்திருத்தல்,நாமே கிழவராக, சிறுவனாக,  கடலாக, பறவையாக,  மீனாக, சுறாக்களாக என்றெல்லாம் மாரி மாரி புதினத்தின் பாத்திரங்களாக நம்மை பயணிக்கச் செய்தல் ஆசிரியரின் முழுமையான வெற்றியாகும். இந்தவகையிலான போக்கும் புதினத்தின் வெற்றிக்கு காரணமெனலாம்.      புதின பாத்திரங்களுக்கிடையே வெறுப்போ, வன்மமோ, கோபமோ, பகையோ இல்லாமல் இருத்தல்வியப்புக்குறிய நிகழ்வாகும். தேவை அடிப்படையிலேயே பாத்திரங்கள்  இயங்குகின்றன. சுறாக்களின் பசிக்கு மீன் தேவை. மனிதனின் இலட்சியப்  பசிக்கும் அந்த மீனே தேவை அல்லவா?என வே மனிதனுக்கும் இயர்க்கைக்கும் இடையிலான போராட்டம் தவிர்க்கவே முடியாததாகிவிடுகிறது. ஆனால் அந்த போராட்டம் வன்மத்தின் அடிப்படையானதன்று. கிழவரின் இயர்க்கை நேசம் அழப்பறியது. காலம், சூழ்நிலை,தன் நிலை என்பனவற்றையெல்லாம் உய்த்துணர்ந்தே கிழவர் கடலில் இயங்குகிறார். இயர்க்கையை அவர் ஒருபோதும் எதிரியாக எண்ணியதில்லை.      மனிதனுக்கும் இயர்க்கைக்குமான போராட்டத்தில் எவரை எவர் வெல்லுவாரோ? எவரை எவர் தோர்க்கடிக்க நேருமோ? என்பதான புதிரினை உறுவாக்கிய ஆசிரியர் தானும் ஒரு மனிதன் என்பதாலும், தன் நம்பிக்கையை மனித குலத்துக்கு ஊட்டவேண்டும் என்பதாலும் தம் கதையின் இருதியில் கிழவனுக்கே வெற்றியை அளிக்கிறார். ஆனால் தன் வெற்றிக்காக கிழவன் ஆனந்தக் கூத்தாடுவதில்லை. கடலில் மீனோடும் சுறாக்களோடும் போராடும்போதும் அவற்றுடன் பகை பாராட்டுவதில்லை. மாறாக அவற்றோடு  அன்பு மொழி புகல்வதைக் காண்கிறோம். ”குறிக்கோளுக்கான போராட்டத்தில் எவருமே எதிரி இல்லை” என்பதே           படைப்பு வழி வெழிப்படும்  தெளிவான உண்மையாகும். இந்த உண்மையைவாசகனுக்கு கிழவரும் பிற பாத்திரங்களும் தங்கள் செயல்கள் ஊடாக வெளிப்படுத்தும் நிலை கதையில் அமைந்துள்ளது. இதுவும் படைப்பின் வெற்றிக்கு மற்றொரு காரணியாக அமைந்துள்ளது எனக் கருத இடமுண்டு.     ஆற்றொழுக்கான மொழி நடை, சுருங்கச் சொல்லல், சுவைபடச் சொல்லல் எளிமையான கதைப்பின்னல், ”அடுத்து என்ன நடக்கும்? கதை எப்படி முடியும்? ”என்பது போன்ற வாசகரின் எதிர்பார்ப்புக்கு ஏர்ப்ப கதையில் ஒருவிதமான விறுவிறுப்பும் பறபறப்பும் இருத்தல்    போன்ற பண்புகள் புதினத்தில் அமைந்துள்ளன ஒரு மொழி பெயர்ப்பு புதினத்தை  வாசிக்கிறோம் என்பதான எண்ணமே இல்லாமல் வாசகனை   படைப்பு ஈர்க்கும் வகையில் நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நம் மொழியிலும் வண்ணநிலவனின் கடல்புரத்தில்,இராஜம்கிருஷ்ணனின் அலைவாய்க்கரையினிலே,ஜோ. டி.குருசுவின்  ஆழிசூழ் உலகு, கொர்க்கை,மீரானின்  ஒரு கடலோர கிராமத்தின் கதை,துறைமுகம்,சு. தமிழ்செல்வியின் கண்ணகி, அளம்   உள்ளிட்ட பல புதினங்கள்  வெளி வன்துள்ளன.  தமிழ் படைப்பாளிகள்  சித்திரிக்கும் கடல் குறித்த வாழ்க்கை என்பது பெரும்பாலும் பரதவ இன மக்களின் வாழ்க்கைப் போராட்டம், அவர்கள் வாழ்வில் இடம் பெறும் உறவு நிலை இடைவெளி, பிறப்பு முதல் இறப்பு வரை அவர்கள் எதிர்க்கொள்ளும் பல்வகை அனுபவங்கள்,திருமணம், பல்வகை சடங்குகள், சமயத்தால் அவர்கள் வாழ்வில்  எதிர்க் கொள்ளும் சிக்கல்கள், போன்ற வாழ்வியல் சார் நிகழ்வுகளே  வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே தமிழ் படைப்பாளிகளின் புதினங்கள் கிழவனும் கடலும் என்ற புதினத்தோடு ஒப்பிட மிகைநடப்பியல் சார் புதினங்களாக அமைந்துள்ளன.  பெரும்பாலும் கடல் ஓரத்தில் வாழும் மக்களின் குடும்பங்கள், குடும்பங்களில் தனி மனிதனுக்கும் பிற உறவினருக்கும் இடையே எழும்பும் போராட்டங்கள், குடும்பங்கள் இணைந்த  சமூகங்களிலும்,வெவ்வேறு கடல் துறை சார்ந்த சமூகங்களுக்கிடையேயும் நிகழும் மோதல்கள்,முதலியவற்றின் அடிப்படையிலும், கடல் வாழ் மக்களின் வாழ்வை காலம் அல்லது வரலாற்று அடிப்படையில் விவரித்தல் என்ற போக்கிலும்   தமிழ் கதைகள் நகர்த்தப்படுகின்றன. தமிழ் புதின ஆசிரியர்கள்  விவரிக்கும் கதை மாந்தர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் அவர்களை ஹெமிங்வேவைப்போலநம் கதையாசிரியர்கள் வாசக மனத்தில் பதியவைக்கத் தவறிவிடுவதாக வாசக மனம் எண்ணவேண்டியுள்ளது.  ஆனால் கடலும் கிழவனும் என்ற புதினமோ வெளிப்படுத்தும்    கதை நிகழ்வுகளின் பின்புலமும் கதைப் போக்கும் தனித்துவமும் நுட்பமும் வாய்ந்த அனுபவத்தை வாசகருக்கு அளிக்கிறது.  அந்த நிலைப்பாடே கதைக்கு வெற்றியை அளிக்கிறதென்பது நிதரிசனமான உண்மை.

Series Navigationகவிதைதாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்