குகை மா. புகழேந்தி எழுதிய ” அகம் புறம் மரம் ” —-நூல் அறிமுகம்

Spread the love

srirangan sowrirajan

நல்ல கவிஞன் என்ற பெயரை இதற்கு வந்த தொகுப்பிலேயே பெற்றவர் குகை மா. புகழேந்தி. ” அகம் புறம் மரம் ” என்ற இப்புத்தகத்தில் எல்லா கவிதைகளும் மரங்களைப் பற்றித்தான் பேசுகின்றன. தமிழச்சி தங்க பாண்டியனின் அணிந்துரை அழகாக இருக்கிறது. சிறு கவிதைகளும் சற்றே பெரிய கவிதைகளும் மரத்தின்
இயல்புகளை, பெருமைகளைச் சொல்கின்றன. அசலான கவிமனத்தின் போக்கில் புதிய புதிய சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார் புகழேந்தி. மாதிரிக்குச் சில…

மிகச் சிறிய விதைக்குள்
இத்துணைப் பிரம்மாண்டமான மரம் இருப்பது
நமக்குள் மிகப்பெரிய சக்தி இருக்கிறது
என்பதைப் புரிந்து கொள்வதற்காகத்தான்

என்று நம்பிக்கையுடன் மரத்தை நம் மனத்துள் நிறுத்தி விடுகிறார் கவிஞர். அப்படி மரத்தில் என்ன இருக்கிறது ?

மரங்களில்
என்ன இருக்கிறது பிரமாதம்
மரமாய் இருப்பதுதான் பிரமாதம்

எங்கு சுற்றலும் இவர் திரும்பி வந்து நிற்கும் புள்ளி மரம்தான்.

மரங்களோடு
பேசிகொண்டிருக்கிறேன் தினமும்
இன்று விட்ட இலைகளும்
மலர்ந்த பூக்களும்
எனக்கான வார்த்தைகள்தான்

புகழேந்தி தன் மனத்தை மரத்தின் மேல் சொற்களால் ஒத்தி ஒத்தி எடுக்கிறார். மரத்தைக் குழந்தையாகப் பாவிக்கிறார்.

மாபெரும் மரத்தின்
வேர்களைத் தடவிக் கொடுக்கிறேன்
இன்னும் கொஞ்சம் நீள்கின்றன கிளைகள்

புதிய கற்பனை ; புதிய படிமம். இப்புத்தகத்தின் தலைப்பு அகம் புறம் மரம் ” இந்த மூன்று சொற்களும் ஒரு கவிதையாக மாறுகின்றன.

அகம்
புறம்
மரம்

இதைவிடச் சிறு கவிதை உண்டா ? அணி அழகுடன் ஒரு கவிதை…

எங்கு பார்த்தாலும்
எப்போது பார்த்தாலும்
அமைதியாகவே இருக்கின்றன மரங்கள்
அவை நமக்குச் சொல்வதும்
அதை மட்டும்தான்
அமைதியாக இருங்கள்

மெல்லிய நகைச் சுவையுடன் ஒரு கவிதை…

காதலி வருவாளென்று
மரத்தடியில் காத்திருந்தேன்
கடைசி வரை அவள் வரவேயில்லை
மரங்களின் காதலனாகி விட்டேன்

புகழேந்தியின் மர நேயத்திற்கு அளவேயில்லை.

அலகுகள்
கொத்தித் திங்கிற அழகுக்கே
பழங்களைப் பிரசவிக்கின்றன மரங்கள்

இத்தொகுப்பைப் படித்ததும் நம் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. மரம் வளர்க்க வேண்டும் என்பதுதான் அது. இப்புத்தகத்தின் நோக்கமும் இதுதான். சமூக அக்கறை
கொண்ட உணர்வுள்ள இப்புத்தகத்தை எல்லோரும் படிக்க வேண்டும். வெளியீடு : பட்டாம்பூச்சி பதிப்பகம் , சென்னை -87 பக்கங்கள் 128 விலை ரூ 70.

Series Navigationபுத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள்“எதிர்சினிமா” நூல் வெளியீடு