குதிரை வீரன்

பாட்டன் காலத்தில்
ஊரின் மையத்தை
தனக்கான இடமாக‌
ஆக்கிரமித்துக் கொண்ட
வரலாறில்லாத‌
குதிரைவீர‌ன் இன்றும்
முன்கால்கள் தூக்கிய
குதிரையின் மீது
அமர்ந்திருக்கிறான்.

கருத்த அவன் தலையை
வெள்ளைப்படுத்தும்
போட்டியொன்றில்
காகமொன்று
கண்ணிழந்தும்
பருந்தொன்று
இறக்கை இழந்தும்
அவ‌ன் பாதத்தைச்
சிவ‌ப்புப்ப‌டுத்தின.

புதிதாய் அரசேற்ற
ம‌‌ந்திரிக்கு குலப்பெருமை
எழுத‌வென‌ வீதியெங்கும்
அலைந்து திரிந்த‌வ‌ர்க‌ள்
குதிரைவீரன் கதை
பற்றி பலஆராய்வு
நடத்தி சிலபுத்தகம்
வரையலாயினர்.

இல்லாத வெற்றிகளை
அவர்களின் பக்கங்கள்
நிரப்பிக்கொண்டிருந்தன
அவரவர் கற்பனைக்கும்
வெகுமதிக்கும் தக்க‌வாறு.

பால‌த்தின் நிழ‌ல்
க‌ட‌ற்க‌ரை காற்று
நடுத்தார்ச்சாலையென
காகத்துக்கும்
பருந்துக்கும் பயந்து
இருப்பிடம் மாற்றி
நிற்கும் குதிரைவீரன்
மந்திரியின் பாட்டனென்று
வெற்றிக் க‌ளிப்பை
சும‌ந்து கொண்டு
நிக்கலானான்.

-சோமா (sgsomu@yahoo.co.in)

Series Navigationசோபனம்கடைசித் திருத்தம்