குருட்ஷேத்திரம் 2 (பாஞ்சாலியின் சபதம் தான் குருட்ஷேத்திர போருக்கு காரணம்)

 

 

அர்ச்சுனனுடைய குறி எப்போதும் தப்பியதே இல்லை. அர்ச்சுனனுடைய அம்பு இலக்கை அடைந்தபோது சுயம்வர மண்டபத்தில் வில்வித்தையில்  தோற்றதினால் மனம் குமைந்து கொண்டிருந்த துரியோதனனும் கர்ணனும் தலைகுனிந்து கொண்டார்கள். திரெளபதியின் பேரழகு இவளோடு ஓரிரவாவது வாழ்ந்துவிடமாட்டோமா என்று ஆடவர்களை ஏங்க வைக்கும். இன்னொருவனின் மனைவியாகப் போகின்றவளை துரியோதனன் வஞ்சகமாக அடையத் துடித்தான். அவனுடைய வெறி எதில் போய் முடியுமென்று வியாசருக்குத் தெரிந்திருந்தது.

 

அர்ச்சுனன் தாயிடம் ஆசிபெற வருகிறான். வில்வித்தையில் வென்று பாஞ்சால தேச இளவரசியை கரம் பற்றியதாக அர்ச்சுனன் குந்தியிடம் தெரிவிக்கிறான். குந்தியின் யோசனை வேறு மாதிரியாக அமைந்தது. திரெளபதி நிகரற்ற அழகியாக இருக்கிறாள், இவளுக்கு சமமான சவுந்தர்யம் கொண்டவளை மற்ற நான்கு பேருக்கும் தன்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. அந்தப்புரத்தில் அவர்கள் கொஞ்சுவதையும், சீண்டி விளையாடுவதையும் மற்றவர்கள் பார்க்க நேர்ந்தால் அவர்கள் உள்ளத்தில் காம நெருப்பு பற்றி எரியாதா? தன்னை வென்ற யோகிகளைக் கூட தடுமாறச் செய்யும் அழகு திரெளபதியுடையது.

 

ராஜமாதா நீங்கள் ஐவரும் இவளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறாள். பாஞ்சாலி நொறுங்கிப் போய்விட்டாள். தன்னை இவ்வுலகம் வெறும் உடலாய் மட்டுமே பார்க்கிறதே என்று உள்ளுக்குள் குமுறினாள். சங்ககாலம் தொட்டே பெண்ணால்தான் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. குந்தி தன்னை திரெளபதியின் நிலையில் வைத்துப் பார்த்திருந்தால் இந்த முடிவுக்கு வருவாளா? திரெளபதியின் உள்ளத்தை வென்ற அர்ச்சுனன் தாயின் பேச்சுக்குத் தலையாட்டிக் கொண்டு நின்றான்.

 

பெண்களிடத்திலிருந்து பிறந்து வருவதால் தான் மனிதன் உள்ளத்தில் ஒருநெருப்பு கனன்று கொண்டேயுள்ளது. ஆண் கடவுளிடமிருந்து நூறடி தொலைவில் இருந்தால், பெண் ஆயிரம் அடி விலகி நிற்கிறாள். அவள் விரதமிருந்தும், பூமிதித்தும் வேண்டுதல்களை கேட்டுப் பெறுவாளே அன்றி, கடவுளைக் காண வேண்டுமென்றோ, ஆத்மாவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையோ அவளிடம் சிறிதுகூட இருந்திருக்கவில்லை. மனிதனுக்கும் ஆத்மாவுக்கும் மத்தியிலே மனம் என்ற ஒன்று இருக்கிறதே அதுதான் பெண். அந்த மனம் உண்டாக்கிய மாயைதான் இவ்வுலகம்.

 

தன்னை வெல்லும் வாய்ப்பினை சில பேருக்கு மட்டுமே பெண் வழங்குகிறாள். தருமன் தர்மத்தின் வழியில் நடப்பது பாஞ்சாலிக்கு உகந்ததாய் இல்லை. உங்கள் தர்மம் சாவதற்குத்தான் வழிகாட்டும் என்பாள். துரியோதனன் சதுரங்க ஆட்டத்தில் ராணியைத்தான் குறிவைக்கிறான். தான் கேலிப்பொருளாக ஆவதை எந்த ஆண்மகனும் விரும்பமாட்டான். திரெளபதி எப்போதோ செய்த கேலி அவன் மனதை புழுவைப் போல் குடைந்து கொண்டிருக்கிறது. தன்னால் அடைய முடியாதவளை அவமானப்படுத்த தக்க வாய்ப்பு கிடைக்காதா என அலைகிறான். சகுனி அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறான்.

 

தருமன் தன் சகோதரர்களையும், பாஞ்சாலியையும் சூதாட்டத்தில் பணயம் வைத்து தோற்ற போது. அவைக்கு இழுத்துவரப்பட்ட பாஞ்சாலி அவையில் உள்ளோரிடம் நெருப்பாகச் சீறுகிறாள். முதலில் தன்னை பணயம் வைத்து இழந்தவருக்கு என்னை பணயம் வைக்க அவருக்கேது உரிமை என்கிறாள். இதற்கு நாலும் அறிந்த பீஷ்மர் இப்படி பதிலளிக்கிறார் தருமன் தன்னை முதலில் வைத்து இழந்தாலும் தருமனுக்கு நீ மனைவியில்லை என்று ஆகமுடியாது, எனவே கணவன் அடிமையென்றால் அவன் மனைவியும் அடிமைதான் என்கிறார். இதன் மூலம் பீஷ்மர் தாங்வொண்ணாத் ஒருதுயர நிகழ்வுக்கு தயாராகத்தான் இருந்திருக்கிறார் என்று புலனாகிறது.

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ்