குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்குவது குறுந்தொகை ஆகும். இஃது எட்டுத் தொகையில் இடம் பெறும் அகநூல்களுள் ஒன்றாகும். இதில் கடவுளரைப் பற்றியும், கடவுள் வழிபாடு குறித்தும் பல்வேறு தொன்மக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழந்தமிழரின் சமய நம்பிக்கைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன.

தொன்மம் – விளக்கம்

தொன்மம் (Myth) என்பது பழமை எனப் பொருள்படும். அகராதிகள் தொன்மம் என்பதற்கு பழமை, செய்யுளில் இடம் பெறும் எண்வகை வனப்புகளில் ஒன்று எனப் பொருள் தருகின்றன.

பொதுவாக தொன்மம் எனப்படுவது பண்டைய மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கலைகள் போன்ற வாழ்க்கையைச் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்கு முறைகளைக் குறிக்கும்.

‘‘தமிழில் வீரம் என்பதற்கு நிகரான சொல்லாக ‘பெருமிதம்’ என்பதனை பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். அதுபோலவே புராணம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக ‘தொன்மை’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது’’ (யாழ். சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப., 8)

தொன்மம் என்பது நமக்குள் புதிதாக உருவாவதன்று அது நம் பிறப்பிலிருந்தே உண்டு என்பதை, ‘‘தொன்மமானது மனத்தின் விழிப்புநிலையில் ஆழ்மனத்தில் கருப்பெறுகின்றது. நம்மைக் கேட்காமலேயே உடல் வளர்வதைப் போலவே இயற்கையாகவே தொன்மங்கள் உரம் பெறுகின்றன’’ ( கதிர்.மகாதேவன், தொன்மம், ப. 19) என்கிறார் கதிர் மகாதேவன்.

‘‘தொன்மம் என்பது புனிதமான உண்மை (Sacred Trued) என்கிறது அமெரிக்கானா கலைக்களஞ்சியம்.  மேலும், தொன்மம் செயல்பாட்டின் அடிப்படையில் சடங்குகளுடனும் சமயங்களுடனும் தொடர்புடைய சமுதாயம் சார்ந்த கதை’’ (யாழ்.சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப. 49) எனலாம்.

Myth (மித்) என்ற ஆங்கிலச் சொல் Myth என்ற கிரேக்கச் சொல்லின் வேர்ச் சொல்லாகும். இதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக ‘தொன்மம்’ கையாளப்பட்டு வருகிறது. கடவுள் பற்றியும் உயர்மனிதர்கள் பற்றியும் அமைந்த செய்திகள் தொன்மத்தில் அடங்கும்.

தொன்மம், பழமரபுக் கதைகள் இரண்டும் ஒன்றுமையுடையதாக இருப்பினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு தொன்மம் கடவுளர் செயல்களை விரித்துரைப்பது; பழமரபுக் கதைகள் மனிதர்களை முதன்மைப்படுத்துவது; சமயம் சார்ந்தும் சடங்குகளைப் பற்றி விளக்குவதும் தொன்மத்தில் அடங்கும்.

தொல்காப்பியம் தரும் விளக்கம்

தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் தொன்மம் என்பதற்கு,

‘‘தொன்மை தானே சொல்லுங் காலை

உரையொடு புணர;ந்த பழமை மேற்றே’’

என்கிறது தொன்மை எனப்படுவது, உரையோடு கூடிய பழமையாகிய கதைப் பொருளில் வருவது’’ (தொல் – செய். இளம்பூரணர் உரை, நூ.எ., 538)என்று இளம்பூரணர் உரை விளக்கமளிக்கிறது.

மேலும், முதல் பொருளுள் நிலம் பற்றிக் கூற விளைந்த தொல்காப்பியர்,

‘‘மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’

(தொல்., அகத்திணை., நூற்பா, 5)

என்ற இந்நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார்.

குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்

குறுந்தொகையில் இடம் பெறும் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை,

1.முருகன் பற்றிய தொன்மம்

2.கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்

3.இயற்கை வழிபாடு

4.நடுகல் வழிபாடு

என நான்கு வகையாகப் பகுக்கலாம்.

முருகன் பற்றிய தொன்மம்

‘‘சேயோன் மேய மைவரை உலகம்’’ எனத் தொல்காப்பியம் செப்புவதிலிருந்து குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்பது புலனாகிறது.

குறுந்தொகையில் முருகன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.  முருகப் பெருமான் அசுரர;களை அழித்த புராணச் செய்தியை,

‘‘செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த

செங்கோ லம்பின் செங்கோட்டி யானை

கழல்தொடிச் சேஎய் குன்றம்’’ (குறுந்.,பா.உ.1)

என்ற வரிகள் விளக்கி நிற்கின்றன.  இதேபோல் முருகன் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை,

‘‘அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இனர்

மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து’’

(திருமுருகாற்றுப்படை, 59-60 வரிகள்)

எனத் திருமுருகாற்றுப்படையும்,

‘‘பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு

சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர்உழக்கி

தீஅழல் துவைப்ப திரிய விட்டெறிந்து

நோயுடை நுடங்கு சூர்மா முதல் தடிந்து

…………………

மாய அவுணர் மருங்குஅறத் தபுத்த வேல்’’

(பரிபாடல் செவ்வேள் 5 : 1-7 வரிகள்)

எனப் பரிபாடலும் எடுத்துரைக்கின்றன.  இச்செய்தியினைக் கந்தபுராணத்திலும் காணலாம்.

கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்

மலையின் ஒரு பகுதியில் இடம் பெற்ற அணங்கு போன்ற பெண் தெய்வம் அல்லது தெய்வத்தால் வரையப்பட்ட பாவை கொல்லிப்பாவையாகும்.

சேர மன்னனின் மலையின் மேற்குப் பகுதியில் வருத்தக் கூடிய கொல்லித் தெய்வம் இருந்ததனை,

‘‘பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய

நல்லியற் பாவை’’ (குறுந்தொகை, ப., 130)

என்ற பாட்டாலும்,

‘‘வல்வில் ஓரி கொல்லிக் குடவரை

பாவையின் …….. ……….. ……..’’

என்ற பாட்டாலும் அறிய முடிகிறது. மேலும்,

‘‘…………. ………… பயங்கெழு பலவின்

கொல்லிக் குடவரை பூதம் புணர்த்த

புதிதியல் பாவை’’                       (குறுந்தொகை, ப., 145)

என்ற பாடல் வாயிலாகவும், கொல்லிமலையின் மேற்குப் புறத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவை உண்டென்பதை,

‘‘பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக்

குடவயின் ……….. …………… ……………

நெடுவரைத் தெய்வம் எழுதிய

வினைமான் பாவை’’

(நற்றிணை, பா.எ., 192)

என்ற பாடலின் வாயிலாகவும் உணர முடிகிறது. இவை கொல்லித் தெய்வம் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

இயற்கை வழிபாடு

பண்டையத் தமிழர்கள் இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்தனர்.  அதனால், அச்சத்தைப் போக்க எண்ணி இயற்கையோடு கூடியியைந்து வாழ்ந்தனர்.

சங்க கால மக்கள் பெண்கள் பிறையைத் தெய்வமாக தொழுது வணங்கினர் என்பதை,

‘‘செவ்வாய் வானத் தையெனத் தோன்றி

இன்னம் பிறந்தன்று பிறையே’’

(குறுந்தொகை, ப., 459)

என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இப்பாடலில் பிறையைப் பலசமயத்தோடும் தொழுதனர் என்ற செய்தி இடம் பெறுகிறது.  மேலும் கன்னிப் பெண்களும் பிறையை வணங்கினர். இச்செய்தியை,

‘‘ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்

புல்லென் மாலை’’       (அகநானூறு, பா.எ., 239)

என்னும் அகநானூற்றுப் பாடல் வரிகளும்,

‘‘குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்

வழிவழி சிறக்க நின்வலம்படு கொற்றம்’’

(மதுரைக் காஞ்சி, 193-194 வரிகள்)

எனும் மதுரைக் காஞ்சி வரிகளும் புலப்படுத்துகின்றன.

‘‘கன்னிப் பெண்கள் மட்டும் பிறையைத் தொழுவதற்கானக் காரணம் நல்ல கணவனைப் பெற்று இல்லறம் சிறக்கவும், கரு வயிற்றில் உருவாகவும், மழைவளம் சுரந்து வளம் பொழிய வேண்டும் என்பதற்காகவும் ஆகும்’’ (மேற்கோள் விளக்கம் – கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப., 62).

நடுகல் வழிபாடு

தம் நாட்டினைக் காக்கும் பொருட்டு, பகைவரோடு போரிட்டுப் பட்டு வீழ்ந்த வீரனுக்காக எடுக்கப்படுவது ‘நடுகல்’ எனப்படும்.

இந்நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் பெயரும் பீடும் எழுதி, தெய்வமாக வழிபட்டு வந்ததைத் தொல்காப்பியர; காலந்தொட்டு அறிய முடிகிறது.  இதனையே,

‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று

இருமூன்று மரபின் கல்லொடு புணர’’

(தொல், புறத்., இளமபூரணர் உரை, நூ.எ., 63)

எனத் தொல்காப்பியம் மொழிகிறது.

மறக்குடியில் பிறந்த அனைவரும் இந்த நடுகல் வழிபாட்டைத் தம் இனத்திற்குச் சிறந்ததெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர். இச்செய்தியை,

‘‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவினல்லது

நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே’’

(புறநானூறு, பா.எ., 335)

எனும் இப்புறநானூற்றுப் பாடலும் புலப்படுத்துகிறது.

இத்தகு புகழ்வாய்ந்த நடுகல்லில் வீரரது பெயரும் பீடும் பொறிக்கப்பட்டு இருப்பதற்கு,

‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலிசூட்டிய பிறங்குநிலை மறவர்’’ (பா.எ., 67)

என்ற அகநானூற்றுப் பாடலே சிறந்த சான்றாகும்.

இவ்வாறு எடுக்கப்பட்ட நடுகல்லிற்கு வீரர்கள் தங்களது கிடுகினையும், வேல்களையும் வரிசையாய் நிரல்களாக நட்டு அரண் செய்தனர். இந்தச் செய்தியை,

‘‘மாலைவேல் நட்டு வேலி யாகும்’’ (குறுந்தொகை, ப., 358)

எனும் குறுந்தொகைப் பாடல் வரியும்,

‘‘கிடுகுநிரைத் தெஃகூன்றி

நடுகல்லின் அரண் போல’’ (பட்டினப் பாலை, 78-79 வரிகள்)

என்ற பட்டினப் பாலை வரிகளும் தெளிவாக உணர்த்துகின்றன.    இங்ஙனம் பழந்தமிழ் செவ்வியல் இலக்கியமான குறுந்தொகையில் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்கள் அமைந்து தமிழர் தம் பண்பாட்டினையும் சமயஞ்சார்ந்த நம்பிக்கையினையும் புலப்படுத்துகின்றன.

Series Navigation”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”முள்வெளி அத்தியாயம் -6