குலப்பெருமை

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

 

கிழக்கு மேற்காய் 120- அடிக்கு 18 அடி அளவில் நீண்டு கிடக்கும் ஓட்டுக் கட்டிடம்தான் த.சொ.அ. தனுஷ்கோடி நாடாரின் வீடு. நான்காவது தலைமுறையாக அதில் வாழ்கிறார். கிழக்கு முனையில் இரண்டு தடுப்புகள் பூட்டியே கிடக்கின்றன. மேற்கு முனையில் மூன்று தடுப்புகளில்தான் புழக்கம். ‘த.சொ.அ. தனுஷ்கோடி நாடார் மரம் ஓடு வியாபாரம்’, ஏழெட்டு ஏக்கர் விவசாய நிலம் இவைகள்தான் வருமானம் தரும் சொத்து. மனைவி காமாட்சி அம்மாள். அவரின் ஒரே கொள்கை. ‘யார் எங்கு போனாலும் சாப்பிட வீட்டுக்கு வந்துவிடவேண்டும்’ என்பதுதான். இரண்டு மகன்கள். மூத்தவன் குருசாமி. பள்ளிப்படிப்பை முடித்த கையோடு அப்பாவுக்கு துணையாக வியாபாரத்தில் இறங்கிவிட்டான். வியாபாரத்தில் அப்பாவைவிட கெட்டி. அப்பாவிடம் படியாத வியாபாரம் குருசாமியிடம் படியும். ஓடு பரப்ப 2க்குஅரை  சட்டம் கேட்டு வந்து பேரம் பேசினால் ஒன்றைக்கு அரையே போதுமென்று  அவர்களின் செலவைக் குறைத்து சாமர்த்தியமாக தன் லாபத்தைக் கூட்டிக்கொள்ளும் திறமைசாலி. சிறியவன் மார்த்தாண்டன். அவனின் ஒரே லட்சியம் எம்.ஜி. ஆரை ஒரு முழ தூரத்தில் வைத்து பார்த்துவிடவேண்டும் என்பதுதான். 10 மணிக்கு பரீட்சை என்றால் 9 மணிவரை புத்தகத்தைத் திறக்கமாட்டான். இப்போதுகூட கூட்டாளிகளுக்கு  குலேபகாவலி கதையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறான். எம்.ஜி. யார் படம் ரிலீஸ் என்றால் சைக்கிளிலேயே 21 மைல் மிதித்து காரைக்குடி சென்று ராமவிலாஸில் பகல் காட்சி பார்த்துவிட்டு இரவு சாப்பாட்டுக்கு வீடு வந்துவிடுவான்.

நாடாருக்கு ஒரே ஒரு ஆசைதான். ‘அந்த ஓட்டு வீட்டில் நான்கு தலைமுறை வாழ்ந்தாகிவிட்டது அடுத்த நான்கு தலைமுறை தான் கட்டும் வீட்டில்தான் வாழவேண்டும்’ என்பதுதான். அந்த ஆசையை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதையே வாழ்வதற்குக் காரணமாக்கிக் கொண்டார். கையில் உபரியாய் இருப்பது 8000 தான். 1956ல் அது எட்டு லட்சம். சோமு ஆசாரி வரைபடம் கொண்டுவந்து கொடுத்தார். இரண்டு நீளமான கூடம், இரண்டு அறைகள், திண்ணை, முகப்பு  என்று 1300 சதுரஅடியில் வரைபடம் விரிந்தது. வீட்டு மதிப்பு 35,000 என்றது கணக்கு. 8000ஐ வைத்துக்கொண்டு தொடங்கலாமா? யோசித்தார் நாடார். குருசாமி சொன்னான். ‘டால்மியா சிமிண்டு மங்களூர் ராஜாராணி ஓடு ஆகியவற்றுக்கு விநியோக உரிமை நமக்குத்தான் கிடைக்கும். நிச்சயம் நம்மால் சம்பாதிக்க முடியும். நான் கடையைக் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் வீட்டைக் கட்டுங்கள். கூலியை நான் பார்த்துக்கொள்கிறேன்’. காமாட்சியம்மாள் சொன்னார். ‘வீடு கட்டுவது கோயில் கட்டுவது மாதிரி. தடைபடாது. கட்டுங்கள்.’

ஒரு நல்ல நாளில் வானம் வெட்டும் வேலை 6 பேர்களுடன் ஆரம்பமானது. ஆமங்குடி கருப்பன் தலைமையில் வயலில் வரப்பு வெட்டும் வேலையும் அதே சமயம் தொடங்கியது. வயலுக்குப் பக்கத்தில் மூன்றடி உயரத்தில் இருக்கும் மேட்டு நிலமும் நாடாருடையதுதான். புதர்களும் வேலிக்கருவையும் மண்டிக்கிடக்கிறது. அந்த நிலம்தான் பலருக்கு பொது கழிப்பிடம். அதைத்தாண்டி ராமேஸ்வரம் செல்லும் ரயில் தண்டவாளம். அதையும் தாண்டி பன்றி வளர்க்கும் குறவர்களின் குடிசைகள். எல்லாப் பன்றிகளுக்கும் அந்த மேட்டுநிலம்தான் மேய்ச்சல் நிலம். ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் தண்ணீர் சாக்கடையாகி அதில்தான் அவைகள் ஊறிக்கிடக்கின்றன. மூன்றடி மண்ணை சரித்தால்தான் விவசாய நிலத்தோடு சேர்க்க முடியும். அது பெரிய செலவு.

2

மனைக்கட்டாகவும் விற்கமுடியாது. தண்டவாளமும் குறவர் குடிசைகளும் மனைக்கட்டு வாங்க நினைப்போரை விரட்டியடித்தன.

வரப்பு வெட்டிய கருப்பன் புதர்மேட்டு மண்ணில் மண்வெடட்டியால்  ஓங்கி வெட்டினான். செக்கச்செவேலென்று ஒரு மண்திட்டு சரிந்து சிரித்தது. சர்க்கரைபோன்று சரிந்த அந்த மண்ணை அள்ளி கொலுக்கட்டை பிடித்தான். அப்படியே நின்றது. மண்ணைக் கிளறினான் ஒரு சுக்கான் (சுண்ணாம்புக்கல்) இல்லை. குறுமணல் கலப்பும் அதிகமில்லை. ‘அட! செங்கலறுக்கு அருமையான மண்ணாச்சே. ‘ உடனே நாடாரிடம் சேதியைச் சொன்னான். கடையாத்துப்பட்டியிலிருந்து காளவாய்க் காயாம்பு தலைமையில் மூன்று குடும்பங்களை கருப்பன் அழைத்து வந்தான். முன்னூறு முன்பணம் தரப்பட்டது. அது இன்றைக்கு 30,000க்குச் சமம். பூட்டிக்கிடந்த வீட்டின் கிழக்குப் பகுதியில் அவர்கள் தங்கிக்கொண்டார்கள். அவர்களின் தேவைகளை கருப்பன் கவனித்துக்கொண்டான். இருபது  பேர் குழு செங்கலறுக்கத் தொடங்கியது. வியர்வை துடைக்கும் நேரத்தைக்கூட அவர்கள் வீணாக்கவில்லை. மளமளவென்று அறுத்துத் தள்ளினார்கள். அறுத்த கற்கள் காயவைக்கப்பட்டு அடுக்கப்பட்டு பனைஓலைகளில் பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டது. இங்கே வானம் வெட்டும் வேலையும் அதே வேகத்தில் தொடர்ந்தது. அப்போதெல்லாம் சிமிண்டு பிரபலமில்லை. சுண்ணாம்புதான். கமலை கிராமத்திலிருந்து சுண்ணாம்பு நீர் வண்டிவண்டியாக வந்து இறங்கியது. வெள்ளாத்து மண்ணும் குன்றுகுன்றுகளாய்க் குவிந்தன. இடுக்குமலையிலிருந்து முண்டுக்கற்கள் லாரிகளில் வந்து இறங்கின. அந்த 5000 சதுர பொட்டல் நிலம் ஒரு தொழிற்சாலைபோல் வேடமிட்டுக்கொண்டது. வானம் வெட்டும் வேலை முடிந்து 10 நாட்கள் மண் ஆறியது. ஆற்றுமண்ணைப் பரப்பி முண்டுக்கல் கட்டுமானம் தொடர்ந்தது. மணலும் சுண்ணாம்பும் மூன்றுக்கொன்று கலவை போடப்பட்டு பெரிய பெரிய அண்டாக்களில் ஊறும் கடுக்காய்த் தண்ணீரில் குழைக்கப்பட்டு குப்பம் குப்பமாய் கலவைகள் தயாராயின. குழைத்த கலவையை ஆறேழு சித்தாட்கள் உலக்கையால் இடித்து இடித்து கட்டுமானத்துக்கு சட்டிசட்டியாய்  அனுப்பிக்கொண்டிருந்தார்கள். முண்டுக்கல் கட்டு உயர்ந்தது. பின் முடிந்தது.

அங்கே ஒரு லட்சம் கல் அறுத்து முடிக்கப்பட்டு காளவாயில் அடுக்கப்பட்டது. காயாம்பு மொத்தக் காளவாயையும் மண்ணால் பூசி மொழுகினார். நாடார்தான் அடுப்பைப் பற்றவைத்தார். 30 அடி சுற்றுவட்டாரத்துக்கு அனலைக் கக்கிக் கொண்டு காளவாய் எரிந்தது. நெருப்பு அடங்க 10 நாட்கள் பிடித்தது. காயாம்பு மேற்கு மூலையின் மண்பூச்சைத் தட்டிவிட்டான். கல் நெருப்பாகச் சிரித்தது. செம்பராங்கல்லின் உறுதி. மூலைசுத்தமாக வெந்த கல் அல்வாத்துண்டாக சுண்டி இழுத்தது. வீட்டுக்கு  50,000  கல் ஒதுக்கப்பட்டு 50,000 கல் விலை பேசப்பட்டது. எச்செலவும் போக 5000 ரூபாய் தேறியது. ஊரே உள்ளங்கைக்கு வந்துவிட்டதுபோல் தைரியமானார் நாடார். கூலிச்சம்பளம் அசராமல் கொடுத்தான் குருசாமி. செலவுகள் கடை நிர்வாகத்தைக் கடிக்கவில்லை. அடுத்த காளவாய்க்காக இரண்டு லட்சம் கல் அறுக்கும் வேலை தொடர்ந்தது.

 

3

எதிலும் ஒட்டாமல் ஊர்சுற்றினான் மார்த்தாண்டன். நண்பர்கள் மலேசியாவிற்கு வேலைக்குப் போகிறார்களாம். தானும் போகவேண்டும் என்றான். நாடார் அனுமதிக்கவில்லை. சமாதானப்படுத்தினான் குருசாமி. டிக்கட் எடுத்துக்கொடுத்து அவனே மலேசியா அனுப்பிவைத்தான்.

செங்கல் சுவர் எழும்பியது  அப்போது  கான்கிரீட் கிடையாது. மேல்தளத்தில் புள்ளமருது  மரங்கள் 6க்கு 3 சைஸில் 20 அடி நீளத்தில் எழுபது மரங்கள் பரப்பப்பட வேண்டும் அதற்கான மரங்கள் கேரளாவிலிருந்து வந்து இறங்கின. கல்லுக்கால்கள் ஊன்றி கூரைக்கொட்டகை போடப்பட்டு மரங்கள் இழைக்கப்பட்டன. நிலை கதவு ஜன்னல் வேலைகளும் முடுக்கிவிடப்பட்டன. சப்பையாக சிட்டுப்போல் இருக்கும் தார்ஸ் செங்கல் நயமாக அரைத்த சாந்துக் கலவையில் ஒட்டி ஒட்டித்தான் மேல்தளம் மூடப்படவேண்டும். தேவகோட்டையிலிருந்து தார்ஸ் கற்கள் லாரிகளில் வந்து இறங்கின. காளவாய் கனமழையாய்க் காசைக்கொட்டியது. துணிந்து இறங்கினார் நாடார். தார்ஸ் கற்கள் கைமாறி கைமாறி மேல்தளத்திற்குப் பறந்தன. சாந்துக் கலவையும் சட்டிசட்டியாய்ப் பறந்தன. மேற்கு மூலையிலிருந்து தார்ஸ் கல்  ஒட்டும் வேலை தொடங்கியது. அதே சமயம் அங்கே இரண்டு லட்சம் கற்கள் அறுத்து முடிக்கப்பட்டு அடுக்கப்பட்டது. குருசாமிதான் அடுப்பைப் பற்றவைத்தான். அதே சமயம் டால்மியா சிமிண்ட் மற்றும் மங்களூர் ராஜாராணி ஓடு விநியோக உரிமையும் கைகூடியது.

மேல்தளம் மூடப்பட்டு பூச்சுவேலைகள் தொடர்ந்தன. தரைக்குப் பரப்ப ஆத்தங்குடி  பூக்கற்கள் வந்து இறங்கின. பூச்சு வேலைகள் முடிக்கப்பட்டு காஞ்சிபுரம் பட்டு விரித்ததபோல் தரையில் பூக்கள் சிரித்தன. சுவர்களிலும் இரண்டரை அடி உயரத்துக்கு பூக்கற்கள் பதிக்கப்பட்டன. அங்கே இரண்டு லட்சம் கற்கள் எரிந்து அடங்கி மேற்செலவுக்கான பணத்தை இந்தா வாங்கிக்கொள் என்றது. கூடத்தின் நடுவே தனுஷ்கோடி நாடாரின் நீண்டகால சிநேகிதர் சிங்கப்பூரிலிந்து அனுப்பிய தாத்தாக் கடிகாரம் தொங்கவிடப்பட்டது. ஒரு தேக்கு ஊஞ்சல் அடுத்த கூடத்து மையத்தில் ஒய்யாரமாக ஆடியது. வீட்டின் மொத்த வேலைகளும் முடிந்து 1,300 சதுரத்தில் வீடு கம்பீரமாய் நிற்கிறது. புதுமனைபுகு விழாவோடு தனுஷ்கோடி நாடாரின் 60க்கு 60 மணிவிழாவும் சேர்ந்துகொண்டது. ஊரே கூடிவிட்டது. காளவாய் வேலை பார்க்கிறவர்கள் கட்டிடம் கட்டியவர்கள் 40, 50 பேர் புத்தாடை சரசரக்க சொந்த வீட்டுச் சடங்கை நடத்துவதுபோல் சுழன்றார்கள். அதே சமயம் மலேசியாவில் சம்பாதித்ததையெல்லாம் செலவு செய்துவிட்டு வெற்று ஆளாக வந்து இறங்கினான் மார்த்தாண்டன். அங்கு அவன் செய்த ஒரே சாதனை நாடோடிமன்னன் படத்தை நாற்பது தடவை பார்த்ததுதான்.

குருசாமிக்கும் மார்த்தாண்டனுக்கும் ஒரே சமயத்தில்  திருமணம் முடிக்க ஏற்பாடுகள் நடந்தன. குருசாமிக்கு நாடாரின் தங்கை மகள் கமலம் முடிவானது. மலேசியாவில் இருக்கும்போதே வெங்கா என்கிற கும்பகோணத்துக்காரர் மாரத்தாண்டனின் மண்டையைக் கழுவி தன் மகள் கீதாவைப் பேசி முடித்திருந்தார். அந்தப் பெண்ணையே மார்த்தாண்டனுக்குப் பேசி முடித்து திருமணம் திருவிழாவாக முடிந்தது. கும்பகோணம் சென்ற மார்த்தாண்டன் அங்கேயே இருந்துவிட்டான்.

 

4

கும்பகோணத்தில் வெங்காவுக்குச் சொந்தமான ஒரு இடத்தை மார்த்தாண்டனிடம் காட்டி கொஞ்சம்  பணமும் கொடுத்து கீழே எட்டுக்கடைகளும் மேலே எட்டு வீடுகளும் கட்டுவோம் என்று காற்றில் எழுதிக் காண்பித்தார் வெங்கா. தன்னை  ஒரு பெரிய மனிதனாகப் பாவித்து பொறுப்பு கொடுக்கப்பட்டதில் உச்சி குளிர்ந்தான் மார்த்தாண்டன். வெங்காவின்  கட்டிட வேலைகள் அங்கே தொடர்ந்தன.

வால்நட்சத்திரம் தெரியும் என்று பத்திரிகைகளில் செய்திகள் பரபரத்தன. ஏதேனும் துக்கச் செய்தி நடக்கலாம் என்று காமாட்சியம்மாள் கனவு கண்டார். மயக்கமாக இருக்கிறதென்று தனுஷ்கோடி நாடார் தூணில் சாய்ந்தார். வில்வண்டியைப் பூட்டிக்கொண்டு அப்பாவை ஏற்றிக்கொண்டு டாக்டரிடம் விரைந்தான் குருசாமி. டாக்டர் சொல்லித்தான் தெரிந்தது பாதி வழியிலேயே நாடாரின் உயிர் பிரிந்துவிட்டது.  அறுபத்தைந்து ஆண்டுகால ஆத்மார்த்தமான வாழ்க்கை அரை நிமிடத்தில் அடங்கிப்போனது. கடைத்தெருவில் எல்லாக் கடைகளும் சாத்தப்பட்டன. அரசியல் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. ஓரிரு காகங்கள் விட்டுவிட்டுக் கரைந்தன. போக்குவரத்துக்கள் வேறுவேறு பாதைகளில் மாற்றிவிடப்பட்டன. கடைசி நேரத்தில் ஊர்ந்து ஊர்ந்து வந்துசேர்ந்தான் மார்த்தாண்டன். வெங்காவும் கீதாவும் கூட வந்தனர். கூட்டத்தைப் பார்த்து வெளவளத்துப் போனார் வெங்கா. அடேங்கப்பா இவ்வளவு செல்வாக்கா? காரியங்கள் முடிந்தன. வெங்காவும் கீதாவும் கும்பகோணம் புறப்பட்டுவிட்டார்கள் மார்த்தாண்டன் இங்கேயே தங்கிக்கொண்டான்.. காமாட்சியம்மாவுக்கும் குருசாமிக்கும் அவன் இருப்பதில் ஏதோ மருந்து இருக்கிறது என்று தோன்றியது. அவர்கள் நினைத்தது சரிதான். ‘கும்பகோணம் கட்டிடத்துக்கு பணம் தேவைப்படுகிறது. என் பங்கைப் பிரித்துக் கொடு’ என்றான் மார்த்தாண்டன். பதறவில்லை குருசாமி. பதறிய அம்மாவை அவனே சமாதானப்படுத்தினான். உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கொள் என்றான். புதிதாகக் கட்டிய இந்த வீடும் 5 ஏக்கர் நிலமும் வேண்டுமென்றான். பாவம் அவன் என்ன கேட்கிறான் என்று அவனுக்கே விளங்கவில்லை. சொல்லச்சொன்னதை சொல்லிக்கொண்டிருக்கிறான். பத்திரங்கள் எழுதப்பட்டன. பத்திரங்களோடு கும்பகோணம் சென்றான் மார்த்தாண்டன்.

சில மாதங்கள் ஓடின மேல்தளம் மூட பணம் தேவைப்பட்டது. நிலத்தை பூவத்தக்குடி நகரத்தார்களிடம் விலை பேசினான் மார்த்தாண்டன். அந்த நகரத்தார்களின் பின்னணியில் குருசாமி இருப்பது அவனுக்குத் தெரியாது. பணம் கைமாறியது. நிலம் குருசாமிக்கே வந்தது. மேலும் சில மாதங்களை ஓடின. வீட்டை விலை பேசினான். ‘இந்த வீடு அப்பாவின் ரத்தமும் சதையும். இதையா விற்கத் துணிந்தாய்’ என்றான் குருசாமி. ‘என்னைப் பொருத்தவரை இது வெறும் கல்லும் மண்ணும்தான். இதைவிட பெரிய சொத்தை நான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். என் பெயரில் இருக்கும் சொத்து. தலையிடாதே’ என்றான் மார்த்தாண்டன். பூவத்தக்குடி நகரத்தார்களிடம் விலை பேசப்பட்டது பணம் கைமாறியது. வீடு மீண்டும் குருசாமிக்கே வந்தது.

ஊர் முழுக்க தனுஷ்கோடி நாடார் கடை விளம்பரம்தான். வீடு கட்டவேண்டுமென்றால் சாமான்களை எழுதிக்கொண்டு நேரே குருசாமியிடம்தான் வருகிறார்கள். வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. அரசியல் கட்சிகளுக்கு நிறைய நன்கொடைகள் கொடுத்தான்.

5

தேர்தலுக்கு ஒரு கட்சி சீட் கொடுத்தது ‘எல்லாருக்கும் நல்லவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். நன்கொடை தருகிறேன். என்னை விட்டுவிடுங்கள்’ என்று ஒதுங்கிக்கொண்டான் அப்பா வாங்கித் தந்த சோப்புடப்பாவைத்தான் பதினைந்து ஆண்டுகளாக பயன்படுத்துகிறான். காசு பெருகப் பெருக அவனுக்கு எளிமை பெருகியது. இது ஒரு விசித்திரமான கலவைதான். வீட்டைச் சுற்றிலும் தனுஷ்கோடி நாடார் காலனி உருவானது. தனுஷ்கோடி நாடார் பெயரில் ஒரு கல்லூரி ஒன்றும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. குருசாமிக்குப் பிறந்த இரண்டு மகன்களும் சிறுத்தைக்குட்டிகளாய் வியாபாரத்தில் குருசாமியோடு சேர்ந்துகொண்டார்கள்.

கும்பகோணத்தில் அந்தக் கட்டிடம் இன்னும் முடிந்தபாடில்லை. வாடகைக் கணக்கைப் போட்டுப்பார்த்து வங்கிகளிலும் நிறைய கடன் வாங்கியிருந்தார் வெங்கா. வங்கி நெருக்கியது. மொத்த கட்டடமும் விலைபேசப்பட்டது அப்படியே வங்கிக்கணக்கை முடித்துவிட்டு மிஞ்சியதில் ஒரு ஆயத்தஆடைக்கடை திறக்கப்பட்டது. அதுவும் ஊத்திமூடிக்கொண்டது. 5 ஆண்டுகளுக்குமுன் புத்திசுவாதீனமில்லாத ஒரு மகனும் மார்த்தாண்டனுக்குப் பிறந்திருந்தான்.

தனுஷ்கோடி நாடார் கல்லூரி திறப்புவிழாவிற்கு முதலமைச்சர் வருகிறாராம். ஊரே கழூவிவிடப்பட்டு புத்தாடை உடுத்திக்கொண்டது. டால்மியா ராஜாராணி கம்பெனிகள் பெரிய பெரிய விளம்பரப் பதாகைகளை நிறுத்தியிருந்தனர். எல்லாவற்றிலும் தனுஷ்கோடி நாடார் சிரித்துக் கொண்டிருக்கிறார். குருசாமியின் ஒவ்வொரு அசைவும் தனுஷ்கோடிநாடார் உயிர்பெற்று வந்தது போலவே இருக்கிறது. முதலமைச்சர் குருசாமியை புகழ்ந்து தள்ளுகிறார். இந்தக் கல்லூரிக்காக எல்லா உதவிகளும் செய்ய என் அலுவலகக் கதவுகள் திறந்தே இருக்கின்றன. குருசாமி எப்போது வேண்டுமானாலும் என்னைப் பார்க்க வரலாம் என்றார். ஊரே கைதட்டுகிறது.

அங்கே மார்த்தாண்டன் திருச்சியிலிருக்கும் புத்திசுவாதீனமில்லாத குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் தன் மகனைச் சேர்க்க  பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கிறான்

தனுஷ்கோடி நாடார் அடிக்கடி சொல்வார்.

குலப்பெருமை

விளங்காதவனின்

குடும்பம் விளங்காது

 

யூசுப் ராவுத்தர் ரஜித்  

 

Series Navigationவாசிக்கப் பழ(க்)குவோமேதொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​1​​​தூமணி மாடம்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்தினம் என் பயணங்கள் – 6பிழைப்புஒரு மகளின் ஏக்கம்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ameethaammaal says:

    இன்றும்கூட சில பிள்ளைகள் தன் குலப்பெருமை பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லாமல் பெரியவர்கள் மனத்தை புண்படுத்துறார்கள். என்ன செய்வத? எத்தனையோ பேர்களின் மனக்குமுறல்களை நானும் கேட்டிருக்கிறேன்.

  2. Avatar
    jagannathan says:

    எவ்வளவு அருமையான கதை யதார்த்தம் சொட்டுகிறது காரைக்குடியிலே படித்தவன் ராம விலாஸ் மற்றும்சரச்வதி நடராஜ் தியேட்டர்கள் குலேபகாவலி 1953 இல் வந்தது பசுமை நிறைந்த காலங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *