இந்திய மருத்துவச் சங்கத்தின் (Indian Medical Council) சென்னைக் கிளை 1997 ஆம் ஆண்டில் மருத்துவர் தொடர்புள்ள என் சிறுகதை யொன்றைப் படித்த பின் எனக்கு ஓர் அச்சுறுத்தும் கடிதத்தை அனுப்பிவைத்தது. அதன் செயலர் அதில் அச் சங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டிருந்தார். நான் ஆனந்தவிகடனில் எழுதியிருந்த ‘கவரிமான் கணவரே!’ எனும் சிறுகதையின் உள்ளடக்கத்தை ஆட்சேபித்துத் தான் அதனை அவர் எனக்கு அனுப்பி யிருந்தார். மருத்துவர்களையும் மருத்துவ உலகையும் இழிவு படுத்தும் முறையில் அக்கதை எழுதப் பட்டிருந்ததாகவும் எனவே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்காவிட்டால் என் மீது` சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், பதினைந்து நாள்களுள் என் கடிதம் வராவிட்டால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்றும் அக் கடிதம் எச்சரித்தது.
என்ன அடிப்படையில் அவ்வெச்சரிக்கைக் கடிதம் எனக்கு அனுப்பப்பட்டது என்பதை நேயர்கள் புரிந்துகொள்ள அக்கதையின் சுருக்கத்தைச் சொல்லவேண்டியதாகிறது.
கதை இதுதான் –
ஓர் இளம் பெண்ணின் கணவருக்குத் திடீரென்று இதய நோய் ஏற்பட்டுவிடுகிறது. உடனே அறுவைச் சிகிச்சை செய்தாகவேண்டிய கட்டாயம் விளைகிறது. தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண் அவனைச் சேர்க்கிறாள். அறுவை மருத்துவ வல்லுநர் அதற்குச் சொல்லும் கட்டணம் மிகப் பெரிய தொகையாக இருக்கிறது. அவளால் செலுத்த முடியாத பெருந்தொகை. அவள் திகைக்கிறாள். அவளது பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ளூம் மருத்துவர் அதைத் தமக்கு ஆதாயப்படுத்திக்கொள்ளத் திட்டமிடுகிறார். அழகான அப்பெண் தம்முடன் சில இரவுகளைக் கழிக்கச் சம்மதித்தால் மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சையை முடிப்பதாய் அவளிடம் கூறுகிறார். அந்தப் பெண் திகைக்கிறாள். வாதாடியும், வேண்டியும் பார்க்கிறாள். மருத்துவர் இணங்கவில்லை. மனச்சாட்சியோடு போராடியதன் பின், வேறுவழியற்ற நிலையில் அவரது விருப்பத்துக்குச் சம்மதிக்கிறாள். அந்நிபந்தனையை வேண்டாவெறுப்பாகவும், வேதனையுடனும்தான் ஏற்கிறாள்.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாய் முடிகிறது. கொஞ்ச நாள்களுக்குக் கவனமாய் இருக்க வேண்டுமென்று மருத்துவர் இருவருக்கும் அறிவுறுத்துகிறார். மீண்டும் ஒருமுறை அவளைத் தம் விருப்பத்துக்குச் செவிசாய்க்க மருத்துவர் வற்புறுத்தும்போது அவள் ஆத்திரத்துடன் மறுத்துவிடுகிறாள். போதுமான இடைவெளிக்குப் பின்னர் தன்னை நெருங்கும் கணவனிடம் கண்ணீர் பெருக்கியபடியே நடந்துவிட்ட கோர நிகழ்வுபற்றிக் கூறி விடுகிறாள். “எனக்கு என்ன செய்யிறதேன்னே தெரியலீங்க. கம்பெனியில கடன் தர மட்டேன்னுட்டாங்க. நஷ்டத்துல ஓடிட்டிருக்குன்னு கையை விரிச்சுட்டாங்க. கொஞ்சம் ரேட்டைக் குறைச்சுக்கிட்டு ஒரு தர்ம காரியமா நினைச்சு உதவுங்க டாக்டர்னு கேட்டதுக்குத்தான் அந்தப் பாவி நீங்க நர்சிங்ஹோமை விட்டுப் போகிறவரையில அவனோட இஷ்டத்துக்கு இணங்கணும்னுட்டான். உங்க உசிரு எனக்குப் பெரிசாத் தெரிஞ்சிச்சு. அதால…”
“அடிப்பாவி!”
“பாவிதாங்க. ஆனா நான் இணங்கல்லையின்னா நீங்க செத்துடுவீங்க. எல்லாத்தையும் விட நீங்க பெரிசாத் தெரிஞ்சீங்க. உங்க மேல உள்ள பிரியத்தால மனசே இல்லாம அதுக்கு ஒத்துக்கிட்டேங்க. என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு வேற எந்த வழியும் தெரியல்லே” என்கிறாள்.
கணவன் அதிர்ச்சியும், அருவருப்பும் மட்டுமின்றி ஆத்திரமும் கொள்ளுகிறான்.
“நீ பண்ணினது சரின்னே வெச்சுக்குவோம். ஆனா, என்னைக் காப்பாத்தினதுக்குப் பெறகு, நீ மானமுள்ள பொம்பளையா யிருந்தா, உசிரை விட்டிருக்க வேணாமாடி? எவ்வளவு கிரிசைகெட்ட – மானங்கெட்ட – பொம்பளையா யிருந்தா இப்படி எதுவுமே நடக்காதது மாதிரி வளைய வந்துட்டிருப்பே! ஏண்டி?…” என்கிறான்.
அவளை அவன் ‘டீ’ போட்டுப் பேசினதே இல்லை. அவளைக் காதலித்துக் கைப்பிடித்தவன். ‘கடைசியில் அவர் காதலித்தது இந்த வெற்றுடம்பைத்தானா!’ என்று அவள் வருந்துகிறாள்.
அவன் மேலும் அவளைச் சாடிவிட்டுத் தொடர்ந்து சொல்லுகிறான்: “ஒரு பொண்ணுக்கு மானந்தாண்டி பெரிசாத் தெரியணும்! மத்ததெல்லாம் அப்புறந்தான். இந்த மாதிரி மானத்தை வித்துட்டு உசிரை வெச்சுக்கிட்டு இருக்கிறதை விட விஷத்தைக் குடிச்சுட்டு சாகலாம்டி!” என்கிறான்.
“எனக்குப் பெறகு உங்களைக் கவனிக்க யாருமில்லைன்றது ஒரு காரணம். நம்ம மூணு வயசுப் பொண் குழந்தை பத்தின கவலை இன்னொரு காரணம். இந்த ரெண்டும் இல்லாம இருந்திருந்தா, உங்களைக் காப்பாத்தினதுக்கு அப்புறம் நான் உசிரை விட்டிருப்பேன்,” என்கிறாள் அவள்.
“இதெல்லாம் வீண் பேச்சு. நீ மானங்கெட்டவதான்!” என்கிறான் அவன்.
அவள் விருட்டென்று எழுகிறாள். இரண்டே நிமிடங்களில் திரும்பிய அவள் கையில் மூட்டைப் பூச்சி மருந்துக்குப்பி இருக்கிறது. அதை அவள் அவனுக்கு எதிரில் இருந்த முக்காலியில் வைக்கிறாள். அவன் அதிர்ந்து போய் அவளையும் அந்தக் குப்பியையும் மாற்றி மாற்றிப் பார்க்கிறான்.
“என்ன பாக்குறீங்க? கொண்டுவந்தது உங்களுக்க்காகத்தான்! குடியுங்க. பொண்டாட்டி தன்னோட மானத்தை வித்துப் புருஷனைக் காப்பாத்தினது மானங்கெட்ட செயல், அதுக்காக அவ உசிரை விட்டுடணும்கிறது சரின்னா, பொண்டாட்டி தன்னோட மானத்தை வித்துக் கொண்டுவந்த பணத்துனால உயிர் பொழைச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கிறது அதை விடவும் மானங்கெட்ட செயல் இல்லியா!”
அவளது இந்தக் கேள்வியுடன் கதை முடிகிறது.
மருத்துவக் குழு இந்தக் கதையை விமர்சிக்கவில்லைதான். அவர்கள் ஆட்சேபித்தது ஒரு மருத்துவர் ஒருகாலும் அப்படி ஓர் அசிங்கமான நிபந்தனையை விதிக்க மாட்டார் என்றுதான்!
மறு தபாலில் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். “எந்தத் தொழிலிலும் தவறான ஆள்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் ஆகிய எல்லாரிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மருத்துவர் பற்றி நான் எழுதினேனே தவிர, எல்லா மருத்துவர்களுமே அப்படிப்பட்டவர்கள் என்கிற சேதியையா என் கதை வெளிப்படுத்தியது? எனவே உங்கள் ஆட்சேபணையை ஏற்க இயலாது,” எனும் பொருள்பட ஒரு பதிலை அனுப்பினேன். (என் கடித நகல் கிடைக்கவில்லை.)
அதை ஒப்புக்கொள்ளாமல் அந்தக் குழுவைச் சேர்ந்த இன்னொரு மருத்துவர் மீண்டும் 11.7.1998 நாளிட்ட கடிதத்தை எனக்கு அனுப்பினார். (அதன் நகல் பின்வருமாறு.)
“சில மாதங்களுக்கு முன்னால், “கவரிமான் கணவரே!” என்ற தலைப்பில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தாங்கள் எழுதியிருந்த ஒரு கதையில், ஒரு டாக்டர், ஒரு ஆண் நோயாளியைக் காப்பாற்ற செய்யப்பட வேண்டிய அறுவைச் சிகிச்சைக்கான கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளுவதற்காக அந்நோயாளியின் மனைவியுடன் தகாத உறவு வைத்துக்கொள்ளுவது போல் சித்தரித்திருந்தீர்கள். தாங்கள் இவ்வாறு செய்தது மிகவும் தவறு என்று இந்திய மருத்துவச் சங்கம் சுட்டிக்காட்டிய போதிலும், தாங்கள் தங்கள் தவறை உணர மறுத்திருப்பது போல் பதில் கடிதம் எழுதியிருப்பதாக மருத்துவ சங்கக் கூட்டத்தின் மூலம் அறிந்தேன்.
கற்பனைக் கதை என்றாலும் அதில் ஓரளவாவது தரம் இருக்க வேண்டும் என்பதைத் தங்களைப் போன்றோர் உணர மறுப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஒரு மகன் தன் தாயுடனோ, அல்லது ஒரு தந்தை தன் மகளுடனோ தகாத உறவு வைத்திருப்பதாக (sexual perversion) மேலைநாட்டுப் பத்திரிகைகள் சிலவற்றில் செய்திகள் வந்திருக்கின்றன. இதனை சாதகமாகக் கொண்டு தங்களைப் போன்ற எழுத்தாளர்கள் அதைப் போன்ற சம்பவங்களைச் சித்தரித்துக் கதை எழுதினால் தங்களுடைய மகனோ அல்லது மகளோ அதனைப் படிக்க நேரிட்டால், அவர்களுக்கு என்ன உணர்வு ஏற்படும் என்பதைத் தங்களைப் போன்றோர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கற்பனைக்கும் ஒரு தராதரம் வேண்டும் என்பதை அறிந்துகொள்ளாத தங்களைப் போன்றோர் இவ்வாறெல்லாம் எழுதினால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருந்தால், அந்த உயிரைத் தாங்களாகவே மாய்த்துக்கொள்ளுவதே சமுதாயத்திற்குத் தாங்கள் செய்யும் பெரிய சேவையாக இருக்கும் என்று தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இப்படிக்கு,
டாக்டர் ……
இந்த டாக்டரை நான் அறிந்திருந்தேன். ஆனால், நான் இன்னாரென்பது அவரது அறிமுகம் கிடைத்த போது அவருக்குத் தெரியாது. 1995 இல் கீழே தவறி விழுந்து முதுகுத் தண்டில் அடிபட்டு பழுபிறழ்வு – slip disc – ஏற்பட்டு நான் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மனைக்கு அதன் முக்கிய டாக்டர் வேறு அலுவலில் வெளியூர் சென்ற 2 நாள்களில் அவருடைய முன்னாள் மாணவராகிய இந்த டாக்டர் அவரது இடத்தில் பணி புரிந்த போது அந்த நாள்களின் மாலைகளில் எல்லா நோயாளிகளையும் பார்க்கவருவது போல் என்னையும் பார்த்து நலம் விசாரிக்க வந்தார். அப்போது நான், “உங்க பேரென்ன, டாக்டர்?” என்று கேட்டேன். சொன்னார்.
“அரசாங்க மருத்துவரா, இல்லாட்டி, சொந்தமா க்ளினிக் வெச்சிருக்கீங்களா?”
அவர் வியப்பாக என்னைப் பார்த்துவிட்டு, “நான் கவர்ன்மெண்ட் டாக்டர் இல்லேம்மா. சொந்தமா க்ளினிக் வெச்சிருக்கேன்.”
“எங்கே, டாக்டர்?”
“அசோக் நகர்லேம்மா…”
அவர் போன பிறகு, உடனிருந்த என் தங்கை கேட்டாள் வியப்புடன்: “என்னது நீ? அவர்கிட்ட இத்தனை கேள்விகள் கேட்டே? சாதாரணமா இப்படியெல்லாம் கேக்க மாட்டியே? என்னாச்சு இன்னிக்கு உனக்கு?”
“என்னமோ தெரியல்லே. கேக்கணும்னு தோணித்து, கேட்டேன்.” என்றேன்.
ஆனால், அவ்வாறு கேட்டது இப்போது அந்த டாக்டரிடமிருந்துதான் மேற்காணும் கடிதம் வந்திருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள உதவியது!
உடனே அவருக்குக் கீழ்வரும் ரீதியில் (என் கடித நகல் கிடைக்கவில்லை.) ஒரு பதிலை எழுதிப் பதிவுத் தபாலில் அனுப்பினேன்.
“அன்புமிக்க டாக்டர் ….. அவர்களுக்கு,
வணக்கம். தங்கள் கடிதம் கிடைத்தது. ………. மருத்துவ மனையில் என்னை அன்புடன் கவனித்துச் சிகிச்சையளித்த டாக்டர் தாங்களே என்பதை ஊகித்தேன். எல்லாத் தொழில்கள் புரிபவர்களிலும் அயோக்கியர்கள் உண்டு. அப்படி ஒரு டாக்டரைப் பற்றி நான் எழுதினேன். அவ்வளவுதான். சம்பந்தமே இல்லாத முறையில் தாய்-மகன், தந்தை-மகள் ஆகியோரின் தகாத உறவு பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
கொஞ்ச நாள்களுக்கு முன்னால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப் பெரிய மருத்துவமனை டாக்டர்கள் பெண் நோயாளிகளிடமும், ஆண்நோயாளிகளின் பெண் உறவினர்களிடமும் எப்படியெல்லாம் தவறாக நடக்க முயல்கிறார்கள் என்பது பற்றிய கட்டுரை ஒரு புலனாய்வு இதழில் வந்திருந்தது தங்களுக்குத் தெரியாமல் இருக்காது. செவிலியர்களிடமும் அவர்கள் தவறாக நடப்பதாய் அக்கட்டுரை கூறியது. அதை வெளியிட்ட புலனாய்வு இதழின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எதுவும் எடுத்ததாய்த் தெரியவில்லை. ஏனோ?
கதை எழுதிச் சம்பாதித்து வயிற்றைக் கழுவியாகவேண்டிய நிலையில் நான் இல்லை. நான் ஒரு மைய அரசு ஊழியர். எழுதும் பொருட்டு விருப்ப ஓய்வு பெற்றவள். போதுமான ஓய்வூதியம் கிடைக்கிறது. எனவே எப்படியாகிலும் சம்பாதித்தாக வேண்டிய கட்டாயம் எனக்கில்லை.
நான் சொன்ன புலனாய்வு இதழ் குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள் யாரார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். தவறு செய்த அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் தற்கொலை செய்துகொண்டதன் பின் நானும் உங்கள் விருப்பம் போல் உங்கள் மகிழ்ச்சிக்காகத் தற்கொலை செய்து கொள்ளுகிறேன்! தவறு செய்ததாக நினைக்காவிட்டாலும் கூட! ….அல்லது தவறு செய்த டாக்டர்களை யெல்லாம் நீங்கள் கொலை செய்த பின், கடைசியாக என்னையும் நீங்கள் கொலை செய்யலாம்! சரியா? தாங்கள் என் மீது சட்டரீதியாக என்ன நடவடிக்கை வேண்டுமாயினும் எடுங்கள். நானும் வழக்கைச் சந்திப்பேன்.” – இந்த முறையில் பதில் எழுதியதாய் ஞாபகம்.
பதிவுத் தபாலில் அனுப்பிய இக்கடிதத்துக்குப் பதில் வரவில்லை.
ஆனால், என்ன ஆச்சரியம்! அந்த டாக்டருக்கும். டாக்டர்களின் சங்கத்துக்கும் எனக்குமிடையே நடந்துகொண்டிருந்த ‘போர்’ பற்றி எதுவுமே தெரிந்திராத நிலையில், ஒரு பிரபல பெண் எழுத்தாளர் எழுதிய கட்டுரை ஒன்று இரண்டு நாள்களில் ஒரு நாளேட்டில் வெளிவந்தது. செவிலியர் சிலர் தங்கள் எசமான மருத்துவர்களைப் பற்றித் தன்னிடம் முறையிட்டதாய் அந்த அம்மையார் அதில் குமுறியிருந்தார்! அரசு மருத்துவ விடுதிகளாயினும் சரி, தனியார் மருத்துவ மனைகளாயினும் சரி, சில மருத்துவர்கள் தகாத முறையில் நடப்பது பற்றித் தம்மிடம் சில செவிலியர் கூறி வருந்தி அழுதது பற்றி அதில் கடுமையாய்க் குறிப்பிட்டிருந்தார்.
உடனே அந்த டாக்டருக்கு அதைப் படிக்கச் சொல்லி மீண்டும் ஒரு பதிவுத் தபால் அனுப்பினேன். அதற்கு அவர் என்ன நடவடிக்கை எடுப்பதாக இருக்கிறார் என்றும் கேட்டேன். பதில் ஏதும் வரவே இல்லை.
தாம் அனுப்பப் போவதாய்ச் சொல்லி என்னை அச்சுறுத்தியிருந்த மருத்துவர்களின் சங்க வக்கீல் நோட்டீசும்தான்!
………
- வாசிக்கப் பழ(க்)குவோமே
- தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 21
- தூமணி மாடம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63
- வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்
- தினம் என் பயணங்கள் – 6
- பிழைப்பு
- ஒரு மகளின் ஏக்கம்
- பூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது
- மருமகளின் மர்மம் – 17
- தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1
- நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜா
- புகழ் பெற்ற ஏழைகள் - 47
- ஹாங்காங் தமிழ் மலர்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 23
- குலப்பெருமை
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.
- கிழவியும், டெலிபோனும்
- பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014
அருமையான பகிர்வு இது. நீங்கள் எழுதிய கதையைப் படித்ததும் எனக்கு ஏனோ ஸ்ரீதரின் ” நெஞ்சி ஓர் ஆலயம் ” திரைப்படம் நினைவுக்கு வந்தது. அதில் அந்த டாக்டரின் நேர்மையையும் கடமையுணர்வையும் தேவிகா சந்தேகப்படுவதாக ” கிளைமேக்ஸ் ” காட்சியை இயக்குநர் அமைத்திருப்பார்.
அது ஒரு புறம் இருக்க, நீங்கள் கூறியுள்ளபடி பாலியல் குற்றங்களில் ஈடுபடாத எந்த தொழிலைச் சார்ந்தவர்களும் கிடையாது என்பது உண்மைதான். நீங்கள் குறிப்பிட்ட சில தொழில்கள் போக ஆன்மீகத் துறையிலும் ( மத குருக்கள் ), நீதித் துறையிலும் ( நீதிபதிகள் உட்பட ) கூட பாலியல் தவறுகள் ( வன்கொடுமைகள் ) நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை உடன் வெளியில் சொல்லி நீதி கேட்கும் பெண்களும் குறைவுதான். வெளியில் சொன்னால் தங்களுடைய பெயர் ( மானம் ) கெடும் என்ற நிலையே அதிகம் நிலவி வருகிறது.( சலுகைக்காகவும், பதவி உயர்வுக்காகவும் தங்களுடைய மேல் அதிகாரிகளிடம் பல்லிளித்து அவர்களை தங்களின் ” வலையில் ” போட்டுக்கொள்ளும் பெண்களும் இருக்கவே இருக்கவே செய்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. )
பாலியல் உணர்வு என்பது ஒரு primitive human instinct. சரித்திரத்துக்கு முற்பட்ட காலத்திலேயே ( pre -historic times ) அது இருந்துள்ளது. பைபிளில்கூட இஸ்ரவேல் மக்களுக்கு மோசே மூலம் கடவுள் யார் யாருடன் ( நெருங்கிய உறவினர்கள் உதாரணம் தகப்பன் – மகன், தாய் – மகள் , சகோதர – சகோதரி ) உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதும், அதற்கு தண்டனை கல்லெறிந்து கொல்லுதல்தான் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது ( லேவியராகமம் : அதிகாரம் 18 ) இதன் மூலம் இத்தகைய தகாத உறவுகள் ( incest ) அன்றே பரவலாக இருந்துள்ளது தெரிய வருகிறது.
மருத்துவத் தொழில் புனிதமானதுதான் ( Medicine is a noble profession ). மருத்துவம் பயின்று வெளியேறும் மாணவர்கள் ஹிப்போகிரேட்டஸ் சாத்தியப் பிரமாணம் ( Hippocrates Oath ) செய்வதுண்டு. ஆனால் எல்லா தொழிலிலும் சில ” கருப்பு ஆடுகள் ” ( Black Sheep ) உள்ளதுபோல் மருத்துவத் தொழிலிலும் இருக்கவே செய்கின்றனர்.
தாங்கள் எழுதிய சிறுகதையின் முடிவு மிகவும் அருமையானது . சமுதாயப் பார்வை மிக்கது. புரட்சிகரமானது. பெண்ணின் அவலத்தை எடுத்துரைப்பது. உங்களின் வாதமும் உண்மையும் துணிச்சலும் மிக்கது. எழுதுகோலின் வலிமையை எடுத்தியம்பியுள்ள உங்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! டாக்டர் ஜி. ஜான்சன்.
உலகமெங்கும் தமிழ்நாடு உட்பட பெண்கள் இரண்டாந் தரப் பிறவிகள் [Second Class Citizens] என்பதும், அவர்கள் பந்தயப் பலியாடுகள் என்பதும், அவரது தன்மானமும், சுயமதிப்பும் அடிக்கடி ஆடவரால் சூறையாடப் படுவதும் [Exploitation of Women] உண்மை என்பதை உங்கள் “சிறுகதைப் போர்” தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
மேலும் இந்த உலகப் போக்கு இன்னும் ஆணாதிக்க திசை நோக்கித்தான் [This is a Man’s World Still] இன்னும் பாய்ந்து கொண்டிருக்கிறது.
மிகவும் துணிச்சலான, அழுத்தமான சிறுகதை. அதன் பக்க விளைவுகள் இருபுறமும் முள்ளாய்க் குத்துபவை !
பாராட்டுகள் கிரிஜா.
சி. ஜெயபாரதன்.
“துக்ளக்” பத்திரிக்கை செய்த ஓர் வேடிக்கை நினைவிற்கு வருகிறது.
ஒரு இதழில் பிரபலமான் நடிக நடிகைகள், அரசியல் தலைவர்கள் கூறியதாக சில (கற்பனை) பொன்மொழிகளை வெளியிட்டிருந்தனர். அடுத்த இதழில் கடந்த இதழில வந்த பொன்மொழிகள் ஏதும் அந்ததந்த பிரபலங்கள் சொன்னவை அல்ல. ஆனால் இன்று வரை யாரிடமிருந்தும் எங்களுக்கு அவ்வித ஆட்சேப அல்லது மறுப்புக் கடிதம் வரவில்லை.
“நெஞ்சில் ஓர் ஆலய”த்திற்காக ஸ்ரீதரை இன்றுவரை பாராட்டும் மருத்துவ உலகம், இந்தக்கதையையும் அடுத்த பக்கமாகக் கண்டுகொண்டிருக்க வேண்டும்!
“வியட்நாம் வீடு” ப்ரெஸ்டீஜ் பத்மனாபனுக்காக இயக்குனரைப் புகழ்ந்தவர்கள், “அரங்கேற்றம்” இயக்குனரை இனத்துரோகி என்றனர்!
பகிர்வுக்கு நன்றி.
அனைவருக்கும் நன்றி, வணக்கம். எனக்கு முதலில் கடிதம் எழுதிய அமைப்பின் பெயர் இண்டியன் மெடிகல் அசோசியேஷன் என்பதாகும். கவுன்சில் என்பது தவறு. 2.4.1998 தேதியிட்ட அக்கடிதம் கிடைத்துவிட்டது. அதன் வாசக்ம் – சில பகுதிகள்:
புனிதமான மருத்துவத் தொழிலை நீங்கள் கீழான நோக்கத்தோடு இக்கதையில் சித்தரித்துள்ளீர்கள். டாக்டர்-நோயாளி புனித உறவை பாதிக்கும்படி எழுதப்பட்டுள்ளது…..இது போன்ற கதைகள் பெண் நோயாளிகள் ஆண் மருத்துவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலையில் வைத்து கொச்சைப்படுத்திவிடும்.இது போன்ற கதையை எழுதி ம்ருத்துவர்களின் மனங்களைப் புண்படுத்தி யிருக்கிறீர்கள் என்பதையும் எங்கள் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். இது போன்ற கதையை எழுதியதற்கு, வெளியிட்ட ஆனந்தவிகடன் மூலமாக வருத்தத்தைத் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
(ஒப்பம்) டாக்டர்….. சென்னை மாநிலச் செயலாளர், இந்திய மருத்துவக்கழகம், தமிழ்நாடு கிளை. (என் பதிலை அனுப்பிவிட்டு நான் அவர்களிடம் அதைத் தெரிவித்த போது வக்கீல் நோட்டிசைப் பற்றி வாய்மொழியாகத்தான் அந்த மருத்துவர் குறிப்பிட்டார். எழுத்தில் அன்று.
ஜோதிர்லதா கிரிஜா