கு.அழகர்சாமி கவிதைகள்

Spread the love

 

(1)

பூக்காரி

 

பந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப்

பிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு

லிஃப்ட் இல்லாத அடுக்ககத்தின் உச்சி மாடி வீட்டுக்குத்

தினம் தினம் மூச்சு வாங்க ஏறி வந்து

மல்லிகைப் பூவை விட முகம் மலர்ந்து முழம் போட்டு மல்லிகைப் பூ தந்து விட்டுப் போகும்

ஒல்லிக் குச்சியான பூக்காரியை மல்லிகைக் கூடையுடன்

நகர் விட்டு நீங்கிய சில காலம் கழித்து தற்செயலாய்

நகரின் நாற்சாலைகளின் ‘சிக்னல்’ சந்திப்பில் கடந்து கொண்டிருக்கும் வேளையில் காண்பேன்.

 

ஒரு கணம் நிதானித்து

கூப்பிடும் முன்னமே கடந்து போய்க் கொண்டிருப்பாள் அவள்.

 

அவள் என்னை விசாரித்துச் செல்வதை

வாகன நெரிசலில் மிதிபடாமல் அவளின் கூடை மல்லிகை மணம் வந்து சொல்லும்.

 

எவ்வளவு பெரிது

கருதும் அவளின் கேண்மை?

 

மல்லிகை மணத்தையா முழம் போட முடியும்?

 

                                     (2)

இரக்கம்

 

பூ உதிரும் போதெல்லாம்

கிறுக்காகத் திரியும்

காற்றில்

கீறி விடாமல்

பூ

எங்கு விழுமோ எப்படி விழுமோ என்றெல்லாம் புலம்பி

மரம் தனக்குள் அழுமென்று அதன் வேர்கள் ஆற்றாது சொல்லி

மண்ணுக்கு மட்டும் தெரியும்.

 

பூ உதிர

பூமியாகி மடியிலேந்தும் மண் இரங்கி.

 

 

(3)

அந்நியன்

 

ஓய்வு பெற்று சில நாட்கள் முன் காலி செய்த என்

அலுவலக அறை.

 

காலியாயிருக்குமா காலியறை என்று காண வேண்டும் போல்

கவனமாய் நுழைவேன்.

 

நாற்காலிகள் எழுந்து நின்று

வரவேற்கும்.

 

சுவர்க் கடிகாரம் சற்று நின்று

கையசைக்கும்.

 

மூலையில் ஒதுங்கியிருக்கும் பூந்தொட்டிப் பூ முகங்கள்

புன்னகைக்கும்.

 

ஒளிந்திருக்கும் அறை வெளியும் கொஞ்சம் வெளியே தலை நீட்டி

பேசி விட்டுப் போகும்.

 

கதவு

காத்துக் கொண்டிருக்கும்.

 

என்றுமில்லாதது போலிருக்கும் அறை

அன்று.

 

அறைக்குள்ளே

எனக்கு வெளியே அறையிருக்கும்.

 

 

(4)

கங்கு

 

இருளில்

அலறும் கடலை மேலும் பயமுறுத்துவது போல் உரசுவான் ஒரு தீக்குச்சியை அவன்.

 

உள்ளங் கைகளைக் கச்சிதமாய்க் குவித்து உப்பங் காற்றை ஏமாற்றிப் பற்ற வைப்பான் பீடியை.

 

ஒரு அரைக் குருட்டுப் பூனையின் ஒற்றைக் கண் போல்

ஒளிரும் பீடியின் தீக்கங்கு

உலகு போர்த்திய காரிருளில் ஒரு பொத்தலிடும்.

 

உதட்டில் பீடி வைத்து

இழுத்து விடுவான் இருள் திரித்ததாய் புகை வளையங்களை.

 

உயிர் புகைந்து உடல் சிறுக்கும் பீடி.

 

சுடும் பசி சுடாமலிருக்க விரல் சுடும் வரை புகை இழுத்து உன்மத்தம் கொள்வான்.

 

விரல் சுட்டதும் தான் தாமதம் மிச்ச துண்டு பீடி கங்கில் கனன்று கண் விழித்திருக்கத் தூக்கி எறிவான் கடலில்.

 

கங்கு அணையவில்லை கடலில்

காலி வயிற்றில் அலை புரளும் அழிபசியில் அவனுக்கு.

 

 

கு.அழகர்சாமி

 

 

 

Series Navigation