கெளட் நோய் ( Gout )

டாக்டர் ஜி. ஜான்சன்

G1 ” கெளட் ” என்பதற்கு சரியான தமிழ் சொல் இல்லை. இதை குருத்தெலும்பு மூட்டு வீக்கம் எனலாம். நாம் இதை கெளட் என்றே அழைப்போம்.
இது வளர்சிதை மாற்றம் ( Metabolic ) தொடர்புடைய நோய். வளர்சிதை மாற்றம் என்பது உணவை சீரணம் செய்து அதை சக்தியாக மாற்றம் செய்வதாகும். இவ்வாறு செய்யும்போது சில கழிவுப்பொருட்கள் உற்பத்தியாவது இயல்பு. அவைகளில் ஒன்றுதான் யூரிக் அமிலம். இதை சிறுநீரகங்கள் கழிவுப்பொருளாக வெளியேற்றுகின்றன. அதில் கோளாறு உண்டானால் அது இரத்தத்தில் அதிகமாகி மூட்டுகளில் உள்ள குருத்தேலும்புகளில் படிகின்றன. இவற்றை எதிர்த்து வெள்ளை இரத்த செல்கள் போராடி அவற்றை விழுங்க முற்படும்போது அங்கு அழற்சி உண்டாகி வீக்கத்தையும் வலியையும் உண்டுபண்ணுகிறது. இந்த யூரிக் அமிலம் அப்பகுதியில் படிகமாக ( Crystal ) மாறி கூறிய முனைகள் கொண்டவையாகின்றன.ஒரு ஐஸ் கட்டியை உடைத்தால் எப்படி கூர்மையான பொடியாகிறதோ அதுபோன்ற தோற்றம் தரும்.
இந்த நோய் நடுத்தர அல்லது வயது முதிந்த ஆண்களுக்கும், மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கும் உண்டாகும்.

நோய் இயல்

G3 யூரிக் அமிலம் பூரின் என்ற பொருளுடன் தொடர்புடையது. பூரின் உடலின் செல்களில் உள்ளது. இது மரபணுக்களில் உள்ளது. அத்துடன் அனைத்து உணவு வகைகளிலும் உள்ளது. குறிப்பாக இறைச்சி வகைகளில், அதிலும் குறிப்பாக ஈரல், இருதயம், சிறுநீரகம், குடல் போன்ற பகுதிகளில் அதிகம் உள்ளது. அத்துடன் மேக்கரல், ஹெரிங், சார்டின் போன்ற மீன் வகைகளிலும், இரால், மட்டி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது. கடலை, வேர்க்கடலை, அவரை, பசலை, முட்டைகோஸ், ஒட், காளான், பயித்தாங்காய், போன்ற தாவர வகைகளையும் அதிகம் உள்ளது.
நம்முடைய உடலுக்கு யூரிக் அமிலம் தேவைப்படுகிறது. அது இரத்தக்குழாய்களுக்கு பாதுகாப்பு தருகிறது. அதனால்தான் பூரின் நிறைந்துள்ள உணவு வகைகளை உடைத்து யூரிக் அமிலத்தை உண்டுபண்ணுகிறது. தேவைக்கு அதிகமான யூரிக் அமிலம் சிறுநீரகம் வழியாக வெளியேறுகிறது. அப்படி வெளியேறுவதில் தடையோ, அல்லது அதன் உற்பத்தி அதிகமோ ஆனால் அது குருத்தெலும்பில் படிகமாக மாறி வீக்கத்தையும் வலியையும் உண்டுபண்ணுகிறது. இதுதான் கெளட் நோய் என்பது.

அறிகுறிகள்
G4
* மூட்டு அழற்சி – இதுவே முக்கிய அறிகுறி. அழற்சி உண்டானால் வீக்கமும் வலியும் ஏற்படும். பொதுவாக ஒரு மூட்டுதான் பாதிக்கப்படும். ஆனால் சில சமயங்களில் பல மூட்டுகள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.பெரும்பாலும் காலின் கட்டை விரல்தான் அதிகமாக பாதிக்கப்படும். வலி இரவில் அதிகமாகி விரல் வீங்கி, சூடாக, சிவந்துபோய்விடும். தொட்டால்கூட அதிகம் வலிக்கும். இந்த வலி சுமார் மூன்றிலிருந்து பத்து நாட்களில் தானாக குறையும். பின்பு சில நாட்களில் மீண்டும் வலிக்கும்.
* சிலருக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்து வலிக்கலாம்.
* சிலருக்கு மூட்டுகளில் இல்லாமல் கைகள், காது, குதிக்கால் போன்ற பகுதிகளும் பாதித்து வலிக்கும்.
* சிலருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உண்டாகி செயலிழப்பு ஏற்படலாம். அப்போது சிறுநீரகக் கற்கள் உண்டாகலாம்.

பரிசோதனைகள்

* இரத்தப் பரிசோதனை – இதில் யூரிக் அமிலம் உயர்ந்து காணப்படும். இது மிகவும் எளிமையான பரிசோதனை. கிளினிக்கில் ஒரு சொட்டு இரத்தம் எடுத்து பரிசோதனை செய்துகொள்ளலாம்.
* சிறுநீரகப் பரிசோதனை – இதிலும் யூரிக் அமிலம் உயர்வாக இருக்கும்.
* எக்ஸ்ரே படம் – மூட்டில் வீக்கம், மாற்றம், தேய்வு போன்றவற்றைக் காணலாம்.
* மூட்டு நீர் பரிசோதனை – மூட்டிலிருந்து நீர் வெளியேற்றி பரிசோதனை செய்து பார்க்கலாம்.இதன்மூலம் யூரிக் அமிலத்தின் படிமத்தைக் காணலாம்.

சிகிச்சை முறைகள்

* வலி குறைக்கும் மாத்திரைகள். ஊசிகள்.
* கோல்ச்சிசின் மாத்திரை ( Colchicine ) – இதை வலி உண்டான 24 மணி நேரத்தில் உட்கொள்ளவேண்டும். இதை அதிகம் உட்கொண்டால் ஆபத்தான பக்கவிளைவுகள் உண்டாகும்.
* மூட்டில் ஸ்டீராய்ட் ( Steroid ) ஊசி போடுதல்.
* ஸ்டீராய்ட் மருந்துகள் உட்கொள்ளுதல்.
* அலுபூரினால் மாத்திரைகள் – இவை யூரிக் அமில உற்பத்தியைக் குறைக்கின்றன. இவற்றை வலி இல்லாதபோது தினமும் உட்கொள்ளலாம். பக்க விளைவுகள் உள்ளதால் மருத்துவரின் கண்காணிப்புடன் உட்கொள்ளவேண்டும்.

தடுப்பு முறைகள்

கெளட் நோய் உள்ளது நிச்சயமானால் பூரின் அதிகமுள்ள உணவுவகைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும். பீர் மற்றும் இதர மதுபானங்கள் அருந்துவோர் அவற்றை அடியோடு நிறுத்தியாகவேண்டும்.
கெளட் நோயை குணப்படுத்த முடியாது. கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.இதனால் உயிருக்கு ஆபத்து இல்லை.ஆனால் சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளானால் அதனால் சிரமம் உண்டாகும். அதனால் உயர் இரத்த அழுத்தம், இருதய பாதிப்பு உண்டாகி உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம்.

( முடிந்தது )

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகம் 58ஆம் வருட விழாபரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி