கோதையர் ஆடிய குளங்கள்

author
0 minutes, 1 second Read
This entry is part 19 of 19 in the series 3 அக்டோபர் 2021

 

கே. பத்மலக்ஷ்மி

நான் பிறந்தது காஞ்சிபுரம். கோவில்களின் நகரமான இங்கு நிறைய குளங்கள் உண்டு. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு இருந்தது. அந்தத் தெரு முழுவதும் என் வயதொத்த சிறுவர், சிறுமியர் இருந்தனர். பள்ளி விடுமுறை வந்துவிட்டால் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். காலையிலேயே கோவிலின் முன்பு ஆஜர் ஆகிவிடுவோம். சாமி கும்பிட அல்ல. கோவில் யானையைக் குளத்தில் இறக்கி குளிக்கச் செய்வார்கள், அதை வேடிக்கை பார்க்கத்தான். மனோகர் அண்ணா தான் யானைப்பாகன். அண்ணாவின் கட்டளைப்படி யானை, குளத்தின் படிகளில்  மெல்ல இறங்கும், சற்று இடைவெளிவிட்டு அதன் பின்னே நாங்களும். முதல் படியில் யானை படுத்துக்கொள்ள,  கல்லைக்கொண்டு உடல் முழுதும் நன்கு தேய்த்துவிடுவார் மனோகர் அண்ணா. காது மடல்களைத் திருப்பி, தும்பிக்கையைத் தூக்கி, குனிந்து முழங்காலிட்டு, முதுகினைச் சாய்த்து… என தேய்த்து விடுவதற்கு வாகாய் உடலை யானை காட்டும். யானை படுத்திருக்கும் போது, சற்றே பயத்தாேடு மெல்ல அதன் அருகே சென்று  தொட்டுப் பார்ப்போம். தடவிக் கொடுப்போம், எதுவும் செய்யாது. நாய்க்குட்டி போல சாதுவாக இருக்கும்.  ஆனால் அண்ணா தான் “ஏய், பிள்ளைகளா…  தள்ளி நில்லுங்க” என்று அதட்டுவார். நாங்கள் கேட்க மாட்டோம். மறுபடியும் மறுபடியும் யானையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருப்போம். கொஞ்ச நேரம் எதுவும் சொல்லாமல், தேய்த்துவிட்டுவிட்டு யானையின் மொழியில் அதனிடம் ஏதோ சொல்வார், உடனே சடாரென வேகமாக எழுந்து யானை ‘புர்ர்’ என்று சத்தமிடும். அவ்வளவு தான், நாங்கள் அலறி அடித்துக்கொண்டு, குளத்தைச் சுற்றியிருந்த மண்டபத்திற்குள் தலைதெறிக்க ஓடுவோம்.  “இதுக்கு தான் தள்ளி நில்லுங்கனு சொன்னேன்… கேட்டீங்களா?” என்பார் அண்ணா புன்முறுவல் பூத்தவாறு. சற்று நேரத்திற்குப் பிறகு  யானை குளத்திற்குள் இறங்கி தும்பிக்கையால் நீரை வாரி இறைத்துக்கொண்டு ஹாயாகக் குளிக்கும். யானை குளிக்கிறதோ இல்லையோ, அது வாரி இறைக்கும் தண்ணீர் முழுதும் எங்கள் மேல் தான் விழும். மழையில் நனைந்தது போல சந்தோஷமாக இருக்கும் . ஏறக்குறைய இரண்டு மணிநேரமாகும் யானை குளித்து முடிக்க. பிறகு அண்ணா யானையின் முகத்தில்,  அலங்காரமாக பூ டிசைன், சந்திர சூரியர்களின் படம் வரைவார். அவரது கைவண்ணத்தில் உருவான சித்திரங்கள் ரம்மியமாக இருக்கும். யானை கரையேறிச் செல்ல,  “அதற்குள் யானை கரையேறிவிட்டதே இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம்ல” என்று சொல்லிக்கொண்டே,  மனதே இல்லாமல், படியேறி சொட்டச் சொட்ட நனைந்த ஈர ஆடையோடு  வீட்டிற்குப் போவோம். அம்மாவிடம் திட்டு வாங்குவதெல்லாம் தனிக்கதை. 

நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் தான் மனித நாகரிகம் நன்கு வளர்ச்சியடைந்தது. குளங்கள், ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள் தான்  மனிதனுடைய நீர்த் தேவைகளைப்  பூர்த்தி செய்யும் ஆதாரமாக விளங்கின. வெள்ளி முளைத்து விடியல் துவங்கியதுமே எழுந்திருக்கும் இல்லத்துப் பெண்கள், தங்கள் தோழிமாரோடு குளங்களில் நீராடிவிட்டு, அருகிலிருந்த அரசமரத்தடிப் பிள்ளையார், நாகர்களை வழிபட்டு, வீட்டிற்குத் தேவையான குடிநீரைக் குடங்களில் கொண்டுவருவார்கள். இப்படித்தான் தங்களது நாளைத் துவக்கினார்கள். அதன் பிறகே சமையல் வேலை எல்லாம் செய்தார்கள். ஆடிப்பெருக்கு, துலாஸ்நானம், போன்ற விசேஷ காலங்களில் குளங்களில் குளிக்க பெண்கள் கூட்டம் அலைமோதும். இந்நாட்களில் தமது நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நீர்ஆதாரங்களை மக்கள் தெய்வங்களாக வழிபட்டனர். அன்றைய தினம் நீர் நிலைகளுக்கு பூஜைகள் செய்து, தீபங்களை நீரில் மிதக்க விடுவர். வானத்து விண்மீன்களெல்லாம் குளத்தில் இறங்கி விளையாடுகின்றதோ என்று நினைக்கத் தூண்டும் ஒரு மாயபிம்பத்தினை அக்காட்சி தோன்றுவித்தது. மங்கையர் தமது கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி தாலி பெருக்கிக்கொள்ளும் வழக்கம் இன்றும் நடைமுறையில்  உள்ளது.

கச்சபேஸ்வரர் குளம், ஏகாம்பரேஸ்வரர் குளம், மங்கள தீர்த்தம், தாயார்குளம், சர்வதீர்த்தம் என்று கிழமைக்குத் தக்கவாறு வாரம் ஒரு குளத்தினைத் தேர்ந்தெடுத்து, தெருப் பெண்கள் எல்லாரும், தங்கள் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு விஜயா பாட்டியின் தலைமையில் கிளம்புவார்கள். இளம் பருவத்துப் பெண்களும் இதில் உண்டு.  80 களில் வந்த இளையராஜாவின் பாடலைப் பாடிக்கொண்டே ஜாலியாக நீந்துவார்கள். பாட்டிக்கு மட்டும் முதுகெல்லாம் கண் இருக்கும் போலும். பின் பக்கமாக பெரியவர்கள் துணையின்றி  குளத்தில் இறங்க நினைக்கும் குழந்தைகளை “ஏய் மேல ஏறு” என்று திரும்பிப் பாராமலே அதட்டுவார். பாட்டியின் குரலில் தாய்மையும், கம்பீரமும் கலந்திருக்கும். யாரும் பாட்டியின் சொல்லைத் தட்டவே மாட்டார்கள். குளிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை அப்படியே அலக்காகத் தூக்கி நீரில் முக்கி எடுத்துவிடுவார் பாட்டி . குளத்தோரங்களில் இருக்கும் மரங்களிலிருந்து, மெல்லிய காற்று சிலுசிலுவென வீச குளிரில் தேகம் நடுநடுங்கும். அந்த சிலிர்ப்பு தீர்வதற்குள் நீரில் இறக்கி விட்டுவிடுவார்கள். சிரித்து, கும்மாளமிட்டு, குளுமையை ரசித்து, தென்றலை சுவாசித்து குளத்து நீரில் ஆனந்தமாக விளையாடியதில் உடம்பும் சுத்தமானது, மனதும் சுத்தமானது. இப்போதெல்லாம் இப்படியான வாழ்க்கையை ரசித்திடும் அனுபவங்கள் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவே இல்லை என்பதே ஆதங்கம். இன்று பல குளங்கள் கதவு போட்டு பூட்டப்பட்டு விட்டன. சிலதில் மருந்துக்குக் கூட ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்பது தான் நிதர்சனம். 

விசும்பின் துளி மண்ணைத் தொடும் போதெல்லாம், அது வீணாகக் கூடாது என்ற உயரிய நோக்கோடு உருவாக்கப்பட்டவை தான் குளங்களும், ஏரிகளும். மழைநீரை சேமிப்பதும், நீர் மேலாண்மையும் இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலமாகவே  நம்மிடையே இருந்து வந்திருக்கிறது. மன்னர்களும் இதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.  மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்  பொயு 130–150 ல் மேற்கு இந்தியாவை ஆண்ட முக்கியமான மன்னனாகக் கருதப்படுபவன் சக வம்சத்தை சேர்ந்த முதலாம் ருத்ரதாமன். சாத்தவாகனர்களை இருமுறை வென்று அவர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டவனும் இவனே. குஜராத்தின் ஜூனாகட்டில் உள்ள கிர்நார் மலையின் மீது ஒரே பாறையில் செதுக்கப்பட்ட மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன.

இதில் ருத்ரதாமனின் கல்வெட்டில் உள்ள முக்கியக் குறிப்பு என்னவெனில், சந்திரகுப்த மெளரியரின் காலத்தில் உருவாக்கப்பட்ட சுதர்சன ஏரி, புயலாலும் அதீத மழையாலும் சிதைந்து சேதமுற்றது. அதை ருத்ரதாமனின் ஆணைப்படி சுவிசாகன் என்னும் மந்திரி பிரதானி, சீரமைத்து , மீண்டும் மக்களுக்குத் தேவையான நீரை வழங்கினார் என்றும், ஏரி உடைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த  வரியும் அவர் போடவில்லை என்ற தகவலையும் தெரிவிக்கிறது. முழுவதும் தூய சமஸ்கிருத மொழியில் நீளமாக அமைந்த முதல் கல்வெட்டு இது தான் என்கின்றனர் ஆய்வறிஞர்கள். இது ஒன்று மட்டுமல்ல. இதுபோல் பல கல்வெட்டுச் சான்றுகளை குறிப்பிட்டுக் கொண்டே போகலாம்.  இதிலிருந்து இந்தியாவை ஆண்ட மன்னர்கள்  அனைவருமே நீர் மேலாண்மைக்கு தான் அதிக முக்கியத்துவம் தந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இங்கே மற்றொரு உதாரணத்தையும்  நான் குறிப்பிட விரும்புகிறேன்.  

 

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் தோல வீரா. “கோட்டாடா திம்பா” என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இப்பகுதி ஒரு பாலைவனப் பிரதேசம். ஆனால் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள்  மழைநீர் வீணாகாமல், முறையாக நீரைச் சேமித்து, இப்பகுதியையே சோலையாக மாற்றியுள்ளனர்! இந்தியத் தொல்லியல் துறையினர் இப்பகுதியில் அகழ்வாய்வை மேற்கொண்ட போது, இங்கிருந்த முற்கால நகரமைப்பு, கட்டடக் கலை, நாகரிகம், நீர் மேலாண்மை குறித்த பல வியக்கத் தக்க தகவல்கள் கிடைத்தன.

இந்நகரின் வடக்கே மான்சர் மற்றும் தெற்கில் மாஹர் என்ற நதிகள் ஓடின. மழைக்காலங்களில் மட்டுமே இவற்றில் நீரோட்டம் இருந்திருக்கிறது. மற்ற காலங்களில் நீர்ப் பஞ்சம் ஏற்படவே இம்மக்கள், நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி, எப்போதெல்லாம் நீர் பாய்ந்துள்ளதோ அப்போதெல்லாம் நீரைத் தங்கள் நகருக்குத் திசை திருப்பியுள்ளனர். கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டி ஆகியவற்றை அவர்கள் கட்டமைத்து நீர்த் தேவைகளைச் சமாளித்தனர். இதன்மூலம் தங்கள் பிரதேசத்தைப்  பசுமையானதாக மாற்றினர். இதுமட்டுமின்றி வெவ்வேறு அளவுகளில் 16க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை உருவாக்கினர். இதில் மிகப்பெரியதும், முக்கியமானதாகவும் கருதப்பட்ட ஒரே ஒரு ஏரி மட்டும் 2,49,000 கியூபிக் மீட்டர் நீரைத் தேக்கக்கூடியது என்பது குறிப்பிடத் தக்கது. “சிந்துச் சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்கள், மழை நீரை சேகரித்தல், பாதுகாத்தல், அதைத் தேவைக்குத் தக்கவாறு பயன்படுத்துதல் போன்றவற்றில் நவீன நுட்பங்களைக் கையாண்டுள்ளனர். இவர்கள் உருவாக்கியுள்ள கிணறுகளின் கட்டுமான அமைப்பு பெரும் விந்தையாக உள்ளது. குறிப்பிட்ட கோள அளவில் முன்புறம் சரிவாக உள்ள (Trapezoid) செங்கற்களை அடுக்கிக் கட்டியுள்ளனர். இவை கட்டுமானம் உட்புறமாகச் சரிந்து நீர்நிலைகளை சேதமுறாமல் இன்றுவரை பாதுகாக்கின்றன. மேலும் இவர்கள் உருவாக்கியுள்ள ஏரிகள், நீர்த்தேக்கங்களின் அமைப்பினைக் காணும் போது அவர்கள் மிகச் சிறந்த நீரியல் சார்ந்த தொழில்நுட்ப நுண்ணறிவினைப் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது. இதுவரை மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல் வரிசையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்தாவது பெரிய நகரம் இது. மெசபட்டோமியா, பாரசிகம், தெற்கு அரேபியாவிலிருந்தெல்லாம் வணிகர்கள் இங்கு வந்து வர்த்தகம் செய்ததற்கான ஆதரங்கள் கிடைத்துள்ளன” என்று குறிப்பிடுகிறார் இவ்வாய்வினைத் தொடங்கி நடந்திய தொல்லியல் ஆய்வாளரான ஆர்.எஸ் பீஷ்ட். 

  •  

பண்டைத் தமிழர் வாழ்வியலையும் அவர்களது உணர்வுகளையும்  பிரதிபலித்துக் காட்டுவது சங்க இலக்கியங்கள். இவற்றை உற்று நோக்கும் போது அதில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தம் வாழ்விடங்கள், நடை உடை பாவனைகள், வைத்திய முறைகள், விவசாயம் என எல்லாவற்றையும் வாழும்  நிலங்களுக்கேற்ப  அமைத்துக்கொண்டனர். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக  இருப்பது நீர் மட்டுமே. நீருக்கு ஏற்றாற் போல் தான் நிலம் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. நிலம், நீரின் தன்மைக்கேற்றவாறு உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகிறது. பிரதேசத்திற்குப் பிரதேசம் மரம், செடி கொடிகள் வளர்கின்றன. ஒரு இடத்தில் வளரும் தாவரம் மற்றொரு இடத்தில் வளர்வதற்கான சூழல் இருப்பதில்லை. உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உணவினைச் செய்வதும், அவற்றின் தாகம் தணிப்பதும் தண்ணீர் தான். நமக்குத் தேவையான நீரை மழையின் வாயிலாக நாம் பெறுகிறோம். அது இயற்கையின் கொடை. வெப்பத்தின் காரணமாக கடலின் நீர் ஆவியாகி வளிமண்டலத்தை அடைந்து மேகங்களாகத் திரண்டு மழையாகப் பெய்கிறது. அவ்வாறு பெய்யும் மழையானது மீண்டும் கடலையே சென்றடைகிறது. இதனை நீரின் சுழற்சி என்கின்றனர். இந்த சுழற்சி எல்லாக் காலத்திலும் நிகழ்கிறது என்ற போதும் மழையாகப் பொழிவது சில சமயங்களில் மட்டுமே. அவற்றையே பருவகாலங்களாக கொண்டனர் நம் முன்னோர்கள். 

மழையின் வருகையினை காற்று வீசும் திசையைக்கொண்டும், அது வீசும் முறையைக்கொண்டும், மேல்காற்றா கீழ்காற்றா, மெல்லிய காற்றா என்பதை கணித்தும், மேகத்தின் நிறம், அடர்த்தி, நகரும் வேகம் ஆகியவற்றைக் கொண்டும் மழையின் வருகையைக் கண்ணால் கண்டே நம் முன்னோர் கணித்தனர். அதோடு கோள்களின் இயக்கத்தைக் கொண்டும் மழையின் தன்மையை அறிந்தனர். தங்களுள் பொதிந்து கிடக்கும் இந்த நுண்ணறிவுகளைக் கொண்டு மழை வருவதை முன்பே அறிந்து அதற்கேற்றாற் போல் அவற்றை நீர் நிலைகளில் சேமித்துக்கொண்டனர். நீர் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் இலஞ்சி, கேணி, ஊருணி, கோட்டகம், ஏரி, மடு, பொய்கை, குளம், குட்டை என பலவகையான நீர் நிலைகளை உருவாக்கினர். இப்பெயர்களைக் கொண்டே அவற்றின் வடிவம், நீரைச் சேமிக்கும் திறன், கொள்ளளவு, அது எந்த நிலத்தைச் சார்ந்தது, அதன் தன்மை எத்தகையது என்பதையும் வகைப்படுத்தினர். முறையாக மழை நீரைச் சேமித்து பாசனத்திற்குப் பயன்படுத்தினர். இதனால் பயிர்த்தொழில் செழித்தது. விவசாயம் மனிதர்களின் உயிர் நாடியாக விளங்கியது.  மழையை ஒவ்வொருவரும் கொண்டாடினர். அதைப் போற்றும் விதமாக இந்திர விழா போன்றவையும் கொண்டாடினர். சான்றோர்களும் புலவர்களும் ஆளும் ஆட்சியாளர்களை, மாதம் மும்மாரி பொழியட்டும், என வாழ்த்தினர். ஆனால் இன்றோ மாதம் மும்மாரியெல்லாம் பெய்வதில்லை. வருடத்திற்கு மூன்று மழை பொழிவது கூட கேள்விக்குறியாகத்தான் உள்ளது. 

மழை வரவில்லை என்றால் மழையே இல்லை என்கிறோம். மழை வந்தால், அன்றாட வாழ்க்கை கெட்டுவிட்டது என்கிறோம். ஆகமொத்தம் புலம்புவது மட்டுமே நமது வேலையாகிப் போனது.  இக்கால மக்கள் மழையை ஏனோ ரசிப்பதேயில்லை. குழந்தைகளையும் ரசிக்க அனுமதிப்பதேயில்லை. மழையில் நனையாதே, மண்ணில் விளையாடாதே, சளி பிடிக்கும், காய்ச்சல் வரும்… என்று சொல்லிச் சொல்லி குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விடுகிறோம். மழையை ஏதோ வரக்கூடாத விருந்தாளி போல நினைத்து உடனே வீடுகளுக்குள் சென்று கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஸ்மார்ட் போனின் குப்பைகளிலோ அல்லது டி.வி சீரியல்களிலோ நம்மை மூழ்கடித்துக்கொண்டு விடுகிறோம். இயற்கையோடு இயைந்து செல்வதற்கு பதிலாக முழுதும் அதற்கு எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.  இயற்கையை நேசிக்கும் பாங்கினை மறந்து இயந்திர கதியான வாழ்க்கைக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டதே இத்தகைய மனமாற்றித்திற்கான அடிப்படைக் காரணம்.    

ஒருநாள் ஒரு பொருளாதார பேராசிரியர் ஓஷோவிடம் “மழை பெய்யும் போதெல்லாம் நீண்ட தூரம் நடந்து இங்கு வருகிறாய். பின் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு நீயாக ஏதோ பேசுகிறாய், சிரிக்கிறாய். இப்படியெல்லாம் செய்வதற்கு நீ என்ன பைத்தியமா? ” என்று கேட்டாராம். அதற்கு ஓஷோ “உங்களுக்கு மழையில் நனைந்து பழக்கமில்லை போலும், நாளை என்னோடு மழையில் நனையுங்கள், பின் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறேன்” என்றார். மறுநாள் இருவரும் நெடுந்தூரம் மழையில் நனைந்தார்கள். ஒருமணி நேரம் கடந்த போது அந்த பேராசிரியர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். ஏன் அழுகிறீர்கள் என்ற போது  “இத்தனை நாட்கள் எவ்வளவு மழையை நான் வீணடித்திருக்கிறேன். இந்தத் தருணத்தை என் வாழ்வில் என்றுமே மறக்க இயலாது. மழை என்னுள்ளே வெளியில் சொல்ல முடியாத ஏதேதோ மாற்றங்களை உண்டாக்குகிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை எனக்குக் காட்டித் தந்ததற்கு நன்றி” என்றாராம். அதற்கு ஓஷோ “இப்படித்தான் நாம் முட்டாள்தனமான ஏதேதோ காரணங்களைக் கற்பித்துக்கொண்டு இயற்கையின் இன்பங்களை அனுபவிக்கத் தவறிவிடுகிறோம். இனியாவது மழையில் நனையுங்கள், முடிந்தவரை நடந்து செல்லுங்கள், முடியாத போது அமர்ந்து கொண்டு கண்ணை மூடி மழையின் இன்னிசையை கவனியுங்கள். மழையோடு மழையாக உங்களை கரைத்திடுங்கள்” என்றாராம். 

இந்த அறிவுரைகளை யெல்லாம் நாம் ஏற்கப்போவதே இல்லை. மழையைப் புறக்கணிப்பதோடு, மழைநீரைச் சேமிக்கும் நீர் நிலைகளை நம் இஷ்டத்திற்கு கபளீகரம் செய்து அதில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி வருகிறோம். மழை நீர் சேகரிப்பிற்காக எத்தனை திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தாலும் அதையெல்லாம் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிக்கின்றோம். இதையெல்லாம் நான் ஏன் செய்யவேண்டும். அது அரசாங்கத்தின் கடமையல்லவா. அதற்காகத் தானே இவர்களுக்கு ஓட்டுப்போட்டு ஆட்சியை தந்திருக்கிறோம்… என எல்லா நல்ல விஷயங்களிலும் அரசின் மீது பழியைச் சுமத்தி விட்டு நாம் அலட்சியமாகதான் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். விழிப்புணர்வற்ற தன்மையும், அலட்சிய மனோபாவமும் மாறாத வரை மழை நீர் சேகரிப்பு என்பது சாத்தியமாகாது. மழைநீர் சேகரிப்பை மறந்ததின் விளைவு இன்று நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாகக் குறைந்து விட்டது. நீருக்கான போர் தினம் தினம் நடக்கிறது. இதெல்லாம் எதனால் என்பதை சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. இன்னும் பத்தாண்டுகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாத நிலையினை நாம் எட்டப்போகிறோம் என்று இப்போதே விஞ்ஞானிகள் அபாயச் சங்கினை ஊதிவிட்டார்கள். இனியும் விழிப்புணர்வு கொள்ளவில்லை எனில் “குரும்பை மென்முலை கோதையர் குடைந்தாடு பாண்டிக்கொடுமுடி” என்று காவிரியின் அழகை ரசித்துப் பாடினார்களே அந்தக் காவிரியும் நமக்கில்லை, தாமிரபரணி, நொய்யல், பவானி போன்ற எந்த ஆறுகளும் இருக்கப்போவதில்லை. நீர்நிலைகள் வற்றி வறண்ட காடாகும். Day Zero, (ஒரு சொட்டு தண்ணீரில்லாத நிலை) என்று அறிஞர்கள்  கூறினார்களே அந்த நாளினை நாம் சந்திக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  • • •

 

 

Series Navigationகனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *