சதக்கா

This entry is part 11 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

சிறுகதை (இஸ்லாமிய சமுகத்தின் பின்னணியில்)

யூசுப் ராவுத்தர் ரஜித்
(சதக்கா என்றால் தான தர்மம். அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படும் இந்த தான தர்மங்கள் நெருப்பை நீர் அணைப்பதுபோல் நம் பாவங்களை அழித்துவிடும் வல்லமை பெற்றது – நபிகள் நாயகம் (ஸல்))
மூன்றாம் மாடியிரலிருந்து தன் கால்குலேட்டரைத் தவறவிட்டுவிட்டு அப்படியே நின்றார் கதிஜா. கதிஜா ஒரு ஓ நிலை மாணவி. தமிழாசிரியர் கிரிஜா பார்த்துக் கொண்டே இருந்துவிட்டுக் கேட்டார்.
‘உன் கால்குலேட்டர் உடைந்துவிட்டது. யார் தலையிலாவது விழுந்து உடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். ஒரு சலனமுமில்லாமல் நிற்கிறாயே?’
கதிஜா சொன்னார்
‘விழுந்துவிட்டது. சலனப்பட்டாலும் விழுந்தது விழுந்ததுதான். உடைந்தது உடைந்ததுதான். யார் தலையிலும் விழவில்லை. நடக்காத ஒன்றைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?’
கிரிஜா சொன்னார்
‘பதினேழு வயதில் எழுபது வயதின் முதிர்ச்சி. வாழ்க்கை உனக்கு வெகு சுலபம் கதிஜா.’
ஓநிலை முடித்துவிட்டு பல்துறைக் கல்வி பயின்றார் கதிஜா. தகவல் தொடர்பு பாடத்தில் பட்டயம் பெற்றார் . ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. அடுத்து
கதிஜாவின் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேலை அனுமதி பெற்று அதிக திறமையைக் காட்டி இப்போது நிரந்தரவாசத் தகுதியுடன் இருக்கும் முகம்மது என்ற பையனை தேர்வு செய்தார்கள். கதிஜாவின் சம்மதம் கேட்டார்கள். கதிஜா சொன்னார்.
‘வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இருக்கிறார் குடும்பத்தையும் படிப்படியாக உயர்த்துவாரம்மா. எனக்கு சம்மதம்.’
2
திருமணம் முடிந்தது. அடுத்து
கதிஜா அம்மாவிடம் சொன்னார்.
‘அம்மா மரத்தைப் பிடுங்கி நடுவது முடியாத காரியம். அப்படியே நட்டாலும் பிழைப்பது கடினம். இப்போது நாங்கள் செடியாக இருக்கிறோம். தனிக்குடுத்தனம் வையுங்களம்மா. தேவையில்லாத கற்பனைகள் தேவையில்லை. எப்போதும் போல் இருப்போம். எங்களுக்கு குடும்ப நிர்வாகம் விளங்க வேண்டுமம்மா.’
இரண்டு பேருக்குமே சேமநலநிதியில் பணம் இருந்தது. அம்மா வீட்டுக்குப் பக்கத்திலேயே அவர்கள் வசதிக்கு வீடு வாங்கிவிட்டார்கள். குடுத்தனம் தொடர்கிறது.
கொத்துக் கொத்தாக பூக்களைக் கனவு கண்டார் கதிஜா. அடுத்த நாள் பள்ளிவாசலுக்கு தொழுகச் சென்ற போது தன் குடும்ப ஹஜரத்திடன் அந்தக் கனவுபற்றி விளக்கம் கேட்டார். கதிஜாவின் தாத்தா காலத்திலிருந்து குடும்ப நண்பராக இருப்பவர் ஹஜரத் அப்தும் மஜித். அவர் சொன்னார்
‘உனக்கு வெகுவிரைவில் அந்தப் பூக்களைப் போன்ற அழகான பெண் குழந்தை பிறக்குமம்மா.’
அடுத்த ஓராண்டில் ஹஜரத் சொன்னது நடந்தது. ஆச்சரியமான ஒரு பெண் குழந்தை. ஹலிமா என்று பெயர் வைத்தார்கள். பிறக்கும் குழந்தைகள் விழிகளை மூடிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் ஹலிமா எப்போதும் விழிகளை அகலத் திறந்து எல்லார் முகங்களையும் கூர்மையாக கவனித்தது. பார்ப்பவர்களெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். அடுத்து
கதிஜாவுக்கும் வேலை. முகம்மதுக்கும் வேலை. ஹலிமாவைக் கவனிக்க ஒரு பணிப்பெண்ணை நியமித்தார்கள். தமிழ் பேசும் பெண் பார்வதி. கதிஜாவின் அம்மாவோ முகம்மதின் அம்மாவோ பேத்தியைக கவனித்துக் கொள்ள முடியும். அவர்களின் சுதந்திரம் தன் பிள்ளையால் பாதிக்கப்படக் கூடாது என்றார் கதிஜா. கூட இருந்து கவனிப்பது இன்பம் தானே கவனிப்பது சுமை.

3
மறுக்கவில்லை அவர்கள். அவர்களுக்குத் தெரியும் கதிஜா சொன்னால் சொன்னதுதான். வசந்த கால விடியல்களாய் ஒவ்வொரு நாளும் இன்பமாகக் கழிந்தது. இப்போது ஹலிமாவுக்கு ஒரு வயது. பிறந்தநாள் கொண்டாடினார்கள். காதில் ஒரு அழகான தங்க வளையத்தை அணிவித்தார்கள். ஹலிமாவும் முகம் அன்று கதிஜா கனவு கண்ட பூக்களைப் போலவே இருந்தது அவ்வளவு அழகு.
ஒருநாள் ஹலிமாவோடு பணிப்பெண் மட்டுமே இருந்தார். மற்றவர்கள் வேறுவேறு வேலையாக வெளியே சென்றுவிட்டார்கள். 6 மணிக்கு கதிஜா வேலை முடிந்து வந்தார். காதில் கிடந்த வளையம் காணவில்லை. பார்வதி சொன்னார்.
‘இரண்டு மணி நேரத்துக்கு முன்தான் கவனித்தேனம்மா. வீடு முழுதும் பார்ந்துவிட்டேன். குப்பை வாளியைக் கவிழ்த்து சலித்துப் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லையம்மா.’
அந்தப் பணிப்பெண்ணைத் தனக்கு அமர்த்திய ஏஜண்ட பத்மாவை உடனே அழைத்தார் கதிஜா
‘பார்வதியை உடனே மீட்டுக் கொள்ளுங்கள். ஒரு வாரம் எடுத்துக் கொள்ளுங்கள். வேறொரு தமிழ் பேசும் பெண்ணை ஏற்பாடு செய்யுங்கள்.’
‘என்ன காரணம்?’
‘பிடிக்கவில்லை. அவ்வளவுதான். இன்னும் ஒரு மணிநேரத்தில் நானே அழைத்துவருகிறேன்.’
முகம்மது சொன்னார்
‘தவறான முடிவு எடுப்பதுபோல் தோன்றுகிறது கதிஜா. கொஞ்சம் யோசித்துக் கொள்.’
‘நிச்சயம் தவறான முடிவல்ல. பார்வதி வளையத்தைத் திருடியிருக்கிறாள். அவள் உடமைகளைச் சோதிக்கும் வேண்டாத வேலை தேவையில்லை. திருட்டு குணமுள்ள ஒரு பெண் ஹலிமாவை வளர்க்கக் கூடாது.’
அதற்கு மேல் முகம்மது பேசவில்லை.
4
உடமைகள் மொத்தமுமே ஒரு சிறு பெட்டிதான். பத்மா அலுவலகத்தில் பார்வதி.
பத்மா சொன்னார்
‘உனக்கு வேறு வீடு பார்த்து அனுப்புகிறேன். ஆனால் உன்னை எடுப்பவர்கள் வேறு எங்கும் வேலை பார்த்தாரா ஏன் அனுப்பினார்கள் என்றெல்லாம் கேட்பார்கள். கொஞ்ச நாள் போகட்டும் அதுவரை என் வீட்டில் இரு.நடந்ததைக் கேள்விப் பட்டேன். நீதான் எடுத்தாய் என்பதில் கதிஜா உறுதியாக இருக்கிறார். நான் வற்புறுத்தவில்லை.’
பார்வதி சொன்னார்
‘என்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லையம்மா. எனக்கு 30 வயது. என் குடும்பத்துக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன். அத்தனை பேர் மீதும் சத்தியமிட்டுச் சொல்கிறேனம்மா. நான் தவறு செய்யவில்லை. எந்தத் தவறுமே செய்யாத எனக்கு தண்டனை கொடுக்கலாம். தண்டனை கொடுப்பவர்கள் தப்பமுடியாதம்மா. என் அடிவயிறு பற்றி எரிகிறதம்மா.’
‘சரி. ஆலேசப்படாதே. பொறுமையாக இரு.’
கதிஜா வீடு. இரவு முழுவதும் ஹலிமா தூங்கவில்லை. வாயிலிருந்து எச்சில் ஊற்றிக் கொண்டே இருக்கிறது. விழித்த விழி விழித்தபடியே இருக்கிறது. கலவரப்பட்டார் முகம்மது. உடனே கேகே மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆரம்பச் சோதனைகளோடு எக்ஸ் கதிர் சோதனை எடுக்கப்பட்டன. அந்த வளையம் இரைப்பையில் சொகுசாகத் தூங்கிக் கொண்டிருந்தது.
சே! மோசம் போய்விட்டார் கதிஜா. முதன் முறையாக மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டார். முகம்மது சொன்னார்.
‘நடந்தது சரி. நடக்கப் போவதைக் கவனிப்போம்.’
மருத்துவர் சொன்னார்.
‘ஆபத்தான இடத்தை அந்த வளையம் தாண்டிவிட்டது. இதற்கான சிறப்பு உணவுகள் இருக்கின்றன. அது மலத்தோடு வளையத்தை வெளியாக்கிவிடும். பொறுமையாக இருங்கள்.’
5
கதிஜா உடனே ஹஜரத் அப்துல் மஜித்துக்கு தகவல் தந்தார். எந்த நெருக்கடியிலும் அவர் தரும் ஆறுதல்கள் எவரையும் சமாதானப்படுத்திவிடும். அவர் சொன்னார்.
‘பொறுமையாக இருங்கள். மலத்தோடு இன்ஷா அல்லாஹ் வெளியே வந்துவிடும். நீங்கள் இருவரும் விடாமல் ‘ஆயத்துல் குர்ஷி’ யை ஓதிக் கொண்டே இருங்கள். அதோடு அல்லாஹ்வின் பெயரால் எதேனும் சதக்கா செய்வதாக நிய்யத்து வைத்துக் கொண்டு உடனே அதைச் செயல்படுத்துங்கள். சதக்கா நம் வாழ்க்கைத் தவறுகளை நெருப்பை நீர் அணைப்பதுபோல் அணைத்துவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.
முகம்மது உடனே தன் ஊரிலிருக்கும் தன் அத்தாவைத் தொடர்பு கொண்டார்.
‘ அத்தா விஷயம் இப்படி ஆகியிருக்கிறது. நான் ஒரு லட்ச ரூபாய் சதக்கா செய்வதாக இந்த நிமிடம்தான் நிய்யத்து வைத்தேன். இன்னும் ஒரு மணிநேரத்தில் அந்தப் பணம் உங்கள் கணக்குக்கு வந்துவிடும். கஷடத்தில் இருக்கும் நம் தாயாதிகளுக்கு உடனே பகிர்ந்துவிடுங்கள். தாங்களே நேரில்சென்று தங்கள் கையால் கொடுத்துவிடவும்.’
இன்னொரு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. வளையம் இப்போது சிறுகுடலைத் தாண்டியிருந்தது.
மருத்துவர் சொன்னார்.
‘பெருங்குடலுக்கு வந்துவிட்டால் பிரச்சினையே இல்லை. வெளியே வந்தது மாதிரிதான்.’
என்று சொன்னவர் ‘ஆயத்துல் குர்ஷி’ யை உணர்ச்சிவசப்பட்டு முனுமுனுத்துக் கொண்டிருக்கும் முகம்மதை சமாதானப் படுத்தினார்.
கதிஜா பத்மாவுக்கு ஃபோன் செய்தார்.
‘பார்வதி எங்கே?’
‘இதோ இங்குதான். என் வீட்டில். ‘
6
கதிஜா பத்மா வீட்டுக்குப் பறந்தார். பார்வதியைக் கட்டி அழுதுவிட்டு மன்னிப்புக் கேட்டார். என் பிள்ளை ஒரு பெரிய கண்டத்தைத் தாண்டியிருக்கிறது.
‘உடனே என்னோடு வா பார்வதி. என் மகளுக்குத் திருமணம் ஆகும் காலம்வரை உன் எல்லாத் தேவைகளையும் நான் கவனிக்கிறேன். பார்வதி’
இதுவும் அல்லாஹ்வின் பெயரால் செய்யப்படும் சதக்காதான் என்பதைப் புரிந்து கொண்டுதான் கதிஜா சொன்னார். அடுத்த நிமிடம் இருவரும் கேகே மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஊரிலிருந்து முகம்மதின் அத்தா பேசுகிறார்.
‘தம்பீ முகம்மது. அல்லாஹ் மிகப் பெரியவன். நீ சொன்னதுபோல் ஒரு லட்சத்தையும் சதக்கா செய்துவிட்டேன். அல்ஹம்துலில்லாஹ. நம் தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வான். சுமைகளை லேசாக்குவான். அமைதியாக இரு மகனே.’
இங்கே மருத்துவர் சொன்னார்
‘ஒரு நல்ல செய்தி. வளையம் வெளியாகிவிட்டது.’
பார்வதியைப் பார்த்து ஹலிமா கைதட்டிச் சிரித்தாள். ஹலிமாவைத் தூக்கி அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் கதிஜா. எல்லார் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். முகம்மதுவின் வாய் இன்னும் ‘ஆயத்துல் குர்ஷி’ யை முனுமுனுத்துக் கொண்டுதான் இருந்தது

Series Navigationநீங்காத நினைவுகள் 13கஃபாவில் கேட்ட துஆ
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *