சன்மானம்

This entry is part 14 of 41 in the series 25 செப்டம்பர் 2011

சகுந்தலா மெய்யப்பன்

அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் கலீல் கிப்ரான். இவர் ஒரு சிறந்த மேதை. சிந்தனையாளர். துத்துவ ஞானி. புரட்சிக் கவிஞர். அத்துடன் நகைச்சுவை வேந்தர். இவருடைய நகைச்சுவைகள் கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை. நினைத்து நினைத்துச் சுவைக்கலாம். அது மட்டுமல்ல. நடைமுறை வாழ்க்கையிலும் மிகவும் சுவைபட நடந்து கொள்வார். அவருக்கு ஒரு நாள் குளியல் துறைக்குப் போய் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை வந்தது.

அந்த நகரத்துக் குளியல் துறை உலகப் பிரசித்தமானது. கட்டடமே பார்ப்பதற்குப் பெரிய மாளிகை போன்று கண்ணுக்கு ரம்மியமாக இருக்கும். உள்ளே குளியலறைகள் பளிங்குக் கல் பதிக்கப்பட்டு பளபளப்புடனும் தூய்மையுடனும் விளங்கும். குளிப்பதற்குக் குளிர்ந்த நீர் வேண்டுமா? கிடைக்கும்! வெந்நீர் வேண்டுமா, இளஞ்சூடு, மத்திமச் சூடு, கடுஞ்சூடு என்று எந்த வகையில் வேண்டுமானாலும் கிடைக்கும்! சந்தனத் தூள் தூவிச் சாதாரணமாக வேண்டுமானாலும் குளிக்கலாம்! அல்லது தலைக்கு எண்ணெய் தேய்த்துச் சிறப்புக் குளியல் வேண்டுமானாலும் குளிக்கலாம்!

எண்ணெய் தேய்த்து விடுவதற்கென்றே அங்கே தனியாகப் பணியாளர்கள் இருந்தார்கள். தலையில் எண்ணெய் தேய்த்து அவர்கள் தாளக் கட்டோடு தட்டுவதும், உடம்பெல்லாம் பிடித்து விடுவதும்.. அடடா.. அந்தச் சுகமே சுகந்தான்! வெளி நாடுகளிலிருந்து வரும் வணிகர்களும் யாத்திரிகர்களும் அங்கு வந்து ஒரு குளியல் போடாமல்; போக மாட்டார்கள்.

குளியலுக்கு வருவோர் தங்கள் தகுதிக்கு ஏற்பப் பணியாளர்களுக்குச் சன்மானம் கொடுத்துவிட்டுப் போவார்கள். இதனால் அங்குள்ள பணியாளர்கள் அனைவருமே சிட்டுக்குருவிப் போல் பறந்து பறந்து வேலை செய்வார்கள்.

இங்கு வந்து குளியல் போட வேண்டும் என்று தான் கலீல் கிப்ரானுக்கு ஆசை. அவரிடத்தில் ஒரு நல்ல பழக்கம். ஆசை வந்துவிட்டால் அதை அப்போதே நிறைவேற்றி விடுவார். ஆமாம்! உடனே குளியல் துறைக்கு வந்துவிட்டார்.

பணியாள் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்தான். ஆனால், வரும்போதே ஒரு மாதிரியாக இருந்தான். முகத்தில் ஒரு விதக் கடுகடுப்பு. உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு, வேலையை ஆரம்பித்தான். கலீல் கிப்ரானின் தலையில் அவன் ‘தட்தட்’ என்று போடுகிற தாளம் எந்த ஓசை நயமும் இல்லாமல் அபசுரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் ஏதோ வேண்டா வெறுப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.

பொறுமையெல்லாம் இழக்கும் கட்டத்தை அடைந்து விட்ட போதிலும், கலீல் கிப்ரான் அதை அடக்கிக் கொண்டு, “ஏனப்பா முனங்குகிறாய்?” என்று கேட்டார். அதற்குப் பணியாள், “அந்தக் காலம் போலவா இப்போது இருக்கிறது! வரவர யாரும் சன்மானமே சரியாகக் கொடுப்பதில்லை! கஞ்சத்தனத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்! கொஞ்சம் தாராளமாகக் கொடுத்தால் குடியா முழுகிப் போய்விடும்?” என்று கூறியவாறே வெந்நீர் விளாவினான்.

பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி, வாசனைப் பொடிகள் போட்டு நுரை கிளம்பத் தேய்த்து விட்டான். பிறகு முதுகு தேய்க்க ஆரம்பித்தான். அவனுக்கிருந்த ஆத்திரத்தில் தோலையே உரித்துவிடுவான் போல் இருந்தது. கடைசியில் தேங்காய்ப் பூத்துவாலையால் உடம்பை உலர்த்தி விட்டான். எல்லாம் சலிப்போடு தான்!
கலீல் கிப்ரானுக்குப் பெரும் பாடாய்ப் போய்விட்டது. சந்தோஷமாகக் குளியல் போடலாம் என்று வந்தால் இங்கு சரியான சலிப்பன் வந்து சேர்ந்திருக்கிறானே! உம்.. என்ன செய்வது? புறப்பட்ட நேரம் சரியில்லை போலும்!

குளியல் முடிந்து திரும்பும் போது பணியாளின் கையில் சன்மானத்தை வைத்தார் கலீல் கிப்ரான். அவன் அப்படியே திகைத்துப் போனான். சாதாரணமாக அவனுக்கு ஒரு தினார் கிடைத்தாலே பெரிய அதிர்ஷ்டம். ஆனால் இப்போது அவர் கொடுத்ததோ ஐந்து தினார்கள்!

நாயின் வாலாகக் குழைந்து சலாம் போட்டான் பணியாள். வீதிமுனை வரையும் வந்து வழி அனுப்பினான். “மறுபடியும் குளியலுக்கு வரும்போது ஐயா என்னிடமே வர வேண்டும்” என்பதையும் மறக்காமல் சொல்லி அனுப்பினான்.

ஒரு வாரம் கழித்து கலீல் கிப்ரானுக்கு மறுபடியும் குளியல் ஆசை வந்தது. உடனே புறப்பட்டுக் குளியல் துறைக்கு வந்து சேர்ந்தார். தற்செயலாய் அதே பணியாள்தான் எண்ணெய்க் கிண்ணத்தோடு வந்து நின்றான். “ஐயாவுக்கு சலாம்!” என்றவாறு நெளிந்து வளைந்தான்.

உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றித் தலையில் வைக்கும்போதே என்ன நளினம்! ‘தட்தட்’ என்று தலையில் தாளம் போட்டுத் தட்டுவது, கானாபஜானா நாட்டியம் நடக்குமிடமித்தில் தபேலா வாத்தியத்தை வாசிப்பது போல் அவ்வளவு இனிமையாக இருந்தது. தலையிலிருந்து சொட்டுச் சொட்டாய் வடியும் எண்ணெயை வழிக்கும் பக்குவமே பக்குவம்! உடம்பு முழுதும் எண்ணெயைத் தேய்க்கும்போது அவன் கைகள் எத்தனைத் துடிப்போடு வேலை செய்கின்றன! முதுகுப் பிடிப்பு, இடுப்புவலி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து விட்டன. எலும்புகளில் மூட்டுக்கு மூட்டு விவரிக்க முடியாத ஒரு வகை இன்ப வேதனை!
எண்ணெய்த் தேய்க்கும் படலம் முடிந்ததும் வெந்நீர் விளாவும் போது கொஞ்சம் பன்னீரும் தெளித்தான். வெந்நீரிலிருந்து வெளிக்கிளம்பிய ஆவியும் ‘கம்’ என்று அறை முழுவதும் பரவிய பன்னீர் மணமும் ஒன்று சேர்ந்து கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற ஓர் உணர்வை எழுப்பியது. பிறகு குளியல் ஆரம்பித்தது.
கேசாதி பாதம் வரை விரல் நகம் படாமல் பணியாள் எவ்வளவு லாவகமாய்த் தேய்க்கிறான்! என்ன பேரானந்தம்! கட்டிய மனைவிகூட இப்படிச் செய்வாளா என்பது சந்தேகந்தான்! கடைசியில் தேங்காய்ப் பூத்துவாலையால் உடம்பை உலர்த்தும்போது சதையை ‘சக் சக்’ என்று பிடித்து விடுகிறானே – அடடா.. இந்தச் சுகத்துக்கு ஈடான சுகம் உலகத்தில் ஏது?

குளியல் முடிந்தபோது கலீல் கிப்ரானுக்கு ஏதோ சொர்க்கத்திற்குப் போய்விட்டுத் திரும்புவதுபோல் இருந்தது.

கடைசியில் பணியாள் முகமெல்லாம் பல்லாகக் குழைந்து நின்றான். கிடைத்த சன்மானத்தைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப் போனான். அரை தினார்!
“அன்று ஐந்து தினார் தந்தீர்கள்! இன்று எவ்வளவு வேலை செய்தேன்! அரைத் தினார் தானா?” என்று பணியாள் அழாக்குறையாகக் கேட்க, “இன்று செய்த வேலைக்குத் தான் அன்று கொடுத்த ஐந்து தினார்கள்! அன்று செய்த வேலைக்குத் தான் இந்த அரை தினார்!” என்றவாறே நடந்துகொண்டிருந்தார் கலீல் கிப்ரான்.

Series Navigationமின்சாரக்கோளாறுகனவுக்குள் யாரோ..?
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *