சன் ஆப் சர்தார் ( இந்தி )

எதிரி உன் விருந்தாளியெனில், அவனைக் காப்பது உன் கடமை – சீக்கியர்களின் வேத வாசகம். 25 ஆண்டு கால பகையைப் புறந்தள்ளி, விருந்துக்கு அழைத்த எதிரியை காத்து, கொல்லவும் காத்திருக்கும் பில்லுவும், அதிலிருந்து தப்பிக்க அசத்தல் திட்டம் போடும் ஜெசியும், சேர்ந்து ஆடும் ஜோக்கர் ஆட்டம்.

‘நான் ஈ ‘ ராஜமௌலியின் தெலுங்கு ‘மரியாத ராமண்ணா’வின் இந்தியாக்கம். சர்தார்ஜி, பஞ்சாபி என களம் மாறியதில், காமெடி கனம் இழந்து நிற்கிறது. ஆனாலும் சொன்ன வரையில், சுவைதான் என்பதில், மறுப்பேதுமில்லை.

லண்டனில் இருக்கும் ஜஸ்வீந்தர் சிங் என்கிற ஜெஸ்ஸிக்கு ( அஜய் தேவகன் ) வரும் ஒரு தகவல், பஞ்சாபில் இருக்கும் பரம்பரை சொத்துக்கு அவனே வாரிசு என்பது. தில்லி ரயிலில் அவன் சந்திக்கும் சுக்மீட் என்னும் சுக் ( சோனாக்ஷி சின்கா ), அனுமதியில்லாமல், அவன் இதயத்தில் நுழைந்து விடுகிறாள். ரயில் பயணம் அவனது காதலை இன்னமும் இறுக்குகிறது. அவளது தந்தை போன்ற பில்லு ( சஞ்சய் தத் ), சாந்து இனப் போராளி. அவனுக்கும், அவன் கூட்டத்திற்கும் ஒரே குறிக்கோள், தன் தந்தையைக் கொன்ற கூட்டத்தின், ஒரே வாரிசான ஜெஸ்ஸியைக் கொல்வது. சுக்கின் தோழனாக நுழையும் ஜெஸ்ஸி, வீட்டின் விருந்தினனாக இருக்கும் வரை, அவனைக் கொல்ல முடியாது, அவனை வெளியே இழுக்க பில்லுவும் கூட்டாளிகளும் போடும் திட்டங்களும், அதை ஜெஸ்ஸி முறியடித்து தப்பிப்பதும் நகைச்சுவை எக்ஸ்பிரஸ். ஜெஸ்ஸியின் ஒருதலைக் காதல், சுக்மீட்டின் சம்மதத்தால் இணைக்காதலாக, மென்டல் பாட்டி பேப் ( தனுஜா ) ஆசிகளுடன், பகை முறிந்து, பாசம் துளிர்விடும் பளிச் க்ளைமேக்ஸ்.

அஜய் தேவகன் சூப்பர் ஸ்டார் இல்லை. ஆனாலும், அதற்குரிய தகுதிகள் அவருக்குண்டு என்பதை, இந்தப் படம் நிரூபிக்கிறது. காமெடியும், கைச்சண்டையும், சுவிட்ச் போட்டது போல், அவருக்கு வருகிறது. சோனாக் ஷி சின்கா குறும்புப் பெண்ணாகவும், காதலுக்கு ஏங்கும் கன்னியாகவும் காட்டும் வித்தியாசம், தேர்ந்த நடிகை அவர் என்று நிரூபிக்கிறது. ஆனாலும், கிருஸ்துமஸ் மரத்திற்கு போட்ட சீரியல் பல்புகள் போல், பளிச்சிடுபவர்கள் சஞ்சய் தத்தும், 25 வருடமாக அவனைக் கல்யாணம் பண்ணக் காத்திருக்கும் பம்மி ( ஜூஹி சாவ்லா ) யும் தான். சஞ்சய் தத், கிட்டத்தில், கமலஹாசன் முகபாவங்களோடு பளிச்சிடுகிறார். ஜூஹி ஒரு இந்தி ஜோதிகா. நிமிடத்தில் நிறம் மாறும் நடிப்பு ‘ரங்கோலி முகம்’ அவருக்கு. பல்லே! பல்லே!

கௌரவத் தோற்றத்தில் வரும் சல்மான் கான், முதல் வார ரசிகர் கூட்டத்தை இழுக்க. அடுத்தடுத்த வாரங்களும் கூட்டம் வர, இன்னமும் செய்திருக்க வேண்டும் திரைக்கதையில். ஏற்கனவே பார்த்துப் புளித்த, சுந்தர் சி பிராண்ட் எண்ணைக் காமெடி, துரத்தல் காமெடி, போன்றவற்றை விட்டு விட்டு, புதிதாக யோசித்திருக்கலாம் இயக்குனர் அஸ்வினி திர்.

‘தசாவதாரம்’  ஹிமேஷ் ரேஷ்மையா இசையில் எல்லாமே பஞ்சாபி பாங்க்ரா. சந்தீப் சௌதாவின் பின்னணி இசையில் குறையொன்றுமில்லை. குதிரைத் துரத்தல் காட்சிகளில், நம்மையும்  சீட்டின் கைப்பிடிகளைக், கெட்டியாக பிடிக்க வைத்ததில், ஒளிப்பதிவாளர் அசிம் பஜாஜுக்கு வெற்றி.

சன் ஆப் சர்தார்: வெட்டி உதார்.

0

 

Series Navigationநம்பிக்கை என்னும் ஆணிவேர்கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்