சமனில்லாத வாழ்க்கை


நான் நெருங்கிப்போகிறேன்

அவர்கள்

என்னை மதிப்பதில்லை

 

என்னை நெருங்கியவர்களை

நான்

நினைப்பதேயில்லை   …..

 

வலியின் அலைகற்றை

சுமந்து வந்த  என் குரலை

சலனமில்லாமல்

வீசி எறிகிறார்கள் அவர்கள் .

அவர்களை பின்தொடர்கிறேன் ..

காயங்களை விசிறிவிட

என்னை பின்தொடர்கிறவர்களை

பொருட்படுத்தாமல்….

 

என்னிடம்

ஏங்கி தவிப்பவர்களுக்கு

ஏமாற்றத்தை அளித்தபடி ,

யாரோ சிலரின்

தாழிடப்பட்ட கதவுகளின்

வெளியமர்ந்து யாசிக்கிறேன் ,

பிச்சையாய் பெற அவர்களிடம்

ஏதுமில்லை  என தெரிந்திருந்தும் …

 

நிரம்ப  தளும்பும்

என் அன்பின் கோப்பையை

போட்டுடைக்கிறார்கள் சிலர் ,

சில்லுகளை பொறுக்கியபடி

மீண்டும் ஒரு கோப்பையை நீட்டுகிறேன் ,

எனக்கு நீட்டப்படும்

கோப்பையை நிராகரித்தபடி …

 

இப்படி இப்படியாக

சமனில்லாத வாழ்க்கை

தள்ளாடி பயணிக்கிறது

ஒரு மலை உச்சியை நோக்கி …..

 

–க.உதயகுமார்

 

Series Navigationஇரண்டு கூட்டங்கள்கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்