சமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…

 

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

சமயவேல் தந்துள்ள ஐந்தாவது தொகுப்பு இது ! இவர் கவிதைகளை , ” அவரைப் போல நகலெடுக்க

முடியாமல் பலரும் திணறும் வடிவமைதிகொண்ட கவிதைகள் ” என்கிறார் சிபிச்செல்வன்.

புத்தகத் தலைப்பான ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ என்ற கவிதை , கண்மாய்க் கரையில் கொக்குகள், காக்கைகள் , மைனாக்குருவிகள் பற்றிய இயற்கைக் காட்சிகளை முன் நிறுத்துகிறது.

பெரும்பாலும் சாதாரண கவிதைமொழியே கையாளப்பட்டுள்ளது. இதில் பிறரால் நகலெடுக்க முடியாத

அசாதாரணம் என்று ஏதுமில்லை.

மரங்களுக்குள் மைனாக்களும் குருவிகளும்

காணாததைக் கண்டதுபோல்

கத்திக் கச்சாளம் அடிக்கின்றன

—– என்கிறார் சமயவேல். கச்சாளம் என்ற சொல்லுக்கு மிகுந்த மகிழ்ச்சி அல்லது ஆரவாரம் என்ற

பொருள் பொருத்தமாக இருக்கும். பறவைகளின் செயல்பாடுகளை ‘ விவரிக்கவே முடியாத மாயக் கிளர்ச்சி ‘ என்கிறார் ஆசிரியர்.

‘ உலகின் இமை ‘ என்ற கவிதை பூடகத்தன்மை கொண்டது.

நடு நெற்றியை மறைத்து

விரிந்த கரும் பரப்பில் ஒரு சிறிய மஞ்சள் புள்ளி

அருகில் ஒரு நீலத்திட்டு

இமைகள் மேலும் இறுக

நீலத்திட்டு ஒரு வளையமாகி

மஞ்சள் புள்ளியை

வளைக்கிறது

— என்ற தொடக்கமே கண்ணைக் கட்டுகிறது. மர்மக் கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும்….

தியானம் செய்யத் தொடங்கும் நேரத்தில் கண்கள் காட்டும் கோலமா இது ?

மஞ்சள் புள்ளி சுழல்கிறது

நீல வளையம் எதிர்த் திசையில் சுழல்கிறது

இமைகள் மேலும் இறுக

மஞ்சள் புள்ளி பிய்த்துக்கொண்டு

பேரழத்துள் ஓடுகிறது

நீல வளையம் விரிந்து விரிந்து

அடர் கருப்பு இருளாய்ப் போகிறது

—- மேலோட்டமான பார்வையில் கவிதை இறுக்கத்தில் திணறுகிறது. இது தியான நிலைப்பாட்டை

சுட்டுவதாகவே நான் நினைக்கிறேன். இந்த நிலை தொடர அடுத்து என்ன நடக்கிறது ?

எனது இமை கொஞ்சம் கொஞ்சமாக

உலகின் இமையாக மாறுகிறது

கடைசி வரி அனுபவத்தைப் பொதுமைப்படுத்துகிறது. அதாவது நீங்களும் அனுபவித்தால் இந்நிலையை உணரலாம் என்பது நமக்கான செய்தி !

‘ இரவு மழை ‘ என்ற கவிதை , மழை பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது.

கனத்த துளிகள்

உக்கிரத் துளிகள்

துளிகளின் மழை

இரவு மழை

—- இக்கவிதையில் மழையை ‘ கோர்க்கப்பட்ட துளிகள் ‘ என்பதும் அதன் பொழிவை ‘ கோர்க்கப்

படாத இசை ‘ என்பதும் புதிய பார்வைகள். மழை இரவை, ‘ கோதுமை நிறக் காதல் ‘ என்பதன் பொருள்

எனக்கு விளங்கவில்லை !

‘ புரியவில்லை ‘ என்ற கவிதை வித்தியாசமான கருப்பொருள் கொண்டது. ஒரு பெண்ணின் மனத்தில்

உள்ள மாறாக் காதலைச் சொல்வதாகவே நான் உணர்கிறேன்.

அவனைப் பார்த்தால் மட்டும்

கண்ணில் ஏறும் அந்த மினுமினுப்பு

எப்படி வந்தது ?

—- என்ற கேள்வி இக்கவிதையின் முக்கிய கருத்தை முன் வைக்கிறது.

மகன் கள் மருமகள்கள் பேரன் கள் பேத்திகள்

வந்த பிறகும்

அவனைப் பார்த்தவுடன்

உன் கண்ணில் ஏறும் மினுமினுப்பு

—- ஆண் மனத்தை வருடும் வரிகள்…. இதைத் தொடர்ந்து முத்தாய்ப்பு கவிதையை முழுமையடையச்

செய்கிறது.

இறுதியில்

எனக்கும் புரியவில்லை என்கிறாள்

—– திருமணமான பிறகும் அவள் , அவன் மனத்தில் இருக்கிறான் என்ற செய்தியே கவிதையாகி

உள்ளது.

‘ ஊனம் ‘ ஒரு யதார்த்தக் கவிதை ! சீருடச் சிறுவர்களுடன் ஒரு டீச்சரையும் பார்க்கிறார் ஒருவர்.

மாற்றுத் திறனாளிச் சிறுவனின்

ஊன்று கோல்களை விடுவித்து

அவளும் இறங்கும்வரை…

—- கவிதையின் கடைசி வரி இப்படி முடிகிறது:

ஊனப் பள்ளத்தாக்கில் பல மயில்கள்

ஆடத் தொடங்கின

—- இங்கு மயில்கள் குறியீடு . ஒரு பெண் பல மயில்களாகத் தெரிவது சினிமாத்தனம் என்றாலும்

ஆண் மனம் இப்படிக் கற்பனை செய்வது சாத்தியமானதுதான்.

‘ ஜெயஸ்ரீ ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதையுள்ளது. மனத்துயரங்களை வெகுவாகச் சுமந்து நிற்கும் ஒரு

பெண் இதில் பேசப்படுகிறாள். கருத்துகள் நெருக்கமாக அமைந்துள்ளன.

ஜெயஸ்ரீ

வெறுப்பின் மகா சமுத்திரத்தில்

நெட்டித் தள்ளப்படுகிறாள்

—- என்ற புதிய படிமத்துடன் கவிதை தொடங்குகிறது.

ஒரு பேருந்து நிலையத்தின்

உடைந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்து

வெகு நேரம் மனதாற்றிப் பார்க்கிறாள்

— பிறகு கோயிலுக்குச் செல்கிறாள். அதன் பின் ரயிலில் பயணம் செய்கிறாள்.

எல்லா திசைகளிலும் குலைத்த நாய்கள்

ஜெயஸ்ரீ மனசுக்குள்ளும் குலைத்த போது

— என்ற வரிகள் அப்பெண்ணின் துயரங்களுக்குப் பிற மனிதர்கள் காரணமானதைச் சொல்கிறது.

‘ மிதக்கும் பால்யம் ‘ இளமைக் கால இயற்கை நேசம் பற்றிப் பேசுகிறது.

எங்கள் மாமரம்

கடுங்கோடைக்கு எதிராக

பச்சைப் பெருங்கொடை விரிந்து

மெல்ல அசைந்து

காற்றை அழைக்கிறது

— என்பது கவிதையின் தொடக்கம் ; அழகான வெளிப்பாடு.

ஒரு கேம்லின் பென்சிலை வைத்துக்கொண்டு

தாவரவியலை எதிர்கொண்ட

என் பால்யம்

மாம்பூக்களின் வாசனையாய்

ஒரு சிறு காற்றில் மிதந்தபடி

என் முதுமையின் அறைக்குள் நுழைகிறது.

—– எனக் கடந்த கால நினைவுகள் [ நோஸ்டால்ஜியா } பேசப்படுகின்றன.

பொதுவாக சமயவேல் கவிதைகள் சாதாரண ரகம். வாசகனை ஈர்க்கும் நோக்கில் கவிதைகள் அதிக

மௌனம் காக்கின்றன !

 

Series Navigationகர்ணனுக்காக ஒரு கேள்வி !சொற்களின் புத்தன்