சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13

யசோதராவின் பணிப்பெண் ஒருத்தி “அம்மா… தோட்டக்காரன் ஒருவன் தங்களைக் காண விரும்புகிறான்” என்றாள். அந்தப்புரத்துக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் ராணியோ இளவரசியோ அனுமதித்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். “வரச் சொல்”. ஒரு தோட்டக்காரன் இளைஞன் கூப்பிய கைகளுடனேயே பேசினான் “இளவரசியார் வாழ்க. தாங்கள் ஒரு பறவை அல்லது விலங்கு உயிர் நீத்திருந்தால் தெரிவிக்கச் சொல்லி இருந்தீர்கள். ஒரு பெரிய பஞ்சவர்ணக்கிளி இறந்து கிடக்கிறது” என்றான். “நான் வரும் வரை மாளிகை வாயிலில் காத்திரு” என்றாள். “தங்கள் உத்தரவுப்படியே” என்று வணங்கி விடை பெற்றான்.

யசோதரா தனது அறையிலிருந்து வெளிப்பட்டு நடையைக் கடந்து இடது பக்கம் திரும்பி முதல் அறைக்குள் நுழையாமல் வாயிலிலேயே நின்று கவனித்தாள். சின்னஞ்சிறிய செங்கற்களை மிகப் பெரிய கூடமளவு இருந்த அந்த அறையின் மூலையில் இருந்து எடுத்து வந்திருந்தான் ராகுலன். ஒரு சிறிய அளவிலான அமைப்பில் இரு செங்கற்களை கீழே படுத்த வாக்கில் வைத்திருந்தான். அவற்றின் மீது செங்குத்தாக இரு செங்கற்களை வைத்தான். பின் அவை மீது கூம்பாக இரண்டு செங்கற்களை அடுக்க முயன்ற போது அவை விழுந்தன. மறுபடி முயன்றான். ராகுலன் கவனத்தைக் கலைக்காமல் இருப்பதற்காகக் கைதட்டி வேலைக்காரியை அழைக்காமல் உள்ளே எட்டிப் பார்த்து சுட்டு விரலால் சைகை செய்து அழைத்தாள் யசோதரா. பணிப்பெண் அறைக்கு வெளியே வந்ததும் “ராகுலன் கவனத்தைக் கலைக்காதே. அவனாகவே நிறுத்தும் போது அவனை குளிப்பாட்டி அழைத்து வா”

“அப்படியே ராஜகுமாரி. இளவரசர் ராகுலன் பிஞ்சுக் கரங்களால் செங்கற்களை இடம் மாற்றுவதைக் காணவே மிகவும் சங்கடமாயிருந்த்தது.

“அவனுடைய கை தாளுமளவு மிக மெல்லிய செங்கற்களைத் தானே தருவித்தோம். பிறகென்ன?”

“அவர் உடல் மண்ணாகி அழக்காகிறதே. இளவரசருக்கு உதவக் கூடாது என்று தாங்கள் கட்டளையிட்டதால் கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறேன் ராஜகுமாரி”

“மண் அவனுக்கு அன்னியமாக இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? அவன் களைப்படைந்து போதும் என்னும் போது அழைத்து வா” என்று கூறித் தன் அறைக்குத் திரும்பினாள்.

“அம்மா.. நான் வீடுகள் கட்டினேன் உனக்குத் தெரியுமா?” குளித்துப் புத்துணர்ச்கியுடன் வந்த ராகுலன் வினவினான்.

“பார்த்தேனே கண்ணா நீ பழகப் பழக நல்ல உயரமான ஒரு மாளிகையையே கட்டுவாய். சற்று நேரம் நந்தவனம் போகலாம் வா” என்று அவன் கரம் பிடித்து நடத்தி அழைத்து வந்தாள்.

“இளவரசி நான் இளவரசர் ராகுலனைத் தூக்கி வரட்டுமா?” என்ற பணிப்பெண்ணுக்குக் கடுமையான பார்வையிலேயே பதிலளித்தாள். ராகுலன் அவள் விரல்களை விட்டு விட்டு வாயிற்பக்கம் ஓட அவள் விரைவாக அவன் பின்னே நடந்தாள்.

படிக்கட்டுகளில் இருந்து நந்தவனத்துக்குள் இறங்கியதும் ‘ராகுலா எவை எவை என்னென்ன பறவைகள் சொல்” படிக்கட்டுகளை ஒட்டி ஒரு நீள் சதுரக் கூடமெங்கும் இறைக்கப்பட்டிருந்த தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்த புறாக்களைக் காட்டிக் கேட்டாள். “தெரியுமே அம்மா, புறா” என்று அவன் தானியங்களை மிதித்த படி அவன் அந்தக் கூடத்துக்குள் ஓடப் புறாக்கள் படபடவென சிறகடித்துப் பறந்தன. அவை ஒன்றாக மேலெழும்பியது அவனுக்கு மிகவும் குதூகலத்தைக் கொடுத்தது. கைத்தட்டியபடி அவன் நெடுக ஓட ஓட ஒவ்வொரு தப்படிக்கும் பல பறவைகள் பறந்தன.

அவன் மறு முனைக்குச் சென்ற நேரத்தில் துவங்கிய இடத்தில் இருந்த பறவைகள் மறுபடி தரையிறங்கி, தானியங்களைக் கொத்தித் தின்னத் துவங்கி இருந்தன. அவனை அழைத்து வா என்று சைகை செய்ய, ஒரு பணிப்பெண் அவனை அழைத்து வந்தாள். கிளி மரித்த தகவல் கூறிய தோட்டக்காரன் யசோதராவின் கட்டளைக்காகக் காத்து நின்றான். ராகுலன் அருகில் வந்ததும் அவனிடம் ” பறவைகள் என்ன செய்கின்றன ராகுலா?” என்றாள்.

“பறக்கின்றன” என இரு கைகளையும் மேலே ஆட்டிக் குதித்து , “நான் மறுபடி எல்லா புறாக்களையும் பறக்க வைக்கிறேன்” என்று அவள் கையிலிரிந்து தன் கையை விடுவித்துக் கொள்ளத் திமிறினான். “இரு ராகுலா, இவை எப்படிப் பறக்கின்றன?”

“இறக்கையை வைத்து… என்னை விடு அம்மா. நான் புறாக்களுடன் விளையாடி விட்டு வருகிறேன்”

“பறக்காமல் படுத்துக் கொண்டிருக்கிற கிளியை நீ பார்த்திருக்கிறாயா?”

” எதுவுமே பறக்காமல் இருக்காது. நாம் ஓடினால் அவை எழுந்து பறக்கும். என் கையை விடு”

“இரு அந்தக் கிளியைப் பார்த்து விட்டு மறுபடி இங்கே வரலாம்” என்று அவன் கையைப் பற்றியபடி யசோதரா நடக்க தோட்டக்காரன் விரைந்து முன்னே சென்று “இந்தப் பக்கம் யுவராணி” என்று வழிகாட்டியபடி சென்றான்.

ஒரு செம்பருத்திச் செடியின் கீழே ஒரு பஞ்சவர்ணக்கிளி செத்துக் கிடந்தது. அதன் அலகு கேள்விக்குறியைத் திருப்பி வைத்தது போலப் பெரிதாக வளைந்திருந்தது. அதன் இறக்கைகள் பல வண்ணங்களில் கற்றையாயிருந்தன. அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன. ” அதன் அருகே நீ ஓடு … பறக்கிறதா என்று பார்ப்போம்”. ராகுலன் சற்றே தயங்கி வழக்கமான விரைவின்றி மெதுவாக ஓடினான். அதன் அருகே சென்றதும் நின்று கூரந்து கவனித்தான். “அம்மா அது அசையவே இல்லை. ”

” இதன் பெயர் என்ன ராகுலா?”

“கிளி”

“இல்லை ராகுலா. இது கிளியின் உடல். கிளியின் சடலம்”

“சடலம் என்றால் என்ன அம்மா?”

“உயிர் இல்லாத உடல். நீ முதலில் பார்த்தவை அனைத்தும் புறாக்கள். அவற்றிற்கு உயிர் இருக்கிறது. சிறகு விரிக்கின்றன. இதற்கு உயிரில்லை. இது செத்து விட்டது”

“உயிர் என்றால் என்ன அம்மா?”

“உயிர் என்பது நடப்பது, அசைவது, சாப்பிடுவது, பறப்பது”

“செத்து விடுவது என்றால்?”

“அந்த உயிர். அதாவது பறக்கிற சக்தி, தானியத்தைக் கொத்துகிற சக்தி போய் விடுவது அவ்வளவு தான்”

ராகுலன் பதில் சொல்லவில்லை. “மறுபடி புறாக்களிடம் போய் விளையாடலாமா?” என்றான்.

யசோதரா சம்மதமாய்த் தலையசைத்தாள்.

************************

தன்னை வணங்கி நின்ற இரு இளைஞர்களிடம் “இரண்டு நாட்களாக என்னைத் தொடர்ந்தா வந்தீர்கள்?” என வியப்பான தொனியில் வினவினான் சித்தார்த்தன். இருவரையும் அமர கலாம ஆசிரமத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது.

“என் பெயர் சொரூப் யாதவ். இவன் அருண் ராஜ்புத். நாங்கள் ராஜகஹத்திலிருந்து கலிங்க நாடுவரை செல்ல எண்ணியிருந்தோம். தனியே செல்ல விருப்பமில்லை. துணிவுமில்லை. தங்களைப் பின் தொடர்ந்து வந்தோம். தாங்கள் மாவீரர் என்றும் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் கேள்விப்பட்டோம். எனவே தங்கள் வழிகாட்டலைத் தேடி வந்தோம். நீங்கள் வேகமாக நடந்த போது வழியைத் தவற விட்டோம்.

‘ஏன்? நான் அமர கலாமவிடம் விடை பெற்ற போதே என்னுடன் இணைந்து வந்திருக்கலாமே?”

“வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அவருக்கு இணையான யோகி அவர் தமக்குப் பிறகு உங்களையே ஆசிரமத்தில் குருவாக இருக்கும்படி வேண்டியும் தாங்கள் அதை மறுத்துவிட்டீர்கள். எங்களோடு பயணப்பட தாங்கள் விரும்புவீர்களா என்று ஐயம்.

“ஐயமும் அச்சமுமான ஒரு பயணத்தை இரு இளைஞர்கள் துவங்க வேண்டுமா?” என்றான் சித்தார்த்தன். அவர்கள் பதில் பேசவில்லை.

“அது இருக்கட்டும். நீங்கள் யோகக் கலையைக் கற்க ஆர்வமின்றியா அவருடன் ஆசிரமத்தில் இத்தனை நாள் இருந்தீர்கள்?”

சொரூப் பதில் சொல்லத் தயங்குவதைக் கண்ட அருண் பேசத் துவங்கினான் “யோகியாரே! நாங்கள் ஒரே கிராமத்தினர். சொரூப்புக்கு இடையர் தொழிலிலோ அல்லது எனக்குப் போர்வீரனாவதிலோ ஆர்வமில்லை. குழந்தைப் பருவம் முதலே நாங்கள் தோழர்கள். எங்கள் வயதொத்த வைசிய இளைஞர்களைப் போலவே நாங்களும் வணிகம் செய்ய விரும்பினோம். பெற்றோரும் உறவினரும் ஒப்பவில்லை. அதுதான் தேசாந்திரிகளாகத் திரிந்து கொண்டிருக்கிறோம். யோகக் கலையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று சில நாட்கள் அமர கலாம ஆசிரமத்தில் தங்கி இருந்தோம்”

“திரிந்து நீங்கள் திரும்பிப் போகும் போது வருண அடிப்படையிலான தொழில் செய்யும் கட்டாயம் மாறி இருக்கும் என நம்புகிறீர்களா?”

“இல்லை இளவரசரே. எங்களை வணிகராக வேற்று நாட்டில் ஏற்கும் வாய்ப்புகள் அதிகம். கலிங்கம் செல்ல எண்ணி இருக்கிறோம்”

சித்தார்த்தன் பதில் எதுவும் பேசவில்லை. ஷ்ரமண மார்க்கத்தை ஏற்பவர்கள் சிதறியே இருந்தார்க்ள். ராஜ்ஜியத்துக்கு ராஜ்ஜியம் வேறுபாடு இருந்தது. ஷ்ரமண மார்க்கம் வைதீகத்து இணையாக ஏற்கப்பட்ட நாடுகளில் இவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியானாலும் ஆகலாம்.

“நான் கலிங்கம் செல்லுவதாக எப்படி நினைத்தீர்கள்?”

“அப்படி இல்லை. இந்த வனப்பிரதேசத்தைக் கடந்த பிறகு கிராமங்களில் நாங்கள் விசாரித்து கலிங்கம் சென்று விடுவோம்” என்றான் சொரூப்.

சித்தார்த்தன் முன்னே சில தப்படிகள் நகர்ந்து அவர்கள் காலடிச் சத்தம் கேட்காமற் போன போதுதான் அவர்கள் ஒரு துணியால் சுற்றிய சுமைக்கு இரு மேல் முடிச்சுகளிட்டு அதை இருவர் தோளிலும் தூக்குத் தூக்கியாக எடுத்துக் கொள்வதைக் கவனித்தான்.

‘என்ன இருக்கிறது சுமையில்?”

“மாற்றுத் துணிகள். உணவு உண்ணும் தட்டு. தண்ணீர் குடிக்கும் சொம்பு. லோட்டா. கொஞ்சம் மாவு. வெல்லம். இவையே”

காடுகளில் திரியும் போது வெளியேறும் வழி எது என்று தேடியதே இல்லை சித்தார்த்தன். இவர்கள் இருவரும் ஒரு முனைப்போடு இணைந்ததால் மரங்களில் ஏறிக் காட்டின் அடர்த்தி, விலங்குகள் நடமாட்டம், மேகங்களின் சூழல் இவற்றை அவதானிக்கும்படி அவர்களுக்கு வழி காட்டினான். வனத்தை இரண்டு நாட்களில் கடந்தனர்.

“இது ராஜ கஹமாயில்லாமலிருக்கலாம். மகத நாடு மிகவும் விரிந்தது. நாம் மற்றொரு நாட்டுக்கு வந்திருக்க் வாய்ப்பில்லை” என்றான் சித்தார்த்தன்.

ஊரை நெருங்கும் முன் நதிக்கரையில் ஒரு நாவிதரிடம் ஷவரம் செய்து கொண்டு ஊருக்குள் பிட்சை எடுக்க சித்தார்த்தன் சென்ற போது இருவரும் தயங்கினார்கள். “நான் கலிங்கம் செல்லும் வழியை விசாரித்து வருகிறேன்” என்று கூறி நகர்ந்தான் சித்தார்த்தன்.

கதிரவன் உச்சியை நெருங்கும் போது சித்தார்த்தனுடன் ஒருவர் குதிரை மீது வந்தார். ” இவர் வணிகத்துக்கென கலிங்கம் செல்பவர். உங்களுக்குக் குதிரை ஏற்றம் தெரியுமா?”

“எனக்குத் தெரியும்” என்றான் அருண்.

‘அவ்வாறெனில் மற்றொரு குதிரையில் என்னுடன் துணையாக வர நான் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தேன். கலிங்கத்தில் அந்தக் குதிரையை விற்று நான் தேவையான பொருட்களை வாங்குவேன்” என்றார் வியாபாரி.

“நாங்கள் கலிங்கததை அடைந்த பிறகு எங்கள் வழியில் செல்வோம்” என்றான் சொரூப்.

அருணைப் பார்த்து “நீ என்னுடன் வா. ஒரு ஜோடிக் குதிரையுடன் வருவோம்” என்று அவனை அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் நகர்ந்தனர்.

“நீங்கள் ராஜ போகத்தை விட்டு விட்டு பிட்சை எடுக்கக் காரணம் என்ன?” என்றான் சொரூப்.

“நீங்கள் இருவரும் உங்கள் உறவினரை விட்டு நீங்கியது எதனால்?”

” எங்கள் கனவான வணிகத தொழிலுக்கு எங்கள் கிராமத்து உறவும் சுற்றமும் அனுமத்திருக்க மாட்டார்கள். வேறென்ன?”

“அங்கே ஏற்ற சூழ்நிலை இல்லை என்று தானே கிளம்பினீர்கள்? என்னுடைய தேடலுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்றுதான் நானும் புறப்பட்டேன்”

“தங்கள் தேடல் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?”

“பொருள் சேர்க்கத் தானே நீங்கள் இருவரும் கிளம்பினீர்கள்?”

“சந்தேகமின்றி”

“பொருள் எதற்கு?”

“திருமணம் குழந்தைகள் என்னும் இல்லறத்திற்காகத்தானே ஐயா”

“இளமையில் இந்தத் தேடல். முதுமையில் நடமாட வலு இருந்தாலே போதும் என்னும் ஏக்கம். இல்லையா?”

‘……………”

“சொல் சொரூப். நான் கூறியது சரிதானே?”

“இருக்கலாம் ஐயா. நான் முதுமையைப் பற்றி நினைப்பதே இல்லை”

“அவ்வாறெனின் மரணம் பற்றி?”

“மரணம் பற்றி நினைக்கும் வயதில்லை இது”

“முதுமை, மரணம், இவற்றுக்கு அப்பாற்பட்ட உண்மையை, துன்பங்களுக்கு அப்பாற்பட்டு – துன்பங்களினின்று விடுதலை தரும் ஞானத்தை நான் தேடுகிறேன்”

Series Navigationஒட்டுப்பொறுக்கிதாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது !