சாகசம்

சேயோன் யாழ்வேந்தன்

பழுத்த இலை காத்திருக்கிறது
காற்றின் சிறு வருகைக்கு
ஒரு பறவையின் அமர்வுக்கு
அல்லது காம்பின் தளர்வுக்கு
தன்னை விடுவித்துக் கொள்ள.

பென்டுலம் போல் அசைந்துகொண்டோ
உருளையைப் போல் சுழன்றுகொண்டோ
தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை
யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென
அது காத்திருக்கிறது

தன்னிடத்தை விட்டு
இவ்வளவு தூரம் வந்ததை
சிலர் வியந்து பேசவும் கூடும்
ஓர் எறும்பைச் சுமந்து
அது இறங்கும் அதிசயத்தை
இரு கூரிய கண்கள்
வியந்து பாடவும் கூடும்.

பழுத்த இலை காத்திருக்கிறது
தன் இறுதி சாகசப் பயணத்துக்கு.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationமண்தான் மாணிக்கமாகிறதுவொலகம்