சாலையோரத்து மாதவன்.

This entry is part 8 of 23 in the series 20 டிசம்பர் 2015

இரா. ஜெயானந்தன்.

“இதுவரை எழுதி என்ன கண்டோம் “என்று மூத்த எழுத்தாளர் மாதவன் 1994-ல் சலித்துக் கொண்டார். கூடவே, “தாசிக்கு வயசானலும் கொண்டை நிறைய பூ வைத்துக்கொள்ள ஆசைதான்” என்றும் தனது ஆசையினையும் கூறியுள்ளார்.

2015-ல் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும், டெல்லிக்கும் வெகு தூரம்தான்.கூடவே, அரசியலும் நுழைந்துக்கொண்டு படாய்படுத்துக்கின்றது.

திருவனந்துப்புரத்து சாலை வட்டாரத்தழிழை, மனிதர்களை உயிர்துடிப்புடன் பேசவைத்தவர் மாதவன் என்று, மலையாள எழுத்தாளர் சி.மணி கூறியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் கூட, மாதவன் தமிழின், சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்,என்றும் கூறியுள்ளார்.

மாதவனின் எழுத்தில், மலையாள வாடை அடித்துக்கொண்டு, ஒருவித அழகியல் நடையை ஏற்படுத்தும். அவரது எழுத்து நடையில், ” கேரள மண்ணின் ரம்மியமான இயற்கை மனோகரம் அம்பல வாசலும், தென்னந்தோப்பும்,பறங்கிமரங்களும்,கமுகின் கூட்டமும்,ஒற்றைநாழிக்கிணறும், தண்ணீர் இறைக்கும் பாளையும், செம்பருத்திப்பூச்செடிகளும், நெற்றிப்பூக்களும்…, ( பாம்பு உறங்கும் பாற்கடல்..)

மாறி நில்லுங்கோ பூச்சையே, கையிலே பிச்சாங்கத்தியாக்கும், வாயில்லா சீவன்னு கூடபாக்கமா வாங்கிபிடிச்சி ஓரேண்ணு தருவேன்” என்றவாறு, மேலவீட்டு அம்மைக்கு, ஒரு மீனின் வாலை தூக்கிக்காட்டி, நல்ல சூரை மீனு மக்களே…, செல்ல்ம் போல கழுவி எடுத்து, மசாலாவையும் பெரட்டி, பொரிச்சு வச்சுக்குடுத்தா…தின்னுட்டு அய்யாமாரு பின்னே ஒறங்கிவிடமாட்டா….,(மீசை பூனை).

புதுக்கவிதையைப்பற்றிய அவரது கருத்தும், அவரது ஒரு சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

“துணுக்கு சொல்வது மாதிரி, ரெண்டு வரியிலே துக்குணூன்டு, வரட்டு வேதாந்தம் கிறுக்கிக்காட்டுறதை, கவிதைன்னு ஒத்துக்க முடிவதில்லை….”

“புதுமையின்னு சொல்லி, புரியாத தத்துவங்களை, புரியாத புதிர்களை இலக்கியமாக படைக்க வேண்டாம்..” என இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு சொல்கின்றார்,( தி இந்து.. டிசம் 18,2015.).

மாதவனுக்கு, அந்தக் காலத்து சினிமா பாடல்களும் பிடித்துள்ளது.

” ஓடும் வண்டியின் சக்குபுக்கு,கடபுடா கடபுடா ஏற்றமும், இறக்கமும் ஸ்தாயில் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்த மாதிரி ரயில் சங்கீதத்தைத் செவிபடுக்கும் போதெல்லாம், எப்பொழுதோ ஒரு காலத்தில் முணுமுணுக்கும் பாட்டொன்று, ஆமாம் சினிமா கானம்தான் தான் அடி நாதமாக மனதில் ரீங்காரமிட ஆரம்பிக்கும்,”

” உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன் !
டடடா டடடா டட்டாடா ……..”.(இந்திய குணம்).

திருவனந்துபுரத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து, தான விச்வநாதனுக்கு, கலைமனது ஆரம்பத்தில் சொன்னது போல, துள்ளாட்டுமிட்டு, ” ஆனந்தமென் சொல்வனே….” என்று பழைய சகுந்தலா திரைப்பட பாடலை பாடிக்கொண்டிருந்தது. ( பூ மழை).

மாதவனின் அரசியல் பார்வை, திராவிட இயக்கப்பார்வைதான் என்று , பத்திரிகையாளர் கோலப்பன் எழுதுகின்றார்.

ஆனால், மாதவனின் இன்றைய பார்வையில், ” ஆரம்பத்தில், முற்போக்கு கொள்கையை, எளிய மக்களிடம் பரப்ப தோன்றி, ஒரு பெரிய இயக்கமாக ஒருவெடுத்து, நல்ல தமிழ் பேச, நல்ல தமிழ் எழுத, மக்களின் மூட நம்பிக்கைகளை விரட்ட, பகுத்தறிவு பாதையில் பயணிக்க சுயநலமற்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய காலத்தில் எனனை ஈர்த்தது. எழிய கல்விகற்ற எனக்கு, பல மேல் நாட்டு அறிஞர்களின் அறிமுகம் கிடைத்தது. இலக்கிய தேடலும் அங்கிருந்து வந்தது.

அழுக்கும், அவலமும் ஏறிப்போன இந்தக்காலத்தில், அவர்கள் நடந்து போகும் பாதையில், இப்போது நடப்பதில்லை..என்று அவர் தனது, சாகித்ய அகாடமி விருது பேட்டியில் கூறியுள்ளார் ( தி இந்து.. டிசம் 18, 2015).

மாதவனின் எழுத்து நடையும், வேகமும், ஜானகிராமனை நினைவுப்படுத்தும் என்று, சில எழுத்தாளர்கள் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.

ஜானகிராமன் எழுத்தில், தஞ்சை மாவட்ட மனிதர்களும், அவர்களின் மொழி நடையும்,அழகும், வெற்றிலை சீவல் புகையிலை மணமும், கும்பகோணம் டிகிரி காப்பி வாடையும், காவிரிக்கரையின் சங்கீத சல்லாபனையும்- ராகமும்,தாளமும்,
காதலும்- காமமும் பரவிக்கிடக்கும்.

மாதவன் எழுத்திலும் திருவனந்துப்புரத்து சாலை மனிதர்களின் ஆசை, அபிலாசை, கனவு- காதல்- காமமும், களியாட்டம், வெறியாட்டம், கதக்களி, நம்பூதிரிகளின் முகமூடிகள், மலையாள பில்லி சூன்ய, மந்திர-தந்திரகளின் வர்ண ஜலாங்களை, நமக்கு அறிமுகப்படுத்தும்.

இன்றும், தமிழில் சில முக்கியமான எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். சாகித்ய அகாடமி பார்வை, இவர்களின் மேல் எப்போது விழும் என்றுதான் தெரியவில்லை.

நாம் மீண்டும் மாதவன் அலுத்துக்கொண்டது போல்,

“இதுவரை எழுதி என்ன கண்டோம் ”
என்ற அவர்களது இதய ஒலி நமக்கு கேட்கின்றது. டெல்லிக்கு கேட்கவில்லையே !

Series Navigationவந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டதுபொன்னியின் செல்வன் படக்கதை தொடராது
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *