சாவு செய்திக்காரன்

– சேயோன் யாழ்வேந்தன்

சாவு செய்தி
சொல்ல வந்தவன்
செத்துப் போனான்
ரெண்டு மைல் தொலைவில்
பஸ் விட்டிறங்கியிருப்பான்
மூச்சிரைக்க நடந்துவந்ததை
வேடிக்கை பார்த்தேன்
நம் வீட்டுக்குத்தான்
ஏதோ இழவு செய்தி
சொல்ல வருகிறானென்று
அம்மா உறுதியாகச் சொன்னாள்
அழுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த
அவளை நோக்கி
நடந்து வந்த அவன்
கால்கள் பின்ன
காம்பவுன்ட் சுவரில்
சாய்ந்து உட்கார்ந்தான்
நெஞ்சைப் பிடித்தபடி
சாவு செய்தி சொல்லாமலே
செத்துப்போனான்
கண்முன்னே
செத்து விழுந்தவனைவிட
அவன் நாவில் செத்துப்போனது
யாருடைய சாவு செய்தி என்பதுதான்
அம்மாவின் கவலையாக இருந்தது
பத்து மைல் தொலைவிலிருந்த
காவல் நிலையம் மூலமாக
சாவு செய்திக்காரனின்
ஊரைக் கண்டுபிடித்து
சாவு செய்தியைச் சொல்வதற்கு
இரண்டு நாள் ஆகிவிட்டது
ஒரு சாவு செய்திக்காரனின்
கவிதையில் இடம் பிடிக்க
அவனுக்கு
முப்பது வருஷமாகியிருக்கிறது.
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationபேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை