சின்ன மகள் கேள்விகள்

இரவில்

ஏன் தூங்கணுமென்பாள்

சின்ன மகள்.

குருவிகள்

தூங்குகின்றன

என்பேன்.

நட்சத்திரங்கள்

தூங்கவில்லையே

என்பாள்.

நட்சத்திரங்கள்

பகலில்

தூங்குமென்பேன்.

’இரவில் பின்

ஏன் தூங்கணும்’-

இன்னும் சமாதானமாகாள்

சின்ன மகள்.

’சரி

காத்தால

பள்ளிக்கூடம் போகணும்

தூங்கு’ என்பேன்

’ குருவிகள்

பள்ளிக்கூடம் போவதில்லையே’

என்பாள்.

‘நீ

குருவியில்லையே

பாப்பா’

என்பேன்

’பள்ளிக்கூடம் போன

குருவிகள் தாம்

பாப்பாக்களாச்சா?’

என்று

இன்னும் கேட்பாள்

சின்னமகள்.

(2)

சின்ன மகளுக்குக் கதை சொல்லி

’அம்மா

கத சொல்லு’-

சின்ன மகள் கேட்பாள்.

’கால்வாசி’ கதைக்கு முன்பே

கண்ணுறங்கி விடுவாள்.

அடுத்த இரவு

‘அரைவாசி’ கதைக்கு முன்பே

அயர்ந்து தூங்கி விடுவாள்.

இன்னொரு இரவு

’முக்கால் வாசி கதை

முடிக்கும் முன்னமேயே

மூடி விடுவாள் மலரிமைகளை.

ஓரிரவு

முழுக்கதையும்

முடித்து விட்டாள்

அம்மா.

தூங்கி விட்டாளென நினைக்க

’அம்மா

கத சொல்லு’ என்று

சிணுங்குவாள்

சின்னமகள்.

’சொல்லிட்டேனே’-அம்மா.

’சொல்லும்மா’-சின்னமகள்.

’சொல்லிட்டேனே’-அம்மா.

’சொல்லும்மா’-சின்னமகள்.

முடியவே முடியாத

ஒரு கதைக்காக

சின்னமகள்

கண்களில்

நீந்தித் தேடிக்கொண்டிருக்க

அம்மா

தூங்கிப் போவாள்.

சின்னமகள்

இன்னும் முழித்திருப்பாள்

இமையா நட்சத்திரமாய்.

(3)

சின்ன மகள் வரைந்த மிருகங்கள்

”விளையாடப் போறேன்”.
சிணுங்குவாள்
சின்ன மகள்.

’படிச்சுட்டுப் போ’
’இல்ல’

’கணக்கு போடு’
’புடிக்கல’

’ஏறு வரிசை
இறங்கு வரிசை;
கணக்கு பரீட்சை நாளக்கி
எழுது’
கண்களை உருட்டுவேன்
காதைத் திருகுவேன்.

எதிரே தெரியும் கண்ணாடியில்
என் சின்னமகள்
கண்களை உருட்டுவாள்.
என் காதைத் திருகுவாள்.

உருண்டு வரும் கண்ணீர்
உள் நெஞ்சைச் சுடும்.

அன்று
அவள் கணக்கே போடவில்லை.

சித்திரங்களை வரைந்தாள்.
விதவிதமான மிருகங்களை வரைந்திருந்தாள்.

சேர்த்து
ஒரே ஒரு ஆளையும் வரைந்திருந்தாள்.

Series Navigationநிபந்தனைபழமொழிகளில் தெய்வங்கள்