சிறுபாணாற்றுப்படையில் பாணர்களின் வறுமைநிலை

author
0 minutes, 1 second Read
This entry is part 7 of 13 in the series 20 மே 2018

முனைவர் இரா.முரளி கிருட்டினன்

(தமிழாய்வுத்துறை,

உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி,                                            திருச்சிராப்பள்ளி-2.)

முன்னுரை

சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் மொழியும், தமிழர் வாழ்வும் சிறந்து விளங்கியதைக் காணமுடிகின்றது.  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டும் தமிழ்ச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டவல்லதாக உள்ளது.  புலவர் பெருமக்களும், இசைக்கலைஞா்களுக்கும் அரசர்கள் கொடுத்துள்ள பரிசுப் பொருள்களைப் பற்றி ஆராய்கின்ற போது வியப்பாக உள்ளது.  செல்வந்தர்கள், அவர்தம் செல்வத்தைப் பிறா்க்குப் பகிர்ந்தளித்து வாழ்ந்த வாழ்வை ‘அறம்’ என்று எண்ணி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.  இவ்வாறு பார்க்கும் போது ஆற்றுப்படை நூல்கள்  அனைத்துமே,

“செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பே மெனினே தப்புந பலவே”

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளை உணர்த்துவதாகவே அமைகிறது. இது தமிழ் இலக்கியம் அனைத்துக்கும் பொருந்தக்கூடியதாகும். ஒரு வள்ளலிடம் சென்று பல வளங்களைப் பெற்ற ஒருவன், வறுமையால் வாடும் ஒருவனுக்கு வளம் பெறும் வழிமுறைகளைக் கூறுவதாக ஆற்றுப்படை இலக்கியங்கள் விளங்குகின்றன.

 

சிறுபாணற்றுப்படை – ஓர் அறிமுகம்

ஒய்மானாட்டு நல்லியக்கோடன் எனும் குறுநில மன்னனைப் பற்றி இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவா் 269 அடிகளில் பாடிய நூல் சிறுபாணாற்றுப்படை ஆகும்.  நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்ற பாணன் ஒருவன், வறுமையில் வாடிய இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் உள்ளது.  இதில் பாணன் பயன்படுத்தும் யாழ் சிறிய யாழ் (4-7) நரம்புகளை உடையது என்பதாலும், பாடல் வரிகளில் குறைந்த (269 வரிகள்) எல்லையை உடையதாலும் இந்நூல் இப்பெயா் பெற்றுள்ளது.

மன்னனின் சிறப்புகள்

மன்னன் நல்லியக்கோடனின் தலைசிறந்த பண்புகளையும், வீரத்தையும், வள்ளல் தன்மையும், விருந்தோம்பும் முறைமையும் இந்நூலில் காணமுடிகிறது. பழைமையான வளமான நகரங்களாகிய மதுரை, உறையூர், வஞ்சி, கொற்கை, வேலூர், முசிறி, எயிற்பட்டினம், கிடங்கில் என்ற தலைநகரத்திற்குட்பட்ட இன்றைய திண்டிவனம், விழுப்புரம், மதுராந்தகம் ஆகிய ஊர்களின் சிறப்புகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. கடையேழு வள்ளல்களின் வரலாற்றையும், மூவேந்தா்களின் சிறப்புகளையும், எடுத்துக் கூறி அவா்களைவிட நல்லியக்கோடன் வள்ளல் தன்மையில் சிறந்து விளங்கினான் என்பது  தெரியவருகிறது. பாணர்களின் வறுமைநிலையையும், அவர்களின் வறுமையைப் போக்கி, அவர்களை நல்லியக்கோடன் எவ்வாறெல்லாம் சிறப்பித்தான் என்பதையும் அறிய முடிகிறது.

தலைநகரத்தின் சிறப்புகள்

நல்லியக்கோடனின் ஆட்சிப்பரப்பு என்பது ஓய்மானாடு என்பதாகும்.  இதன் தலைநகரம் கிடங்கில் எனும் பகுதியாகும்.  கிடங்கில் என்பது இன்றைய திண்டிவனம், விழுப்புரம், மதுராந்தகம் ஆகிய எல்லைப்பகுதிகளாகும்.

சிறுபாணாற்றுப்படை உள்ளடக்கச் செய்திகள்

இந்நூல் பாடாண்திணை துறைசார்ந்தவையாயினும், முத்தமிழில் சான்றாகிய இசையின் சிறப்பையும், இசைக் கருவிகளின் இயல்பையும், இசைக்கலைஞா்களின் வாழ்வு நிலையையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. ‘பாண்’ என்பது ‘யாழ்’   என்ற பொருளையும், ‘பாட்டு’ என்ற பொருளையும் தருகிறது.  பாணை வாசிப்பவர் பாணர், பாண் வாசிக்கும் பெண் பாணினி என்றழைக்கப் பெற்றாள். ‘பண்’ என்பது பாட்டு, ராகம்’ என்ற பொருளிலும் விரவி வருகிறது.  எனவே பண்ணைப் பாடுவோர் பாணா் என்ற பெயரில் பாண்  என்பது ஆகுபெயராகிப் பாணனையும் உணா்த்தியதாகக் கொள்ளலாம்.  பாணா்களைச் சிறுபாணர் பெரும்பாணா் என்று யாழ் வைத்திருப்பதைக் கொண்டு வேறுபடுத்தினாலும், பாணர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இசைப்பாணா், யாழ்ப்பாணா், மண்டைப்பாணா் என்பதாகும்.  சங்கீதம் பாடுவோரை இசைப்பாணா் என்றும், யாழ் மீட்டூவோரை யாழ்ப்பாணா் என்றும், பாடல் பாடிப் பிழைப்பவரை மண்டைப்பாணா் என்றும் அழைக்கப் பெற்றிருந்தனா்.

யாழையும் இதேபோல் வகைப்படுத்துவதுண்டு: சீறியாழ் அல்லது செங்கோட்டுயாழ் என்பது ஏழு நரம்புகளை உடையது. சகடயாழ் என்பது பதினான்கு நரம்புகளை உடையது.  மகரயாழ் என்பது பத்தொன்பது நரம்புகளையும், பேரியாழ் என்பது இருப்பத்தொரு நரம்புகளையும், ஆதியாழ் ஆயிரம் நரம்புகளையும் உடையது என்று வகைப்டுத்தியுள்ளனர்.

 

பாணர்களின் வறுமை நிலை

நல்லியக்கோடனைக் காண்பதற்கு முன்பாக பாணர்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தனார். அவர்களின் வீடுகள் சிதைந்த சுவர்களாகவும், கூரைக்கழிகள் கரையான் அரித்த நிலையிலும், அடுப்பில் நாய்க்குட்டி போட்ட நிலையும், அந்த நாய் தனது குட்டிகளைக் கூடப், பால் கொடுக்க இயலாமல், ஒட்டிய வயிற்றுடன், குட்டிகளுக்குக்கு கூடப் பாலின்றி வலி தாளாமல் குரைக்கவும், கொடிய வறுமையில் இவர்கள் குடும்பம் வாடியது. இவர்களுடைய வீட்டைச் சுற்றிக் காளான்கள் மண்டிக் கிடந்தன.

”ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்,

வளைக் கை, கிணை மகள் வள் உகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பு இலி வெந்ததை,

மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து”

இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்

இத்தகைய வீட்டில் இருந்த பெண் மகள் இடையைப் போல் உடல் மெலிந்து சங்கு வளையல்கள் கழன்று விழும்படியாக, நீண்ட நகங்கள் மட்டும் உள்ளனவாகத்  திகழ்ந்தாள். கூர்மையான நகங்களைக் கொண்டு  வீட்டின் பின்புறமுள்ள   குப்பைமேனிக் கீரையைப் பறித்து உப்பு கூட வாங்க வசதியின்றி அதைச் சமைத்து உறவினருக்கு அஞ்சி வாயிற் கதவை  அடைத்துத் தன்  சுற்றத்துடன் உண்டு வாழ்ந்தனர். இத்தகைய கொடிய பசியில் அழியாமல் ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்று இல்லாமல் வாழ்ந்து வந்தனர். பசிப்பிணியின் தன்மையை மணிமேகலையில்,

“குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பங்கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண் அணிகளையும் மானெழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறன்கடைநிறுத்தும்

பசிப்பிணிஎனும் பாவி”

என்று சீத்தலைச் சாத்தனார் எடுத்துக்காட்டுகிறார். அதைப்போல பசி வந்திடின் அறிவு, மானம், தானம், காதல், உயர்ச்சி, முயற்சி,குலம், கல்வி, தவம், வள்ளன்மை,  ஆகிய எதையும் இழக்காத நிலையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இருந்த இப்பாணர்கள், நல்லியக் கோடனிடம் சென்ற போது, அவன் யானைக் கூட்டங்களையும், தேர்களையும் பரிசாகக் கொடுத்துள்ளான்.

இம்மன்னனின் ஆட்சி எல்லையான ,எயிற்பட்டினம் சென்றால், அங்கு மீனவப் பெண்கள் அழகிய தோற்றத்துடனும், வேல் போன்ற கூர்மையான பார்வையுடனும் கூடிய அவர்கள் காய்ச்சிய கள்ளை அருந்துவதற்குத் தருவர்.  வீடுதோறும் விருந்துண்ண அழைப்பர். அங்கு குழல் மீன் உணவைச் சூடாகப் பெற்று உண்ணலாம்.

நல்லியக்கோடனின் ஆட்சிக்குட்பட்ட வேலூருக்குக்குச் சென்றால் அங்கு கடுமையான வெயிலை உடைய அவ்வூரில் குடிசையில் வாழ்கின்ற எயினர் குலப் பெண்கள் சமைத்த இனிமையான புளிசோறும், காட்டுப்பசுவின் இறைச்சியும் கிடைக்கும். மன்னனின் இன்னொரு எல்லையான ஆமூருக்குச் சென்றால், அங்கு,     கைக்குத்தல் அரிசியில் சமைத்த வெண் சோறும், நண்டுக் குழம்பும் பரிசாகக் கிடைக்கும்.

நல்லியக்கோடனின் நல்லியல்புகள்

இத்தகைய சிறப்புகளையுடைய நல்லியக்கோடன் நல்ல பல பண்புகளைப் பெற்றிருந்தான். செய்ந்நன்றி உள்ளவர்களாகவும், சிற்றினம் சேராதவனாகவும், இன்முகம் உடையவனாகவும், அகமும், புறமும் இனியவனாகவும், எவருடனும் இனியவனாகவும், எவருடனும் நெருங்கிப் பழகுபவனாகவும் இருந்தான் என்று அறிஞர்களும் பாராட்டும் வண்ணமாகத் திகழ்ந்தான்.

”செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,

இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும்,

செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த;

அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும்,

ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,

வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த;

படை வீரர்கள் பாராட்டும் போது, இம்மன்னனிடம் பணிந்து போகிறவர்களுக்கு அருள்புரியும் படியாகவும், படைக்குள் புகுந்து பகை வீரர்களைப் நிலை குலையச் செய்தலும், தோற்கும் நிலையில் உள்ள படையை வெற்றி பெறச் செய்தலும்  சிறந்த  வலிமையும் உடையவனாக விளங்கினான்.

மகளிர் பாராட்டும் போது எந்த மகளிரும் விரும்பும் படியான தோற்றமும், எளிதில் எந்த மகளிருடனும் வயப்படாமல் இருத்தலும், மகளிரின் மனம் நினைத்ததை அப்படியே செய்வனவாகவும், விளங்கியதாக மகளிர் குறிப்பிடுகின்றனர்,

“கருதியது முடித்தலும.;காமுறப்படுதலும்

ஒருவழி;ப்படாமையும்”

என்ற வரிகள் இவ்வுண்மையை எடுத்தியம்பக் கூடியது.

பரிசிலர் பாராட்டும் போது, நல்லியக்கோடன் சான்றோருடன் இருக்கும் போது அறிவுடையவனாகவும், அறியாமையோருடன் கூடி இருக்கும் போது மிக்க அறிவில்லாதவனாகவும், பரிசில் பெற வந்தவர்களின் உளமறிந்து பரிசு வழங்குவதிலும் எவ்விதப் பாகுபாடின்றி பலருக்கும் எவருக்கும் அளித்தலும், இவனது தனித் தன்மை வாய்ந்த  குணங்கள் ஆகும்.

நல்லியக் கோடனின் விருந்தோம்பல்

”காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ,

பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,

கா எரியூட்டிய கவர் கணைத் து¡ணிப்

பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,

பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்

பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,”

நல்லியக்கோடனை எவரும் காணச் சென்றால் அவர்களின் மூங்கில் போன்ற ஆடையை  உடுத்துவதற்குத்  தருவான். பாம்பு கடித்து விஷம்  ஏறும் அளவிற்குத் தரமான கள்ளினைத் தருவான். சமையல் கலையில் சிறந்த பீமன் எழுதிய சமையல் நூலினைக் கொண்டு சமைக்கப் பெற்ற அரிய வகை உணவுகளை வழங்குவான். சூரியனைப் போன்ற  பொற்கிண்ணத்தில் உணவை வைத்துப் பரிமாறி, தானே அருகில் இருந்து உண்ணச் செய்வான்.

நல்லியக் கோடனின் கொடைச் சிறப்புகள்

நல்லியக்கோடனைக் காணச் செல்லும் எவரையும் காத்திருக்க வைக்காமல் விரைந்து பரிசில் வழங்கும் அருள் உள்ளம் படைத்தவன். போரில் வெற்றிபெற்று  அதில் கிடைத்த  பொருள்களைப் பரிசிலாகக் கொடுப்பதில் வல்லவன். படைவீரர்கள் கொண்டுவந்த அணிகலன்களைப் பாணர்களின் வறுமை நீங்கும் அளவிற்குக் கொடுத்தவன்.  சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த  தேர்களைப் பரிசாக வழங்கிவிடுவான்.  குதிரைகளைப் பரிசலாகத் தருவது மட்டுமின்றி குதிரைகளை விட வேகமாகச் செல்லும் காளைகளையும், அக்காளைகளைச் செலுத்துகின்ற பாகனையும் கூடவே அனுப்பி வைப்பான். இவை மட்டுமின்றி அன்றைய பரிசில்களையும் கொடுத்து அன்றைக்கே அனுப்பி வைப்பான் முதல்நாளிலிருந்தது போலவே எல்லா நாள்களும் விருந்து உபசரிப்பதைத்,

                “தலைநாள் அன்ன புகலொடு வழிசிறந்து

                   புலநாள் நிற்பினும் பெறுகுவீர்  நில்லாது

இவ்வாறு பதிவு செய்யப் பெற்றுள்ளது.

முடிவுரை

ஆற்றுப்படைகளில் ஒவ்வொன்றிலும் பற்பல சிறப்புகள் இருப்பினும், சிறுபாணாற்றுப்படையில் இடம் பெறுகின்ற நல்லியக்கோடனின் சிறப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இம்மன்னன் குறுநில மன்னனாயினும், கடையேழு வள்ளல்களைவிட மூவேந்தர்களைவிட வண்மைச்சிறப்பு உடையவனாகவும், வீரமும், ஈரமும், நிறைந்தவனவாகவும் விளங்கி உள்ளான் என்பது தெளிவாகிறது இத்தகைய சிறப்புகளைக் கொண்டதால்தான் அறிஞர் தமிழண்ணல் இந்நூலை ‘வரலாற்றுச் சமுதாயப் பாட்டு  என்று சிறப்பித்துப் போற்றுகிறார்.

  துணைநின்ற நூல்கள்

  1. சிறுபாணாற்றுப்படை,பொன்.புஷ்பராஜ்(மூலமும் உரையும்), சாரதா பதிப்பகம், சென்னை. பதிப்பு,2008
  2. மணிமேகலை (மூலமும் உரையும்), புலியூர் கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, பதிப்பு, 2017
  3. சமூகவியல நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழாய்வுத்துறை வெளியீடு, தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, பதிப்பு, 2017

 

Series Navigationகொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்புரட்சி எழ வேண்டும் !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *