சிறு நூல் சிந்தும் மாணிக்கங்கள்  

This entry is part 5 of 7 in the series 17 ஜூலை 2022

 

 
வளவ. துரையன் 
           
அண்மையில் தோழர் கோவி. ஜெயராமன் எழுதி உள்ள நூல் சடையப்ப வள்ளல் [கம்பர் காவலர்] என்பதாகும். இது மிகச்சிறந்த ஆய்வேடாகத் திகழ்கிறது. 
 
“இந்த சிறு நூலைப் பொருத்தவரையில் புதிய செய்திகள் பலவற்றை நமக்கு இது அளிக்கிறது “ஆதவன் புதல்வன் முத்தி அறிவனை அளிக்கும் அண்னல்” என்று தொடங்கும் பாடலைச் சான்றாகக் கொண்டு கோவி, செயராமன் கம்பரின் தந்தை பெயர் ஆதித்தன் எனக் கூறுகிறார்.
 
அதேபோல திருவாளர் சா. கணேசன் அவர்களின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு கம்பரின் காலம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுதான் என்றும் கூறுகிறார். இதற்கு தொண்டை மண்டல சதகமும் துணை செய்கிறது.
 
தேரழந்தூரில் ஆமருவிப்பன் கோயிலில் கம்பர் சன்னதி எனும் ஒன்று தனியே இருக்கிறது. அங்குக் கம்பர் தம் துணைவியாருடன் உள்ளார். சற்றுத் தொலைவில் மேலையூரில் ”கம்பர் மேடு” என்னும் பகுதி உள்ளது. இது இந்தியத் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் உள்ளது.
 
கம்பர் உவச்சர் குலத்தில் தோன்றியவர். உவச்சர் குலம் என்பது கிராமக் கோயில்களில் பூசை செய்யும் பூசாரிகளின் குலமாகும். இந்நூலாசிரியர் மேலையூர் சென்று விசாரித்தபோது அங்கிருந்த  சிறிய காளி கோயிலைக் காட்டி இக்காளி தேவியைத்தான் கம்பர் பூசித்து வந்தார் என்றும் கூறினார்களாம். ஆதலால் கம்பர் சக்தி உபாசகர் என்றும் தெரிய வருகிறது.
 
அதுபோல அருகில்  க்ஷேத்திரபாலபுரம் எனும் ஊர்  உள்ளது. அங்குள்ள காளியம்மன் கோயிலில் உள்ள மாகாளியைக் கம்பர் வழிபட்டார் என்று அங்குள்ளோர் கூறுகிறார்கள். அக்கோயிலின் வெளிச்சுவற்றில் “கம்பருக்குக் கவிதை தந்த மாகாளி” என்னும் சொற்றொடர் இருக்கிறதாம்.
 
கம்பர் முதன்முதல் இந்தக் காளியம்மன் மீது “வாய்த்த வயிரபுர மாகாளி அம்மே கேள்” என்று பாடியிருப்பதாக உ.வே.சா அவர்கள் கூறி உள்ளார்.
 
இந்நூலில் கம்பரின் மகன் அம்பிகாபதியின் திருமணத்தில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி காட்டப்பட்டுள்ளது. வள்ளல் சடையப்பர் அம்பிகாபதியின் திருமணத்திற்குச் சற்றுத் தாமதமாக  வருகிறார். அவருக்கு அமர இருக்கை இல்லை. எனவே அவர் நின்று கொண்டே இருக்கிறார்.
 
அதைக் கண்ட கம்பரின் மனைவி வருத்தம் அடைந்து கம்பரிடம் முறையிடுகிறார். கம்பரோ ”அவருக்கு இன்னும் மேலான இருக்கையாக நான் எழுதும் இராமகாதையில் இடம் தருகிறேன்” எனக் கூறினாராம்.
 
மற்றொரு செய்தி: கம்பர் தன் இராமகாதைக்கு சாற்றுக் கவியை அஞ்சனாட்சி எனும் தேவதாசியிடம் பெற்றுள்ளார்.  இதன் மூலம் புலமை எங்கிருப்பினும் கம்பர் போற்றிப் புகழ்ந்தது தெரிய வருகிறது.
 
”அரியணை அனுமன் தாங்க” என்னும் பாடலில் வெண்ணெய் நல்லூர்ச் சடையன் தம் மரபுளோர் கொடுக்க வாங்கி மகுடம் இராமனுக்குச் சூட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நூலில் இதற்கு ஒரு விளக்கத்தைக் காணமுடிகிறது.
 
சூரியகுல அரசனான இராமனுக்குச் சனகர் வழியில் பெண்வீட்டார் சார்பில் சந்திரகுல வழியில் வந்த சடையப்பர் மகுடம் எடுத்துத்தந்தார் என்பது சுவையான செய்தி ஆகும்.
 
சோழமண்டல சதகம் புதுவைச் சடையன் என்றும் புதுச்சேரிக் கொடையான் சேதிராயன் என்றும் இரண்டு பெயர்களைக் குறிப்பிடுகிறது. தற்போது புதுவைப் பகுதியில் உள்ள சேதராப்பட்டு என்பது முற்காலத்தில் சேதிராயன் பட்டு என்று வழங்கி இருக்கலாம் என்பது நூலாசிரியர் கருத்தாகும்.
 
கோவி.செயராமன் உரையாசிரியர்களின் வழி சேக்கிழார் மற்றும் ஒட்டக்கூத்தர் கம்பர் ஆகியோரின் கால ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 
 
கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலத்திலும் சடையப்பர் திடல் என்னும் ஓர் இடம் உள்ளது. அது மிகப்பெரிய திடலாக இருந்திருக்க வேண்டும். சுமார் 60 வேலி பரப்பளவு கொண்டது என அதை உ.வே.சா கூறுகிறார். அறுபது வேலி என்பது சுமார் 370 ஏக்கரைக் குறிக்கும்.
 
இந்தக் கதிராமங்கலத்தில் உள்ள மேட்டுத்தெருவில்தான் சடையப்பர் பிறந்ததாக அங்குள்ளோர் கூறுகின்றனர். சடையப்பர் திடலுக்குப் போகும் வழியில்தான் சடையப்பர் சமாதி உள்ளது. தற்பொழுது அந்த இடத்தைச் சுத்தப்படுத்திக் கொட்டகை வைத்துள்ளார்கள். இச்சமாதியை அங்குள்ளோர் சடையப்ப வள்ளல் ஆத்மலிங்கம் என்றழைக்கின்றனர். அதற்குப் பூசைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.
 
ஆனால் விழுப்புரம் அருகில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் சடையப்பர் வாழ்ந்தார் என்று சான்றுகளால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.
 
உ.வேசா அவர்கள் கதிராமங்கலத்தின் அருகில் உள்ள வெண்ணெய் நல்லூர்தான் சடையப்பர் வாழ்ந்த பூமி என்று குறிப்பு எழுதி உள்ளார். அகஸ்தியப்ப முதலியார் என்பவர் தொண்டை மண்டல சதகம் பதிப்புக்கு அணிந்துரை எழுதும்போது விழுப்புரம் அருகில் உள்ள திருவெண்னெய் நல்லூரே சடையப்பர் வாழ்ந்த இடம் என்கிறார். 
 
நூலை முடிக்கும் ஆசிரியர் தமிழக அரசு காலத்தால் அழிக்க இயலாத மாபெரும் காவியம் தந்த கம்பரை ஆதரித்த சடையப்பர் வாழ்ந்த இடம் எதுவென்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அங்கு அந்த வள்ளலுக்கு நினைவாலயம், மணிமண்டபம் போன்றவை அமைக்கப்ட வேண்டும் என்று எழுதி முடிக்கிறார்.  இது தமிழ்கூறும் நல்லுலகத்தின் வேண்டுகோளாகும்.  
 
இந்நூலில் என் கண்ணில் பட்ட முக்கியமான பொறிகளைத்தாம் நான் சுட்டிக் காட்டி உள்ளேன். இன்னும் சிறந்த மாணிக்கங்கள் சுடர் வீசிக்கொண்டுள்ள நூல் இது. விரிவஞ்சி நான் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். ஆர்வம் உள்ளவர்கள் அவரை தொடபு கொள்ளலாம் அவர் பேசி எண்: 944 274 6411
 
நூலாசிரியர் கோவி.ஜெயராமன் தொலைபேசித் தொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறந்த தொழிற்சங்கவாதி. திறமையான கவிஞர்; கவனத்தை ஈர்க்கும் மேடைப் பேச்சாளர். பணியாற்றிய துறைக்குத் தொடர்பே இல்லாத துறையில் நுழைந்து சடையப்பர் பற்றிய ஆய்விற்காகத் தம் காலத்தையும், பொருளையும் அவர் செலவிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஒரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வேட்டின் சுருக்கமாக இந்நூல் திகழ்கிறது எனலாம்.
Series Navigationநாசாவின் மிகப்பெரும் ஜேம்ஸ் வெப் [james webb] தொலைநோக்கி அனுப்பிய முதல் தெளிவான விண்வெளிப் படங்கள்நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *