சிலந்தி வலை

’என்
வீடு’.

’உன் வீடு போல் என் வீடு இது.

’என் வீடு
கல் வீடு’

‘என் வீடு நூல் வீடு, அதனாலென்ன?’

என் வீடு
‘பெரிய’ வீடு

என் வீடு ஓலை வீடாய்க் கூட இல்லாத ஏழை வீடு தான், என்ன செய்ய?

‘வெளியே
போ’

ஏன்?

உன் வீடு
பக்கத்தில் இருப்பது அழகாக இல்லை.

உன் வீட்டைக் காட்டி பயமுறுத்துவது நன்றாக இல்லை.

‘நான்
உழைத்துக் கட்டிய வீடு இது ’.

‘நான் உழைத்தும் ’இழை’த்தும் கட்டியது என் வீடு’.
‘நீ
என் வீட்டுக்குள் உளவு பார்க்கிறாய்.’

‘நீ என் வீட்டுக்குள் அத்துமீறுகிறாய்’.

’சுத்தம்
செய்ய வேண்டும் என் வீட்டை’

’என் வீடு சுத்தமாகத் தான் இருக்கிறது எனக்கு’

’ஒட்டடை
எடுக்க வேண்டும்’.

‘எடு என் வீட்டை இடிக்காமல்’

’எப்படி
முடியும்?’

’உன் வீட்டை இடிக்காமல் என் இடத்தில் நான் இருப்பது போல் என் வீட்டை இடிக்காமல் உன் இடத்தில் நீ இருந்து கொள்’

சிலந்தி
இழையோடும் தர்க்கத்தில் வலை பின்னி முடித்திருக்கும் என்னை.

ஒட்டடை எடுக்கவில்லை அன்று முழுதும் நான் வலை விட்டு வர முடியாமல் எட்டுக் கால்களுடன்.

கு.அழகர்சாமி

Series Navigationஇட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..பூகோள நாள் சுழற்சி மணி நேரம் அணுத்துவ வடிவப் புரோட்டீனில் உயிரியல் குறிப்பதிவு ஆகியுள்ளது