சிலர்

சிறிய நைலான் கயிறு போதும்
வாழ்விலிருந்து விடுபட
யாரோ வாங்கிக் கொடுத்த
சேலையிலா விதி முடிய வேண்டும்
வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுக்காது
தப்பிப்போவது விடுதலையாகாது
குரல்வளை நெரியும் போது
நினைத்துப் பார்த்தாயல்லவா
வாழ்ந்திருக்கலாமே என்று
மனிதர்கள் மீது நம்பிக்கை
வைத்திருக்கவே வேண்டாம்
உன்னைப் போன்றவர்களுக்காகத்தானே
கடவுள் இருக்கிறார்
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை
சமமாய் பாவிக்க
கற்றுத்தரவில்லையா உனக்கு
வரவிருக்கும் வசந்தகாலத்தை நினைத்து
இலையுதிர்க்கும் மரத்திடம்
கற்றிருக்கலாமே வாழ்க்கைப் பாடத்தை
தற்கொலையின் மூலம்
எந்த மர்மத்தின் முடிச்சை
அவிழ்க்க நினைத்தாய்
இறைவன் வாய்ப்புகள் அளித்தான்
நீ கண் மூடி இருந்தாய்
பரிசாக கிடைத்த வாழ்வை
துச்சமாக மதித்து
தூர எறிந்தாய்
கடைசியாக கடவுள் உன் மீது
வைத்த நம்பிக்கையையும்
நாசமாக்கி மோசம் போனாய்.

Series Navigationஎன் பாட்டிமீண்டும் முத்தத்திலிருந்து