சிவகுமாரின் மகாபாரதம்

 SIVAKUMAR-MAHABHARATHAM(1)

 

 

நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன்.

என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும்.

மகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் கதைகள்… நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்கள்… மிகச் சிக்கலான முடிச்சுகள் கொண்ட நூற்பந்து போல் உருவம் கொண்ட சிக்கலான மகா காவியம். அது ஒரு போர்க் காவியம். இதைச் சொன்னால் புரிவதற்கு கடினமானது… காட்சிகளாய் காட்டினாலும் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும் ஓரளவு மனதில் பதியும்… மகாபாரதக் கதையினை அறிந்தவர்கள் ஆயிரம் பேர் இருப்பார்கள். அதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களே இருப்பார்கள்.

எவ்வளவு நுணுக்கமான ஆராய்ச்சி. கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் ஆற்றலையும் ஆராய்ந்து அப்படியே சித்திரமாய் மக்களின் முன் காட்சிப் படுத்த சிவகுமார் என்ற கலைஞனால் மட்டுமே முடியும்.

அவரது மகாபாரத உரைப் பதிவை பார்த்த போது ஒரு தத்ரூபமான வரலாற்று திரைப்படத்தை பார்த்து திரும்பியது போல் இருந்தது. மகாபாரதக் கதையினை இரண்டு மணி நேரத்தில் யாரால் இவ்வளவு நேர்த்தியாக சொல்ல முடியும். எனது இருபத்தைந்து வருட வானொலி ஒலிபரப்பு அனுபவத்தில் கூறுகிறேன். இரண்டு மணி நேர உரையினை இரண்டு நிமிடங்களில் முடிந்து விட்டது போல் மனதை உணர வைக்கிற உயர்ந்த பேச்சாற்றல் தமிழில் சிவகுமார் அவர்களுக்கு ஈடாய் யாரையுமே கூற இயலாது…

நேரம் போனதேத் தெரியவில்லை. விரயமான வார்த்தைகள் இல்லை. அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அறம் சார்ந்த கருத்துக்கள் உயிர்மூச்சாய் இருந்தன.

ஒரு மகாபாரதக் கதையினை உயர்ந்த தொழில் நுட்பத்தில் உலகின் உயர்ந்த கலைஞர்களை வைத்து திரைப்படமாக எடுத்தாலும் மக்களின் இதயத்திலும் மனதிலும் சிவகுமாரின் இரண்டு மணி நேர உரையின் செய்தியில் ஒரு பத்து சதவீதமாவது மனதிற்குள் எஞ்சுமா என்பது சந்தேகம்தான்.

இனி ஈரோட்டில் அவர் பேசிய அந்தக் கூட்டத்திலுள்ள பார்வையாளர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.. ஒரு ராணுவ ஒழுக்கத்தை அவர்களிடம் காண இயன்றது….ஒரு குண்டூசி விழுந்தால் கேட்குமளவிற்கு ஒருங்கிணைந்த அமைதி…ஒரே மாதிரியான பார்வையாளர்களின் ஆரவார உணர்ச்சி வெளிப்பாடு. ஒவ்வொரு பார்வையாளரின் கண்களிலும் ஒரு ஆரோக்கியமான உள்வாங்கல் தெரிகிறது. இன்னும் பார்வையாளர் பக்கம் இருந்த சிவகுமாரின் குடும்ப உறுப்பினர்களின் முக மலர்ச்சியும் ஆழ்ந்த வியப்பும் மற்ற பார்வையாளர்களின் உணர்வுகளோடு ஒன்றி இருந்தது.

நட்பு ரீதியாக சிவகுமார் என்ற உயர்ந்த கலைஞனின் திறமையை சிலாகித்து சொல்லவில்லை.. இந்த சமுதாயம் உயர வேண்டும்… உன்னத அறம் சார்ந்து உலக அமைதிக்காய் திறன்பட இயங்க வேண்டும்.. அதற்கு சிவகுமாரின் உரைகளை இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டும்.. அப்போதுதான் மகாபாரதம் என்ற மகா காவியத்தின் பயன் இந்த மானிட சமுதாயத்தை சென்று சேரும்…

சிவகுமார் அவர்களின் உரை வடிவமானது எவ்வளவு நேர்த்தியானது…முதலில் காவிய நோக்கம், பின் காவியக் கதை, தொடர்ந்து கதா பாத்திரங்கள், பின் காவியப் பயனென மிகவும் நுணுக்கமாக கூறி ஒவ்வொருவர் மனதிலும் குறிப்பாக சாதாரண பாமர மனிதனுக்கும் புரிகிற அளவில் மகாபாரதத்தை ஆழப் பதிய வைத்திருக்கிறார்… அவரது கண்களில் எப்போதும் பாரதியின் தீட்சண்யப் பார்வையை காண்கிறேன்.

வியாசர் காவியக் கதையினைச் சொன்னார்… விநாயகர் எழுதினார்..சிவகுமாரனான விநாயகரின் சகோதரர் பழனிச்சாமி மகாபாரதக் கதையினை இந்தக் கலியுகத்திற்கு சொன்னார் உயர்ந்த நோக்கத்துடன்.

பொய்மையும் வாய்மை இடத்து…பொய்யே சொல்லாத தர்மனை அஸ்வத்தாமன் என்ற யானைக்குள் பொய்யை புதைத்து துரோணாச்சாரியாரை கொன்ற சம்பவத்தை சிவகுமார் கூறிய விதம் மிக அருமை,,,,

தர்மருக்கு தர்மமே தாரக மந்திரமாக இருந்தது. தர்மர் கதா பாத்திரம் மூலமாக வாழ்வின் உயர்வையும் தாழ்வையும் தர்மத்தின் சோதனையையும் அழகாக எடுத்துக் காட்டினார் சிவகுமார். தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணருக்கு அதர்மத்தையும் ஆயுதமாக்க வேண்டி இருந்தது.

பரதனால் பெயர் பெற்றது பாரதம். வாரிசு அரசியலின் இறுதிக் காட்சியை மகாபாரதக் கதை மூலமாக சிவகுமார் அழகாக இன்றைய அரசியல் காட்சிகளோடு ஒப்பிட்டு கூறினார்.

சிவகுமார் என்ற தமிழுலகத்தின் உயர்ந்த அறிஞர், கலைஞர் உலகின் மிகப் பெரிய மகா காவியத்தை இரண்டு மணி நேரத்தில் சொல்லி முடித்த போது அவரின் பிள்ளைகளின் அரவணைப்பில் அவர்களின் முக மலர்ச்சியில் சிவகுமார் தனது பிள்ளைகளின் குழந்தையானார். அவர் பார்வையாளர்களை கண்மணிகளே என்று அழைத்தார்..அவர் தமிழ் மக்கள் அனைவரின் கண்மணி…

மகாபாரதத்தில் நன்மையும் தீமையும் போரிட்டுக் கொண்டன. நல்ல பாத்திரங்கள் நன்மையைக் கூறின…தீயப் பாத்திரங்களும் நன்மையைத்தான் அழுத்தமாய் கூறின..அங்குதான் சிவகுமார் அவர்களின் நான்குவருட தவத்தின் வெற்றியும் இருக்கிறது.

சிவகுமார் அவர்களின் இந்த மகாபாரத சொற்பொழிவினை ஜனவரி 16 ஆம் தேதி சனிக் கிழமை மாலை 04 மணி முதல் 07 மணி வரை விஜய் டிவியில் கண்டு மகிழலாம்.

குமரி எஸ். நீலகண்டன்

punarthan@gmail.com

Series Navigationநாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டதுஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு