சீதை, அமுதா, நஞ்சா, தீயா?

author
0 minutes, 14 seconds Read
This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

ஜயலக்ஷ்மி

 

ராமாயணம் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் காப்பியம்.. காப்பியத்தலைவி சீதை. இத் தலைவியை அமுதமென்றும் நஞ்சு என்றும் தீ என்றும் கதை மாந்தர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

கவிஞன் இவளை அமுதம் என்றே வருணிக்கிறான். முதன் முதலாக சீதையை நமக்கு அறிமுகம் செய்கிறான். கன்னிமாடத்தில் தோழிகள் அவ ளைச் சூழ்ந்திருக்கிறார்கள். இவள் அழகை மன்மதனாலும் வரைய முடியாதாம். இவள் அழகை ஓவியத்தில் தீட்ட முடியாமல் அவன் இன்னும் திகைத்துக் கொண்டிருக்கி றானாம்.

மதனற்கும் எழுதவொண்ணாச் சீதையைக் கவிஞன் ஒருவாறு நமக்கு வருணித்துக் காட்டு கிறான்.இவள் பொன்னின் ஒளி போலவும் பூவின் நறுமணம் போலவும், தேனின் இன்சுவை போலவும் கவிஞர்களின் பாடல் ஓசையின்பம் போலவும் விளங்குகிறாளாம். தோழி களின் நடுவே சதகோடி மின்னல்கள் வணங்கும் படியான மின்னல் அரசி போல் தோற்றமளிக்கிறாள்.

 

 

 

 

 

 

 

 

அழகு இவளைத் தவம் செய்து பெற்றது. தெய்வமங்கையர்க் கெல்லாம் திலகம் போன்ற இவளைக் கண்டால்,

 

குன்றும், சுவரும், திண்கல்லும், புல்லும்

 

கூட உருகுமாம். கன்னி மாடத்திலே நிற்கும் சீதையைக் கவிஞன் காட்டும் போது, அவளை

 

”உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள்”

 

என்கிறான்.

 

கற்பின் கனலி

இவ்வளவு அழகும் மென்மையும் உடைய சீதையை சூர்ப்பணகை முதன் முதலாகப் பார்க்கி றாள். ஒளிவெள்ளமாக விளங்கும் சீதை சூர்ப்பணகை கண் ணுக்கு கற்பின் கனலியாகத் தெரிகிறாள். அது மட்டுமல்ல அந்தக் கனல் அரக்கர் என்னும் காட்டை அழிக்கப் பிறந்தது என்றும் உணர்ந்து கொள்கிறாள்.

 

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்—அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து அழிந்தது காடு”

 

என்று பாரதி சொல்வது போல் இந்தக் கனல் அரக்கர் காட்டை அழிக்கப் போகிறது. சூர்ப்பணகைதான் முதன் முதலாகச் சீதையைத் தழலாகக் காண்கிறாள்.

 

நிருதர் தீவினை (மாரீசன்)

சீதையின் அழகைச் சூர்ப்பணகை மூலம் கேள்விப்பட்ட ராவணன் சீதையைத் தன் இதயமாம் சிறையில் வைக்கிறான். சீதையை வஞ்சகமாகக் கவர்ந்து வரத் திட்டம் தீட்டுகிறான். அதற்காக மாமன் மாரீசன் உத வியை நாடுகிறான். ராவணன் கருத்தை அறிந்த மாரீசன், இச்செயல் சரியல்ல என்று எவ்வளவோ அறிவுரை சொல் கிறான்.

ஆனால் அறிவுரைகளெல்லாம் “கல்லாப் புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருள் போல” வீணானது. மாரீசன் மேலும் எச்சரிக்கிறான்.”ராவணா! சீதையை ஒரு பெண் என்று நினைக்காதே

”அது சீதை உருவோ? நிருதர் தீவினை அன்றோ?

 

என்று எச்சரிக்கிறான். சீதையை, அரக்கர்களை அழிக்க வென்றே உருவெடுத்து வந்த அரக்கர் தீவினையாகவே பார்க்கிறான்.

 

 

கவிஞன் காட்டும் நஞ்சு

மாயமானைக் காட்டிச் சீதையை மயங்க வைத்து இராம இலக்குவர்களைப் பிரித்த பின் இரா வணன் வஞ்சகமாகத் துறவி வேடத்தில் வந்து சீதையைக் கவர்ந்து சென்று அசோகவனத்திலே சிறை வைக்கிறான். தேவியைத் தேடி வந்த அனுமன் அவளை அசோகவனத் திலே சிறை வைக்கப்பட்ட நிலையில் பார்க்கிறான்.

 

இதே சமயம் இராவணன் அங்கே வருகிறான். சீதையிடம் காதலை யாசிக்கிறான். இதே சீதை தான் தனக்கு நஞ்சாகப் போகிறாள் என்பதை உணராமல் அவளை அமுதம் என்று நினைத்துக் காதல் பிச்சை கேட் கிறான். இந்த இடத்தில் கவிஞன் சீதையை, இராவணனை மாய்க்கப் போகும் நஞ்சு என்று சுட்டிக் காட்டுகிறான்.“வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான்” என்று இராவணன் பேதமையைக் காட்டுகிறான்

 

காவலிருந்த அரக்கிமார்களை,

’சீதையை எனக்கு வசப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் உங்களையும் கொல்வேன்’ என்று மிரட்டுகிறான்

 

புகை, வெந்தீ

ராவணன் சென்றபின், அரக்கிமார்        சீதையை அதட்டுகிறார்கள். “ராவணன் உன்னிடம் எவ்வளவு

அன்பு வைத்திருக்கிறான்? நீ ஏன் இதை உணரமாட்டேன் என்கிறாய்? நீ புகுந்த கணவன் வீட்டிற்கும் பிறந்த வீட்டிற் கும் நெருப்பை அள்ளித் தெளிக்க வந்திருக்கிறாய். அறிவில்

லாதவளே!’ என்று வெருட்டுகிறார்கள்.

 

புக்கவழிக்கும், போந்த வழிக்கும் புகை வெந்தீ

ஒக்கவிதைப்பான் உற்றனை அன்றோ,

உணர்வில்லாய்?

 

என்கிறார்கள். இவர்களும் சீதையை நெருப்பாகவே பார்க்கி றார்கள். ஆனால் இந்த நெருப்பு மிதிலையையோ, அயோத்தி யையோ அழிக்காது. அது இலங்கையை எரிக்கப் போகும் நெருப்பு என்பதை அவர்கள் அறியவில்லை.

 

அனுமன் காணும் தழல்

’இன்னும் ஒரு மாதம் வரை தான் நான் உயிர் தரித்திருப்பேன். அதற்குள் ராமன் வந்து என் னைச் சிறை மீட்க வேண்டும்’ என்று சீதை அனுமனிடம் கெடு வைக்கிறாள். இதைக் கேட்ட அனுமன், “அன்னையே! விரைவில் வானரப் படையுடன் ராமன் இங்கு வருவான். இந்த இலங்கை அப்போது என்ன பாடுபடப் போகிறது தெரியுமா? சீதை என்ற ஒரு ஒப்பற்ற நெருப்பு இலங்கையின் நடுவில் இருப்பதன் காரணமாகவே பொன் மயமான இலங்கை யிலுள்ள அரக்கர்களாகிய கரி எரிந்து சாம்பலாகப் போகிறது.

இதை நீயும் பார்க்கப் போகிறாய் என்று உறுதி யளிக்கிறான்.

 

‘வினையுடை அரக்கராம் இருந்தை வெந்துக

சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான்

அனகன் கை அம்பு எனும் அளவு இல்

ஊதையால்

கனகம் நீடு இலங்கை நின்று உருகக் காண்டியால்

 

இராமன் கணையாழியைக் காட்டி சீதைக்கு ஆறுதல் சொன்ன அனுமன், சீதை அளித்த சூடா மணியைப் பெற்றபின் அசோகவனத்தை அழிக்கிறான். இந்திர ஜித் பிரமாஸ்திரத்தால் கட்டுப்பட்ட அனுமனை இராவணன் முன் கொண்டு வருகிறான். இராவணன் ஆணைப்படி அனு மன் வாலில் தீ வைக்கிறார்கள். அந்தத் தீயாலேயே இலங் கையை எரிக்கிறான் அனுமன்.

 

வீடணன் அஞ்சும் நஞ்சு.

இலங்கையைப் புதுப்பித்த ராவ ணன் சபையைக் கூட்டுகிறான். சபையில் வீடணன் அறி வுரை சொல்கிறான்.”அண்ணா! இதுநாள் வரை உனக்கு அஞ் சிய தேவர்கள் இப்போது உன்னைக் கண்டு அஞ்சுவதில்லை

 

 

 

 

 

 

ஏன் தெரியுமா? சானகி என்ற கொடிய நஞ்சைத் தின்ற இந்த அரக்கர்கள் இனி பிழைக்கப் போவதில்லை என்ற தைரியம்

தான். இதை உன்னிடம் சொல்ல அஞ்சி அரக்கர்கள் இரவும் பகலும் உறக்கமில்லாமல் தவிக்கிறார்கள்.

 

துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன்பகலும்

நிற்சொல ஒல்கி,

நெஞ்சு நின்று அயரும் இந்நிருதர்

பேர் சனகி ஆம் நெடியதாய

நஞ்சு தின்றனர்கள் தாம் நண்ணுவர் நரகம்

என்று எண்ணி நம்மை

அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால்

சரண் இலா அமரர் அம்மா

 

சுடுதீ

சரணடைய வந்த வீடணனைச் சந்தேகிக்கிறார்கள் வானரர்கள். அனுமன் கட்டளைப்படி மயிந்தன் செல்கிறான். மயிந்தனிடம் வீடணனின் அமைச்ச னான அனலன், வீடணனின் நல்ல உள்ளத்தைப் பற்றிச் சொல்கிறான். வீடணன் ராவணனுக்குச் சொன்ன அறிவுரை களைச் சொல்கிறான். “அண்ணா! நெருப்பை அடிமடியில் வைத்துக் கொள்வதைப் போல் சுடுதீயாகிய கற்புக் கனலா கிய சீதையைச் சிறையில் வைத்திருக்கிறாயே. இதன் விளைவு என்னாகும்? நீ அழிவது திண்ணம்” என்றெல்லாம் பலவாறு வீடணன் அறிவுரை சொன்னான், என்கிறான்

 

”சுடுதியைத் துகிலிடைப் பொதிந்து, துன்மதி!

இடுதியே, சிறையிடை இறைவன் தேவியை,

விடுதியேல் உய்குதி, விடாது வேட்டியேல்

படுதி” என்று உறுதிகள் பலவும் பன்னினான்.

 

கும்பகர்ணன் சொல்லும்

திட்டியின் விடம்

வானரர்கள் கடலில் அணைகட்டி இலங்கைக்கு வந்து விடுகிறார்கள் இராம ராவண யுத்தம் ஆரம்பமாகிறது. முதல் நாள் போரில் அனைத்துப் படைகளையும் ஆயுதங்களையும் இழந்த ராவணனை ‘இன்று போய் போர்க்கு நாளை வா’ என்று அருள் செய்கிறான் ராமன்.

 

ஆனால் மறுநாள் ராவணன் போருக்கு வரவில்லை. கும்பகருணனைப் போருக்கு அனுப் பத் தீர்மானித்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்புகிறார் கள். எழுந்த கும்பகருணன் ’சீதையின் துயர் இன்னும் தீர வில்லையா? நான் சொன்னதைக் கருத்தில் கொண்டு கண் ணில் விஷமுள்ள பாம்பைப் போன்ற சீதையை இன்னமும் ராமனிடம் சேர்ப்பிக்க வில்லையா?’ என்று கேட்கிறான்.

 

”கிட்டியதோசெரு? கிளர் பொன் சீதையைச்

சுட்டியதோ? முனம் நான் சொன்ன சொற்களால்

திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை

விட்டிலையோ?

 

திட்டியின் விஷம் போன்ற சீதையால் ராவணன் மாளப் போகிறானே என்று வருந்துகிறான். ஆனால் செஞ்சோற்றுக்

கடன் கழித்து வீரமரணம் அடைகிறான்.

 

இலக்குவனால் இந்திரஜித் மாண்ட பின் மூலபலச் சேனைகளும் அழிந்து போகின்றன. ராவணன் மீண்டும் போர் செய்ய வருகிறான். வெகு பயங்கரமாக யுத் தம் நடக்கிறது. கடைசியில் இராமபாணம் இராவணனை வீழ்த்த அவன் வீரமரணம் எய்துகிறான்.

 

ராவணன் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட வீடணன் அழுது புலம்புகிறான். “பொதுவாக நஞ்சு உண்டபின் உயிரைப் போக்கும். ஆனால் ஜானகி என்னும் பெரு நஞ்சோ நீ அவளைக் கண்ணாலே கண்ட மாத்திரத்தி லேயே உன் உயிரைப் போக்கி விட்டதே!

 

“உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு;

சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்

கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்

நீயும் களப்பட்டாயே!

 

என்று அரற்றுகிறான். ‘அண்ணா! அன்று நான் சொன்னதை நீ உணரவில்லை. இப்போது எண்ணிப் பார்க்கிறாயோ” என்று கதறுகிறான்.

இப்படிப் பலரும் அவரவர் கள் பார்வையில் சீதையைப் பார்க்கிறார்கள் ஆனால் வீட ணன் சீதையை ”உலகுக்கு ஓர் அன்னை” எனவும் உணர்ந்தி ருந்தான். அதை ராவணனிடமும் சொன்னான். ஆனால் காம மயக்கத்திலிருந்த ராவணன் அதையெல்லாம் கேட்கும் மன நிலையில் இல்லை.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *