சுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை!

author
0 minutes, 1 second Read
This entry is part 12 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

பெலிக்ஸ் மேக்ஸிமஸ்

இந்தியா சென்ற வாரம் (சனிக்கிழமை 2015) தனது அறுபத்தொன்பதாவது சுதந்திர
தினத்தை கொண்டாடியது. அறுபத்தொன்பது ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம்.
இதுவரையில் என்ன செய்தோம் என்று கவலை கொள்வதா! இல்லை அறுபத்தொன்பது
ஆண்டுகளாக சுதந்திர காற்றை சுவாசித் துள்ளோம், இந்நாள் இந்திய
சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் பொன்னாள் என்று
மகிழ்வதா!. இல்லை இல்லை
அன்று தொலைக்காட்சியில் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம் இருந்தது,
திரைப்படம் கூட ஒளிபரப்பினார்கள் அன்று விடுமுறை நாள் என்று அறிவிப்பதா
?

உண்மையில் 1947ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது சாமான்ய
மக்களுக்கு சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்து இருக்குமா? அவர்கள்
ஷங்கரின் திரைப்படத்தில் வருவது போல் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்,
ஆனால் புரிதல் என்னவாக இருந்திருக்கும். என் பாட்டனுக்கு சுதந்திரம்
என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்பில்லை!. ஆதலால் தான் 1947ஆம்
ஆண்டு சுதந்திர தினத்தன்று ஆங்கிலேய வைஸ்ராய் “மவுண்ட்பேட்டன் பிரபு
வாழ்க !” என்றும் “பிரித்தன் அரசு வாழ்க!” என்றும் ஆனந்த
கூச்சலிட்டார்கள் எம் முன்னோர்கள்.

ஒரு காலனித்துவ இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த நாட்டின் மக்கள்,
தங்களை அடிமைப் படுத்திய அரசை பார்த்து இவ்வாறு கூறுவது என்பது உண்மையில்
நகைமுரண். சுதந்திரம் என்பது மவுண்ட்பேட்டனின் சட்டை பையில் இருந்த
ரூபாய் நோட்டு போலவும், அதனை அவர் ஒரு ஜமிந்தார் போல தனது மாளிகையின்
முகப்பிலிருந்து ஏழை இந்தியர்களை நோக்கி வீசி எரிந்தது போல அன்றைய
இந்தியர்கள் நினைத்துள்ளார்கள். அதனால் தான் மவுண்ட்பேட்டன்
பம்பாயிலிருந்து (இந்தியாவிலிருந்து) விடைபெறும் வேளையில் அங்கு ஒன்று
திரண்டு காணப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் அவரையும், அவருடன் புறப்பட்ட
பிரித்தானிய துருப்புக்களையும் பார்த்து “மவுண்ட்பேட்டன் பிரபு வாழ்க,
இங்கிலாந்து வாழ்க” என்று கூக்குரலிட்டார்கள். இதனை இப்பொழுது ஆய்வுக்கு
உட்படுத்தும் பொழுது, பிந்தைய காலனித்துவத்தின் யதார்த்த பண்பாக
தென்படுகிறது.
மவுண்ட்பேட்டன் அவர்கள் தனது குறிப்பில், “நிச்சயமாக ஆகஸ்ட் பதினைந்து
என் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க நாளாகவும், ஊக்கமளித்த
நாளாவும் மாறியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்கு பின் பிரித்தன் மிகவும் சிதைத்து போயிருந்தது.
ஆங்கிலேயர்கள் தங்களது காலனியாதிக்கத்தை தொடரா மனநிலையிலும், பொருளாதார
நெருக்கடியிலும் சிக்கித்தவித்தனர். அதிலிருந்து விரைவாக விலகி வெளியேற
விரும்பிய பிரித்தன் அரசு, அதற்கு சரியான தீர்வாக அதிகாரத்தை
மாற்றித்தரும் சிந்தனையை முன்வைத்தனர். அதன் விளைவாகத் தான் தங்களது
காலனி நாடுகள் ஒவ்வொன்றையும் விட்டு விலகி சென்று கொண்டிருந்தார்கள்.

அக் காலகட்டத்தில் தான் இந்திய பெருந்தலைவர்கள், கடைசி ஆங்கிலேய
வைஸ்ராயான மவுண்ட்பேட்டனிடம், “நீங்கள் தேதியை நிர்ணயித்து விட்டீர்களா
?” என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஆகஸ்ட் பதினைந்தை தேர்வு
செய்தார். ஆனால் ஏன் ஆகஸ்ட் பதினைந்து தேர்வு செய்ய வேண்டும். வேறு
தேதியினை தேர்வு செய்திருக்கலாமே. தேதியில் என்னய்யா இருக்கிறது,
சுதந்திரம் தர முடிவெடுத்தார்கள் அந்த நாள் ஆகஸ்ட் பதினைந்து என்று
முடிவு செய்திருக்கலாம், இது ஒரு தற்செயலானது என்று மேலோட்டமாக எண்ணிவிட
வேண்டாம். வேறு தேதியினை தீர்மானித்திருக்கலாம், ஆனால் குறிப்பாக ஆகஸ்ட்
பதினைந்தை தெரிவு செய்ததற்கு அரசியல் உள் நோக்கம் உள்ளது.
குறிப்பாக, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி 1945ஆம் ஆண்டு, இரண்டு அணு குண்டுகள்
மூலம் தூளாக்கப்பட்ட ஜப்பான் சரணடைந்த தினம். ஆகஸ்ட் 15ம் தேதி இரண்டாம்
உலகப் போரின் முடிவும் கூட. மேலும் மவுண்ட்பேட்டன் பிரபு தனிப்பட்ட
முறையில் இந்த நாளை தேர்வு செய்ததற்கு காரணம் இருக்கிறது. மவுண்ட்பேட்டன்
அவர்கள் ஜப்பானியர்கள் சிங்கப்பூரில் சரணடைந்த பொழுது தென் கிழக்கு
ஆசியப் படையின் தலைமை கூட்டுப்படைகளின் தலைவராக இருந்தார். இரண்டாம்
உலகப் போரில் மண்டியிட்ட ஜப்பானியர்கள், ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து
அன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றிருந்தது. ஜப்பானில்
காலனியாதிக்கத்தில் இருந்த தென் கொரியாவிற்கும் அளிக்கப்பட்ட அதே தினத்தை
நமக்கும் தேர்வு செய்தார் அவர். இரு நாடுகளிலும் மறைமுகமாக ஒரே நிகழ்வை
குறிக்கின்றன. அது ஜப்பானின் வீழ்ச்சி மற்றும் பிரித்தனின் வல்லமை
என்பதே. இது தற்செயலானதா ? இல்லவே இல்லை.

பிரித்தன் அரசு தன் காலனி நாடுகளை விட்டு விலகிச் செல்லும் பொழுது தன்
வெற்றியாகவே நினைவில் கொள்ள விரும்பியது. அதன் காரணமாகவே ஆகஸ்ட் 15ஐ
தேர்வு செய்தார்கள். பிரித்தனை பொருத்த மட்டில் அது இந்தியாவின் விடுதலை
நாள் அல்ல ஜப்பானியர் மண்டியிட்ட தினம். இரண்டாம் உலகப் போரில் பெரும்
சேதமடைந்தது ஜெர்மனியாக இருந்த போதிலும், அது பிரித்தன் அரசிற்கும்
பெரும் சேதத்தை விளைவித்தது. இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி
பெற்றிருந்தாலும் பொருளாதார ரீதியாக தோல்வி கண்டிருந்தார்கள்.
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய பிரித்தனின் போக்கு, பெருமளவில் இந்திய
அரசியல் சுயாதீனத்தை தீவிரமாக்கியது. காந்தியின் காங்கிரஸ் இயக்கம்
மெதுவாக தோல்வி கண்ட காலகட்டம் அது. அன்றைய காலத்தில் ஹிட்லர்
தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால், இரண்டாம் உலகப் போர் நிகழாமல்
இருந்திருந்தால் இந்தியா முழுமையான சுதந்திரம் பெறுவதற்கு இன்னும் பல
தசாப்தங்கள் எடுத்து இருந்திருக்கும்.

மறைமுகமாக ஹிட்லர் இந்திய சுயாதீனத்திற்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் பிரித்தானிய பேரரசை திவாலான ஒரு நிறுவனமாக
மாற்றினார். நிச்சயமாக மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் ஒரு பொருட்டாக
நினைக்கவில்லை. 1930 களில் வெகுஜனங்களின் மத்தியில் காந்தியின்
செல்வாக்கு கணிசமான
அளவிற்கு குறைந்திருந்தது. நீங்கள் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்
குறிப்பிட தகுந்த அளவில் சுதந்திரத்தை நோக்கி காந்தியின் காங்கிரஸ்
இயக்கம் தீவிரம் காட்டவில்லை என்பது தெளிவாக தெரியும். அநேகமாய்
யதார்த்தத்தில், காந்தியின் காங்கிரஸ் இயக்கமானது, இந்தியாவிற்கு
சுதந்திரத்தை எவ்வாறு பெற்றுத் தருவது என்ற குழப்பத்தில் இருந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தான் சுபாஷ் சந்திர போஸ், பண்டிதர் ஜவஹர்லால்
நேருவுடன் இணைந்து பூரண சுயாட்சி பற்றி முதன் முறையாக முன் மொழிந்தார்.

சுபாஷ் சந்திர போஸ், காந்தியை முதன் முதலாக 1921ஆம் வருடம்
சந்திக்கிறார். அப்பொழுது அவர் குவியல் கேள்வியாக காந்தியிடம் கேள்வி
மீது கேள்வியை தொகுக்கிறார். சுபாஷ் தான் கேட்ட கேள்விகளை பற்றி
கூறுகையில், “முதல் கேள்விக்கான பதில் எனக்கு திருப்தி அளித்தது.
இரண்டாவது கேள்விக்கான பதில் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. மூன்றாவது
கேள்விக்கான பதில் சுமாரானதாக கூட இல்லை” என்கிறார் அவர். காந்தியுடனான
முதல் சந்திப்பு சுபாஷின் சிந்தனையை தெளிவு படுத்தியது, அது யாதெனில்,
காந்தி தனது எதிர்கால அரசியல் திட்டங்களில் வருந்தத்தக்க வகையில்
தெளிவற்ற தன்மையுடன் இருந்துள்ளார் என்பதே. பிரச்சாரத்தின் அடுத்தடுத்த
படிகளைப் பற்றி எந்த ஒரு தெளிவான யோசனையையும் அவர் கொண்டிருக்கவில்லை.
ஆனால் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினார் மாறாக இலக்குகளை
தீர்மானிக்கவில்லை. இதனை சுபாஷ் 1921 ஆம் ஆண்டு முதல் சந்திப்பின் போது
புரிந்து கொண்டார். அச் சந்திப்பு அவருக்கு புது இலக்குகளையும்,
திட்டங்களையும் வகுக்க காரணமாக இருந்தது.

இந்தியாவிற்கு வருங்காலங்களை தீர்க்க தரிசனத்துடன் பார்க்க முனைகின்ற
தலைவர் தேவை. அது சுபாஷ் சந்திர போஸிடம் மட்டுமே இருந்தது. மகாத்மா
காந்தியிடம் காணப்படவில்லை. அது பிரிவினையின் போது அவர் எடுத்த
முடிவுகளில் உள்ள தெளிவின்மையை, தெளிவாக உணர்த்தியது. பஞ்சாப் பிரிவினை,
நிலவரத்தை மேலும் மோசமடையச் செய்யும் என்பது பிரித்தனுக்கு நன்கு
தெரியும். ஆனால் அவர்கள் தங்களின் ஆளுமைக்கு கீழ் இத்தகைய அசம்பாவிதம்
நிகழக்கூடாது என்று விரும்பினர். அதன் காரணமாக ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி
எல்லைக் கோடுகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அதனை வெளியிடாமல் ரகசியம்
காத்தது பிரித்தன் அரசு.

அப்போதைய பஞ்சாப் கவர்னரான இவான் ஜென்கின்ஸ், மவுண்ட்பேட்டனிடம்
பஞ்சாபின் எல்லை வரைபடத்தை வெளியிடுங்கள் என்றார். அதன் மூலம் மக்கள்
தாங்கள் விரும்பிய பிராந்தியத்தில் வாழவும், புலம் பெயரவும் அமைதியான
முறையில் முன்கூட்டியே எச்சரிக்க அவர் விரும்பினார். மேலும்,
ஆங்கிலேயர்களின் ஆளுமைக்கு கீழ், இடம்பெயர்தலுக்கு விரும்பிய எவரும்
விரும்பிய இடங்களுக்கு இடமாறலாம் அதுவே அமைதியை கட்டுப்பாட்டிற்குள்
வைக்க ஒரு வழி என அவர் எண்ணினார். ஆனால் அதனை பிரித்தன் அரசு ஏற்க
விரும்பவில்லை. பஞ்சாபிகள் தாங்கள் எந்த இராஜ்ஜியத்தின் கீழ் இருப்பது
என்ற பொருள் பற்றி விவாதிக்க விரும்பினர். அதே சமயம், வரைபடத்தை
வெளியிடாமல் இருப்பது பெரும் குழப்பத்திற்கு இட்டுச்செல்லும் என்று
மவுண்ட்பேட்டனை முற்றுகையிட்டனர். இதனை சர் சிரில் ராட்க்ளிஃப் எல்லைக்
கோட்டை தீர்மானித்த பின் விவாதத்திற்கு உட்படுத்தி
இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டனர். இந்திய
பெருந்தலைவர்களும் இதனை எதிர்த்து பெரியதாக கேள்விகளை எழுப்பவில்லை.
விரைந்து இந்திய சுயாதீனத்தில் கையெழுத்திடுவதில் மட்டுமே அதிக அக்கரை
காட்டினார்கள்.

ஆனால் பிரித்தனின் ராஜதந்திரம் வேறு மாதிரியாக இருந்தது. பிரித்தன்
வெளியேறிய பின்னரே அங்கே இனக் கலவரங்கள் நிகழ்ந்தது என்று வரலாற்றை
திருத்த முயற்சி மேற்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். அதனால் தான்
சுயாதீனத்தில் கையொப்பமிட்ட பின்னர் பிரிவினை வரைபடத்தை வெளியிட்டார்
மவுண்ட்பேட்டன்.

ஒரு பிரிவினையின் போதும், பிரிவினைக்கு பின்னும் பிரச்சனை நிகழுமா என்பதை
பற்றி எங்களுக்கு தெரியாது. இது போன்ற விவரங்களை நாங்கள் இதுவரை
அறிந்ததில்லை என்று பிரித்தன் கூற இயலாது. உலகை தன் காலனியாதிக்கத்தில்
வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு இதை பற்றி தெரியாமல் இருக்காது என்று
அப்பொழுது இருந்த இந்திய பெருந்தலைவர்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும்
ஏன் அவர்கள் இப்படி ஒரு குழப்பமான சூழலை உருவாக்குவதில் துணை
நின்றார்கள். எப்படியோ தங்கள் ஆளுமைக்கு கீழ் இந்தியாவிற்கு விரைவாக
சுதந்திரம் கிடைத்தால் போதும் என்று மிகவும் சுயநலமாக செயல் பட்டனர்
என்றே கூற வேண்டும்.

பஞ்சாப் இன அழிப்புக்கு முக்கிய பங்கு வகித்தது பிரித்தன் தான். அவர்கள்
மிகவும் சாதுர்யமாக செயல் பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் செயல்படுவது
முடிவுக்கு வந்துவிட்ட பின்னரே படுகொலைகள் அரங்கேறியது என்றே வரலாற்றை
எழுதினர். இதனை மவுண்ட்பேட்டன் பிரபு தனது கடிதத்தில் மிகவும் தெளிவாக
பதிவு செய்துள்ளார். “அனைத்தையும் சேர்த்து, நாம் வெளியீட்டை
ஒத்திவைத்ததன் மூலம் அது இன்னும் தெளிவாக உள்ளது, நம் மீது வெறுப்பு
வராமல் போவதை தவிர்க்க முடியாததாக செய்தாயிற்று” என்று
குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் ஒரு தேசத்திலிருந்து புலம் பெயரும் பொழுது அங்கு
அவர்களுக்கு எதிரான விரோதப் போக்கே மேலோங்கி இருக்கும்.
மவுண்ட்பேட்டன் எதிர்பார்த்தது போலவே பஞ்சாபில் ஏற்பட்டுள்ள பீதி
அதிகரித்து, அது பெருமளவில் படுகொலைகள் நிகழ காரணமானது.

ஒரு நாடு இரண்டாக பிரிக்கப்படும் பொழுது, அதிலும் முக்கியமாக
சிறுபான்மையினர் புலம்பெயர்ந்து செல்லும் பொழுது, அரசங்கத்தின் கீழ்
மிகவும் பாதுகாப்பாக இடம்பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் வரலாற்றில்
நிகழ்ந்ததோ வேறு. பஞ்சாபிலும் சரி, வங்காளத்திலும் சரி நிகழ்ந்த அனைத்து
இனப் படுகொலைகளும் பெருந்தலைவர்களால் முன்னதாகவே யூகித்திருக்க கூடும்.
ஆனால் அவர்களுக்கு அதன் மீது அக்கறை இருந்ததாக தெரியவில்லை. வரலாறுதான்
முக்கியமாக பட்டது, அவர்கள் நமக்காக போராடி வாங்கி தந்த சுதந்திரம்
என்பதே அது. மகாத்மா, இக்காலகட்டங்களில் ஒரு மகாத்மாவாக நடந்து
கொள்ளவில்லை.
சீத்தாராமையாவை தோற்கடித்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக சுபாஷ் சந்திர
போஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, இயக்கத்தை விட்டு வெளியேறும் படி
சுபாஷ் சந்திர போஸுக்கு ஆணை பிறப்பித்தார் காந்தி. சீத்தாராமையாவை
தோற்கடித்தது தன்னை தோற்கடித்ததற்கு சமம் என்றே அவர் நினைத்தார். இதனை
பகிரங்கமாகவும் அறிவித்தார் காந்தி.
காந்தி சுபாஷிடம் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். இந்த போக்கை அவர்
ஆங்கிலேயர் மேல் காட்டி இருக்கலாம். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தின் போது காந்தி அவர்கள் முழங்கிய செய் அல்லது செத்துமடி என்ற
கோஷத்தை, 1938ஆம் வருடம் காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாக காங்கிரஸ்
தலைவராக சுபாஷ் தேர்தெடுக்கப்பட்ட பொழுது அவர் முன் வைத்ததாகும். ஆனால்
பிரித்தன் அரசு காங்கிரஸின் மூத்த தலைவர்களை 1942ல் கைது செய்து உள்ளே
அடைத்ததன் மூலம் ஒரு மாதத்திற்குள்ளாகவே அப்போராட்டம் பெருந்தோல்வியை கண்டது.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவால் தான் சுதந்திரம் உதித்தது
என்பது தவறான கருத்து. உண்மையில் இந்தியாவிற்கு சுதந்திரம் பதினான்கு
ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. முதல் உலகப்
போரின் போது ஜெர்மனியிடமிருந்து ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம் நாட்டை
விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் தந்து உதவ தயாராக இருந்தனர்,
ஜெர்மானியர்கள். இதை மனதில் வைத்து, இரண்டாம் உலகப் போரின் போது
பயன்படுத்தும் முயற்சியாக தான் ஹிட்லரை சந்தித்தார் சுபாஷ். எதிரிக்கு
எதிரி நண்பன் என்ற முறையில் ஜப்பானியர்களுடன் கைகோர்த்தார் சுபாஷ்.

சுபாஷ் சந்திர போஸ் பிரித்தனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
இருப்பினும் ஜப்பானியர்களின் தோல்வி அவரையும் தோற்கடிக்கச் செய்தது.
ஜப்பானியர்களின் தோல்வி, சுபாஷின் தோல்வி இரண்டும் இரட்டையர்களின் தோல்வி
என்று கூறலாம். ஜப்பானியர்களின் இரண்டாம் உலகப் போரின் சரணடைந்த தினமான
அந்த நாளை, சுபாஷ் மற்றும் ஜப்பானியர்களின் தோல்வியுண்ட நினைவு நாளாக
பிரித்தன் பார்த்தது. அதன் காரணமாக ஆகஸ்ட் பதினைந்து தேர்வு
செய்யப்பட்டது. பிரித்தனை மூர்ச்சையுடன் எதிர்த்த சுபாஷும் இப்பொழுது
இல்லை, இப்பொழுது தங்களை வலுவுடன் எதிர்க்கவும் ஆளில்லை, பின் எதர்க்காக
இந்தியாவிற்கு சுதந்திரம் தர வேண்டும்.

பொருளாதர நெருக்கடியில் சிக்கியிருக்கும் பிரித்தனுக்கு, இனி இந்திய
சிப்பாய்களை கொண்டு தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவது என்பது
பொருளாதார ரீதியாக கடினமான செயலாக இருந்தது. இதனால் சிப்பாய்களின்
விசுவாசத்தை பிரித்தன் அரசு இனி சார்ந்திருக்காது என்ற முடிவிற்கு
வந்தது. மேலும் விசுவாசமான சிப்பாய்களின்றி இந்தியாவை அவர்களின்
ஆளுமைக்கு கீழ் கொண்டு வர இயலாது என்றும் நினைத்தனர். தேசிய
இயக்கத்திற்கு எதிரான எழுச்சிகளை அடக்க போதுமான ஆங்கிலேயர்களை
இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதும் கடினம் என்பதையும் அவர்கள்
அறிந்திருந்தனர். அதுவும், அவர்கள் இந்தியாவை விட்டு கிளம்ப காரணமாக
இருந்தது. கவர்ந்திழுக்கும் தலைவர்களில் சுபாஷ் சந்திர போஸும்,
காந்தியும் முதன்மையாக இருந்தாலும், பெருமதிப்பிற்குரிய தலைவராக மகாத்மா
காந்தியை தெரிவு செய்தனர். ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் வரலாறு
மிகவும் முக்கியம் என்பது. சுபாஷ் சந்திர போஸ் நிராகரிக்கப்பட்டதற்கு
வரலாறே காரணம். ஆங்கிலேயர்கள் அடிவாங்கி ஓடியவர்கள் அல்லர் இரக்க குணம்
உடையோர், கேட்பதை அள்ளிக் கொடுக்கும் கரும பிரபுக்கள் என்ற வரலாறை எழுத
முனைந்தனர். சுபாஷிடம் சுதந்திரத்தை கொடுப்பதை விட காந்தியிடம்
கொடுக்கும் பொழுது அது விட்டுக் கொடுத்ததாக பார்க்கப்படும். நாங்கள்
கொடுத்தோம் அவர் பெற்றுக் கொண்டார். அல்லது அவர் சாத்வீகமான முறையில்
கேட்டார் ஆதலால் தந்தோம். இது எம்முடைய பெருந்தன்மையின் ஒரு பகுதியாகும்
என்று உலகிற்கு பறைசாற்றலாம்.
பிரித்தானிய பிரதமர் கிளமெண்ட் அட்லீயின் கருத்தாக, கல்கத்தா உயர்
நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னால் (தற்காலிக) மேற்கு வங்காளத்தின்
ஆளுனருமான P.B. சக்ரபர்தி கூறுகையில், “இந்தியா சுதந்திரமடைந்த பின்
அட்லீ பிரபு, இரண்டு நாட்கள் கல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் என்னுடன்
இருந்தார். அப்பொழுது அவருடன் நீண்ட நேரம் விவாதத்தில் உண்மையான காரணிகள்
குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏன் இந்தியாவை விட்டு
ஆங்கிலேயர்கள் வெளியேறுகிறார்கள் என்று கேட்டேன்” என்றும், மேலும்
“ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு காந்தியின் தாக்கம் எந்த
அளவில் இருந்தது என்ற கேள்விக்கு நீண்ட நேரம் கேலியாக புன்னகைத்து
விட்டு, அக்கேள்விக்கான பதிலாக, குறைந்தளவே என்று உதட்டை பிதுக்கி
பதிலளித்தார்
அட்லீ” என்பதாக P.B. சக்ரபர்தி கூறுகிறார்.

நிச்சயமாக காந்தியின் அகிம்சை இயக்கம் பிரித்தனிடம் எந்த தாக்கத்தையும்
ஏற்படுத்தவில்லை. மகாத்மா சுதந்திரத்திற்காக போராடினார் என்பதில் மாற்று
கருத்தில்லை. இருப்பினும் அன்றைய காலகட்டத்தில் பிரித்தன், தனது காலனிகளை
விலகிக் கொள்ள தயாராக இருந்தது. அவர்களாக விலகி செல்லும் முன்னர் நாம்
பெற்றதாக இருக்க வேண்டும் என்றே இந்திய பெருந்தலைவர்கள் எண்ணினர். தமது
போராட்டத்திற்கும், தாம் சிந்திய இரத்தத்திற்கும் பலன் வேண்டாமா ? என்று
எண்ணியதாகப் படுகிறது. அதன் காரணமாக, அவசரம் அவசரமாக செயல்பட்டதன்
விளைவு, அன்றைய பிரிவினையின் போது மக்கள் தங்களின் இரத்தத்தை சிந்த
வேண்டியதாயிற்று. இரத்தம் சிந்திய பெருந்தலைவர்களுக்காக அவர்களுடன்
போராடிய மக்களுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வங்காள
மக்களும் பஞ்சாபியரும் தங்களது இரத்தத்தை, இம் மண்ணிற்கு காணிக்கையாக்கி
இருக்கிறார்கள். இந்திய பெருந்தலைவர்களும், சுயாதீனத்திற்காக தங்களது
பிள்ளைகளை பலி இட்டுள்ளனர். அன்றைய தேதியில் 1947ஆம் ஆண்டு பஞ்சாபிலும்,
வங்காளத்திலும் வாழ்ந்த அனைவரும் தியாகிகளே அவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி
இரத்தமும், இன்று நாம் சுதந்திரமாக சுவாசிக்க உதவுகிறது என்பது மிகவும்
வேதனை கலந்த உண்மை. அன்று வாழ்ந்த ஒவ்வொரு இந்தியனுக்காகவும், இந்த
சுதந்திரத்தை கொண்டாடுவோம். பாரத தாய் நீடூழி வாழ்க !

– பெலிக்ஸ் மேக்ஸிமஸ்

Series Navigationசுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதிஅதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *