சும்மா வந்தவர்கள்

Spread the love

எப்போதோ பார்த்தவர்களெல்லாம்

எதிர்பாராது வந்து போகிறார்கள்

இப்போது.

திருட்டுக் குற்றம் சாட்டின

பழைய ஊரின்

பக்கத்துவீட்டுக்காரர்

பிரியவே மாட்டோம்

எனச் சத்தியம் செய்து

பின்

காலச் சூழலில்

பிரிந்துபோன

பள்ளி நாட்களின்

இணைபிரியா நண்பர்கள் எனப்

பழகியவர்கள் மட்டுமில்லாது

கண்களால் மட்டும்

பேசிக்கொண்டிருந்த

ரகசியக் காதலிகள் கூட

எதிர்பாராது வந்து

பேசிப் போகிறார்கள்.

வந்து பார்த்ததும்

பேசிப்போனதுமே

பழகிய பாசம் தந்த

பெரிய பரிசென்றிருக்கும்

அக்காவுக்கு

அமெரிக்க சித்தப்பா

வெறுங்கையோடு

சும்மா வந்தது மட்டும்

பிடிக்கவேயில்லை.

— ரமணி

Series Navigationஆலமரத்துக்கிளிகள்மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்