சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்

 

ப.கண்ணன்சேகர்

திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க
தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்!
விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி
வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்!
தரைதட்டா கப்பலென  திரையுலக வாழ்விலே
தரமிக்க படங்களை  தந்திட்ட உழைப்பாற்றல்!
நரைத்திட்ட வயதிலும் நயாகரா நகரத்தின்
நல்லாட்சி தந்தையென நடத்திய சிறப்பாற்றல்!

விடுதலை தியாகிகளின் வீரத்தைக் நேரிலே
வெண்திரையில் காட்டிய வெற்றிமகன் சிவாஜி!
மிடுக்கென தோற்றத்தில் மெருகேற்றும் பாத்திரங்கள்
மிளிர்ந்திட திரையிலே மீட்டியவர் சிவாஜி!
அடுக்குமொழி வசனங்கள் அழகுடன் பேசியே
அன்னைதிரு தமிழினை அலங்கரித்தார் சிவாஜி!
கொடுத்திடும் வேடத்தை குலையாமல் நடித்திடும்
கூர்மதி சிந்தனையைக் கொண்டவர் சிவாஜி!

பெரியாரின் மனங்கவர்ந்த பேரரசர் சிவாஜியின்
பெயரினை சூட்டிட  பெருமையைக் கண்டவர்!
சிரித்தாலும் அழுதாலும் சிறந்ததொரு நடிப்பினை
செறிவாக வெளிப்படுத்தும் சிறப்பினை கொண்டவர்!
தரித்திடும் வேடங்கள்  சரித்திர உயிரோடு
தங்கிடும் மன்ங்களில் தடத்தினை பதிப்பவர்!
மரித்தாலும் தரணியிலே மறையாத புகழோடு
மண்ணிலே நிலைத்திடும் மாபெரும் கலைஞனவர்

-ப.கண்ணன்சேகர், திமிரி. பேச – 9894976159.

Series Navigationகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்ஆண் மரம்