சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி

jeyakanthan

18.4.2015 சனிக்கிழமை வடபழனி பேருந்து நிலையம் எதிரில் ஆர்கேவி அரங்கம் என்னும் “ப்ரிவியூ தியேட்டரில்” ஜெயகாந்தனுக்கு நினைவில் நிற்கும்படியான ஒரு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

 

எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கேகே நகரின் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. கவிதா பப்ளிகேஷன்ஸ் சொக்கலிங்கம் ஜெயகாந்தனின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடத் தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவருடன் பழகிய நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். சா.கந்தசாமி சாகித்ய அகாதமியில் ஏழு ஆண்டுகள் முயன்று ஜெயகாந்தன் மீது ஆவணப்படம் தயாரிப்பதில் தாம் வெற்றி கண்டதைக் குறிப்பிட்டு ஜெகே பள்ளிக் கல்வி இல்லாமல் படித்தும் வாழ்க்கையிலிருந்து நிறையவே கற்றுத் தேர்ந்தவர் என்பதைச் சுட்டிக் காட்டினார். ரவி சுப்ரமணியம் இளையராஜாவின் தயாரிப்பாக ஜெகேவை ஆவணப் படம் எடுத்தவர். அவருக்கு பல நினைவுகள்.”நீங்கள் மிகவும் கோபக்காரராமே?” என்ற கேள்விக்கு ஜெகே ” சரியான காரணத்துக்காகக் கோபப்படுவதில் என்ன குறை இருக்கிறது” என்று எதிர்வினையாற்றியதை நினைவு கூர்ந்தார். “அந்தி மறைந்த நேரம்” என்னும் பாடலை ஜெகே முன்பு பாடிய நினைவில் மீண்டும் நம்முன் பாடினார் ரவி .நெஞ்சைத் தொட்டது.

 

இடதுசாரித் தலைவர்கள் இருவர் அஞ்சலி செலுத்தினார்கள். செம்மலர் ஆசிரியர் சா.பெருமாள் ஜீவா காலத்திலிருந்து ஜெகேயுடன் பணியாற்றிய காலங்களைக் குறிப்பிட்டார். அரசியல்வாதிகளில் மானுடம் மேம்பட என்றுமே பாடுபட்ட அரசியல்வாதியாக ஜெகேவை அவர் கண்டார். மகேந்திரன் பேசும் போது கட்சி அலுவலகத்தின் ‘கம்யூனில்’ தமது பொது வாழ்வை ஜீவாவுடன் 13 வயதிலேயே அவர் துவங்கியதே அவரது தனித்தன்மைக்கும் போர்க்குணத்துக்கும் காரணமென்று துவங்கினார். பதினைந்து ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டு வந்த நல்லகண்ணு மிகவும் மன இறுக்கத்துடனேயே வெளிவந்தார். அப்போது ஜெகேயின் சிறுகதைகளே அவரை அவருக்கே மீட்டுத் தந்தன. மகேந்திரன் கம்யூனிஸ்டுகளுக்கு ஜனநாயக வழி முறைகளின் தேவையை முன்னாளிலேயே கண்ட தீர்க்கதரிசி ஜெகே என்று குறிப்பிட்டது சுயவிமர்சனம் செய்யுமளவு கம்யூனிஸ்ட்கள் வெளிப்படைத் தன்மை கொண்டிருப்பதைக் காட்டியது.

 

சினிமா இயக்குனர் வா.கௌதமனின் அஞ்சலி மிகவும் வித்தியாசமாக அமைந்தது. ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ நாவலைக் குறும்படமாக எடுக்க அவரை சந்தித்தில் தொடங்கி, அந்தப் படம் திரையிடப்பட்ட போது கோவைக்கு அவருடன் சென்று வந்த பயணத்தை மிகவும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். கௌதமன் சீமான் போல தமிழீழத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர். அதைத் தாண்டி அதை விமர்சிக்கும் ஜெகேவை ஒரு ஞானத்தந்தையாக அவர் நேசிக்கிறார். தமது போர்க்குணமும் நிமிர்ந்து நிற்கும் பலமும் ஜெகேவிடமிருந்து தமக்கு வந்தவை என்று குறிப்பிடுகிறார். ‘உன்னைப் போல் ஒருவனை ஜெகே மீண்டும் படமாகத் தன்னை இயக்கும் படி பணித்தும் தாம் அதை முடிக்காமல் போனதற்காக மிகவும் வருத்தப் பட்டார். கோவையிலிருந்து திரும்பிய போது செண்டரல் ரயில் நிலையத்தில் வெகு நேரம் பயணிகளை அவதானித்த படியே இருந்த ஜெகே “மனிதர்களை, மனித முகங்களை ஒரு படைப்பாளி படிக்க வேண்டும்” என்று ஜெகே அழுத்தம் திருத்தமாக கூறியதை நிறைவாகக் குறிப்பிட்டது மனதில் தைத்தது.

 

கூட்டம் துவங்கும் முன் ஜெகேவின் ‘குருபீடம்’ சிறுகதை நாடகமாக அரங்கேறியது. குறுகிய காலத்தில் எழுதப்பட்டு பயிற்சி இல்லாத கலைஞர்களை வைத்து நடத்தப் பட்டாலும் அந்த முயற்சியின் அர்ப்பணிப்பு பாராட்டுப் பெறுகிறது.

 

“உன்னைப் போல் ஒருவன்” திரைப்படத்தைத் திரையிட்டபின் கூட்டம் நடத்த எண்ணியிருந்தார் எஸ்.ராமகிருஷ்ணன். பிரதி கிடைக்கவே இல்லை என்று குறிப்பிட்ட போது நமக்கும் மிகவும் வருத்தமே. பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் அடையாளம் ஜெயகாந்தன். சுய இரக்கம் இல்லாத பதிவுகள் ஜெகேவின் எழுத்து. கஷ்டம் துன்பம் வலி இவற்றை வென்று மேலும் பலம் பெற்ற ஆளுமை அவர். புதுமைப்பித்தனைத் தம் முன்னோடியாக ஜெகே கருதினார். விந்தன் மட்டுமே ஜெகேவின் தலைமுறையில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதியவர். பிற பேச்சாளர்கள் குறிப்பிட்டது போலவே ‘சபா”வில் ஜெகேயின் நட்பிலிருந்தவர்களைக் குறிப்பிட்ட எஸ்.ரா. அவர்கள் கண்ணில் நீர் ததும்பினாலும் மனம் விட்டு அழவில்லை என்றார். ஜெகேவுக்கு அது பிடிக்காது என்பதே காரணம். பாரதி காலத்தைப் போலவே ஜெகேவின் இறுதி ஊர்வலத்தில் எண்ணிக்கை மிகக் குறைவு என்று உணர்ச்சி ததும்பக் குறிப்பிடார் எஸ்.ரா. ஆனால் 500 அமரும் அந்தக் அரங்கம் நிரம்பி வழிந்தது. கண்டிப்பாக இன்றைய தமிழ் வாசகன் சோடை போகவில்லை ராமகிருஷ்ணன்!

Series Navigationவீடு பெற நில்!ஜெமியின் காதலன்