ஜல்லிக்கட்டு – ஒரு தொடக்கமா…………..?

இரா.ஜெயானந்தன்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இளைஞர்கள்- மாணவர்கள் ( மாணவிகள் உட்பட), சமூக வெளிக்கு வந்து, ஒரு சமூக நோக்கத்துடன், போராட்ட களத்தில் இறங்கி, ஒற்றுமை உணவுர்வுடன், “ஜல்லிக்கட்டு என்ற, அடையாளத்தை அடைவதற்கு கூடியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு செழிப்பான, அரசியல் பார்வை கிடைக்கலாம் என எண்ண தோன்றுகிறது.

“இந்தி எதிர்ப்பு” என்ற ஒரு மொழிக்கொள்கையை, கையில் எடுத்துக்கொண்டு, அன்று திமுக , ஒரு அரசியல் பார்வையோடு, அதனை, பல வழிகளில் செலுத்தி, அதன் மேல்,பார்ப்பன, கீழ்- மேல் சாதி என்ற வாகையெல்லாம் சூடி, எழுச்சி மிக்க பேச்சாலும், எழுத்தாலும், தூங்கிக் கிடந்த, தமிழனை, தட்டி எழுப்பி, பல போரடங்களை நடத்தி, காங்கிரஸ் என்ற ஆலமரத்தை சாய்த்து, காமாராசர் போன்ற நல்லவர்களையெல்லாம் இந்த நாடு மறந்த வரலாறு நம்க்கு தெரிந்த செய்தியே !

இன்று, தமிழமெங்கும், ஜல்லிக்கட்டு அலை வீசுகின்றது. இதனை நடத்துகின்ற மாணவ- இளைஞர்களிடேயே, இன்னும் அரசியல் புகவில்லை, தலைவன் உருவாகவில்லை, கொடியில்லை, வசூல் இல்லை, இசம் ஒன்றுமில்லை.

இவர்கள் எதிர்ப்பது பீட்டா எனற ஒரு பன்னாட்டு அமைப்பு, இவர்கள் அடையாளத்தை தடுத்ததால், ஒரு கோபத்தில் வெளிக்கிளம்பி, அதுவே அவர்களுக்கு இன்றைய நாட்டின் நிலைமையினையும், தமிழக அரசியல்வாதிகளின் சாயங்களையும் புரிய வைத்துள்ளது.

இளைஞர் – மாணவர்கள் ஒருவித மயக்க உலகில் ( அதாவது போதை, டிவி,சினிமா, கம்யூட்டர்,கிரிக்கெட்,பெணகள் , மேல்நாட்டு மோகம்) இருப்பதாக, அரசியல்வாதிகள் நினைத்துக்கொண்டிருந்தது, தவறான கண்ணோட்டம் என்று அவர்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு மாணவர்களுக்கு, எந்த அரசியல்வாதியும் அருகே வரவேண்டாம்;எந்த சினிமா முகங்களும், பக்கத்தில் சொம்பு அடிக்கவேண்டாம்; எந்த சாதிய அமைப்பும், குடை பிடிக்க வேண்டாம், என்ற கொள்கையோடு இருப்பதாக கூறுகின்றனர். இது நல்ல அறிகுறியாக தெரிந்தாலும், ஒரு அரசியல் பார்வையில்லாமல், எந்த ஒரு சமூக கொள்கையும் வெற்றி பெற முடியாது என திருமாவளவன் கூறுகின்றார்.

சோறு-தண்ணி மறந்து, எந்தவித அடிப்படைவசதியும் இல்லாமல், மெரினாவிலும், தமுக்கம் மைதானத்திலும், வ.உ.சி.பூங்காவிலும், மற்றும் பல இடங்களில், இந்த மாணவ பட்டாளம் பரவிக் கிடக்கின்றது. சில தொண்டு நிறுவனங்களும், நண்பர்கள் உதவியாலும் நாட்கள் நகர்ந்து கொண்டே செல்கின்றது. மாநில் அரசு, மத்திய அரசின் உதவியை நாடியது. மத்திய அரசோ உயர்நீதி மன்றத்தைக்காட்டுகின்றது.

மாநில அரசு செய்வதறியாமல் தவிக்கின்றது.

இந்த மாணவ- இளைஞர்களின் எழுச்சி எண்ணங்களயும்,அவர்களின் உறுதியையும், சாதரண- நடுத்தர வர்க்கம் பாரட்டுகின்றுது. பல தனியார் நிறுவனங்கள், இந்த நாட்டின் மேல், உணமையான வளர்ச்சியில், ஆரோக்கியமான அரசியலில் அக்கறையுள்ளவர்கள் பாராட்டி, உதவ தயாராக உள்ளனர்.

நேற்றைய பேட்டியில், ஒரு மாணவர் கூறுகின்றார்,” நாங்கள் இங்கு தன்னிச்சையாக கூடி, ஒரு இழந்து போன அடையாளத்தை மீட்கதான், அமைதியான முறையில் போராடி வருகின்றோம்.

ஒரு பிரியாணி பொட்டலகத்திற்காகவோ, 200 ரூபாய்க்காகவோ,கூடின கூட்டமில்லை.

நாங்கள் களமிறங்கி விட்டோம். இனி, நாங்கள் விவசாய பிரச்சினை பற்றியும் பேசுவோம், காவிரி நதிநீர் பங்கிட்டைப்பற்றியும் பேசுவோம். நாங்கள் ஓட்டு போட்டு உங்களை உட்கார வைத்துவிட்டு, படும் அவஸ்தை சொல்லி மாளாது.

நீங்கள், இனி எங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்”.

அவருடைய ஆவேசம், இந்த மனித சமூகத்தின் ஆவேசம்தான்.

மற்ற மாநிலத்தை சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு மக்கள் பிரச்சினை என்றாலோ, சமூகப்பிரச்சினை என்றாலோ எல்லாக்கட்சிகளும் ஒன்று கூடி, மத்திய அரசாங்கத்தின் பார்வையை திருப்பி, அதற்கு ஒரு தீர்வையும் எட்டுகின்றது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அந்த எண்ணமெல்லாம் கிடையாது, தனது கட்சியின் சுயலாபத்திற்காக மக்களையே தூக்கி போடும் அரசியல்வாதி எங்களுக்கு வேண்டாமென இவர்கள் கூறுகின்றார்கள்.

இந்த ஆவேசமும், கோபமும், சிந்தனையும் தேர்தல் நேரங்களில் தோன்ற வேண்டும். இதனைக்கண்டு, இனிமேலாவது நமது அரசியல்வாதிகள் திருந்துவார்களா ?

இந்த தொடக்கம், தொடர வேண்டும். தமிழகத்திற்கு, ஏன் இந்தியாவிற்கே ஒரு விடிவெள்ளியாக தெரியவேண்டும்.

Series Navigationஉமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.