ஜாக்கி சான் – 10. சுட்டிப் பையன்

This entry is part 3 of 33 in the series 6 அக்டோபர் 2013

தலை பாறையில் தாக்கியதும், மயக்கமே வந்து விட்டது சானுக்கு. உலகமே இருண்டு தலை சாய்ந்தான்.

 

சானைத் தள்ளிச் சாய்த்தச் அந்தச் சிறுவன் ஒரு தூதுவரின் மகன்.

 

சான் பேச்சு மூச்சற்று விழுந்து கிடைந்ததைக் கண்டு பயந்து போன அந்தச் சிறுவன், தன் தந்தையிடம் விசயத்தைச் சொல்ல ஓடினான். மற்ற சிறுவர் சிறுமியர்கள் இங்கொருவர் அங்கொருவராய் சிதறி ஓடினார்கள்.

 

சிறுவனின் தந்தை சானின் நிலையைக் கண்டு ஆடிப் போய்விட்டார். சான் இறந்திருந்தால் அது இரு நாட்டுக்கிடையேயான பிரச்சினையாகக் கூட மாறியிருக்கும். இப்போது போல் சட்டங்கள் இருந்திருந்தால், சானின் தந்தை அவர்கள் மேல் வழக்குத் தொடுத்திருக்கலாம். ஆனால் அப்போது தங்களால் ஏதும் செய்யமுடியாமல் போய்விட்டது என்று கூறுவார் ஜாக்கி சான்.

 

சில மணி நேரங்களுக்குப் பிறகு முழிப்பு வந்தது.

 

சுற்றிலும் இருட்டாக இருந்தது. தலையில் அப்படியே கொழுக்கட்டை போன்ற வீக்கம். மயக்கமாகவே இருந்தது. இருட்டிலே சின்ன வால் நட்சத்திரங்கள் போல் சின்ன வெளிச்சக் கீற்றுகள் வந்து சென்றது போன்ற உணர்வு. காபலம் முழுக்க வலி.

 

கதவு திறந்த சத்தம் கேட்டது. தந்தை உள்ளே வந்தது தெரிந்தது. “ஆ பாவ்…இந்தா உன் நண்பன் உனக்காக கொடுத்தான்“ என்று கூறி எதையோ நீட்டினார்.

 

மிகவும் முயன்று கைகளை நீட்டினான் சான். அவன் கைகளில் ஒரு பெட்டியைத் தந்தார் தந்தை. அது பெரிய அழகிய சாக்லெட் பெட்டி.

 

பாவ் மிகவும் பலவீனமாக இருப்பதைக் கண்டு, கொடுத்த பெட்டியை உடனே வாங்கி, கட்டிலுக்கு அருகே வைத்து விட்டு, இரவு உணவு சமைக்கச் சென்றார்.

 

பாவ் எவ்வளவோ வலியால் அவதிப்பட்டாலும், பசியை மட்டும் அவன் நன்றாகவே உணர்ந்தான். தனக்கு எப்போதுமே பசித்துக் கொண்டே இருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு. நல்ல உடற்பயிற்சி செய்து, உடலை வலுவுடன் வைத்திருப்பதால், அதற்கேற்ற மாதிரி பசியும் இருக்கத்தானேச் செய்யும்.

 

பக்கத்திலேயே சாக்லெட் பெட்டி இருப்பது பசியைக் கிளப்பாமல் இருக்குமா?

 

சானுக்கு இருப்பே கொள்ளவில்லை. மெதுவாக பெட்டியை எடுத்துத் திறந்தான். உடலிலும் தலையிலும் வலி இருந்த போதும், பசியைப் போக்க அவற்றைத் தின்ன ஆரம்பித்தான். அவற்றை வேக வேகமாக ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்து விட்டான். அவை மிகவும் ருசியாக இருந்தன. ஒரே வேகத்தில் அத்தனைச் சாக்லெட்டுகளும் சாப்பிட்டால் வயிறு தாங்குமா? அவனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது. அத்தனை இனிய சாக்லெட் சுவையை அவன் வீணடிக்க விரும்பில்லை. வாந்தி வருவதைக் தடுக்கவும், அந்த உணர்வினைக் குறைக்கவும், கட்டிலில் தவழ்ந்து தவழ்ந்து முன் பின் நகர முயன்றான்.

 

இனிய சுவையான சாக்லெட்டுகள் கிடைத்தது தன் தலையில் அடிபட்டதால் தானே. அதனால் இப்படி அடிப்பட்டு படுத்திருப்பதும் நல்லதே என்று அவனுக்குத் தோன்றியது. சாக்லெட்டுகளைச் சாப்பிட்ட மகிழ்ச்சியில் இருந்தான்.

 

ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு நேரம் இருக்கவில்லை. அவனது தந்தை அறைக்கு வந்தார். அங்கு கீழே விழுந்து கிடந்த சாக்லெட் காகிதங்களைக் கண்டு, பாவ்வின் வாய் முழுவதும் சாக்லெட் அப்பி இருப்பதைக் கண்டு, அவருக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ, தெரியவில்லை.

 

“என்ன? முழுப் பெட்டியையும் சாப்பிட்டு விட்டாயா?” என்று கோபத்துடன் கத்தினார்.

“ஆம்” என்று தொண்டையில் இன்னும் அந்தச் சாக்லெட் சுவையை எண்ணிக் கொண்டே சொன்னான்.

 

அதற்கு மேல் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல், அவர் பாவ்வை கட்டிலிலிருந்து கீழே இறக்கி முதுகில் ஓங்கி அடித்தார்.

 

எவ்வளவு ருசித்து ரசித்து அந்தச் சாக்லெட்டைச் சாப்பிட்டானோ, அவ்வளவுக்கான மருந்தையும் அவன் சாப்பிட வேண்டியிருந்தது.

 

தந்தையின் கோபம் பாவ்வுக்குத் தெரிந்தது தான். இதற்கெல்லாம் பயப்படுகிற சாதியா நம் சாகச நாயகன்.

 

இப்படி எத்தனையோ சண்டைகளைப் பார்த்திருக்கிறான். தண்டைனைகளைப் பெற்றிருக்கிறான்.

 

சானுக்கு எப்போதுமே சண்டை என்றால் இனிப்பு சாப்பிடுவது போல். ஆனால் பள்ளி செல்வதென்பதோ எட்டிக்காய் விஷம் போல் இருந்தது. பள்ளி வாழ்க்கை கசந்தது.

 

சான் எப்போதுமே பள்ளியில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களைச் செய்ததே கிடையாது. சண்டை செய்யும் போது புத்தகங்களும், புத்தகப்பையும் எங்கே செல்லும் என்பது கூடத் தெரியாது. அவற்றை வேகமாக எறிந்து விட்டு, சண்டையில் மும்முரமாக ஈடுபட்டு விடுவான். சண்டைகளின் போதும், மலை முகட்டில் ஏறும் போதும், பள்ளி உடைகள் கிழிவது என்பது சர்வ சாதாரண விஷயம். அவை கிழந்தால், பெற்றோர் புதியவற்றை வாங்கித் தர வேண்டும் என்ற எண்ணம் கூட சற்றும் இருக்காது.

 

இவ்வாறு செய்யும் ஒவ்வொரு முறையும், தந்தையின் அறிவுரைச் சொற்பொழிவும், செமத்தியான அடியும், குப்பை அறை வாசமும் கட்டாயம் இருக்கும்.

 

எப்படியோ ஓராண்டு சென்றது. வருட முடிவில் ஆசிரியர் சான் அடுத்த வகுப்பிற்குச் செல்லும் தகுதி பெறவில்லை என்று கூறிவிட்டார். அதனால் முதல் ஆண்டுப் படிப்பையே மறுபடியும் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

சான் பள்ளிக்குச் சென்று ஏதும் கற்கவில்லை என்றாலும், அவனை பள்ளிக்கு அனுப்பிய அவனுடைய பெற்றோர் அவனைப் பற்றிய பல விசயங்களை கற்றிக் கொண்டனர் என்றே சொல்ல வேண்டும். தங்கள் மகன் நன்றாகப் படிப்பான், அறிவாளியாக வருவான் என்ற நினைப்புத் தவறானது என்பது அவர்களுக்கு நன்றாகவே புரிய ஆரம்பித்தது.

 

சானை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர். அவன் தன்னுடைய பழைய வாழ்க்கைக்கேத் திரும்பினான். தாயின் பின்னாலேயே சுற்றி வர ஆரம்பித்தான். தந்தைக்கு உதவி செய்து கொண்டும், அவர் கற்றுத் தரும் பயிற்சியை செய்து கொண்டும் காலம் கழிக்க ஆரம்பித்தான்.

 

சானுக்கு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் முகத்தைப் பார்த்துக் கொண்டும், அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டும், சொன்னவற்றைச் செய்து கொண்டும் இருப்பதை விட, இப்படிச் சுதந்திரமாக ஓடியாடி, தந்தையிடம் அவ்வப்போது தண்டனைகளைப் பெற்றுக் கொண்டு இருப்பது எவ்வளவோ நன்றாக இருந்தது.

அத்தோடு சானின் பள்ளி வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அந்தப் பிஞ்சு உள்ளம் அடிக்கடி, பள்ளி செல்வதைத் தவிர்க்க தான் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டோம் என்று எண்ணிக் கொண்டதுண்டு. பணக்காரச் சிறுவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்ததும், வேக வேகமாகத் தயாராகி, நரகம் போன்ற பள்ளிக்குச் செல்வதைக் காணும் போது தனக்குச் தானே சிரித்துக் கொண்டதுமுண்டு.

 

இச்செயல் அவனுடைய வாழ்க்கைப் பாதையை எப்படி மாற்றப் போகிறது என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

பள்ளிச் செல்ல மறுக்கும் தன் மகனின் எதிர்காலம் என்னவாகும், அதற்காக தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தனர் பெற்றோர். மகனின் எதிர்காலம் குடும்பத்திற்கு சிறப்பு சேர்க்குமோ அல்லது அல்லல் விளைவிக்குமோ என்ற ஐயத்துடன் கூடிப் பேசி ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

 

ஒரு நாள் சார்லஸ் சான் தன் மனைவியிடம் “லீ லீ நான் ஆ போவைப் பற்றி பேச வேண்டும்” என்றார்.

 

இதைக் கேட்ட தாய், சானுக்கு என்ன கஷ்டம் வரப் போகிறதோ என்று பயந்து கொண்டே, “என்ன?” என்று கேட்டார்.

 

“நம் பையன் கட்டுப்பாட்டை மீறிப் போகிறான். குறிக்கோள் இல்லாமல், தறிகெட்டுச் செல்கிறான்” என்று வருத்தத்துடனும் ஆத்திரத்திடனும் கூறினார்.

 

“ஆனால் அவன் நல்லப் பிள்ளையே!” என்று சானுக்கு சாதகமாகப் பேச எத்தனித்தார்.

 

“லீ, அவன் சண்டைக்காரனாக இருக்கிறான். அவன் நல்ல மனிதனாக மாற, பல விசயங்களைக் கற்ற வேண்டுமே” என்றார் மிகுந்த ஆதங்கத்துடன். இப்படியே பல முறை பேசிப் பேசி இறுதியில் ஒரு நாள், ஒரு முடிவுக்கு வந்தனர்.

 

அது சானுக்கு சாதகமாக இருந்ததா? பாதகமாக இருந்ததா?

 

Series Navigationஎண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *