ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி

கடந்த ஆட்சி மாற்றத்தை அடுத்து எல்லா பத்திரிக்கைகளிலும், மக்கள் புரட்சி! மக்கள் விழித்துக் கொண்டனர்! மக்கள் பாடம் கர்பித்துவிட்டனர்! என்றெல்லாம் பரபரப்பு கிளப்ப பட்டது. பீகார் மக்களை போல் தமிழ் நாட்டு மக்கள் இல்லை; அவர்கள் புத்திசாலிகள் என்று கூட பேசப் பட்டது. சரி தான். ஒரு பெரிய தவறு நிகழும் போது மக்கள் விழித்துக் கொள்ளத் தான் செய்கின்றனர். ஆனால், தமிழர்கள்,அரசியலை சரியாக புரிந்து கொண்டிருக்கின்றனரா என்ற கேள்வி, இருபது ஆடுகாலமாக எல்லோரின் மனதிலும் எழத் தான் செய்கிறது.
தி.மு.க-வின் லட்சணம் முழுவதுமாக விளிச்சத்திற்கு வரும் காலம் இது. இதற்கு முன்னரும் இது போன்ற நிலை இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு பின் ஆ.தி.மு.க, தூய்மையான ஆட்சித் திறனை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை என்றாலும்,திமுகவுக்கு ஆ.தி.மு.க எவ்வளவோ மேல் என்ற ரீதியில் தான் மக்களின் மனநிலை இருக்கிறது. ஆனாலும், கடந்த 20 ஆண்டுளில் நடந்த 5 தேர்தல்களிலும், தமிழக மக்கள் ஏன் இந்த இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்துள்ளனர் என்பது ஒரு முக்கியமான கேள்வி.
எம்.ஜி.ஆர் காலத்தில் தலை எடுக்க முடியாத தி.மு.க, அதற்குப் பின் போட்டியிட்ட ஐந்து தேர்தல்களில், 1996 இல் நடந்த தேர்தலில் மட்டும் தான் மாபெரும் வெற்றியை ருசித்தது. அந்த தேர்தலில் திமுக வின் வெற்றிக்கு காரணம், ஜெயலலிதா அரசின் ஊழல்,அவர் ஹிட்லரைப் போல் நடந்து கொள்கிறார் என்ற குற்றச் சாட்டு, சசிகலாவின் மறைமுக ஆட்சி,தத்துப் பிள்ளையின் ஆடம்பரக் கல்யாணம் போன்றவை.
இந்த தேர்தல் முடிவு ஒரு புறம் இருக்க,இருகட்சிகளும் நல்லாட்சி புரிந்து ஒரு முறையாவது வெற்றி பெற்றிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். இந்த கேள்விக்கு விடையாக ‘இல்லை’ என்ற பதிலே உங்களிடமிருந்து வரும் என்று எனக்கு தெரியும். ஆனால், ஒரு முறை கூட நல்லாட்சி நடக்கவில்லையா என்ற கேள்விக்கு, ‘comparitively far more better’ என்ற வகையில் ஒரு நல்லாட்சி நடந்தது என்று பதிலளித்து அதை நிரூபிக்கவும் முடியும்.
அந்த ஆட்சி, 2001- 2006 இடைவெளியில் நடந்த ஆ.தி.மு.க வின் ஆட்சி. இங்கு நான் கூற விரும்பும் விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்த காலக் கட்டத்தில் முறைகேடுகளே நடக்கவில்லை என்று கூறுவதற்கு நான் ஒன்றும் ஜெயலலிதாவின், அதிமுகவின் ரசிகன் அல்ல. அரசு அலுவலர்களின் மேல் தாக்குதல் நடத்திய சம்பவம் ஜெயலலிதாவின் ‘ஹிட்லர் இமேஜுக்கு’ மேலும் வலு சேர்த்தது என்றே கூற வேண்டும். ஆனால், அதுவும், வேறு சில குறைகளையும் தவிர, ‘இவர்கள் சரியில்லை’ என்று கூறி மக்களின் மனதை மாற்ற திமுகவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் உண்மை.அதனால் தான் இலவசம் என்ற மாயவலையில் மக்களை மயக்கியது திமுக. அதை மீறியும், அதிமுகவால் அறுபதுக்கும் மேலான இடத்தை பிடிக்க முடிந்ததென்றால், அந்த ஆட்சின் மீது பெரிதாக எந்த குறையும் மக்களுக்கு இருக்கவில்லை என்றே நிரூபணம் ஆகிறது. மேலும், 1991-96 இல் நடந்த முறைகேடுகளை விசாரிக்க பல வழக்குகளை திமுக தொடுத்தது. ஜெயலலிதாவும் கைது செய்யப் பட்டிருக்கிறார். ஆனால், 2001-2006 ஆட்சியில் வழக்குகள் தொடரப் படவில்லை! காரணம் கேட்டதற்கு கருணாநிதி, முதலில் அந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வரட்டும் என்று கூறித் தப்பித்துக் கொண்டார். ஆனால், அவர் முன்பு தொடர்ந்த வழக்குகளில் பெரும்பாலானவற்றிற்கு தீர்ப்பு வந்த பிறகும், எந்த வழக்கும் ஆதிமுக மீது பாயவில்லை. முறைகேடுகள் இருந்தும் கருணாநிதி மறந்திருப்பாரா? கண்டிப்பாக இல்லை. அப்படியானால் முந்தைய ஆட்சியை விட ‘தேவலை’ என்று கூறும் அளவிற்காவது 2001-06 ஆட்சி அமைந்தது என்று தானே பொருள்? இது இப்படி இருக்க 2006 இல் நடந்த தேர்தலில் மக்கள் ஏன் தி.மு.கவை தேர்ந்தெடுத்தனர்? 30,000 கோடி வரை ஊழல் நடந்தாலும் திமுகவுக்கு கடந்த தேர்தலில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தன. ஆனால், அரசு ஊழியர்கள் தாக்குதல் போன்ற சில குறைகளுக்கு, ஆட்சியை விட்டே அகற்றும் அளவிற்கு ரோஷம் எப்படி வந்தது மக்களுக்கு? இந்த கேள்விக்கு அப்பட்டமான ஒரே பதில்,பெரும்பாலான மக்கள், நல்லாட்சியை கருத்தில் கொண்டு வாக்களிக்கவில்லை என்பதே! மக்கள் இலவசங்களை விரும்பி வாக்களிக்கின்றனர் என்பதை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டாலும், வேறொரு முக்கிய காரணம் இந்த வினோத முடிவுகளுக்கு மூலக்கூறாக இருக்கிறது. அது, அரசு நடவடிக்கை மீதான மக்களின் பொதுவான பார்வை! எது சரி, எது தவறு என்று மக்கள் முடிவெடுக்கத் திணறுகின்றனர். ஜெயலலிதா, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல நடவடிக்கை எடுத்தது மாற்றுக் கருத்தே இல்லாமல் ஒப்புக் கொள்ளவேண்டிய உண்மை. ஆனால், நியாயத்தின் பார்வையில் அந்த நடவடிக்கைகள் ஒப்புக் கொள்ளக் கூடியவையா இல்லையா என்பதை முடிவு செய்ய மக்கள் திணறுகின்றனர். உதாரணத்திற்கு பல விஷயங்கள் உள்ளன. க. கருணாநிதி கைது: ஜெயலலிதாவின் ஆட்சியில் கலைஞரை கைது செய்ததைப் போலவே, கலைஞர், அவர் ஆட்சியில் ஜெயலலிதாவை கைது செய்தார். இருவரும் தவறு செய்தனர் என்பது உண்மை. ஆனால், கலைஞர் கைதானதை மட்டும் ஏன் காழ்ப்புணர்ச்சி என்று பார்கின்றனர்? ஜெயலலிதா கைதான போது அவர் ஒத்துழைத்தார். இவர் ஒத்துழைக்காமல் குதித்தார். அதை பார்த்த மக்களுக்கு, ‘வயதான மனிதர். ஐயோ பாவம்’ என்று பட்டது. இது மக்களின் பார்வையில் உள்ள குறைபாடன்றி வேறென்ன? இருவரும் உள்ளே போக வேண்டியவர்கள் தான் என்று மக்கள் ஏன் நினைக்கத் தவறிவிட்டனர்? ௨. பல நேரங்களில் கலைஞர் தன் அரசின் மீது பழி விழுந்து விடக் கூடாது என்பதற்காக,மறைமுகமான தவறுகளை செய்துவிடுவார்.அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியது இரண்டு தலைவர்கள் ஆட்சியிலும் நடந்திருக்கிறது. இருவரும் முதலில், உங்கள் கோரிக்கை சரியானதல்ல என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், விஷயம் முற்றும் நேரத்தில், கருணாநிதியின் சாதுர்யம், ஜெயலலிதாவிடம் இல்லாமல் போய்விடுகிறது. உதாரணம்: நாளுக்கு 200 கோடி ரூபாய் இழப்பில் போக்குவரத்துத் துறை இயங்கிக் கொண்டிருக்க, ஊழியர்கள் போராட்டம் செய்து நெருக்கடி கொடுத்தனர் என்ற ஒரே காரணத்தால் ஊதிய உயர்வு அளித்து அவர்கள் வாயை மூடிவிட்டார் கலைஞர். ஆனால், இதே நிலையில் ஜெயலலிதா ஊழியர்களின் போராட்டத்தை அடக்கியவுடன், ‘ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிரா!” என்று எல்லோரும் கொதித்தெழுந்தனர்.நான் இங்கு அடக்குமுறையை நியாயப் படுத்தவில்லை. பேச்சுவார்த்தையில் தீர்வு கண்டிருக்க வேண்டிய விஷயத்தை விபரீதம் ஆக்கியது தவறு தான்.ஆனால் நோக்கம் சரி தானே? எல்லோரும் ‘தேவலை’ என்ற ரீதியில் ஓட்டளிக்கும் போது, கலைஞரின் தவறு தானே அதிகம் விமர்சிக்கப் படவேண்டியது? ௩. கனிமொழி கைது: கனிமொழி கைதாகி சிறை செல்லும் முன்பு, அவரை காப்பாற்ற திமுக தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களில் ஒன்று, அவர் பெண் என்பதால் கருணை காட்டவேண்டும் என்பது. இதே போல், கலைஞரை கைது செய்தபோது, ஒரு தியாகியை தூக்கில் போட்டதை போல, NDTV இல் ஜெயலலிதா வருத்தெடுக்கப் பட்டார். ஒரு வயதான மனிதரை இப்படியா இழுத்துச் செல்வீர்கள் என்று கேட்டதற்கு, அவர் தவறு செய்தார், கைது செய்தோம் என்று கூறினார் ஜெயலலிதா. இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதே போல், கனிமொழி கைதான போது, கலைஞரையும் கூப்பிட்டு, நீங்கள் வைக்கும் வாதம் சரியா என்று ஏன் வருத்தெடுக்கவில்லை? ஜெயலலிதாவை கைது செய்தபோது கலைஞரிடம், ஒரு பெண் என்று இரக்கப் படாமல் இப்படி கைது செய்துவிட்டீர்களே என்று நேருக்கு நேராக ஏன் கேள்வி இல்லை? இது அடுத்த காரணம்! ஜெயலலிதா மட்டும் தான் காழ்ப்புணர்ச்சியில் இருக்கிறார் என்ற பொதுவான, தவறான ஒரு நினைப்பு, மக்கள் தொடர்பாளர்களான மீடியாவினரிடமும் இருக்கிறது. மக்களின் பார்வை இவர்களை பொறுத்தே அமையும் போது, சரியான முடிவு எப்படி ஏற்படும்?. ௪. இந்தியாவில், பொதுவாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் இணைத்தே பார்க்கப் படும். சில நேரங்களில், திறமை இல்லை என்றாலும், சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமாக இருந்துவிட்டால் அவரை கடவுள் ஆக்கக் கூட மக்கள் துணிந்துவிடுவர். முக்கியமாக, அந்த நபர் ஒரு பெண்ணாக இருந்தால், அழகு மட்டுமே போதும். கூகுளில் இந்த (PAK) மூன்றே எழுத்துக்களை இட்டுப் பாருங்கள். தேடல் ஆலோசனைகளில், ‘பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்’ என்பது மூன்றாவதாக இருக்கும். காரணம், இப்போது தான் ஒரு அழகான பெண் அப்பதவியை ஏற்றிருக்கிறார். இப்படி அற்ப விஷயங்களுக்காக ஒருவரை பிரபலப் படுத்துவதும், தூற்றுவதும் இந்தியாவில் வழக்கம். ஜெயலலிதாவை வெறுக்கும் பெரும்பாலோனோருக்கு இப்படிப் பட்ட காரணங்கள் உண்டு. அவர் தனிப்பட்ட வாழ்கை எப்போது அரசியலை பாதிக்கிறதோ அப்போது அதை தூற்றுவோம் என்ற மனப் பக்குவம் மக்களுக்கு இல்லை. இந்த பக்குவமின்மை, அவர் நடவடிக்கைகளை கண்மூடித் தனமாக எதிர்க்க ஒரு காரணமாக இருக்கிறது.
௫. பழைய விஷயங்களை விடுவோம். இப்போது ‘ஹாட் நியூஸ்’ ஸ்டாலின் கைது. போன ஆட்சியில் குடும்ப ஆட்சியை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று கூச்சல் இட்டவர்கள் எல்லோரும், இப்போது அராஜகம்! அராஜகம்! என்று கூவ ஆரம்பித்துவிட்டனர். உள்ளே போக வேண்டியவர் தானே போயிருக்கிறார்? இதில் ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சி கலந்திருந்தாலும், அது மக்களுக்கு நன்மை தானே என்று யாரும் நினைப்பதில்லை.
இது எல்லா விஷயங்களிலும் தொடர்கிறது. சினிமா செட்டு போல் கட்டப் பட்ட தலைமை செயலகம் செயின்ட். ஜார்ஜ் கோட்டைக்கு மாறியதை எதிர்த்தது முதல், திமுகவின் திட்டங்களில் உள்ள தவறுகளை திருத்தினால் கூட காழ்ப்புணர்ச்சி என்று அழைப்பது வரை பல்வேறு கோணங்களில் மக்கள் தவறாக முடிவெடுக்கின்றனர்.
திமுக ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் தமிழ் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைகிறது. இதை ஓரளவேனும் சமாளிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம், அவர்களை விட குறைவாக சுரண்டும் ஒரு கட்சி, அடிக்கடி ஆட்சியை கைப்பற்றுவதால் தான். இதுவே நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று கூறத் தோன்றுகிறது. ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு நீக்கா விட்டால், அவருக்கு பயம் போய் விடும்; அடக்கு முறை அதிகமாகும் என்ற வாதத்தை ஏற்கும் நேரத்தில்,
ஒரு உண்மையான குடிமகனாக என்னுடைய விருப்பம், ‘பிரமை’ காட்டி வெல்லும் திமுக, ‘அடம் பிடிக்கும்’ அதிமுக இரண்டையும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியும் ஒரு வலிமையான மாற்று சக்தி உருவாக வேண்டும் என்பது தான் என்றாலும், இப்போதைக்கு, ஜெயலலிதாவின் மீது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை, திமுக திரும்பவும் எழாமல் தடுக்கவாவது கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு ஆலோசிக்கத் தோன்றுகிறது.

Series Navigation361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்மலைகூட மண்சுவர் ஆகும்பிணம் தற்கொலை செய்தது