ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1

மாயன்

ஐயா! நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக… என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் இப்போது நான் என்ன செய்ய…?பல வருடங்களாக பயிற்சி செய்திருக்கிறேன். இருந்தும் இப்போது அவநம்பிக்கையோடு இருக்கிறேன்.

இது ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஒருவர் கேட்ட கேள்வி.

அடிப்படையில் ஜே.கே. எந்தவிதமான மத சடங்குகளைப் பின்பற்றாதவர். கேள்விகள் மூலமே ‘உண்மை’யை அடைவதைப் பற்றி பேசியவர். அவர் பேச்சு ஒன்றும் ஃபார்முலா (Formula) அல்ல அப்படியே பின்பற்றி நீங்கள் அதை அடையலாம் என்று நினைக்க என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தவர். இவ்வளவு ஏன் மருந்துக்கு கூட புராணங்களிலிருந்து உதாரணம் சொல்லாதவர். ஏன் எனில் சொல்ல ஆரம்பித்தவுடன் மனம் அது சம்பந்தமாக இது வரை சேகரித்து வைத்த விஷயங்களுக்குப் பரவி அது ஒரு வட்டத்தை உருவாக்கி அதனுள்ளேயே சுற்றிக் கொண்டு வர ஆரம்பிக்கும்.

சரியான தியானம் என்பதற்கு ‘சுத்திகரிக்கப் பட்ட மனம்’ வேண்டும். அதற்கு காலியான மனம் அன்றி புதுப்பித்தல் என்பது சாத்தியமில்லை. காலியான மனம் இல்லாமல் ‘தொடர்ந்து கொண்டே’ இருக்கிற மனம் என்பது அழிவு. மனம் சும்மாவே ஏதாவது எடுத்து வைத்து மேய்ந்து கொண்டிருக்கும். எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மனம், அல்லது ஒவ்வொன்றாலும் பாதிக்கப்பட்ட மனம் அயற்சி அடைகிறது.

நினைவிருக்கட்டும். மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.) எது எதெல்லாம் உங்கள் மனசை பாதிக்கிறது என்பதை அறிவது முக்கியம்.

இப்போது கொஞ்சம் படிப்படியாக ஆராய்ச்சி செய்யலாம். ‘மனசை’ பாதிக்கிறது என்கிறோம். அப்படியானால் மனம் ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

அது எதனால் ஆனது.? – பலவிதமான எண்ணங்களால் ஆனது.

அந்த எண்ணங்கள் எப்படிப்பட்டவை? – முரண்பாடுகள் கொண்ட எண்ணங்கள்.

எந்த ஒன்றை எடுத்துக் கொண்டாலும் சரி-தவறு, இப்படி-இல்லை அப்படி, வரும்-வராது, இதுவா இல்லை அதுவா – என்று பெரும்பாலும் இரட்டையாக எண்ணங்கள் இருந்தாலும் உண்மையில் இரட்டை மட்டுமல்ல அவைகள் பலவையாக இருக்கின்றன.

நினைவிருக்கட்டும். உங்கள் மனத்தை ஆராய்ச்சி செய்யும் போது இதுதான் சரி இதுதான் தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களானால் அங்கே மேற்கொண்டு எதுவுமே இல்லை. அப்படி முடிவுக்கு வரவே முடியாது. சரி தவறு என்பது எப்போதுமே நாம் எதை, யாரை அல்லது எந்த குழுவை அல்லது எந்த கொள்கையை சார்ந்து இருக்கிறோம் என்ற அடிப்படையிலேயே முடிவு செய்கிறோம்.

இல்லை சார்! நான் அப்படி அல்ல…நியாயம்னா நியாயம்னு சொல்வேன் இல்லைன்னா இல்லை என்றால்… அந்த நியாயம் என்று சொல்வதும் ஒரு கொள்கையில் அடிப்படையில்தானே. ஏற்கனவே உங்களுக்கு கற்பிக்கப்பட்டவைகளின் அடிப்படையில் தானே!

இப்போது மறுபடி ஆராய்ச்சிக்கு வருவோம்.

இப்படி வேறு வேறு முரண்பாடான எண்ணங்களை ஒரு பொட்டலமாக கட்டி வைத்தால் அதுதான் உங்கள் மனம். இந்த முரண்பாடான எண்ணங்களில்- தேவையின் அடிப்படையில் அல்லது ஆசையின் அடிப்படையில்– எனக்கு இது வேண்டும். அது வேண்டாம் என்று தேர்ந்து எடுப்பதை ‘மனதை குவித்தல்’ (Concentration) என்கிறோம். அதாவது ஒன்று அல்லது ஒரு சில எண்ணங்களை தேர்வு செய்து கொண்டு-ஆசையின் அடிப்படையில் அதன்மீது ஆற்றலைக் குவித்தல் நடக்கிறது. இந்த மனம்குவித்தல் ஒரு வகையான கட்டுப்பாடே! அதாவது discipline தான். காலையில் எழுந்திரு! பூஜை பண்ணு. மந்திரம் ஜெபி. விழுந்து கும்பிடு போன்ற டிசிப்ளின் தான். மனம் குவித்தல் (Concentration) என்பது தியானம் ஆகாது.

நீங்கள் ஒன்றை தேர்ந்து எடுக்கிறீர்கள் என்றால் மற்றவைகளை நிராகரிக்கிறீர்கள் என்றே ஆகிறது. அப்போதே அங்கே (எங்கே உங்கள் மனத்தில்தான்) ஒரு எதிர்ப்பு உண்டாகிறது. A disciplined mind அதாவது கட்டுப்பாடுள்ள மனம் என்பது சுதந்திரமான மனமாகாது. ஒன்றை தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள். அதன்படி நடக்கிறீர்கள். இது ஒரு வகை பழக்கப்படுத்தல். அதனால் தேர்ந்து எடுக்காத மற்ற எண்ணங்கள் தொந்திரவு செய்ய ஆரம்பிக்க -நீங்கள் சுதந்திரமானவராக இல்லை. உங்கள் கொள்கைக்கு அடிமை. பழக்கப்படுத்தப்பட்ட எண்ணங்களுக்கு அடிமை.

மனிதர்களுக்கு அடிமையாயிருப்பது மட்டுமல்ல கொள்கைகளுக்கு அடிமையாய் இருப்பவனும் சுதந்திரமானவன் இல்லை. அப்படி இருப்பவனால் தியானம் என்பதை புரிந்துகொள்ளவே இயலாது.

ஆக…மனம் என்பது ஒரு பொட்டலம். எண்ணங்களால் ஆன பொட்டலம். அதை அவிழ்க்கிற இயல்புத்தன்மை Spontaneity வேண்டும். அப்போது என்ன நடக்கிறது எனில் இறுக்கமான தன்மை போய் இயல்புத்தன்மை (Spontaneity) வருகிறது. இந்த பொட்டலத்தை பிரிக்கிற நிலையில், அதாவது மனம் தன் எண்ணங்களால் கட்டுப்பட்டு இறுக்கமாய் இருக்கிற நிலையில் இருந்து தளர்ந்து விடுபடுகையில் – மனம் தன் ஆழ்மனதின் அடுக்குகளில் இருந்து எல்லாவகையான தன் இயல்புக்கு மாறான இந்த சமூகத்தின் சட்ட திட்டத்துக்கு மாறான அதுவரை சேர்த்து வைத்திருந்த எல்லாவற்றையும் வெளியேற்றும்.

-அது என்ன ‘இயல்புக்கு மாறான சமூகத்துக்கு எதிரான’ என்றால் ‘இயல்புக்கு உட்பட்ட. சமூகத்துக்கு ஏதுவான எல்லாவற்றையும் தினசரி வாழ்வில் நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். வெளிப்படுத்தாத எண்ணங்கள் இந்த ‘காலிசெய்தலின்போது வரும்’. அவை நீங்களே அறியாத எண்ணங்களாக இருக்கும்.

அதனால்தான் சொல்வார்கள். தியானம் செய்தால் வெளியே வருவது சாக்கடைதான். இதுநாள் வரை அவை உள்ளே இருந்தது.

அது சாக்கடை என்று நாம் ‘அழைப்பதே’ இந்த சமூகத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையில்தான். மனசுக்கு சட்டதிட்டங்களே கிடையாது. அது எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கும்.

சாதுவான எண்ணங்கள் மட்டுமல்ல, குரூரமான எண்ணங்களும் கூட அங்கே ஆழ்மனதில் உண்டு. அமைதியானவை மட்டுமல்ல வக்கிரமானவைகளும் உண்டு. ஆழ்மனதில் ஆணோ பெண்ணோ ஒரு விலங்குதான்.

ஜியாக்ரபிக் சேனலில் வந்த ஒரு சிங்கங்களைப் பற்றிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு ஆண் சிங்கம் மூன்று பெண்சிங்கங்கள். அவைகளுக்குப் பிறந்த ஐந்து குட்டிச் சிங்கங்கள். எல்லா விலங்குகளும் குட்டிகளில் மிக அழகானவை. வேட்டை என்றால் என்ன என்றே அறியாத பருவம். ஒடி விளையாடிக் கொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் வேறு ஒரு ஆண்சிங்கம் அங்கே வந்துவிட்டது. இப்போது யார் ராஜா என்று சண்டை ஆரம்பித்துவிட்டது. உக்கிரமான போர். ஸ்லோமோஷனில் பிடரி மயிர் பறக்க பறக்க சண்டை. கடைசியில் அப்பா சிங்கம் தோற்றுவிட்டது. இப்போது வந்த சிங்கத்துக்கு மற்ற பெண்சிங்கங்களிடம் சண்டை. இந்த நாலும் சேர்ந்தாலும் வந்தவனை ஜெயிக்க முடியவில்லை. தோற்றதும் நடந்தது தான் க்ளைமாக்ஸ். புதிய ஆண்சிங்கம் அந்த ஐந்து குட்டிகளையும் ஒவ்வொன்றாக துரத்தி துரத்தி கடித்து குதறி கிழித்துப் போட்டது. இந்த நாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட கோபம்/ஆற்றல்/சக்தி/வெறி மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அவனும் விலங்குதான். அந்த வெறி வெளியே வர மனம் தன்னிடமுள்ள ஏதாவது காரணத்தை கருவியாக எடுத்துக் கொள்ள பயன்படுத்தும். ஏதாவது…அது மிகச் சிறிய காரணமேயில்லாத காரணமாக இருக்கும். அப்படி ஏதும் நேராமல் அதை தடுத்து வைத்திருப்பது. புத்தி.

புத்தி என்பது மனதின் ஒரு பகுதியே.

இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்… இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது.

புத்தியை ‘பயிற்றுவிக்கப்பட்ட மனம்’ என்று சொன்னால் சரிதானே! பயிற்றுவிக்கப்படாததை ‘மனம்’ என்றே அழைக்கிறோம்.

அப்படியானால் தியானத்திற்கு புத்தி தேவையில்லையா?

Series Navigationதிருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு“எழுத்தாளர் விபரத் திரட்டு”