ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1

எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் :

குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

1. அரியும் சிவனும் ஒண்ணு …!

குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
வெளியான வருடம்:  1968.

முதல் மலராக நறுமணம் வீசும் இந்த “அரியும்  சிவனும் ஒண்ணு ” என்கிற இந்த மலரை கையில் எடுக்கிறேன்.

கதை கிட்டத்தட்ட 45 வருடங்கள் முன்பு மலர்ந்து இன்னும் சிறுகதை உலகில் தாழம்பூவைப் போல் நறுமணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.

மலரின் ஐந்து இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக ஐந்து இதழ்களாக  சேர்ந்து  மலரின் மணத்தையும் எழிலையும் தென்றலோடு கலந்து பரப்புகிறது.

ஆயிரம் சிக்கலைத் தண்ணீருக்கடியில் வைத்துக் கொண்டு தடாகத்தின் மேலே சிரிக்கும் தாமரையாக காதல் கலையுடன் கொள்ளை அழகு தான்….! இருந்தாலும், அன்பை மட்டும் அச்சாணியாகக் கையில் எடுத்துக் கொண்டு ஆன்மாவுக்குள் எழும் போராட்டங்களை, ஒரு குடும்பத்திற்குள் நிகழும் சம்பவங்களை ஒவ்வொரு  இதயத்தின் எண்ணங்களின் வலிமையை, வழியை, வலியைத்  திறம்படக் குறுநாவலாக  எழுதி அதற்கு அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்ப தீர்வுகளைத் தந்து சிறப்பான, சுவையான  கதைகளைத்  தருபவர் எழுத்தாளக் கதையரசி ஜோதிர்லதா கிரிஜா.

வருடங்கள் பல கடந்தாலும், அன்றும் இன்றும் என்றும் “காதல்” என்ற உணர்வு வீட்டுக்குள் நுழைந்து விட்டால் காதல் வயப்பட்டவருக்குக் “கதவைச் சாத்தடி” என்பது தான்  வாய்ப்பாடு, நிலைப்பாடு, எதிர்ப்பாடு ! அவரைத்  தவிர ஏனையோரின் மன நிலை எப்படி இக்கட்டுக்குள் தள்ளப்படும். அதில் தியாகம் எப்படி பெரும் பங்கை தனக்கென எடுத்துக் கொள்ளும்.. சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத ஒருவர் என நாம் நினைத்திருப்பவர் கூட தன்னைத் தியாகம் செய்து அந்தக் காதலை வாழ வைக்க தவிப்பர்.

இந்தக் கதையில் ஐந்து  இதழ்களாக  மீனா, அவளது அப்பா சுப்பராமன், அம்மா அலமேலு , மீனாவின் காதலனாக ராகவன், அந்த வீட்டில் சமையல் செய்து வரும் சொர்ணம்.  மகரந்தமாகக் ‘காதல்’.

கதையின் துன்பியல் கரு :

ஒரு ஐயர் வீட்டு படித்த பெண், ஐயங்கார் வீட்டுப் பையனைக் காதலித்து அவனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளது படித்த பண்டிதரான தந்தை அதை எதிர்க்கிறார். தாய் தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாமலும், மகள் ஆசையை நிறைவேற்ற முடியாமலும் தவிக்கிறாள். ஆனால் அந்த வீட்டு சமையல்காரர் அவர்கள் போடும் திட்டத்தைத் தடுத்து எடுத்துச் சொன்னாலும் இறுதியில் பாசத்துக்கும் , நியாயத்துக்கும் கட்டுப்படுகிறார்   .பெண்ணின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவளுக்கும் அவளது காதலனுக்கும் இடையே கடிதத் தூதாகச் சென்று அவர்களது கல்யாணத் திட்டத்தை செயலாக்குகிறார்.

அவர்களின் விருப்பப்படி பெண்ணை அவளது காதலனின் தங்கை  வீட்டுக்கு பழனிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறார். அவளது காதலன் மட்டும் தான் அதே ஊரில் இருந்து கொண்டு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நம்ப வைப்பதற்காக அங்கேயே இருக்கிறான்…..ஒரு மாதம் பெற்றவர்களை தவிக்க வைத்தால் ஒருவேளை இந்தக் கல்யாணத்திற்கு அவர்கள் சம்மதிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் போடும் நாடகமாக இவர்கள் போட்ட திட்டத்துக்கு துணை போக  அவர்களுக்கு உதவுகிறார் சமையல்காரர்.

பிடித்த ஒருவனோட வாழ்வதைத் தடுக்கும் பெற்றோர்கள் தாம்     குறிப்பிடுபவரைத் திருமணம் செய்ய மாட்டேன் அதற்கு பதிலாக கிணற்றில் விழுவேன் என்று சொல்லும் தான் வளர்த்த மகளின் மனசைப் புரிந்து கொண்டு அவர்கள் திட்டப் படி பெற்றவர்களுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து உறங்கச் செய்து பெண் விட்டு வீட்டை விட்டு வெளியேற உதவி செய்கிறார் சமையல்காரர்.

தான் வீட்டை விட்டு  ஓடிவிட்டால் ஒருவேளை அப்பாவின் மனசு மாறலாம் என்று மகள் போடும் திட்டத்திற்கு சொர்ணம் (சமையல் காரர் ) கூட இருந்து உதவி செய்தாலும்..இத்தனை கால நம்பிக்கையை முறித்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டோமே…தான் செய்தது ..நம்பிக்கை துரோகம் அல்லவா?  என்று தன் மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத அவர்  அந்த குற்ற உணர்வில் நடந்த அனைத்து உண்மைகளையும் எழுதி வைத்து விட்டு , வீட்டு எஜமானிக்கு எந்த பாதிப்பும் வராமல் தன வயிற்று வலியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக தனியாக போலீசுக்கும் இன்னொரு  கடிதம் எழுதி வைத்து விடுகிறார்.  தனது இறுதி ஆசையாக, வேண்டு கோளாக, “பெண்ணுக்கு அவள்  காதலித்தவனையே மணம் முடித்து வையுங்கள் ‘ என்று கேட்டுக் கொள்கிறார்.  சமையல்காரர் தற்கொலை செய்து கொண்டதை கடிதம் வாயிலாகக் காட்டி முடிக்கப் படுகிறது கதை.

கதையின் எழில் நடை:

கொஞ்சம் கூட தொய்வில்லாத ராஜ நடை… ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்தை பத்திரமாக கையாண்டுள்ள விதம் பாராட்டுதலுக்கு உரியது. உணர்வுகளின் கொந்தளிப்பும் அந்தக் காலத்தில் எஸ் எஸ் எல் சி படித்துவிட்டு காலேஜூக்குப் போகும் பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் “எங்கே தன்  பெண் பெற்றோரை மீறிப் போய்விடுவாளோ ‘ என்ற பயம் உள்ளுக்குள் ஆரம்பித்ததை உணர்த்திய விதம்… இன்றைய  பெற்றோர்களின் மனநிலை…அதையும் தாண்டிய விபரீத பயங்களில் ‘வெளியில் படிக்கப் போன பெண் ‘பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் கவலைப்படும் இன்றைய காலக் கட்டம் அன்று இல்லை..என்பதைக் கதை நன்கு உணர்த்துகிறது.

மலரைப் பன்னீரால் அலசும்போது :

“மீனா என்ன பண்ணிண்டு  இருக்கா?” என்ற கேள்வியோடு ஆரம்பிக்கிறது கதை.  கேட்கும் போதே ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் கதாசிரியர்.

“அழுது அழுது முகமெல்லாம் கோவைப் பழமாக சிவந்து கெடக்கு”  சொல்லும்போது அந்த வீட்டின் பிரச்சனையே  அவளால் தான் என்று முதல் அட்சதை விழுவதில் புரிகிறது.

அதைப் பொருட்படுத்தாக தந்தை….” அந்தப்  பயல் இந்தப் பக்கம் வராம கவனிச்சுக்கோ ” – இது அவரது எதிர்ப்பை காண்பிக்கிறது.

“அப்போ அந்த ஐயங்கார் பையனைத் தான் பண்ணிக்குவாளாக்கும் ” – இதுவும் அப்பா தான்.

இப்படி ஒரே பக்கத்திலேயே வந்து விழுந்த நாலு வரியில் அந்தக் கதையைப் பற்றி நம்மால் முழுதும் ஊகிக்க முடிகிறது. ஒரு அய்யர் வீட்டுப் பெண் அய்யங்கார் வீட்டுப் பிள்ளையை திருமணம் செய்வது கூட அந்த காலத்தில் சிக்கல் தரும் விஷயமாகும் என்பதை தெரியப் படுத்துகிறது இந்தக் கதை.

அதற்கேற்றவாறு கதையின் தலைப்பும் “அரியும் சிவனும் ஒண்ணு …!”  என்று அழுத்தமாக சாம்பலை திருமண்ணோடு  கலந்தது போல தலைப்பைக் கதையோடு பிணைத்து வைத்த விதம் பெருமை.

கதம்ப மாலை :

தந்தை சுப்பராமன் :

சமஸ்கிருதம் படித்தவர் “கௌரி சரித்திரம்”  படித்து குழந்தைகளுக்கு போதிப்பவர், “அரியும் சிவனும் ஒண்ணு : அதையறியாதவன் வாயிலே மண்ணு’ன்னு ” ஊருக்குச் சொல்லிக் கொடுத்தாலும் தன்  வீடு என்று வரும்போது சர்வ ஜாக்கிரதையாக அரியும் சிவனும் வேறடா..எல்லாம் அறிந்தவன் நானடா ” .என்றும்  படிச்சவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற மொழிக்கு ஏற்ப சித்தரிக்கப் பட்ட அப்பா….ஆணாதிக்கமும், அடக்கு முறையும் ,சமயத்தில் மனைவியை குத்திப் பேசுபவராக, எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுபவராக இருந்தாலும் அப்படிப் பட்டவருக்கும் இதயத்தில் ஈரம் இறுதியாய் சுரக்கிறது என்பதைக் காட்டிய விதம் கதைக்கு அழகு செய்கிறது.

அதே சமயம்…ஒரு குடும்பத் தலைவனின் பொறுப்பைக் கயிறு மேல் நடப்பதைப் போல உணர வைத்திருக்கும் விதம். கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டாலும்….”ச்சே.ச்சே…

விளையாட்டுக்கு ஏதோ சொன்னா. அதை விபரீதமா எடுத்துண்டுட்டியே ” என்று மனைவியை சமாதானப் படுத்தும் மனசை மிகவும் கண்ணியமாகச் செதுக்கி இருக்கிறார் ஆசிரியர்  .கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் இந்த அப்பா சுப்பராமன்.

தாய் அலமேலு :

அந்தக் காலத்தில் வெறும் அஞ்சாவது வரை படித்தவள் .இருந்தாலும் சமயோஜித புத்தி நிறைந்த, கணவன் சொல்லே  மந்திரம் என்று பணிவோடு சித்தரித்த தாய்…”மனைவிக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும் என்னும் நினைவே அற்றவராய் கணவன் வாய்த்திருந்தாலும் அவரை அனுசரித்துப் போகும் பெண்மை கொண்ட தாய்மையை சித்தரித்த விதம் அழகு. ஒரு பக்கம் கட்டியவர்…இன்னொரு பக்கம் தான்  பெற்றவள் என்று பாசத்தின் நடுவில் தத்தளிக்கும் விதம் பெண்மையைப்  பெருமைப் படுத்துகிறது. கதையில் வாயில்லாப் பூச்சியாக வளைய வரும் அம்மா அலமேலு.

அந்த காலத்து ஆணாதிக்கம் நிறைந்த வீடுகளில் இருக்கும் பெண்களின் நிலை’வெயிட்லெஸ்ஸாக’ காலிப் பெருங்காய டப்பாக்களாக
அடுப்படியில் வெறும் தராசுத் தட்டுக்களாக காற்றிலாடும்  நிலையையும் கூடவே நம்மால்  உணரவும் முடிகிறது.

“ஒரு பொண்ணு வெறும் வெளி அழகைப் பார்த்துட்டு மட்டுமே ஆசைப் படுவாள்னு நினைக்காதீங்கோ…” தன் மகளின் உணர்வுகளை மதித்த தாயாக சித்தரிக்கப்  பட்டிருக்கிறார் .

மகளாக மீனா:

காலேஜ் படிக்கும் இளங்குமரி . துணிச்சலும், பிடிவாதமும் கொண்டவள்… காதலில் விழுந்ததால் வைராக்கியமும் கூடவே எழுந்து…

நியாய அநியாயம் பேசும் மன உறுதி அவள் “கௌரி சரித்திரம்” புத்தகத்தைக் கிழித்து தன அப்பாவின் கருத்தை எதிர்க்கும் விதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. சமையல்காரர் மீது பரிவும், பாசமும், அம்மா மீதும், அப்பா மீதும்…தன்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே  என்ற வருத்தமும் நிறைந்து…இவர்களின் பிடிவாதத்தால் தனது காதலை விடத் துணியாத மனோபலமும் கொண்டவளாக மீனா. எப்படியாவது தனது பெற்றோர்களின் சம்மதம் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளில், தன காதலன் ராகவன் மீது கொண்ட நம்பிக்கையில் வீட்டை விட்டு ஓடிப் போகவும் துணிந்த  துணிச்சல்காரியாக மீனா காட்டப் படுகிறாள்..

“அப்பா அம்மா பார்த்துப் பண்ணி வைக்கப் போறதும் எவனோ ஒருத்தன் தானே? அவன் மட்டும்என்னைக் கைவிட மாட்டான்னு என்ன நிச்சயம்? அவனை நம்பி அப்பா அம்மாவை விட்டுட்டுக் கிளம்புற ஒரு பொண்ணு கல் மனசுக்காரி இல்லேனா, தானே தேடிண்ட ஒருத்தனோட கிளம்பிப் போயிடற பொண்ணு மட்டும் கல்மனசுக்காரி ஆயிடு வாளா?”…மீனாவின் அனல் பறக்கும் வார்த்தைகள், தான் செய்யத் துணிந்த காரியத்திற்கு நியாயம் சொல்வது போலிருக்கிறது.

காதலனாக ராகவன்:

மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரமாக ராகவன்… .”படிப்புக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை” என்றும்… தான் நேசிக்கும் பெண்ணே  தனக்கு  துணைவியாக வர வேண்டும் என்ற உந்துதலில்  “ஒரு பெண்ணை வற்புறுத்தி இன்னொருத்தனுக்குக் கட்டிக் கொடுக்கிற வழக்கம் என்னிக்குத் தான் நிக்குமோ, தெரியல்லே..ஊருக்கு ஒரு பாரதியார் பிறக்கணும் போல இருக்கு ” என்று தன்  ஆற்றாமையை சொல்லும் இடத்திலும் , தனது கண்ணியத்தை ஊர்ஜிதம் செய்ய “அதோ , என் மேஜை மேலே இருக்கிற சுவாமி விவேகானந்தர் படத்தை சாட்சியா வெச்சு நான் உங்களுக்கு வாக்குறுதி குடுக்கிறேன்..மீனாவுக்கு சிறு தீங்கும் நேராது ” என்று சொர்ணத்திடம் சொல்லும் போது  நேசத்தின் நிஜம் உணர முடிகிறது. கடிதம் விடு தூது , தூக்க மாத்திரை திட்டம்…எல்லாம் நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்கிறார் ராகவன்.

“ஒரு பொண்ணு மேலே ஒரு ஆணுக்கு ஏற்படற அன்பை உம்ம வாழ்க்கையிலே ஒரு முறையாவது நீர் உணர்ந்திருந்தா எங்க ஏமாற்றம் உமக்குப் புரியும்…நீ பிரும்மச்சாரியாவே உம்ம காலத்தை கழிச்சுட்டீர்.”  என்று சொர்ணத்தின் மனசுக்குள் அமிழ்ந்திருக்கும் சோகத்தை சுகமாக வெளிப் படுத்தக் காரணாமாக இருந்த ராகவன் “நீங்களே எங்க திட்டத்துக்கு உதவி செய்யலேன்னா வேற எப்படி நாங்க எங்க காரியத்தைச் சாதிக்கிறது?” என்று கொக்கி போட்டு தன பக்கம் இழுத்த விதம் அருமை. நினைத்ததை முடிப்பவனாக  ராகவன்.

சமையல்காரராக சொர்ணம் :

இவர் தான் இந்தக்  கதையைத் தாங்கும் கோபுரத் தூண் என்று அழுத்திச் சொல்லலாம். முப்பத்தி ரெண்டு வருஷமா ஒரே வீட்டில் சமையல் செய்து அந்த வீட்டில் ஒருவராகவே வளைய வரும் சொர்ணம். மீனாவைத்  தன் மகளாக பாவித்து வளர்த்து வந்த பாசம் பல இடங்களில் வெளிப் படுகிறது. நிறைய படித்திருந்தும் இவர்கள் வீட்டோடு இருக்கும் விசுவாசம், மகளது காதலை எதிர்க்கும் தந்தையைத் தானும் எடுத்துச் சொல்லி அவர் சம்மதிக்க வேண்டுமே என்ற நப்பாசையில் தான் வாங்கிக் கட்டிக் கொள்வது, எப்படியாவது அம்மா, அப்பா மனம் கோணாமல் நடந்து கொள்ள மீனா விடம்  எடுத்துச் சொல்லும் விதம், அவளது காதலன் ராகவனிடம் “இவராவது கேட்க மாட்டாரா “என்று அவர் மனதை மாற்ற ஒரு சந்தர்ப்பமா மீனா கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தூது போவது. அங்கு ராகவன் தன மனதை மாற்றி திருப்பி அனுப்பும் போது  மீனாவிடம் வாதாடுவது கதைக்குப் புத்துயிர் ஊட்டுகிறது.  சிறு கதா பாத்திரமும் செயற்கரிய செயல் செய்து கதைக்கு மெருகூட்ட முடிகிறது.

அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ‘தியாக பூமி’ படமும், அதைத் தொடர்ந்து ‘நானும் பார்த்தாலும் பார்த்தேன் அம்மா மேலே கேஸ் போட்ற அப்பாவை இப்பத் தான் பார்த்தேன்..” என்று குழந்தை சாரு  கோர்டில் சொன்னதும் சொர்ணம் நினைவுக்குக் கொண்டு வந்து, ‘கடவுளே..! அப்பாவும், பெண்ணும் ஒருவர் மீதொருவர் கேஸ் போடும் காலமா இது “?  என்று வியந்து காலத்தின் படிமத்தைச் சொல்கிறார்.

அதிலும் மீனாவின் அன்பு தான் வெல்கிறது. இறுதியாய், உறுதியாய் அவர்களது நல்ல வாழ்வுக்குத் தன்னால்  உதவ முடியுமோ, அவர்கள் சொன்ன படி இரவு உணவில் தூக்க மாத்திரைகளை சுப்பராமனுக்கும், அலமேலு அம்மாவுக்கும் தெரியாமல் கலந்து கொடுத்து உறங்கச் செய்து விட்டு மணப்பெண் மீனாவை ராகவன் சொன்னபடி அவரது தங்கை வீட்டுக்கு, பழனிக்கு அனுப்பி வைக்கறார்.

ஒரு விதத்தில் மீனாவின் காதலை சேர்த்து வைத்த நிம்மதி இருந்தாலும், இத்தனை காலம் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு மேலோங்கி தான் ஒரு கடிதம் எழுதி விட்டு சமையல்காரர் தற்கொலை செய்து கொள்வது உள்ளத்தைத் தொடுகிறது..

யாரையும்  காட்டிக் கொடுக்காமல் போலீசுக்கும் வேறு மாதிரியாக ஒரு கடிதம் “தனது தற்கொலைக்கு தனது வயிற்று வலி தான் காரணம் ” என்று சொர்ணம் பொய் சொல்லுவதை நாம் மன்னித்து விடலாம்.

தன்  உயிரை விடத் துணிந்தவர் தனது இறுதி வேண்டுகோளாக “மீனாவை விரைவில் அழைத்து வந்து அந்தப் பையன் ராகவனுக்கே அவளை மணமுடித்து வையுங்கள் “என்று  ஆசீர்வாதமாக எழுதியதைப் படித்ததும் கண்களைக் கண்ணீர் மறைக்க சுப்பராமன் நாற்காலியில் தொப்பென்று விழுவது சொர்ணத்தின் குறிக்கோள் வெற்றியைக் காட்டுகிறது. .

இந்த முடிவு அவர்கள் வீட்டில் விரைவில் ஒரு புரட்சிகரமான திருமணம் வெற்றிகரமாக நடக்கப் போகுது என்பதைச் சொல்வதாக இருக்கிறது.

இந்தச்  சிறு கதையில், பெண்கல்வி,காதலைத் தொடர்ந்து, மன உறுதி, துணிச்சல், முடிவெடுக்கும்  தீர்க்கம், மனவேதனை, காதல் தோல்வி, மகள் மீது கொண்ட நம்பிக்கை, காதலன் மீது கொண்ட நம்பிக்கை, சாதி வெறி, ஆணாதிக்கம், ஏக்கம், தியாகம்..இன்ப முடிவுஎன்று கதை முழுமை அடைகிறது.  ஒரு நிறைவைத் தந்த சிறுகதை.  கதை முழுவதும் நிழலாய், ஆரத்தின் நூலாய் வரும் சொர்ணம்..முடிவில் ஒளிவீசுகிறார்.   உயிர்த் தியாகம் என்ற போது மன வருத்தத்தைத் தந்தாலும் “அரியும் சிவனும் ஒண்ணு” என்பதைச் சொர்ணம் மூலம்  நிலைநாட்டிக் காட்டுகிறார் கதாசிரியர்..  கதையில் வினையூக்கி சிறுபாத்திரம் சொர்ணமே.

ஒரு உயிரின் அழிவில் தான் இன்னொருவரின் வாழ்க்கை ஆரம்பம் என்று அறிந்ததும் ராகவனும், மீனாவும் அவசரப் பட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. ஆஹா…..இந்தத் தாக்கம்  எல்லாம் தான் கதையின் வெற்றி அல்லவா..!

இந்தக் கதையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களைத்  தான் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். நாற்பத்தி ஐந்து வருடங்கள் பின்நோக்கிச் சென்று படித்து விட்டு நிகழ் காலத்திற்கு வந்த போது  புரிகிறது.  காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் விஞ்ஞான தொடர்புத் துறையில் முன்னேறி இருப்பது போல, மனித மனங்கள் எத்தனையோ விஷயங்களில் பின்நோக்கிச் சென்று விட்டது தான் நிஜம்.

பெண் கல்வி நன்கு வளர்ந்து முன்னேறிவிட்ட நிலையில், காதல் ஜாதியைத் தாண்டி மதத்தையும் தாண்டி குதித்துக் கொண்டு முன்னேறி விட்டது. ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு உயிர்த் தியாகம் செய்வ தெல்லாம் அந்தக் காலத்தில் நடந்திருப்பதை எண்ணினால்….இப்போது ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு உயிரை எடுப்பதில் முன்னேறி இருப்பது தெரிகிறது.

அந்தக் காலத்துக் காதல் தூதுவர்களை அதாவது கடிதம் எழுதி கொடுத்து அனுப்பிவிட்டு பதிலுக்காகக் காத்திருப்பது, தோற்றுப் போவோம் என்று தெரிந்ததும் தூக்க மாத்திரையைத் தேடுவது.என்று மீண்டும் நீண்ட காலங்கள் கழித்து இவர்களை சந்திக்கும்  ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இப்போது பெற்றோர்களின் சம்மதம் என்பது தேவையற்றதாகத் அவர்களுக்குத் தோன்ற…நான்கு நண்பர்கள் சாட்சிக்கு இருந்தால் ஒரு கல்யாணம் என்ற நிலை கூட பரவி வருகிறது.

முதலில் முப்பத்தைந்து வருடம் ஒரே வீட்டில் வேலை செய்யும் நல்ல உள்ளங்கள் இன்றைய கால கட்டத்தில் காண்பது அரிது. தியாகம், பாசம், அன்பு , உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்று உயிரை விடவும் துணிவது இதெல்லாம் தற்போது இப்படிக் கதைகளில் படித்தால் தான் உண்டு.

பெரிய திரைப் படங்கள் சுருங்கி சின்னத் திரையாகி விட்டது போல பரந்திருந்த மனிதர்களின் உறவுகளும், உணர்வுகளும் கூட சுருங்கிப் போய் சுயநலத்தின் காப்சூல் ஹார்ட்டாகப்  மாறிக்   கொண்டிருப்பதால் இது போன்ற மனித மனங்களை மேம்படுத்தும் கதைகளைப் படித்தாவது நமது மனத்திற்கு உணர்வுகளுக்கான உரமிடலாம்.

அருமையான தமிழில் நல்ல கற்பனை வளத்தில் எழுதிய சொல்லாடல்களைக் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்தின் சிறப்பைச் சொல்லும் முகமாக என்றென்றும் ஏட்டில் நிலைத்துவிட்ட ஒரு யதார்த்தமான  இந்த சிறுகதை இலக்கியத்தை  அவசியம் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புத்தகத்தின் தலைப்பு: “வித்தியாசமானவர்கள்”

மிக்க நன்றி.

Series Navigationகிளைகளின் கதைஎன் அருமைச் சகோதரியே ரிசானா..!