டெனிஸ் ஜான்சன் கவிதைகள்

தமிழில்: ட்டி. ஆர். நடராஜன் 

1. ஏறுதல் 

நடப்பவர்களுக்கான சாலைக் கோடுகளின் மேல் விழும்

வெண்மேக நிழலுக்குக் கீழே ஒரு நாள் விழுந்து கிடப்பேன் 

சாலைமேல் எனது மருந்துகள் அடங்கிய பையிலிருந்து

மாத்திரைகள் சிதறி விழும்.

ஒய்வு பெற்ற  கிழங்களும், 

மெக்சிகோ இளைஞர்களால் ஆன தெருக் கும்பலும்

என்னைத் தின்னும் வியாதிகளைப் பார்ப்பார்கள்.

என் உள்ளாடையையும், சிலந்தியின் வலையெனப் 

படர்ந்திருக்கும்  கிழவிக் கால் நரம்புகளையும் பார்ப்பார்கள்.

ஆகவே இளைஞனான கறுப்பின டிரைவர் அவர்களே !  

நான்  பொருட்படுத்துவதெல்லாம் இதுதான்:

இருக்கையின் மேல் வைத்திருக்கும் என் 

பொருட்களைப் பார்த்துக் கொள்ளவும்.

ஏனெனில் சொர்க்கத்திலிருந்து விழும் 

வெள்ளியென நினைத்து இந்த உலோகக் கம்பத்தைக்

கெட்டியாகப் பிடித்துக் கொண்டு 

ஆடை பிறழ நான் தொங்குகிறேன்.

என் அன்பே, எனது மருந்துகளை 

ஒரு வினாடி கவனித்துக் கொள்கிறாயா?

நான் நாலடி உயரம்.

ஆனால் இந்த பஸ் உயரமானது.

ஒரே வெக்கையாக இருக்கிறது.

இன்று அவர்கள் உருவாக்கும்எல்லா நோய்களும்

என்னை வந்தடைந்து விட்டன. கடவுளே ! 

என்ன ஒரு இரத்தல் மிகுந்த என் வாழ்வு !

2. விரைவில் வந்தடையும் முதுமை 

குளிர்சாதனப் பெட்டியில் அருந்த எதுவுமில்லை.

கெட்டுப்போன ஊறுகாயின் ரசம்  அல்லது தக்காளிச் சாறு இருக்கிறது.

நான் வயதானவனாக உணருகிறேன்.

நான் நிச்சயமாக இளமையுடன் இருந்தாலும்.

பல வசந்தங்களைக் கடந்த நினைவு வருகிறது.

குளிரும் வறட்சியும்  முதலைகளாகத்

தளர்ந்த என் உடம்பில் ஊர்கின்றன.

நான் தொடர்ந்து வெற்றி பெறுபவன் அல்ல

ஆம் நான் அப்படியில்லை

என் மனைவியின் குரல் காதில் விழுகிறது

‘சீ சனியனே !’ என்கிறாள் ஸ்டவ்விடம். “நின்று தொலை.”

எனக்கு வயதாகி விட்டது. மேலும்

எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்படுகிறேன்.

பறவைகள் தடுமாறியபடி வீழ்வதற்கென்று இயங்குகின்றன.

உங்கள் கார் சேதமுற்று எரிந்து கொண்டிருக்கிறது.

புழுதி படர்ந்த இடங்கள் சுற்றுமுற்றும் .

எப்போதும் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்னும் எனது ஆவல்

மனைவியின் வசைகளை வீசும் குரல் சமையல் அறை எங்கும் 

நாமெல்லோரும் வியக்கிறோம், 

எதற்காக  நம் பெரும் உடல்களுடன்  ஒருவர் மீது ஒருவர் 

நெருக்கி அடித்துக் கொண்டு கூட்டமாய்ப் போய் விழுகிறோம் என்று.

கட்டில்கள் கனம் தாளாமல் முனகுகின்றான .

நாம் நழுவியபடியே காரியமாற்றாமல் சென்ற காலம் போய்விட்டது. 

புழுதியைப் போல விரிப்புகளில் கரைந்து உலர்ந்து போய் விடுகிறோம் –

சமயலறையுள்,  எங்குமற்ற பெரு வெளியில்.   

Series Navigationபுனிதக் கருமாந்திரம்பீதி