ட்ராபிகல் மாலடி 

 

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம் –  

தாய்லாந்து மொழிப்படமான இந்த மூன்றாம் பாலினத் திரைப்படம், 2004-இல், பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்படவிருது விழாவில் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களில், பாதிப் பேர், பாதிப் படத்திலேயே, எழுந்து போய் விட்டார்கள். படம் முழுக்கப் பார்த்த மக்களில், மீதிச் சிலரோ, படத்தைப் பார்த்துவிட்டு, ஒருவித சலிப்புக் குரலுடன் எழுந்து போனார்கள். ஆனால், இத்தனை சலிப்புக்களையும் தாண்டி, அந்த கேன்ஸ் திரைப்பட விழாவின், நடுவர் தேர்வுக்குழு, இந்தப்படத்திற்கு, நடுவர் தேர்வு சிறப்புப் பரிசைக் கொடுத்தபோது, இந்தப் படம், உலகத்தின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது என்பது வரலாறு. 

 

படத்தில் அப்படி என்னதான் சிறப்பு? இந்தப் திரைப்படத்தின் திரைக்கதை, உலகத்தில் எடுக்கப்பட்ட, எல்லாத் திரைப்படங்களும், எப்போதும் பின்பற்றும் திரைக்கதை பாணியின், இலக்கணத்தைத் தூக்கி, குப்பையில் போட்டு விட்டு. ‘இதுதான் எனது திரைக்கதை பாணி.. பார்த்து ரசிப்பது உங்கள் இஷ்டம்’ என்று ஒரு தெனாவட்டுடன் சொல்லும் ஒரு படம்தான், ட்ராபிகல் மாலடி என்ற, இந்த தாய்லாந்து திரைப்படம். 

 

திரைக்கதைகளில், பொதுவாக இருக்கவேண்டிய, லாஜிக் என்ற விஷயம், இந்தப்படத்தில் அங்கங்கே காணாமல் போய் விடுகிறது என்பது என்னவோ உண்மைதான். வசனத்தைச் சுருக்குவதில், நமக்கு, பிரபல இயக்குனர் மணிரத்னத்தைத்தான் தெரியும். ஆனால், இந்தப் படத்திலோ, அவரையும் தாண்டி, மிகக்குறைந்த வசனத்தையே. படத்தின் இயக்குனர் எழுதி இருக்கிறார். அந்தக் குறைந்த வசனத்திலும், ஒரு பகுதி வசனத்தையே, படத்தின் கதாபாத்திரங்கள், வாய் விட்டுப் பேசுகின்றன. சில வசனங்கள், மௌனப் படக் காலத்தில் வரும், துணுக்குச் செய்திகள் போல, நமக்குக் சொல்லப்படுகின்றன. ஒரு சில வசனங்களுக்கு, குரங்கு வாயசைக்கிறது. அப்புறம் புலி வாயசைக்கிறது. சில நேரங்களில், இயக்குனரே பேசுகிறார். லாஜிக் என்ற கதைக்கோர்வையை எதிர்பார்த்து, எதிர்பார்த்துப் பழகிப்போன நமக்கு, இயக்குனரின் இந்தத் தெனாவட்டு அணுகுமுறை, சற்றே எரிச்சல் அடையச் செய்து விடுகிறது என்பது என்னவோ உண்மைதான். 

 

ஆனால், படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என்ற ஊகத்தொடு, நாம் படம் பார்க்க ஆரம்பிக்கும்போது, இயக்குனரின் திறமையைப் பார்த்து நாம் அசந்து போகிறோம். ஒவ்வொரு ஃப்ரேமுக்குள்ளும், அவர் காட்டும் தனிப்பட்ட முத்திரைகளை, நாம் பாராட்டத் தொடங்கி விடுகிறோம். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தில், நாம் இருக்கையின் விளிம்புக்கு வந்து விடுகிறோம். 

 

கதை என்னவோ, இரண்டு ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கைக் காதலர்களின், காதல் கதைதான். எனினும், அது ஒரு பேய்க்கதையாக சொல்லப் படுவதுதான் இந்தப் படத்தின் முதல் சிறப்பு. நாம், இதுவரைப் பார்த்த பேய்ப்படங்களில் எல்லாம், படத்தின் பின்னணி இசையே, அதன் பயங்கரமான குரலில், நம்மை அடிக்கடி வந்து வந்து பயமுறுத்தும். “வீல்..”, “க்ரீச்”, “ம்ம்”, “ஹாஹா”, “ஐயோ அம்மா” இப்படி ஏதாவது ஒரு பின்னணிக் குரல்கள்தான், பொதுவான பேய்க் கதைகளில் பயன்படுத்தப்பட்டும் இருக்கும். இப்படிப்பட்ட பயங்கரமான குரல்களின் மூலம், படம் பார்க்கும் நம்மைப் பயமுறுத்தி, இருக்கையின் விளிம்புக்கு, நம்மை, படத்தின் இயக்குனர்கள் கொண்டு சேர்ப்பர். ஆனால், இந்தப்படத்திலோ, அப்படிப்பட்ட எந்தவித’ இசை நுணுக்கங்களையும், இயக்குனர், அதிகமாகப் பயன்படுத்தவே இல்லை. இருந்தாலும், படத்தின் சில காட்சிகளில், நாம் உண்மையிலேயே நடுங்குகிறோம். இந்த இடத்தில்தான், இயக்குனரின் தனி முத்திரையும், திறமையும், நமக்கு நன்கு புலப்படுகிறது.  

 

ஆம். கதையின் முதல் பகுதியில், இசை அங்கங்கே வந்து போனாலும், கதையின் இரண்டாம் பகுதியில், மலை சூழ்ந்த, அடர்ந்த காட்டை மட்டுமே, காட்டில் ஏற்படும், அந்த இயற்கையான ஒலிகளை மட்டுமே, பின்னணி இசையில் பெரும்பாலும் தந்து, தனது, தனி முத்திரையைப் பதிக்கிறார், படத்தின் இயக்குனர். ஒரு அடர்ந்த காட்டின் மௌனத்தை, படத்தின் பின்னணி இசை ஆக்கி, நம்மை பயமுறுத்த முடியுமா என்றால், முடியும் என்று சொல்லி, அதில் வெற்றியும் பெறுகிறார், படத்தின் இயக்குனர், அபிசாட்பாங் வீரசெதகுள்.  

 

கதையின், இரண்டாம் பகுதி, காட்டிற்குள்தான் தொடங்குகிறது. நாயகன், காட்டிற்குள் நடந்துகொண்டே இருக்கிறார். அடர்ந்த அந்தக் காட்டின் இயற்கையான, கிளைகளின் சத்தமும், இலைகளின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், பின்னணி இசையாக, நடந்து கொண்டிருக்கும் கதாநாயகனைப் பின்தொடர்ந்து போகிறது. காட்சிகளின் மௌனம், பாட்டிகளிடம் கதை கேட்டு, கதை கேட்டுப் பழகிப் போன நமக்கு, இப்போது போரடிக்கிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாய் ,அந்த மௌனத்தின் தாக்கமே, ஒரு பயங்கர வடிவம் பெறுகிறபோது, நமக்கு படத்தின் மீது ஆர்வம் வந்து விடுகிறது. அதுவும், இறுதிக் காட்சிகளில், புலி வடிவத்தில் வரும், அந்த சாமான் பேயின் கோரப்பார்வை… படத்தின் வெற்றி, அந்த இடத்தில்தான் தொடங்குகிறது. 

 

படத்தின் கதைச் சுருக்கம் இதுதான். தாய்லாந்து இராணுவத்தில், வீரராகப் பணிபுரிகிறார், படத்தின் முதல் கதாநாயகன் கெங். தாய்லாந்து நாட்டின், ஒரு பெரிய, அடர்ந்த வனச்சரகத்தில், ஆடுகள், மாடுகள், மனிதர்கள் என யாராவது ஒருவர் இறந்து கொண்டே இருக்கிறார்கள். அதன் காரணத்தைக் கண்டு பிடிக்கும் பொறுப்பு, தாய்லாந்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட, அந்த ராணுவப்பிரிவின், ஒரு வீரராக, வந்து சேருகிறார், படத்தின் முதல் கதாநாயகன் கெங்.  

 

வனச்சரகத்தின் அருகிலேயே வசிக்கிறார், இரண்டாம் கதாநாயகன் டாங். ஓரினச்சேர்க்கை விரும்பிகளான கெங்கிற்கும், டாங்கிற்கும் இடையில், ஓரினச்சேர்க்கைக் காதல் மலருகிறது. கதாநாயகன்கள் இருவரின் ஓரினக்காதல் காட்சிகளோடு, படத்தின் முதல் பகுதி முடிந்து போகிறது. முதல்பகுதியின் இறுதியில், இரண்டாம் கதாநாயகன் டாங், கொஞ்சம் கொஞ்சமாய், காட்டுக்குள் காணாமல் போகிறார். அடுத்தநாள் காலை, வழக்கம் போல் ஒரு மாடு, அடித்துக் கொல்லப்படுகிறது. மாட்டைக் கொன்றது, காட்டுக்குள் மறைந்து இருக்கும், சாமான் என்ற மந்திரவாதப் பேய்தான் என்று ஊர் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். 

 

படத்தின் இரண்டாம் பகுதியில்தான், சாமான் என்ற அந்த மந்திரவாதப் பேய் வருகிறது. தனக்கென ஒரு உருவம் இல்லாத அந்த சாமான் மந்திரவாதப் பேய், ஆடு, மாடு, மனிதன் என்ற எல்லா மிருகங்களின் மூளையைத் தனது வசமாக்கி, அந்த மிருகமாகவே மாறி, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வாழ்கிறது. காட்டில் காணாமல் போகும், அல்லது மர்மமான முறையில் கொல்லப்படும், அத்தனை மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும், காரணம் ஆக இருப்பது, இந்த சாமான் பேய்தான். அப்படிக் காணாமல் போன, இரண்டாம் கதாநாயகன் டாங்கின் உருவத்துக்குள், இப்போது சாமான் பேய், இடம்பெயர்கிறது. 

 

சாமான் பேய் குறித்துச் சொல்லப்படும் கதைகளை நம்பாத, ராணுவ வீரரும், முதல் கதாநாயகனும் ஆன கெங், மனிதர்கள் மற்றும் விலங்குகளைக் கொல்லும் ஒரு புலியைத் தேடி காட்டுக்குள் செல்கிறார். அடர்ந்த வனத்தில், அங்கேயும், இங்கேயும் அலையும் முதல் கதாநாயகன் கெங், நிர்வாணமாய் அலையும், இரண்டாம் கதாநாயகன் டாங் வடிவத்தில் இருக்கும் சாமான் மந்திரவாதியைச் சந்திக்கிறார். இருவரும், ஒருவரையொருவர் தாக்கி, மூர்க்கத்தனமாக சண்டையிடுகிறார்கள். சண்டையின் முடிவில், இரண்டாம் கதாநாயகன் டாங்கை விட்டு விலகும் சாமான் பேய், அதன் பின்னர், பசு, மின்மினிப் பூச்சி என்று மாறி, மாறி இடம்பெயர்ந்து, கடைசியில், புலிக்குள் புகுந்துகொள்கிறது. இறுதிக்கட்டமாக, அந்த பயங்கரமான புலியை, எதிர் கொள்கிறார், முதல் கதாநாயகன் கெங். கெங் பிழைத்தாரா, சாமான் பேய் என்னவாயிற்று என்பதை, திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

 

காதல் காட்சிகள் என்பதால், படத்தின் முதல் பகுதியை, வண்ணமயமான வெளிச்சத்திலும், பேய்க் காட்சிகள் என்பதால், படத்தின் இரண்டாம் பகுதியை, வனத்தின் இருட்டுக்குள்ளும் எடுத்து அசத்தி இருக்கிறார், படத்தின் இயக்குனர். படத்தின் முதல் பகுதியில் ஒரு காதல் கதை, இரண்டாம் பகுதியில் ஒரு பேய்க்கதை என்று வித்தியாசம் காட்டும் இயக்குனர் அபிசாட்பாங் வீரசெதகுள். அந்தக் கதைத் தாவலை, கொஞ்ச நேரத்திற்கு, வெற்று பிலிமை ஓடவிட்டுக் காட்டி இருப்பது, இந்த இயக்குனரின், தைரியமான, தனித்துவமான, ஒரு கலைநுணுக்கம் ஆகும். 

 

“நாம் அனைவருமே, இயற்கையில், மூர்க்கத்தனமான மிருகங்கள்தான். மனிதத்தன்மையின் கடமை என்பது, அந்த விலங்குத்தன்மையில் இருந்து விடுபடுவதற்கு ஏதுவாய், தம்மைப் பழக்கிக் கொள்வதுதான்” என்று தத்துவம் பேசும் இயக்குரின் மூளைத்திறத்தை, காட்சிக்குக் காட்சி நாம் பார்த்து மகிழ்கிறோம் என்றால், அது மிகையாகாது.  

 

ஓரினக்காதல் செய்யும் அந்த இரண்டு கதாநாயகர்களான, பன்லாப் லோம்னாய் மற்றும் சட்கா கேபோடி இருவரும், தத்தம் பங்கை சரிவரச் செய்து இருக்கிறார்கள். அதில் கெங் ஆக வரும், கதாநாயகன் பன்லாப் லோம்னாயின் நடிப்பு, மிகவும் பாராட்டத்தக்கது. ஒரு அடர்ந்த காட்டைச் சுற்றி சுற்றி வந்து இருக்கும், பின்னணி இசையையும், ஒளிப்பதிவையும் நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 

 

மூன்றாம் பாலின ஆசியக் கதைகளில், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கும் இந்தப்படம், உலகின் பல்வேறு விருதுகளைப் பெற்று இருப்பதோடு, தாய்லாந்தின், தேசியப் பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் படம் என்ற விசயத்தையும், இங்கே குறிப்பிட்டு ஆகத்தான் வேண்டும்.  

 

அழகர்சாமி சக்திவேல் 

Series Navigationகேட்பாரற்றக் கடவுள்!