தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

         

                                 

         என்னும் சமண்மூகரும் நான்மறையோர்

              ஏறும், தமிழ்நாடனும், ரகுமரபில்

          பொன்னும் பெருநம்பி குலச்சிறையும்

                போய் வைகையின் வாதுகளம்புகவே.          211

[மூகர்=வறியர்; நான்மறை=நான்கு வேதங்கள்; ஏறு=காளை; ரகு=சூரியன்; மரபு=குலம்; வாது=போட்டி; களம்=இடம்]

என்று சூளுரைத்த சமணர்களும், நான்கு வேதங்கள் கற்ற ஆண்சிங்கம் ஞானசம்பந்தரும், தமிழ்நாடனாகிய மதுரைப் பாண்டியனும், சூரியகுலத் திலகமான குலச்சிறையாரும் வைகை ஆற்றின் கரையில் வாதுபோர் நடக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.

            கனலில்புகும் ஏடுஇறை கண்ணில் மதன்

                கைஅம்பென வெந்தன கையர்இடப்

            புனலில் புகும்ஏடு இறை வைகையுடன்

                போகாவிடி னும்கடல் புக்கனவே.               212

சமணர்கள் ஓலையில் எதையோ எழுதி தீயில் இட்டனர். அது சிவபிரானின் நெற்றிக் கண்ணாகிய நெருப்புக்கு ஆளான மன்மதனின் அம்பு போல எரிந்தது. அவர்கள் மந்திரம் எழுதி இட்ட ஏடும் வைகையாற்றின் கிளைநதியான பாம்பாற்றுடன் கலந்து கடலில் போய்ப்புகுந்தது.

===================================================================================

               பொற்பு அங்கு அனலிற்புகும் ஏடுறவும்

                      புனலில்புகும் ஏடெதிர் போகவும் ஏழ்

                வெற்பும் பிளவுஓட ஒலித்தவால்

                      வேதங்களும் ஐம்பூதங்களுமே.                 213

[பொற்பு=பொலிவு; வெற்பு=மலை; கந்த மாதனம்=ஏழு மலைகள்]

திருஞானசம்பந்தர், “போகமார்ந்த பூண்முலையாள் தன்னோடும்” என்னும் தேவாரம் பாடி ஏட்டை நெருப்பில் இட்டார். அது வெந்து போகாது பொன் போலப் பொலிவுடன் திகழ்ந்த்து.  “வாழ்க அந்தணர் வானவரானினம்” எனும் தேவாரப் பதிகம் பாடி ஏட்டை வைகை ஆற்றில் இட்டார்.  அது நீரோடு போகாது நீரை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்னும் இடத்தில் கரை ஏறியது. அப்போது வேதங்களும் ஐம்பூதங்களும் முழங்கின.

                  மேல்நின்ற சுராசுரர் ஆர்த்தனரே

                        திருமாலும் விரிஞ்சனும் ஆர்த்தனரே

                  பால்நின்ற சராசரம் ஆர்த்தனவே

                        பதினால் உலகங்களும் ஆர்த்தனவே.             214

[சுராசுரர்=சுரர்+அசுரர்; தேவர், அசுரர்; விரிஞ்சன்=பிரமன்; பால்=பக்கம்; சராசரம்=சரம்+அசரம்; சரம்=அசைவு; அசரம்=அசைவற்ற]

வானுலத் தேவர்கள் அசுரர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். திருமாலும் பிரமனும் மகிழ்ச்சிப் பேரொலி எழுப்பினர். அவர்கள் பக்கம் இருக்கும் பதினான்கு உலகங்களும் மகிழ்ச்சியடைந்தன.

                  வாராய் இவர்ஆகம துல்லபமும்

                        வரும் எங்கள் சிவாகம வல்லபமும்

                  பாராய்; வழுதீ! இதுபார் உருவத்

                        திருவிக்ரமும் இன்று படும்படியே.               215

[ஆகமம்=சாத்திர நூல்; துல்லபம்=பயனற்றது; சிவாகமம்=சைவ சித்தாந்தம்; வல்லபம்=வல்லமை]

”மன்னனே! இந்தச் சமணர்களுடைய சாத்திர நூல்களின் பயனற்ற தன்மையையும், எம் சைவ சித்தாந்த்த்தின் வல்லமையையும் தெரிந்து கொள்வீர். இது இந்த மூவுலகமும் அறிய வந்த வெற்றியாகும்” என்று பாண்டிய மன்னனிடம் திருஞான சம்பந்தர் கூறினார்.

=====================================================================================                  ஒரு கூன்மிசை வைத்த திருக்கை புறத்து

                        ஒரு கூன்மிசை வைத்தனர் வைத்தலுமே

                  இருகூனும் நிமிர்ந்தன, தென்னவர்கோன்

                        முதுகும், தடமார்பும் இடம்பெறவே.              216

[கூன்=வளைவு; புறம்=முதுகு; இடம் பெறவே=ஏற்றம் பெறவே]

திருஞான சம்பந்தர் திருநீறு பூச பாண்டியனின் மார்பிலும் முதுகிலும் கை வைத்தார், அவர் வளைந்திருந்த இடத்தில்  கை வைத்ததும், முன்னும் பின்னும் இருந்த கூன் இரண்டும் நிமிர்ந்து நேராகின.

=====================================================================================                  ஆதிச் செழியற்கு ஒருகைம்மலர் பொன்

                        அடையப் புகலிக்கின்ற வெப்பஅழலால்

                  வேதிக்க உடம்பொரு பொன்மயமாய்

                        ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே.               217

[ஆதி=முன்பு; செழியன்=பண்டியன்; புகலி=சீர்காழி; வேதிக்க=தடவ]

முன்பு ஒஉர் பாண்டிய மன்ன்ன் பொற்கை பெற்றமையால் பொர்கைப் பாண்டியன் என்று பெய்ர் பெற்றான். இப்பொழுது சம்பந்தர் திருநீறு இட்டுத் தடவ, இப்பாண்டியன் பொன்னாகி ஒளி வீச  விளங்கினான்.

=====================================================================================                  ”வேதப் பகைவர் தம்உடம்பு

                        வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்கு

                  ஏதப்படும் எண்பெரும் குன்றத்து

                        எல்லா அசோகும் எறிக” எனவே.                 218                                                    

[வீங்க=பருக்க; தூங்கும்=தொங்கும்; வெம்=கொடிய; கழு=கழுமரம்; ஏதம்=குற்றம்; எட்டுமலைகள்=ஆனை மலை. நாக மலை, பசுமலை, நீல மலை, சுணங்க மலை; திரிகூட மலை, ஏமகூட மலை, காஞ்சிமலை; எறிக=வெட்டுக]

’வேதத்திற்கு விரோதிகளான சமணர்கள் உடல் பருக்கும்படிக் கழுமரத்தில் தொங்க விடுவதற்கு எட்டு மலைகளிலும்  உள்ள அசோக மரங்களை வெட்டிக் கொண்டு வருக” என்று மன்னன் ஆணையிட்டான்.

=====================================================================================                  மண்ணா உடம்பு தம்குருதி

                        மண்ணக் கழுவின்மிசை வைத்தார்

                  எண்னா யிரவர்க்கு எளியரோ

                        நாற்பத் தெண்ணா யிரவரே.                      219

[மண்ணுதல்=கழுவுதல்; மண்ணா=குளிக்காத]

நீராடிக் குளிக்காத சமணர் உடல்களில் வழியும் இரத்தமே அவர்கள் உடலைக் குளிப்பாட்ட அவர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். எண்ணாயிரம் சமணர்களுக்கு நாற்பத்தெண்ணாயிரம் சிவனடியார்கள் இளைத்தவர்களா?

                  ”கொன்று பிள்ளைஊர் புக்கார்

                        குண்டர் நரகக் குழிபுக்கார்”

                  என்று சொல்லி அகிலகலா

                              வல்லி இறைஞ்சி இருத்தலுமே.         220

[புக்கார்=அடைந்தார்]

”சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்று திருஞான சம்பந்தர் தம் ஊரான சீர்காழியை அடைந்தார். சமணர்கள் நரகம் புகுந்தனர்” என்று சகலகலாவல்லியான கலைமகள் சொல்லி முடித்து இறைவியை வணங்கி இருக்க;

                        தெம்முன் சென்று நம்பிள்ளை

                              செய்த தொருபோர் செப்பினையால்

                        நம்முன் தவள முளரிமிசை

                              இருக்கப் பெறுதி நாமகளே.                221

[தெம்.தெவ்=பகை; செப்பினை=சொல்லினை; தவலம்=வெண்மை; முளரி=தாமரை; நாமகள்=கலைமகள்]

பகைவராகிய சமணர் முன் சென்று, நம் ஞானசம்பந்தர் அவர்களிடம் வாதப்போர் புரிந்து பெற்ற வெற்றிச் செய்தியை நீ சொல்லினை; யாமும் கேட்டு மகிழ்ந்தோம்; இனி நீ எம்முன் வெண்தாமரை மலர் மீது வீற்றிருப்பாயாக” என்று தேவி அருள் பாலித்தார்.

Series Navigationதமிழிய ஆன்மீக சிந்தனைகவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதி