தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

 

                       

                                                              வளவ. துரையன்               

                             

                அடையப் பிலநதி கீழ்விழ அண்டத்தடி இடைபோய்

                உடையப்புடை பெயர்வெள்ளம் உடைத்து இக்குளிர்தடமே.   [311] 

 

[பிலநதி=பாதாள கங்கை; உடைய=முட்ட; பெயர்தல்=எழுதல்; தடம்=பொய்கை]

 

இந்தப் பொய்கையின் குளிர்ந்த நீரானது பெருக்கெடுத்துக் கீழே பாதாள கங்கை போல பாதாள உலகம் வரையிலும் மேலே அண்டத்தின் உச்சி வரையிலும் எழும்பும் தன்மை உடையது ஆகும்.

                  அலரோடு அளிதோயாதன இவ்வாவி! அணங்கே!

                  மலரோன் உலகடையப் புடைபெயர் கார்களின் வைப்பே. [312]

 

[அலர்=மலர்; அளி=வண்டு; தோயாத=மொய்க்காத; கார்=மேகம்; வைப்பு=இடம்]

 

     இந்த நீர்ச்சுனை வணடுகள் வந்து மொய்க்காத மலர்களை உடையது; ஊழிக்காலத்தின் முடிவில் பிரமதேவனின் சத்தியலோகத்து மேகங்கள் வந்து நீர் முகந்து கொண்டு செல்லும் இடமும் இதுவே ஆகும்.

           மண்முழுவதும் மேல்வான் முழுவதும் கொண்டதுபோல

           வெண்மதி தினபதி தாரகை விழஎழு சாயையதே.         [313]

 

மதி=சந்திரன்; தினபதி=நாளுக்குத் தலைவனான சூரியன்; தாரை=நட்சத்திரம்; சாயை=தோற்றம்]

இந்தச்  சுனையானது மண்ணையும், விண்ணையும், தன்னுள் கொண்டது போல முழுநிலவு, கதிரவன் மற்றும் நட்சத்திரங்களின் தோற்றமெல்லாம் தன்னுள் விழும் தோற்றம் கொண்டதாகும்.

             நடுவே வருநானாவித ரத்னங்களினால் மேல்

              உடுவேய்தரு ககனாகரர் ஊர்ஒத்துள ஒளியே.              [314] 

      

[உடு=நட்சத்திரம்; வேய்=நிறைந்த; ககனாகரர்=சந்திரன்]

இந்த மலையில் பல்வகை ரத்தினக்கற்கள் உள்ளன. அவற்றின் ஒளிச் சிதறல்களால், நட்சத்திரக் கூட்டங்களால் ஆன சந்திர மண்டலத்தைப் போலவே இச்சுனை பேரொளியில் திகழ்கிறது.  

                

             அந்திப்போது அனையானுடன் ஆடும் திருவே! உன்

             உந்திப்போது இவ்வாவியின் ஊடே ஒரு மலரே.         [315]

 

[அந்திமாலை நேரத்தில் சிவந்திருக்கும் வானத்தைப் போல வண்ணம் உடைய சிவபெருமானுடன் திருநடனம் புரியும் தேவியே! பிரம்மா உதித்த தங்கள் நாபிக்கமலம் இக்குளத்தில் தோன்றிய ஒரு மலரிலே ஆகும்.

                  படைக்கும் திரிபுவனம் பினர்ப் பாழாக எழுந்தங்கு

                  உடைக்கும் பெருவெள்ளங்களின் உற்பத்தியது ஈதே.    [316]       

 

தேவி! தாங்கள் படைத்த மூன்று உலகங்களும், ஊழிக்காலத்தில் தங்களுள் அடங்க எழும் ஊழிப்பெரு வெள்ளம் உற்பத்தியாவதும் இங்கேதான்.

          இவ்வாவியில் இவை செங்குவளைகளே இவை இவைநின்

           மைவார் திருநயனங்களின் வலிபட்டன மிகவே.                  [317]

 

[வாவி=குளம்; மைவார்=மை தீட்டப்பட்ட; வலிபடுதல்=மாறுபடுதல்;

 

இந்தக் குளத்தில் பூத்துள்ள இவையெல்லாம் செங்குவளை மலர்களே; தங்களின் மை தீட்டப்பட்ட திருவிழிகளுக்கு மாறுபட்டவை இவை.

           நிரைஏறிய குமுதங்களில் வெள்ளென்ப இவைநின்

           விரைஏறிய திருவாய்மலர் மீதூர்வன உறவே.                  [318]

 

[நிரை=வரிசை; குமுதம்=செவ்வாம்பல்; விரை=வாசம்; ஏறிய=மிகுந்த; உற=மிக]

இந்தச் சுனையில் வரிசையாக மலர்ந்துள்ள மலர்களில் சில செவ்வாம்பல் மலர்களும் சில வெண்மை நிற மலர்களும் உள்ளன. இவை மணம் வீசும் தேவியின் திருவாய் போலவும் அவ்வாயில் திகழும் வெண்பற்களைப் போலவும்  உள்ளன.

           வேதம் கவர் கிளவித்திரு மின்னே! விரைகெழுநின்

           பாதம் கவர் செந்தாமரை வெண்தாமரை பண்டே.                [319]

 

[கவர்=விருப்பம்; கிளவி=சொல்; விரிகெழு=மணம் மிகுந்த; பண்டு=பழமை]

வேதங்கள் விரும்பி மகிழும் சொற்களுக்கு உரிய வேதநாயகியே! அழகிய மின்னல் போல ஒளி உடலம் உடையவரே! இச்சுனையில் உள்ள செந்தாமரைப் பூக்களும் வெண்தாமரை மலர்களும் பழங்காலம் தொட்டே நின் திருவடிகளைத் தீண்டும் விருப்பம் உடையன.

 

 

 

Series Navigationதாவி விழும் மனம் !  இறுதிப் படியிலிருந்து   –  பீமன்