தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

Spread the love

                      

                                                                            

             ஈரும் மதியம்என முதிய மதிவெருவி

ராசராச நாயகர் முடிச்

சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு]

உடைய மகளிர் கடைதிறமினோ.              [21]

[ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்]

      இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும் என எண்ணி, அதை விடுத்து, இராசமாபுரத்து இறைவரான சிவபெருமான் திருமுடியில் இருக்கும் பிறைச்சந்திரனுடன் சேர்ந்திருக்க விரும்பி இங்கு வந்துவாழும் தேவர் உலகப் பெண்களே! கதவைத் திறவுங்கள்.

=====================================================================================

            போய பேரொளி அடைத்து வைத்த பல

                 புண்டரிகம் இருபொற்குழைச்

            சேய பேரொளி மணிப்பெரும் பிரபை

                 திறக்க வந்து கடைதிறமினோ.                 [22]

[புண்டரிகம்=தாமரை; சேய=சிவந்த; பிரபை=ஒளி; குழை=காதணி]

மாலையில் சூரியனின் பேரொளி மறைந்தவுடன் தாமரை மலர்களைப் போன்ற மாளிகைக் கதவுகளை அடைத்து வைத்தீர்கள். அந்தக் கதவுகளை இப்பொழுது உங்கள் காதணிகளிலே அணிந்துள்ள மாணிக்க மணிக்குழைகளின் பேரொளி எங்கும் வீச வந்து கதவைத் திறவுங்கள்.

=====================================================================================

            தாம வில்லுவெறும் ஒன்று முன்னம் இவை

                   சாமனார் கொடிகள் காமனார்

            சேமவில் எனவிசும்வில் வெருவு

                  தெய்வமாதர் கடை திறமினோ.                   [23]

[தாமம்=பூமாலை; சாமனார்=முருகன்; காமனார்=மன்மதன்; சேமம்=பாதுகாப்பு; வெருவ=அஞ்சும்] 

      பூக்களாலான அம்புகளைத் தொடுக்கும் மன்மதனிடம் ஒரு வில்தான் உள்ளது. ஆனால் உங்களிடம் இருபுருவங்களாகிய இருவிற்கள் உள்ளன. இவை முருகனின் கொடியான மயிலுக்கு நிகரானவை. இவை நம்மை என்ன செய்யுமோ என்று எண்ணி வானவில்லே அஞ்சும் அளவிற்கு புருவங்கள் உடைய பெண்களே! கதவைத் திறவுங்கள்.

=====================================================================================

                   மைய வாய்அருகு வெளிய ஆயசில

                        கெண்டை புண்டரிக மலரினும்

                  செய்ய வாய்உலகம் உறவு கோளழிய

                        நறவுகொள் மகளிர் திறமினோ.               [24]

[வெளிய=வெண்ணிறம்; கெண்டை=ஒருவகை மீன்; புண்டரிகம்=தாமரை; கோள்=உறவு; நறவு=மது]

       மை தீட்டப்பட்டுக் கரிய நிறமாகவும், அதன் அருகில் உள்ள வெண்ணிற நீரில் புரளும் மீன்கள் போலவும் உள்ள உங்கள் கண்கள் செந்தாமரை போலச் சிவக்கும்படியும், உங்கள் உறவே உங்களை ஏற்றுக் கொள்ளாதபடியும், மதுவுண்டு மயங்கும் பெண்களே! கதவைத் திறவுங்கள்.

=====================================================================================

                   கலக மாரன்வெறும் ஒருவனால் உலகு

                        களவுபோக இருகாலமும்

                  திலகம் ஆரும் நுதல் அளகபார இருள்

                        அருளும் மாதர் கடைதிறமினோ.                [25]

[மாரன்=மன்மதன்; திலகம்=பொட்டு; நுதல்=நெற்றி; அரும்=சேர்ந்த; அளகபாரம்=கூந்தல்]

      மன்மதன் ஒருவனே கலகம் செய்து காம இச்சையைத் தூண்டி உலக உயிர்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ளை அடித்து விடுகிறான். அவனுக்கு உதவி செய்வதுபோல் நீங்கள் காலை மாலை இருவேளைகளிலும் திலகமிட்டுக் கொள்ளும் நெற்றியோடு இருப்பதுடன், கரிய கூந்தலால் பகலிலும் இருளை உண்டாக்குகின்ற பெண்களே! கதவைத் திறவுங்கள்.

=====================================================================================

                  எளிவரும் கொழுநர் புயமும்  நுங்கள்இரு

      குயமும் மண்டி எதிரெதிர் விழுந்து

எளிவரும் கலவி புலவிபோல் இனிய

      தெய்வ மாதர் கடைதிறமினோ.                [26]

[எளிவரும்=எளியதன்மை; கொழுநர்=கணவர்; புயம்=தோள்; குயம்=மார்பு; மண்டி=நெருங்கி; கலவி=கூடுதல்; புலவி=ஊடுதல்]

      எளியவரான உங்கள் கணவருடன் உங்கள் இருமார்பும் அவர்கள் தோளும் நெருங்கிப் பொருந்தக் கூடும்போது, அக்கூடலைவிட அவருடன் ஊடுவதே இன்பம் மிகுதியாகத் தருவதாகத் தருவதாக எண்ணும் பெண்களே! கதவைத் திறவுங்கள்.

=====================================================================================

                   உலகபாட மனு என உலாவுவன

                        ஒழுகுநீள் நயனம் உடையநீர்

                  திலகபாடம் இருள் பருகவந்து நிலை

                        செறி கபாட நிரை திறமினோ.                [27]

[உலகபாடம்=உலகம்+அபாடம்; அபாடம்=பிழை; நயனம்=கண்கள்; திலகம்=பொட்டு; பாடம்=ஒளி; நிலைசெறிகபாடம்=நிலைக்கதவு]

      உலகம் ஏற்றுள்ள பாடப்புத்தகம் மனு நீதியாகும். அதில் பெண்கள் நிலம் நோக்கித் தலைகுனிந்து நடக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதைப் பிழையாக்குமாறு நீண்ட விழிகள் கொண்டுள்ள பெண்களே! மை தீட்டப்பட்ட கண்களால் படர்ந்துள்ள இருளை விரட்ட ஒளி பொருந்திய நெற்றித் திலகம் அணிந்துள்ள பெண்களே! கதவைத் திறவுங்கள்.

=====================================================================================

                        அரனும் ஏனை இமையவரும் உண்பர் என

                              அஞ்சி நஞ்சம் அமுதமும் உடன்

                        திரை மகோததியைவிட இருந்தனைய

                              தெய்வமாதர் கடை திறமினோ          [28]

[அரன்=சிவன்; இமையவர்=தேவர்; திரை=அலை; மகோததி=கடல்; விட இருந்தனைய=நஞ்சு போல் இருக்கிற]

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த வரலாறு இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிக் கடையும்போது முதலில் நஞ்சு வெளிப்பட அது கண்ட அனைவரும் அஞ்ச சிவபெருமான் அந்நஞ்சை உண்டார்.

அந்த நஞ்சானது சிவபெருமானும் தேவர்களும் உண்டுவிடுவார்களோ என்று அஞ்சியதாம். அது உங்கள் கண்களில் வந்து புகுந்து கொண்டது. அப்படிப்பட்ட கண்டவர்களைக் கொல்லும் தன்மை உள்ள பரந்த கடல் போல இருக்கிற கண்ணுடைய  தெய்வ மாதர்களே! கதவைத் திறவுங்கள்.

===================================================================================

                         மிசை அகன்றுயரும் நகில் மருங்குல்குடி

                              அடிபறந்தது அழவிடும் எனத்

                        திசை அகன்றளவும் அகல் நிதம்பதடம்

                              உடைய மாதர்! கடை திறமினோ         [29]

             [மிசை=பக்கம்; நகில்=மார்பகம்; மருங்குல்=பக்கம்; குடி=உடம்பு; பறிந்து=முரிந்து; திசை=பக்கம்; அகல்=அகலும்; நிதம்பம்=மறைவிடம்]

      பக்கங்களில் பெருத்து வளரும் மார்பகங்களால் பாரம் தாங்காது சிற்றிடை முரிந்து அழுதிடுமே என்று அவற்றைத் தாங்க வளர்கின்ற மறைவிடங்களை உடைய பெண்களே! கதவைத் திறவுங்கள்.

=====================================================================================

                              மகரவாரிதி மறுக வாசுகி

                                  வளைய மேருவில் வடமுகச்

                              சிகர சீகர அருவிநீர்அர

                                  மகளிர்! கடைதிறமினோ.                [30]

[மகரம்=சுறாமீன்; வாரிதி=கடல்; மறுக=கலங்க, வருந்த; சிகரம்=மலைஉச்சி; சீகரம்=நீர்த்துளி]

சுறாமீன்கள் வாழும் கடலானது வருந்த மேருமலையின் வடக்குச் சிகரத்தை வாசுகியெனும் பாம்பாகிய  கயிற்றால் கட்டிப் பாற்கடலைக் கடைந்த போது அருவிபோல வந்த பால்துளிகளிலிருந்து வெளிப்பட்ட தேவர் உலகப் பெண்களே! கதவைத் திறவுங்கள்.

Series Navigationவதுவை – குறுநாவல்கொரோனா