தங்கம்

 

1 அறிமுகம்
ஒரு உலோகம்.
அதிக விலை மதிப்புடையது.
உலகெங்கிலும் மக்களால் விரும்பி வாங்கப்படுவது.
தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது.
மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது.
இதுவே தங்கத்தைப் பற்றிய பொதுவான கருத்து.
நானும் உங்களில் ஒருத்தி. வணிகவியலிலோ பொருளாதாரவியலிலோ பட்டம் பெற்றவள் இல்லை. எந்தவொரு தங்கம் பற்றிய முதலீடு மற்றும் வியாபார அறிவும் இது வரை இருந்தது கிடையாது. கடந்த பத்து வருடங்களில் தங்கத்தைப் பற்றிய விலையை மட்டும் தொடர்ந்து பார்த்து வந்த அனுபவம் மட்டுமே.
முதலில் என்னுடைய தங்கம் வாங்குவது பற்றிய அனுபவத்தைச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். என்னைப் போன்றே உங்களுக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கும்.
1907களில் தங்கம் 1 சவரன் 1 ரூபாய்க்கு விற்றதாம். 100 ரூபாய் இருந்தால் 100 சவரன்கள். ஆனால், 1990களில் என் திருமணத்தின் போது என் பெற்றோர் நகைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதன் விலை கிராமுக்கு 320 ரூபாய், சவரனுக்கு 2560 ரூபாய். அப்போது தங்கத்தைப் பற்றியும், நகைகளை அணிவதிலும் அவ்வளவாக நான் கவனம் செலுத்தியது கிடையாது. திருமணம் ஆனதும் நான் பெங்களுரில் வாழச் சென்றேன். நான் கணிப்பொறியிலலில் முதுகலை பெற்று வேலைக்குச் சென்று கொண்டிருந்த காரணத்தால், என் தாயார், சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கைச் சேமிக்கும் வகையில் நகைகளை வாங்கிச் சேர்க்கச் சொல்லிக் கொண்டேயிருப்பார். அவர் தொடர்ந்து கூறி வந்த காரணத்தால், ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிது வாங்க முயற்சி செய்தேன். பின்னர் மூன்று வருடங்களில் கணவர் வெளிநாடு சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததும், என் தாயார் பணத்தைச் சேமிக்கும் வழியாக, அதிகத் தங்கம் வாங்க ஊக்குவித்தார். அப்போதும் சிறிது வாங்க முற்பட்டேன். ஆனால் தங்கத்தில் அதிகத் தீவிரம் காட்டவில்லை.
ஏழு வருடங்களுக்குப் பிறகு மகள் பிறந்ததும், என் தாயாரின் நச்சரிப்பு வலுத்தது. உனக்குப் பிடிக்கவில்லையென்றாலும், மகளுக்காக வாங்கு என்று முயன்ற போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தார்.  அப்போது வருடத்திற்கு எப்படியும் சிறிதளவேனும் வாங்க வேண்டும் என்று நானும் கணவரும் முடிவு எடுத்தோம். தெரிந்தவர் வகையில் ஒருவர் தன் மகளுக்கு அதிக சவரன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்தார் என்ற செய்தி என் தாய்க்கு எட்டியதும், என்னைத் தங்கம் வாங்க வலியுறுத்துவது கூடுதலாயிற்று. நகை வாங்கவில்லையென்றாலும் வெளிநாடு செல்லும் பலரும் வாங்க வைப்பது போல் தங்கக் கட்டிகளையாவது வாங்கி வை என்று சொல்ல ஆரம்பித்தார்.
அப்போதும் தங்கத்தின் மேல் பற்று ஏற்படாததால், அவரது பேச்சிற்கு செவி சாய்க்கவில்லை.  வழக்கம் போல் மகளின் பிறந்த நாளின் போது சிறிதளவு தங்க ஆபரணங்களை மட்டும் வாங்கி வந்தோம். 2003ஆம் ஆண்டில், என் சீனத் தோழி ஒருத்தி தங்கத்தில் முதலீடு செய்வது குறித்த செய்தியினைக் கூறினார். வங்கிக்குச் சென்று அதைப் பற்றி விசாரித்ததோடு சரி.  கணவருக்கு காகிதத் தங்கத்தில் முதலீடு செய்வதில் விருப்பம் ஏற்படவில்லை. அப்போதிருந்து தங்கத்தின் மீது விருப்பம் இல்லாவிட்டாலும், அதன் விலை நிலவரத்தை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன்.  மெல்ல மெல்ல விலை கூடிக் கொண்டேயிருந்தது.
அப்போது ஒரு முறை என் சகோதரி என் தாயிடம் தனக்கு வளையல் செய்யச் சொல்லிக் கேட்டிருந்தாள். சென்னை தி.நகரில் நகை வாங்கச் சென்றோம்.  அப்போது சற்றே விலை மேலும் கீழும் சென்று கொண்டிருந்த நேரம். கிராம் 520 ஆக இருந்தது.  உடனே என் தாய் சற்றே விலை குறைந்த பின் வாங்கலாம் என்று எதுவும் வாங்காமல் திரும்பினோம்.  ஆனால் அதற்கு அடுத்த பத்து நாட்களிலும் சரி, வருடங்களிலும் சரி, விலை சர்ரென்று மேலே மேலே ஏறத் தொடங்கியது. முன்பின் விலை குறைந்தாலும் ஏற்றம் மட்டும் வேகமாக இருந்தது. அந்த வளையலை இன்றளவும் வாங்கவில்லை என்பது உண்மை.
உலகில் பல பகுதிகளில் ஏற்பட்ட சமூக மாற்றங்களாலும் தங்கச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களாலும் தான் இந்த விலை உயர்வு என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஹாங்காங்கில் தங்க விலை தேல் (கிட்டதட்ட 4 சவரன்) என்ற அளவுகோலில் சொல்லப்படும். நான் தங்க விலையை கவனிக்க ஆரம்பித்த போது 5100 ஹாங்காங் டாலராக இருந்தது. அதுவே இந்த ஆறேழு ஆண்டுகளில் 20000 வரை உயர்ந்து விட்டது.
செப்டெம்பர் 5 ஆம் தேதி தொலைக்காட்சியில் தங்கம் பற்றிய நிகழ்ச்சியை ஹாங்காங்கில் பார்க்க நேர்ந்தது. பலரும் பல விசயங்களைப் பற்றி அலசி ஆராய்ந்தனர். அதில் பல உள் விசயங்கள் இருப்பதையும் தெரிந்து கொண்டேன். அதைப் புரிந்து கொள்ளலாம் என்று அன்றிலிருந்து தங்கம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நண்பர்களிடம் உரையாடி பல விசயங்களைத் தெரிந்து கொண்டேன். அதில் பல விசயங்கள் சுவாரசியமாக இருந்தன. அதை எல்லாருக்கும் புரியும் வண்ணம் தந்தால் என்ன என்ற எண்ணம் உடனே ஏற்பட்டது. அதையே எழுதவும் ஆரம்பித்தேன். இதோ உங்களுடன் எழுத்து மூலம் பேசுகிறேன்.
அறிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் பல உள்ளன.  அதை இந்தத் தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
Series Navigationதகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு