தண்டனை யாருக்கு?

14 டிசம்பர் 2012ல் நியூயார்க்கில் நியூடவுன் நகரில் சாண்டி ஹூக் பள்ளியில்
27 குழந்தைகள் சுட்டுக் கொலை. இது செய்தி. இனித் தொடருங்கள்

அறிவு
பெருக்கு மிடத்தில்
குருதிப் பெருக்கு
குறுத்துக்கள் 27
குருதிச் சேற்றில்

இனி
குண்டு துளைக்காக்
கவசங்கள்
குழந்தை உடையாகலாம்
வகுப்பறைகள்
வழக் கொழியலாம்
அரிசி அளவு
மென் பொருளே
ஆசிரிய ராகலாம்
‘பள்ளிக் கூடம்’
‘பள்ளித் தோழன்’
போன்ற சொற்கள்
அகராதியி லிருந்து
அகற்றப் படலாம்

கொலை யாளியே
தன்னைக் கொன்று
கொண்டான்

தண்டனை யாருக்கு?

இரும்புக்குள்
இதயம் வைக்கத்
தெரிந்து கொண்டோம்
இதயத்தை
இரும்பாக்கிக் கொண்டோம்

குளிர் ரத்தக் கொலையும்
கலையே என்கிறோம்

விரல்களைத் தின்று
மூளை வளர்ப்பதை
விஞ்ஞான மென்கிறோம்

தண்டனை
நமக்குத்தான்   –  அமீதாம்மாள்

Series Navigationபெண்களின் விதிகள்வள்ளியம்மை