தண்டிக்க ஒரு கரம் தாலாட்ட மறு கரம்

This entry is part 6 of 19 in the series 28 மே 2017

எனக்குள் அப்படி ஒரு ஓங்காரக் குரல் இருப்பது எனக்கே தெரியாது. அலறினேன். என் அலறல் அந்த கென்டக்கி கோழிக்கறிக் கடையின் சுவர்களில் ஆக்ரோஷமாய் எதிரொலித்தது. கோழித் துண்டுகள் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் ஸ்ட்ரைக்கர் தாக்கிய வேகத்தில் சிதறும் கேரம் காய்களாய்ச் சிதறி என்னைச் சுற்றி நின்றுகொண்டார்கள். விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞர்கள் இளைஞிகள் அந்த விற்பனை மேசையைத் தாண்டிக் குதித்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். உள்ளே எண்ணெயில் சில கோழித் துண்டுகள் லேசாகக் கருகிக் கொண்டிருந்தன.
‘அவன் ஓடியதைப் பார்த்தவர்கள் அவனைத் தொடர்ந்து அதே திசையில் கொஞ்சம் சென்று பாருங்கள்
அவன் வெகு தூரம் போயிருக்க முடியாது.’
‘சார், அந்தப் பையில் என்னென்ன இருந்தது?’
‘என் பாஸ்போர்ட், ஐஃபோன், 500 சிங்கப்பூர் வெள்ளி, 1000 மலேசிய ரிங்கிட்’
‘ஐஃபோனா? அப்படின்னா ட்ரேஸ் பண்ணீறலாமே’
‘சிசிடிவீ கேமரா இருக்கு. நிச்சயம் அவனப் புடிச்சிருக்கும்.’
‘உங்களுக்குத் தெரிஞ்சவங்கள ஒடனே கூப்புடுங்க சார்.’
‘முதலில் போலிசுக்கு தகவல் சொல்ல வேண்டும்.’
‘உடனே சிங்கப்பூருக்குத் தகவலைச் சொல்லி ஐஃபோனைத் துண்டிக்கச் சொல்லுங்கள். அங்குள்ள ஐசியேக்கு தெரிவித்து உங்கள் பாஸ்போர்ட்டைத் துண்டிக்கச் சொல்லுங்கள்’

எல்லாரும் பேபசிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது நான் என்ன செய்வது. நல்ல வேளை. மலேசியாவில் பயன்படுத்தும் என் சாம்சுங் ஃபோன் என் சட்டைப் பையிலேயே இருந்தது. கோலாலம்பூரில் மஸ்ஜித் இன்டியாவின் ஒரு கோழி இறைச்சிக் கடை அந்த நிமிடம் ஒரு காட்சிக்கூடமாகிவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் என் மகனை அழைத்தேன். ‘ஸ்டார்ஹப்புக்கு தகவல் சொல். என் ஐஃபோனைத் துண்டிக்கச் சொல். ஐசிஏயிடம் பேசு. தகவலைச் சொல். என் பாஸ்போர்ட்டை துண்டிக்கச் சொல். இங்குள்ள ஹைகமிஷனுக்குச் சொல்லி எனக்கு உதவி செய்யச் சொல். அடுத்து என்ன செய்வது என்று பிறகு சொல்கிறேன். தேள் கொட்டிய வலி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருக்கிறது. பத்தே நிமிடத்தில் என் மகனிடமிருந்து பதில். எல்லாம் செய்தாகிவிட்டதாம். எது தேவையானாலும் உடனே சொல்லுங்கள் என்றான். என் நண்பன் ஃபாருக்கை அழைத்தேன். தகவலைக் கேட்டதும் அவன் கைத்தொலைபேசி நழுவி தரையில் ‘டங்’ என்று மோதியது. எடுத்து பேச்சைத் தொடர்ந்தான். ‘இந்தா வந்துக்கிட்டிருக்கேண்ணே. இப்போ நீங்க எங்கே இருக்கீங்க?’ ‘மலேயன் மேன்ஸனுக்கு எதிரே இருக்கும் காவல் நிலையத்தில் இருக்கிறேன்.’ அந்தப் பகுதியில் மிகப் பெரிய மினிமார்ட் வைத்திருக்கும் ஹாஜாவை அழைத்தேன். அவன்தான் எனக்கு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்தான். ‘என்னண்ணே. இப்புடிப் பண்ணிட்டீங்களேண்ணே. அங்கே இருங்கண்ணே. நவாஸ் அருண் என்ற இருவரை வரச் சொல்கிறேன். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.’ சில நிமிடங்கள். ஃபாருக், நவாஸ், அருண் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். என்னை அந்த கோழி இறைச்சிக் கடையிலிருந்து கிட்டத்தட்ட அழுதபடி ஒரு பையா கையில் 100 ப்ளஸ்ஸை நீட்டிக் கொண்டு ‘குடிங்க சார்’ என்று கெஞ்சினான். சில தமிழ்ப் பெண்கள் என்னைத் தொடர்ந்தே வந்தார்கள். ‘இதுதான் சார் எங்களின் ஃபோன் நம்பர். சாட்சிக்கு நாங்கள் தேவைப்படலாம். அழையுங்கள் சார்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி. ஒரு தமிழ்ப் பெண். கணினிக்கு முன் அமர்ந்து மளமளவென்று தட்டச்சு செய்யத் தொடங்கினார். கேட்ட தகவல்களை உடனுக்குடன் சொன்னேன்.’பாஸ்போர்ட் காப்பி இருக்கா?’ ‘சார் ஒங்க ஹோட்டல்ல எடுத்திருப்பாங்களே?’ என்று கேட்ட நவாஸ் கோலுக்குள் விரையும் பந்துபோல் ஹோட்டலுக்கு ஓடினார். மூன்றே நிமிடத்தில் நகலுடன் திரும்பினார். தகவலறிக்கை தயாரிப்பு முடிந்தது. எல்லாம் மலாயில். வரிக்கு வரி படித்து நவாஸ் விளக்கம் சொன்னார். சரி அடுத்து என்ன? அந்தக் காவல்துறை பெண் அதிகாரி சொன்னார். ‘இந்தக் கடிதத்துடன் பக்கத்திலிருக்கும் துப்பறிவுத் துறைக்குச் செல்லுங்கள். அவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறேன். நீங்களும் அவர்களிடம் தகவலைச் சொல்லிவிட்டு நாளை காலையே நீங்கள் சிங்கப்பூர் ஹைகமிஷன் சென்றுவிடுங்கள்.’ ஹாஜா கார் அனுப்பியிருந்தார். நான் ஃபாரூக், நவாஸ், அருண் எல்லாரும் சரசரவென்று ஏறினோம். அடுத்த பத்து நிமிடத்தில் எங்கள் கார் துப்பறிவுத் துறையை அடைந்தது. மிச்சமிருந்த என் உடைமைகளை வாங்கிக் கொண்டு ஓர் ஊதா நாடாவில் பார்வையாளர் என்ற அட்டையைக் கட்டி கழுத்தில் மாட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.9வது மாடியில் ஒரு துப்பறியும் அதிகாரி எங்களுக்காகத் தயாராக இருந்தார். ஹாஜாவும் ஏற்கனவே தகவலைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் தந்த அத்தனை கடிதங்களூக்கும் நகல் எடுத்துக் கொண்டார். ‘உங்களுக்கு இப்படி நேர்ந்ததற்கு வருந்துகிறோம். நாங்கள் சிசிடீவி கேமரா பார்க்க வேண்டும். அதில் முகம் விழுந்திருந்தால் நிச்சயமாகக் கண்டுபிடித்துவிடலாம். உங்கள் ஐஃபோனுக்கு ‘ஐமே நம்பர்’ தெரியுமா? அந்த ஐஃபோனின் அட்டைப்பெட்டி இருந்தால் அதில் உள்ள ஒரு தாளில் அந்த எண் இருக்கும்.’ தொலைபேசியில் உடனே மகனை அழைத்தேன். ‘என் அலமாரியின் கீழ்த்தட்டில் ஐஃபோன் 7க்கான அட்டைப்பெட்டி இருக்கும். அதில் இருக்கும் ஐமே நம்பரைத் தேடு. அந்த எண்ணை உடனே எனக்கு அனுப்பு.’ அடுத்த மூன்று நிமிடத்தில் அந்த எண் என் வாட்ஸ்அப்பில் மினுக்கியது. நம்பரை வாங்கிக் கொண்டு ‘முடிந்தவரை முயற்சிக்கிறோம்.’ என்றார். ‘எங்களுக்கு பொருள்கள் ஒரு பொருட்டல்ல. நான் பிரச்சினை இல்லாமல் சிங்கப்பூர் திரும்ப நீங்கள் உதவி செய்தால் போதும்.’ ‘அது பிரச்சினையே அல்ல. நாளை காலை 8.30க்கு சிங்கப்பூர் ஹைகமிஷன் சென்றுவிடுங்கள். நல்ல வேளை. நாளை விடுமுறை இல்லை. இந்த தகவல் அறிக்கையைப் பார்த்தவுடன் என்ன செய்ய வேண்டுமென்று அவர்களே சொல்லிவிடுவார்கள். அங்கிருந்து புறப்பட்டோம். எல்லாரும் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கங்கே சென்றுவிட்டார்கள். நாளைக் காலை 7.30க்கு நான் வந்துவிடுவேன். நீங்கள் தயாராக இருங்கள். உடனே நாம் சிங்கப்பூர் ஹைகமிஷன் அலுவலகத்துக்குச் சென்றுவிடுவோம்.’ என்று சொல்லி ஃபாரூக்கும் சென்றுவிட்டார். ‘அத்தா பதறாமல் இருங்கள். தைரியம் முக்கியம். நீங்கள் எங்களுக்கு மிக மிக முக்கியம். காணாமல் போனதை மறந்துவிடுங்கள். இங்குள்ள சிஐஏ உறுதி தந்திருக்கிறது. நீங்கள் சிங்கை வருவதில் எந்த சிக்கலும் இருக்காது.’ மகன் சொன்ன ஆறுதலில் தேள் கொட்டிய வலி முற்றிலும் நீங்கிவிட்டது.

என் ஹோட்டல் அறைக்கு வந்தேன். இரவு மணி 10. காலை 8 மணி வரை எப்படிச் சமாளிப்பேன். தூங்க முயன்றேன். லேசாகத் தூக்கம் வந்தது. என் ஓங்கார அலறல் மீண்டும் கேட்டது. யாரோ என் பையை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். நான் பின்னாலேயே ஓடுகிறேன். கனவு என்று புரிந்துகொண்டு கண்ணை விழிக்காமலேயே மீண்டும் தூங்குகிறேன். நாலைந்து பேர் அறைக்குள் நுழைகிறார்கள். இருக்கும் சாமான்களையெல்லாம் எடுத்துக் கொண்டு என்னிடமே ‘போய்வரவா’ என்று கேட்கிறார்கள். மீண்டும் கண்களைத் திறக்காமலேயே கனவு என்று புரிந்து கொண்டேன். மணி அதிகாலை 5. சரி. இனிமேலும் தூங்குவதோ தூங்குவதுபோல் நடிப்பதோ சாத்தியமல்ல. சாளரம் திறக்கிறேன். கோலாலம்பூர் வீதிகளைப் பார்க்கிறேன். என்னைப் பற்றி எவருக்கும் எந்தக் கவலையும் இல்லை. வழக்கம்போல் இயக்கம் தொடங்குகிறது. அன்றைய செய்தித் தாள்களை ஒருவர் இறக்கிவிட்டு இரண்டுசக்கரத்தில் அவர் பறக்கிறார். சிலர் தொழுகைக்குச் செல்கிறார்கள். நான் நல்லபடியாக சிங்கை செல்லவேண்டும் என்று துஆ செய்யுங்கள் என்று காற்றிடம் சேதி அனுப்புகிறேன். மணி 7.30 கீழே இறங்குகிறேன். சில நிமிடங்கள் கழிந்தன. ஃபாரூக் அப்போதுதான் வந்தார். என்னருகில் காரை நிறுத்திவிட்டு என்னை உள்ளே இழுத்துக் கொள்கிறார்.

சிங்கப்பூர் தூதரகம். நீண்ட சுவர். நீல நிறத்தில் ஓர் ஆள் மட்டுமே நுழைய முடிந்த ஓர் இரும்புக் கதவு மூடப்பட்ட நிலையில். பக்கத்திலெயே முரட்டுக் கம்பிகளுடன் ஒரு ஜன்னல். அதற்குள் ஒரே ஒரு முகம். வெளியே ஒரு காவலர். காரை விட்டு கீழே இறங்கினோம். ‘என்ன சேதி’ பாஸ்போர்ட் தொலைத்துவிட்டேன். இதோ காவல் துறையின் தகவலறிக்கை இன்று இரவு நான் எப்படியும் சிங்கை திரும்பவேண்டும்.’ அந்தக் காவலர் ஜன்னலுக்குள் தெரியும் அந்த முகத்தைப் பார்க்கிறார். அந்த முகம் எங்களை அருகே அழைத்தது. இன்டர்காமில் ஏதோ சொல்ல அந்த இரும்புக் கதவைத் திறந்துகொண்டு ஒருவர் வெளியே வந்துவிட்டு மீண்டும் கதவைப் பூட்டிக் கொண்டார். இல்லை. அது தானாகவே பூட்டிக் கொண்டது. ‘யாருடைய பாஸ்போர்ட் காணோம்?’ ‘என்னுடையது.’ உங்களின் அடையாள அட்டை இருக்கிறதா?’ ‘இருக்கிறது.’ ‘சரி. நீங்கள் மட்டும் வாருங்கள். அவர் காத்திருக்கட்டும். என் உடைமைகள் மீண்டும் வாங்கிக் கொள்ளப்பட்டன. ஓர் இழுவறையில் பூட்டி சாவியை என்னிடமே கொடுத்துவிட்டார். இன்டர்காமில் ஏதோ சொல்கிறார். எங்கிருந்தோ ஒரு மணி அடிக்கிறது. ஒருவர் மட்டுமே செல்லமுடிந்த ஒரு சுழல் கதவு இப்போது என்னை அழைக்கத் தயாரானது. ‘உள்ளே செல்லுங்கள்’ என்றார். அந்தக் கதவு 60 டிகிரி சுழன்று நின்றுவிட்டது. உள்ளே சென்றுவிட்டேன். 50 அடி நடந்தேன். திகிலூட்டும் நிசப்தம். சீருடையில் ஓர் அதிகாரி வெளியே வந்தார். அப்பாடா! ஓர் ஆளைப் பார்த்துவிட்டேன். ‘நீங்கதானே ரஜித்’ ‘ஆம்.’ சிங்கப்பூரில் தகவல் தெரிவித்தது யார்?’ ‘என் மகன்’ ‘நன்றி. உங்களின் அடையாள அட்டை போலீஸ் அறிக்கை எல்லாவற்றையும் கொடுங்கள். பாஸ்போர்ட் காப்பி உட்பட.’எல்லாவற்றையும் கொடுத்தேன். ‘புகைப்படம் இருக்கிறதா?’ ‘இருக்கிறது’ ‘அதையும்’ அடுத்த 30 திமிடம் மீண்டும் திகிலூட்டும் அமைதி. அவர் திரும்பி வந்துவிடுவாரா? தெரியவில்லை. யாரிடம் கேட்பது? தெரியவில்லை. ஃபாருக் பாவம் வெளியே காய்ந்துகொண்டிருப்பார். எனக்காக அவர் காயவேண்டிய அவசியமென்ன? சிங்கப்பூரிலிருந்து மகன் அழைப்பானோ? அழைத்தாலும் என் தொலைபேசி அந்த இழுவறையில் அல்லவா துடித்துக் கொண்டிருக்கும். 35,40,45 நிமிடங்கள் கடந்தன. அப்பாடா! யாரோ வரும் காலடிச் சத்தம். கதவு திறக்கப்படுகிறது. கேபம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக பட்டமளிப்புத் தாள் மாதிரி பளபளக்கும் பச்சைத்தாளில் இரண்டு கடிதங்களுடன் அவர் வந்தார் என் புகைப்படம் மூத்த அதிகாரியின் கையொப்பம் என்று முழுமையாக இருந்தது அந்தக் கடிதங்கள். இந்தக்கடிதங்களைத் தயார் செய்ய 45 நிமிடம் குறைவுதான். இன்னும் 1 மணி நேரம் கூட எடுத்திருக்கலாம். எனக்காக மிக அவசரமாக இயங்கியிருக்கிறார்கள். ஒரு கடிதம் மலேசிய குடிநுழைவுத் துறைக்கு. ‘இந்தக் கடிதம் கொண்டுவருபவர் எங்கள் நாட்டின் குடிமகன் என்பதற்கான எங்களின் கடிதம் இத்துடன் இணைத்திருக்கிறோம். இவர் இங்கு பாஸ்போர்டை தொலைத்துவிட்டார். அவர் சிங்கப்பூர் சென்று தொலைந்து போன தகவலை சிங்கப்பூர் அரசுக்கு தெரிவிக்கவும் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக அவரை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். காணாமல் போனதற்கான காவல்துறையின் கடிதங்களும் அவரிடம் இருக்கிறது. நன்றி’
அந்தக் கடிதத்துடன் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு தாளில் சில தொலைபபேசி எண்களையும் தந்தார்கள். ஜோகூர் பாருவில் இருக்கும் காவல்துறை உயர்அதிகாரியின் தொலைபேசி மற்றும்அலுவலக எண்தான் அது. ஏதும் பிரச்சினை என்றால் அவர்களை அழைக்கவும் என்று எனக்குச் சொல்லப்பட்டது. மறு கடிதம் சிங்கப்பூர் குடிநுழைவுத் துறைக்கு. சிங்கப்பூர் குடிமகனான இவர் மலேசியாவிலிருந்து சிங்கை செல்ல இந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்குள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கவும். என்று தூதரகத்தின் உயர் அதிகாரி கையொப்பமிட்டிருந்தார். கடிதங்களைத் தந்துவிட்டு அந்த அதிகாரி சொன்னார். உங்கள் ரிட்டன் டிக்கெட் படி இன்று 6 மணிக்கு நீங்கள் சிங்கப்பூர் திரும்பவேண்டும். விமானத்தில் செல்ல வேறு சில கடிதங்கள் உங்களுக்குத் தேவை. அதை இன்றைக்குள் நீங்கள் பெற முடியாது. விமானத்தை மறந்துவிடுங்கள். துவாஸ் வழியாகவும் நீங்கள் செல்லமுடியாது. உடனே டைம் ஸ்கொயர் சென்று அடுத்து இருக்கும் சிங்கப்பூர் பேருந்தில் ஜோகூரைத் தொட்டு உட்லண்ட்ஸ் வழியாக மட்டுமே நீங்கள் சிங்கப்பூர் செல்லமுடியும். உங்கள் பேருந்து ஜோகூர் வழியாகச் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 43 ரிங்கிட் செலுத்துங்கள். இந்தக் கடிதங்களுக்காக.’ ‘இந்தக் கடிதங்களுக்காக 400 ரிங்கிட் கூட தரலாமே. காசைக் கொடுத்தேன். கடிதங்களை வைத்துக்கொள்ள ஒரு பிளாஸ்டிக் ஃபோல்டர் கொடுத்தார்கள். வெளியே வந்தேன். ஃபாருக் காத்துக் கொண்டிருந்தார். ‘ நல்ல வேளை. நீங்க சிங்கப்பூர்ல இருக்கீங்கண்ணே. எல்லா வேலையும் எவ்வளவு சீக்கிரத்தில் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா?’ என் நாட்டைப் பற்றி நினைக்கையில் எனக்குப் பெருமையாக இருந்தது. இந்தக் கடிதங்கள் தொலைந்துவிட்டால்? சே! நினைக்கும்போதே இருதயம் வாய்வழியாக வெளியே வந்து விழுவதுபோல் இருக்கிறது. அந்த கடிதங்களை சட்டைக்குள் வயிற்றுப் பகுதியில் விரித்தபடி வைத்துக் கொண்டு ஒரு கையை வயிற்றின் மேலேயே வைத்துக் கொண்டேன். அடிக்கடி அந்த ஃபோல்டரின் முனைகளை வருடிப் பார்த்துக் கொண்டேன். ஏழு மாத கர்ப்பிணிபோல் வயிற்றில் இருந்த கையை எடுக்காமலேயே டைம்ஸ்கொயர் வந்துவிட்டேன். மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் பேருந்து. அதுவரை ஃபாரூக்கே துணை.

இரவு மணி 11.30 ஜோகூரை அடைந்துவிட்டேன். என்னைப்போலவே அந்தக் கடிதங்களும் என் வயிற்றுப் பகுதியில் தூங்காமலேயே விழித்துக் கொண்டிருந்தது. மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டேன். ஒரு கையால் பெட்டியை இழுத்துக் கொண்டு மறு கையை வயிற்றில் வைத்துக்கொண்டு வேகவேகமாகச் செல்கிறேன். எல்லாரும் கடவுச்சீட்டுக்களைக் காட்டி சப் சப்பென்று முத்திரையகளை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். என் முறை வந்தது. அந்தக் கடிதங்களை நீட்டினேன். தகவலைச் சொன்னேன். அந்த அதிகாரி உடனே வெளியே வந்தார். என்னை அழைத்துக்கொண்டு ஒரு பெரிய அதிகாரியிடம் விரைந்தார். மிக உயர்ந்த பீடத்தில் அந்தப் பெண் அதிகாரி அமர்ந்திருந்தார். காவல்துறை தந்த தகவல் அறிக்கையை நீட்டினேன். ‘இதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாதே!’ மலேசியக் குடிநுழைவுத் துறைக்கான கடிதத்தை அடுத்து நீட்டினேன். வாங்கினார். படித்தார். ‘இது போதும். நீங்கள் செல்லலாம்.’ எனக்குள் கம்பி மத்தாப்பு சிரித்தது. வெளியே வந்ததும் ஃபாருக்கிடமும் மகனிடமும் சேதியைச் சொன்னேன். இதேபோல் சிங்கப்பூரிலும் உங்களுக்குப் பிரச்சினை இருக்காது என்றனர் இருவரும்.

மணி 12. சிங்கப்பூர் குடிநுழைவுத்துறை. வரிசையில் நின்றேன். என்முறை வந்தது ‘பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதென்று ஆயிரமாவது முறையாகச் சொன்னேன். அங்கே காத்திருந்த ஒரு சீருடை காவலரிடம் நான் ஒப்படைக்கப்பட்டேன். என்னை அவர் அழைத்துக்கொண்டு ஒரு மின்தூக்கியை நோக்கிச் சென்றார். 5வது மாடிக்கான பொத்தானை அழுத்தினார். அங்கே நாலைந்து அதிகாரிகள். அவர்களிடம் என்னை ஒப்படைத்துவிட்டு அவர் விலகி நின்றுகொண்டார். என்னை உட்காரச் சொன்னார்கள். என்னிடம் இருந்த எல்லா கடிதங்களையும் வாங்கிக் கொண்டார்கள். கணினியைக் குடைந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பிறகு என்னைப் பார்த்தார்கள். மீண்டும் கணினி, மீண்டும் பேச்சு, மீண்டும் என் மீது பார்வை. 10,20,30 நிமிடங்களை தாண்டிவிட்டன. நான் வந்த பேருந்து நிச்சயம் எனக்காகக் காத்திருக்காது. 30வது நிமிடம் நான் மீண்டும் அந்தச் சீருடை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டேன். என் கடிதங்களை அந்த அதிகாரியிடமே கொடுத்தார்கள். என்னிடமல்லவா தரவேண்டும்? வயிற்றுக்குள் வெந்தீர் கொதித்தது. காற்றுக்கு மட்டுமே விளங்குவதுபோல் மெதுவாக அந்த அதிகாரியிடம் ஏதோ சொன்னார்கள். என்னை அழைத்துக் கொண்டு அந்த அதிகாரி அதே மின்தூக்கியில் இறங்கி பச்சைவிளக்கு வாயில் வழியாக என் பெட்டியை ஸ்கேனிங்கில் வைக்கச் சொல்லி பிறகு எடுத்துக் கொடுத்து வெளியே அழைத்துவந்தார். ‘நீங்கள் போகலாம்’ என்றார். அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும். எனக்குத்தான் எதைப்பபார்த்தாலும் பயமாக இருக்கிறதே. நான் கற்பனையில் பயப்படுவதற்கு அவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். வெளியே வந்தேன். வெறொரு பேருந்து புறப்படத் தயாராய் நின்றது. பீச் ரோடுக்கு அந்தப் பேருந்து விரைந்தது. என் மகனிடம் சொன்னேன். ‘அடுத்த அரைமணி நேரத்தில் நான் பீச்ரோடு வந்துவிடுவேன்.’ ‘அம்மாவையும் அக்காவையும் அழைத்துக் கொண்டு நான் அங்கு வந்துவிடுகிறேன்.’ பீச் ரோடில் நான் இறங்கியபோது எங்கேயோ நின்றுகொண்டிருந்த அவர்கள் என்னை நோக்கி ஓடிவந்தார்கள். மூவருமாக என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழவில்லை. சிரித்தார்கள். என் திடுக்கங்களைக் கூறுபோட்டு எல்லாரிடமும் ஏற்கனவே கொட்டிவிட்டதால் முற்றிலுமாக விடுபட்டு நானும் அவர்களோடு சேர்ந்து சிரித்தேன்.

என் பையை எடுத்துக் கொண்டு ஓடியவவன் யாரென்று எனக்குத் தெரியாது. என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு, பலவகையில் சமாதானப்படுத்தி கண்கலங்கிய பல முகங்களும் எனக்கு யாரென்று தெரியாது. இந்தச் சமூதாயத்தின் ஒரு கரம் என்னைத் தண்டித்திருக்கிறது. மறுகரம் என்னைத் தாலாட்டியிருக்கிறது. இரண்டும் சேர்ந்ததுதான் இந்தச் சமுதாயம். தண்டித்துவிட்டு இந்தச் சமுதாயம் ஒதுங்கியிருந்தால் மனித இனம் எப்போதோ மரணித்திருக்கும்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationசுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்கோடைமழை
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *