தமிழகத்தின் மிகமூத்த பஞ்சாயத்துத் தலைவியா, அல்லது மிகஇளைய பஞ்சாயத்துத் தலைவியா தங்கள் பணியில் சிறக்கப்போகிறார்கள்?

 

 

குரு அரவிந்தன்
 
ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் இன்று ஒவ்வொரு துறையிலும் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்பதற்குத் தமிழகத்தில் கிராமிய மட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றன. இலங்கையில்கூட இதுபோலப் பெண்கள் ஒருபோதும் தேர்தல் களத்தில் ஈடுபட்டதில்லை. சமீபத்தில் தமிழகம் முழுவதும் குறிப்பாக, ஒன்பது மாவட்டங்களுக்கான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வட்டார உறுப்பினருக்கான 140 இடங்கள், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார உறுப்பினருக்கான 1381 இடங்கள், கிராம ஊராட்சித் தலைவருக்கான 2901 இடங்கள், கிராம வட்டார உறுப்பினருக்கான 22,581 இடங்களுக்கு என்று மொத்தம் 27,003 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 79,433 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இவற்றில் இரண்டு கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், 21 கிராம ஊராட்சி வட்டார உறுப்பினர் பதவிக்கும் யாரும் போட்டிபோட முன்வராததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
 
 
இத்தேர்தலின் போது, 204 பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான போட்டியும் இடம் பெற்றது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் முக்கியமாக இரண்டு தேர்தல் தொகுதிகள் மக்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தன. பெண்களுக்கு முதலிடம் தந்த இந்தத் தொகுதிகளில் வயதில் கூடிய முதிய பெண்மணி ஒருவரும் வயதில் மிகக்குறைந்த இளம் பெண்மணி ஒருவரும் பஞ்சாயத்துத் தலைவர்களாகத் தெரிந்தெடுக்கப் பட்டிருப்பதுதான் பலரின் கவனத்தையும் கவர்ந்தன. மக்களுக்காகச் சேவையாற்ற ஆண், பெண் என்ற பாகுபாடோ அல்லது வயதோ ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. ஆனாலும் இவர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய கடமை நகர்பாதுகாவலருக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
 
நெல்லை  மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி என்னும் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாள் என்பவர் வெற்றிபெற்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டின் மிகமூத்த பஞ்சாயத்து தலைவி என்ற சாதனையை இவர் படைத்திருக்கின்றார். மொத்தமாகப் பதிவான வாக்குகள் 2060 இல் இவருக்கு 1568 வாக்குகள் கிடைத்திருந்தன. ஏழு பரம்பரையாக இவர்களின் குடும்பத்தினர் பஞ்சாயத்து சபையில் இடம் பெற்றிருப்பதாகத் தெரிவித்த அவர், தனது ஊரான சிவந்திப்பட்டி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முடிந்தளவு செய்து கொடுக்கப் போவதாகவும் உறுதி அளித்திருக்கின்றார்.
 
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி பகுதியில் தற்பொழுது கோவையில் முதுநிலை பெறியியல் பட்டப்படிப்பு படித்து வரும், லட்சுமியூரைச் சேர்ந்த 21 வயதான சாருகலா என்ற இளம் பெண்மணி சுயேட்சையாகப் போட்டியிட்டார். 90 வயது மூதாட்டி அங்கே வெற்றி பெற்றுப் பஞ்சாயத்துத் தலைவராகப் பாதவி ஏற்க, இங்கே 21 வயதான, மிகவும் குறைந்த வயதான பெண்மணி வெற்றி பெற்றுப் பஞ்சாயத்துத் தலைவராகப் பதவி ஏற்றிருக்கிறார். இந்தத் தேர்தலில் 3336 வாக்குகள் பெற்ற சாருகலா 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 15 வருடகாலமாக ஒருவரே ஆட்சிப் பதவியில் இருந்ததை இதன் மூலம் இவர் தகர்த்திருக்கின்றார். முதலில் தனது வட்டாரத்தில் இருக்கும் 23 கிராமங்களுக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் தனது முதலாவது பணி என்று அவர் குறிப்பிட்டார். மேலும் அரச உதவியோடு அங்குள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி பெற்றுக் கொடுப்பதும் இவரது லட்சியமாகும். இவரது தகப்பனார் ஒரு விவசாயி, தாயார் பூலாங்குளத்தில் ஆசிரியையாகப் பணியாற்றுகின்றார்.
 
முக்கியமான அரசியல் கட்சிகளான திமுக, பாரதிய ஜனதா, அமமுக போன்ற கட்சி வேட்பாளர்களுடன் போட்டிபோட்டுச் சுயேட்சையாகவும் உமாதேவி என்ற ஒரு பெண்மணி வெற்றி பெற்றிருக்கின்றார். இவர் ஐ.ஏ.எஸ் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும், நேர்முகப் பரீட்சையில் எடுபடவில்லை. அதனால் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட 5வது வட்டாரத்தில் உமாதேவி என்ற பெண்மணியே வெற்றி ஈட்டியிருக்கின்றார். சுண்டங்குறிச்சி, பன்னீரூத்து, மேல இலந்தைக்குளம் ஆகிய கிராமங்கள் இந்த வட்டாரத்திற்குள் அடங்குகின்றன. இவர் ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கரின் சகோதரியாவார். இந்தத் தேர்தலில் 2219 வாக்குகள் பெற்ற இவர் 1001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
 
இராதாபுரம் யூனியனின் 17- வது வட்டாரத்தில் வேட்பாளராகச் சௌமியா ஜெகதீஷ் என்பவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேரில் போகவில்லை. அதன் பின்னர் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் எங்குமே போகவில்லை. தேர்தல் விளம்பரங்களிலோ அல்லது நாளிதழ்களிலோ கூட அவரது புகைப்படம் வெளிவரவில்லை. அதனால் வாக்காளர்களுக்கு அவர் யார் என்பதுகூடத் தெரிந்திருக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்வென்றால் தேர்தல் களத்துக்கே வராத சௌமியா ஜெகதீஷ் யூனியன் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அடுத்த ஆச்சரியம் என்னவென்றால், பெண் கவுன்சிலர் சௌமியா, யூனியன் தலைவராகத் தேர்வாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகின்றது.
 
 
இன்னுமொரு மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நாகூரான் என்பவர் இறந்துவிட்டதால், இடைத்தேர்தல் நடந்தபோது, அவரது மனைவி மகாவதி என்பவர் போட்டியிட்டார். நாலு வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். பதிவான மொத்த வாக்குகளான 828 வாக்குகளில் மகாவதிக்கு 268 வாக்குகள் கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றார். அடுத்து வந்த கலையரசி என்பவருக்கு 266 வாக்குகள் கிடைத்ததால் இரண்டு வாக்குகளால் அவர் பின்தள்ளப்பட்டார். இதில் கவனிக்கபப்பட வேண்டியது என்னவென்றால் 10 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதேயாகும். கலையரசிக்கு அதிஷ்டம் அருகே இருந்தும் கைக்கெட்டவில்லை. 
 
அரசியலில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் தான்! மக்கள் ஆட்சியில் மக்களின் முடிவே இறுதியானது என்றாலும், அது எப்போதும் பெரும்பான்மை மக்களின் முடிவாகவே இருக்கும். பெயரளவில் மக்கள் ஆட்சி என்று சொல்லப்பட்டாலும், ஒருபோதும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவதில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
 
 
 
Series Navigationஎன் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்புஎனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி