தமிழ்மணவாளன் கவிதைகள்

Spread the love

 %e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d

 

  1.ரயில்வே ட்ராக் அருகே அறை எடுத்துத் தங்குவது

ஏசி குளிர் தாளாமல் கதவைத் திறந்து

வெளியில் வர

மதுரையிலிருந்து ஒரு

பிரமாண்டமான சாரைப்பாம்பு ஊறும்

 

இந்நேரத்திலும் என்னைப் பார்த்து

புன்னகைக்க ஒருவன் நிற்கிறான்

கதவோரம்.

 

இரண்டாயிரம் பேர் இருப்பரா?

 

மக்கள் போகிறார்கள்

இங்கிருந்து அங்கும்

அங்கிருந்து இங்குமாய்.

 

இனி அவன் முகத்தில் முழிக்கவே

கூடாதென

கண்ணில் நீர்நிரப்பி எவளேனும்

படுத்திருக்கக் கூடும் மிடில் பர்த்தில்

 

உயிர்பிழைக்கும் அவாவில்

அப்பல்லோ அப்பாய்ண்ட்மெண்ட்

வாங்கி மனக்கிலேசத்தோடு ஒருவர்.

 

திசை தெரியா ஊரில் திகைத்து

நிற்காமல்

எழும்பூர் ஸ்டேசனுக்கு வருவானா

என்னும் கவலையோடு உறக்கமின்றி.

 

படிக்க,

வேலைக்கு,

சுற்றம் பார்க்க,

காதலனை/காதலியைக் கண்டு பிடிக்க

கொலை செய்ய

 

 

தற்கொலைக்கு முயற்சிக்க

எதற்காகவோ

 

மக்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள்

இங்கிருந்து அங்கும் அங்கிருந்து

இங்குமாய்

 

 

மறைந்ததும் அறைவாசல் நோக்கித்

திரும்பும்போது தான்

கண்ணில் படுகிறார்கள்

ரயில் போன தண்டவாளத்தின் அப்புறத்தில்

அவ்வாலிபனும்

ஒரு பேரிளம் பெண்ணும்

 

  2.புரிதல்

எவற்றையெல்லாம் சொல்ல
நினைக்கிறேனோ
அவற்றை யொரு கனவு கண்டதைப் போல

விளக்கமாய்ச் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்.

 

எல்லாவற்றையும் மிகவும் கவனமாய்க்

கேட்டுக் கொண்டிருந்த நீ…

என் மீது கொண்ட பெருமக்கறையோடு
இறுதியாய்ச் சொல்கிறாய்….

 

‘இதற்குத் தான்……
சாப்பிட்டவுடன்
உறங்கச் செல்லக்கூடாது…..

மேலும்
உறங்குமுன் மூச்சுப் பயிற்சி செய்தால்
கனவுத் தொல்லையே இருக்காது’…

 

அடடா….நீ தான் எவ்வளவு
புத்திசாலி .
என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாய்.

 

 

  1. சொல்

 

முணுமுணுத்தபடி அயர்ச்சியாகிக் கிடக்கிறது

நீ வீசியெறிந்த சொல்லொன்று.

காயம்பட்டு ரத்தம் சொட்டும்

வெகு நாள் பிரியமுடன் வளர்த்த பூனையின்

கால்களை வாஞ்சையுடன் வருடுதல் போல்

அச்சொல்லைத் தடவிக் கொடுத்தேன்.

குத்திக் கிழித்துவிட வேண்டுமென்னும் யத்தனத்தோடு

கூரிய அம்பென‌

பாய்ந்து வந்த போதினிலித்தனை

பெருஞ்சேதத்தை எதிர் பார்த்திருக்காது தான்.

மோதும் வரையிலானவதன் காற்றின் பாதை

இலகுவானதாய்த் தானிருந்திருக்கும்.

நானொரு போதும் சொற்களை

அம்பெனப் பிரயோகிப்பதே கிடையாது.

தேவையின் நிமித்தம் கேட‌யமாய்க் கொள்வதைத் தவிர.

வீசிய சொல்லின் விபரீத முடிவு தெரியாது

வீசுவதெப்படி வியூகமாகும்

மற்றுமொரு சொல்லை.

இப்போதென் கவலையெல்லாம்

உன் சொற்களுக்குச் சேதாரமின்றிக் காப்பது தான்.

என்னவாயினும் நீவீசும்

சொல்லல்லவா ?

 

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ்பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்