Posted in

தரிசனம்

This entry is part 28 of 35 in the series 29 ஜூலை 2012

 

அம்மாவிற்கு

மிகவும் பிடிக்கும்

மாம்பழங்கள்.

 

இமாம்பசந்த், பங்கனப்பள்ளி

மல்கோவா, ருமேனி

என ஒவ்வொன்றின் சுவையும்

எப்படி வேறென

மாம்பழம் சாப்பிடும்

அம்மாவின் முகமே சொல்லும்.

 

மாயவரம் பக்கம்

அம்மாவின் அண்ணன் இருந்ததால்

பாதிரியை

கிறிஸ்தவப் பழம் என

அதிகம் கொண்டாடுவாள்.

 

மடியை விட்டகலாத கன்றென

நார்ப்பழங்களின்

சப்பின கொட்டையை

தூக்கி எறிய மனதற்றிருக்கும்

எங்களை

” எச்சில் கையோடு

எவ்வளவு நேரம் ” ?

என ஒருபோதும்

வைததில்லை அம்மா.

 

ஜூன் ஜூலையில்

பெருகிக் கொட்டும்

தோல் தடித்த நீலம்

அம்மாவைப் போலவே

இனிமையை

வாசனையால் கூட

வெளிக்காட்டாது

ஒளித்து வைத்திருக்கும்.

 

சுதந்திர தினத்திற்கு

சாக்லெட்டிற்குப் பதிலாக

நீலம் பழங்களையே

குழந்தைகளுக்குக் கொடுக்கும்

அம்மா

ஆகஸ்ட்டின் இறுதியில்

மாம்பழ சீஸனோடு

தன்னை முடித்துக்கொண்டபின்

நடக்கும்

ஒவ்வொரு நினைவுப் படையலிலும்

நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்

நீலம் பழத்தின் நடுவிலிருந்து

தவறாது

மெல்ல அசைந்து வெளிவரும்

வண்டு எனக்கு

அம்மாவையே  காட்டும்.

 

—-ரமணி

 

Series Navigationநீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசுகனலில் பூத்த கவிதை!

7 thoughts on “தரிசனம்

  1. ramanien kavidhai avaradhu ammaven paasathai maampazham moolam sollappatirukiradhu…maampazham pola suvaiyaana kavidhai!

  2. ramani in kavidhai avaradhu ammaven paasathai maampazham moolam sollappatirukiradhu…maampazham pola suvaiyaana kavidhai!

  3. மரணம் முடிவல்ல..நினைவுகளாக தொடரும்
    மாம்பழத்து வண்டு நினைவுகளின் குறியீடாக வந்துள்ளது அருமை.

  4. இப்படித்தான் ஏதாவது ஒரு நினைவோ ஏகப்பட்ட நினைவுகளொவென அம்மா நம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பார்.

    யாரின் அம்மாவாவாது அவர்தம் மனத்தளவில் இறந்துபோய்விட்டதுண்டா?

    ரமணி, அழகாயிருக்கிறது கவிதை. நன்றி.

  5. இப்படித்தான் ஏதாவது ஒரு நினைவோ ஏகப்பட்ட நினைவுகளோவென அம்மா நம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பார்.

    யாரின் அம்மாவாவாது அவர்தம் மனத்தளவில் இறந்துபோய்விட்டதுண்டா?

    ரமணி, அழகாயிருக்கிறது கவிதை. நன்றி.

  6. வானமெனினும் வண்டெனினும், நாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் நமக்கு தாலாட்டும் தொட்டில் – அம்மாவின் நினைவு – இருந்தாலும் அவள் மறைந்தாலும்.

  7. மாம்பழத்து வண்டாய், பூமரத்துக் குயிலாய் அம்மாக்கள் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள், மகவுகள் மரிக்கும் வரை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *