‘கோரிக்கை யற்றுக் கிடக்கு திங்கே வேரிற் பழுத்த பலா,’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கைம்பெண்களைப் பற்றி எழுதியது ஓரளவு தமிழ்ச்செல்வி போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். கன்னிகளாகவும், கணவன் இருந்தும் கூட வாழ விருப்பம் இல்லாத கைம்பெண்ணாகவும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வாழ முடியாமலும் தவிப்புடன் வசித்து வருகிறார். தமிழக அரசு அவருக்குச் சில உதவிகள் செய்து வந்தாலும், பலருக்கு அவை கிட்டாமல் போய் ஏமாற்றம் அடைவதை நான் காதில் கேட்டு வருகிறேன்.
சிறு வயதில் போலியோ தாக்குதலால் முடங்கிப் போன ஆடவர், பெண்டிர் பலர், திறமைகள் இருந்தும் வெளிப்படுத்த வாய்ப்பின்றி, வாழ வழியின்றி, வேலை, போதிய வருவாயின்றி, வாய்பேசக் கேட்பாரின்றி வருந்தி வருவது நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படிச் சிறு, சிறு வேலைகள் சிலருக்குக் கிடைத்தாலும், வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வெகு நேரம் உழைத்துப் போதிய ஊதியமின்றிப் புண்பட்டு வருவதை நான் காதால் கேட்டிருக்கிறேன்.
வேலை செய்யும் இடங்களிலும் அவரது வாகனம் வசதியாக ஏறி இறங்க வழியின்றிச் சில சமயம் கை கால்களில் ஊர்ந்து செல்லவோ, படிகளில் உட்கார்ந்து மேல் நகரவோ, அல்லது மற்றவர் தூக்கிச் செல்லவோ தேவைப் படுகிறது. மேலும் வேலை செய்யும் இடங்களில் மாற்றுத் திறானாளிகளுக்கு ஏற்ற கழிப்பறை வசதிகள் பெரும்பாலும் கிடையா. குறிப்பாக ஊன்று கோலின்றித் தனித்து நிற்க / உட்கார முடியாத பெண்களுக்கு ஏற்ற உயர்மட்டக் கழிப்பறைகள் எங்கும் அமைக்கப் படவில்லை. மேலும் மாற்றுத் திறனாளிப் பெண்டிர் மாதவிலக்கு நாட்களில் அவருக்குத் தேவையான கழிப்பிட வசதி சுத்த சாதனங்களோடு அமைக்கப் படுவதில்லை.
இத்தகைய அனுதின இன்னல்களில் மூழ்கிச் சகிப்போடு பொறுத்துக் கொண்டு நாட்களை வெறுப்புடன் தள்ளிவரும் மாற்றுத் திறனாளிதான் திருவெண்ணாமலை செங்கையில் வாழும் ஜி.ஜே. தமிழ்ச்செல்வி. அவருக்குள்ளவை இரண்டு தனித்துவச் சிறப்புகள் : ஒன்று அவர் ஓர் எழுத்தாளர். இன்னொன்று : மற்ற மாற்றுத் திறனாளிக்கு முன்வந்து உதவுபவர். தமிழில் கவிதை, கட்டுரை, கதை எழுதி வருகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு “இது நிகழாதிருக்கலாம்” நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. விண்முகில் என்னும் தனது இணைய வலையிதழிலும், இணையவெளி, திண்ணை போன்ற வலையிதழ் களிலும் எழுதி வருகிறார். அவரது கவிதை, கட்டுரைகள் பல திண்ணை.காம் வலையில் வெளிவந்துள்ளன.
அவரது வட்டாட்சி அலுவலுக வேலை அதிக மக்களைச் சந்திக்கும்படி வைத்தது. அதில் மாற்றுத் திறனாளிகளும் அடங்கினார்கள். ஒவ்வொரு வரின் கதையைக் கேட்ட போதும் ஏதோ ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் ஆணித்தரமான ஓர் எண்ணம் எழுந்தது. மாற்றுத் திறனாளி தோழி, நிர்மலாவைச் சந்தித்த பிறகு அது இன்னும் அதிகமாக வலுப்பட்டது. 2009 மார்ச்சில் ஹார்ட்பீட்டிரஸ்டு தொண்டு நிறுவனத்தைப் பற்றி திட்டமிட்டு. 2009 செப்டம்பர் 24 அன்று தான் அதைப் பதிவு செய்ய முடிந்தது.
அதன் பிறகு, சக்தி, கல்பனா, பிரதா, ஜோதி, தமிழரசி, என்று அவரது நட்பு வட்டம் நீண்டது. தோழியர் அங்கும் இங்குமாகச் சிதறிக்கிடந்த போதிலும், அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்து, ஊக்கப்படுத்திக் கொள்ளத் தவறிய தில்லை.
2011-இல் வாக்காளர் படங்களை ஸ்கேன் செய்து தரக் கணினி அறிவில்லாத தோழி நிர்மலாவைப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார். இதற்குக் கொடுக்கப்படும் தொகை கொஞ்சமாக இருந்தாலும் அவளின் வாழ்வாதாரத்திற்கு ஓரளவு பயன்படும் என்பது அவரது எண்ணம்.
அவரது முயற்சியில் 5 ஆவது வரையே படித்திருந்த நிர்மலாவை 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வைத்து, கம்யூட்டர் வகுப்பிற்கும் அனுப்பி இப்போது அவள்தான் படங்களை அவருக்கு ஸ்கேன் செய்து தருகிறாள். இந்த நிகழ்வு மாற்றுத் திறனாளிகளை வேலைக்காக உருவாக்குவது சாத்தியம் தான் என்ற எண்ணத்தை அவருக்குள் விதைத்தது.
அதன் பிறகு சக்தி, கலைச்செல்வி, என்று மாற்றுத்திறனாளி அல்லாத மற்ற பெண்களும் இணைந்தார்கள்.
அ
வருக்கு உதவத் தாரிணி பதிப்பக அதிபர், திரு.வையவன் அவர்கள் ஒரு லேப்டாப்பைத் [மடிக் கணனி] தந்து, தட்டச்சு செய்யப் புத்தகங்களையும் அனுப்பி அவர்களுக்கான ஒரு நிரந்தர வருவாய் கிடைக்கும் படி ஏற்பாடு செய்தார்.
ஓரளவு நடக்க முடிந்த மாற்றுத்திறனாளிகளே அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். ஆனால் வெளியூரில் இருப்பவர்களோ, 80 சதவீத ஊனத்தை உடையவர்களோடு இணைய முடியவில்லை. மாற்றுத்திறனாளி களுக்குக் கல்வியைக் கற்பிக்கவும், கணினிப் பயிற்சிகள் அளிக்கவும் “இதயத் துடிப்பு அறக்கட்டளை [Heartbeat Trust] என்னும் நிறுவனத்தைத் தன் இல்லத்தில் இப்போது அமைத்துள்ளார்.
அவர் அனுதினமும் ஓட்டிச் செல்லும் தனது மூன்று சக்கிர சைக்கிள் வாகனத்தைத் தன்னிரு கைகளால் சிரமமோடு இயக்கித் தற்போது செங்கை வட்டாட்சியாளர் அலுவலுகத்தில் 5000 ரூபாய் ஊதியத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்குக் கையால் ஓட்டுவதில் சிரமம் இருப்பதால் மோட்டார் வாகனத்துக்குப் பன்முறை விண்ணப்பம் செய்து மறுக்கப் பட்டுள்ளது. அவரால் பிளஸ் 2 படிப்பை முடிக்க இயல வில்லை. காரணம், தினம் பஸ்ஸில் ஏறிக் கல்விக் கூடத்துக்கோ, கல்லூரிக்கோ தனியாகச் செல்ல முடியாது. கல்லூரிப் படிகளில் ஏறித் தானாய்க் கல்லூரி செல்ல முடியாது. புத்தகங்களைக் கையில் ஏந்தி நடக்க இயலாது. மழை பெய்யும் போது, சைக்கிள் பயணத்தில் குடை பிடித்துக் கொள்ள முடியாது. பிளாஸ்டிக் மழை அங்கி இருந்தாலும் நனைந்து விடுகிறார். இப்போது தானே வீட்டில் படித்து தமிழ் பி.ஏ. பட்டப் படிப்புக்குப் பணம் கட்டி முயன்று வருகிறார்.
மாற்றுத் திறனாளிகளின் தேவைகள், கூக்குரல்கள் வெளியே கேட்ப தில்லை. தமிழ்ச்செல்வியின் அனுதினப் பயண நிகழ்ச்சிகளை அன்புடன் வெளியிட்டது முதன்முதல் திண்ணை வலையிதழ்தான். கடந்த ஒன்பது மாதங்களாய் வாரம் ஒருமுறையாகத் தொடர்ந்து அவரது கட்டுரைகள் வந்துள்ளன.
திண்ணை நண்பர்களே
தமிழ்ச்செல்வியின் குறிக்கோள் : மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆரம்பக் கல்வி, கணினிப் பயிற்சிகள் அளிப்பு. அதற்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் இவைதான்.
- இதயத் துடிப்பு நிறுவனத்துக்கு உங்களால் முடிந்தால், இயன்ற அளவு நிதி உதவி செய்யுங்கள்.
- உங்களுக்குத் தேவையற்ற இயங்கும் பழைய மடிக் கணினி, பீடக் கணினி [Laptop or Desktop Computers] இருந்தால் அவரது கல்விக் கூடத்துக்கு அனுப்பி வையுங்கள்.
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி,
செங்கை, திருவெண்ணாமலை
ஃபோன் : 95247 53459
சி. ஜெயபாரதன், கனடா
அக்டோபர் 10, 2014
- நாம்
- காதல் கண்மணிக்குக் கல்யாணம்
- தாம்பத்யம்
- பிஞ்சு உலகம்
- தந்தையானவள் – அத்தியாயம் 4
- ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—
- கு.அழகர்சாமி கவிதைகள்
- வாழ்க்கை ஒரு வானவில் – 24
- முகப்புகழ்ச்சியா நம் முகவரி?
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 96
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3
- தொடுவானம் -37. அப்பா ஏக்கம்
- அவனும் அவளும் இடைவெளிகளும்
- தலைதூக்கும் தமிழ்ச்செல்வி
- ஆசை துறந்த செயல் ஒன்று
- மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்
- 2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு
- உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி
- அண்ணன் வாங்கிய வீடு
- தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8
- மரபுக்குப் புது வரவு
- கம்பன் விழா 18-10-2014, 19-10-2014
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி,
செங்கம், திருவண்ணாமலை
தமிழ்நாடு, இந்தியா
ஃபோன் : 95247 53459
G J Thamil Selvi
thamilselvi94@gmail.com