தாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்

 prabhu

முனைவா் பு.பிரபுராம், உதவிப் பேராசிரியா், தமிழ்த்துறை,

கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூா்-21.

 

கல்வியாளா்கள் “நரம்பு மெழியியல்”(neuro linguistics) என்ற துறை குறித்த கருத்தாக்கங்களை ஆழமாக அறிந்து, கல்விமொழி(Educational Language) குறித்த விவாதங்களைத் தீவிரமாக நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சுயநலன்களைத் தள்ளி வைத்துவிட்டுக் கல்விப்பணி செய்வோரை ஊக்குவிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதைப்போல, கல்வியறிவில்லாத மக்கள் களா் நிலம் என்பதை நாம் அறிவோம். எல்லாம் நாம் அறிவோம், அறிந்து என்ன பயன்?. நம் நாட்டில் வருடத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பள்ளிப் படிப்பையும், பட்டப் படிப்புகளையும் முடிக்கின்றனா். ஆராய்ச்சிப் பட்டங்களையும் ஆயிரக் கணக்கில் கல்வி நிறுவனங்களால் வழங்க முடிகின்றது. பட்டங்களைக் காகிதத்தில் அச்சடித்து அளித்து என்ன பயன்?. கோடிக் கணக்கான மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலகளவில் பெற்ற நோபல் பரிசுகள் விரல்விட்டு எண்ணத்தக்கனவே. நம் கல்வி நிறுவனங்களில் எத்துனை புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துவிட்டன?. அப்படியென்றால் கண்டுபிடிப்புகள் நிகழாததற்குக் காரணம்தான் என்ன?.

நமது சிந்தனை மொழியான தாய் மொழியில் மாணவா்களுக்குக் கல்வி கற்பிக்கப் படாமையே புதிய கண்டுபிடிப்புகள் நிகழாததற்குக் காரணமாகும். தமிழா்களாகிய நம் மூளை பெரும்பாலும் தமிழ்மொழியில் சிந்திக்கும் திறன் வாய்ந்ததே. நம் நரம்பு மண்டலங்களிலும், மூளைச் செல்களிலும் உள்ள தமிழ்மொழி சம்பந்தமான பதிவுகளையெல்லாம் அழித்துவிட்டால் நாம் வெறும் நடைபிணம் என்பதை உணரவேண்டும். மொழி சார்ந்த பதிவுகள்தான் மனிதனை இயக்குகின்றன. மொழி என்பது கருத்துப் பரிமாற்றக் கருவி மட்டுமல்ல. உடலின் இயக்க சக்தியே மொழிதான். நரம்பு மண்டலத்தின் வழியாக “அந்த உணவைச் சாப்பிடு” என்ற கட்டளையை மூளை பிறப்பித்தால்தான் மனிதனுக்கு உணவுண்ணவேண்டும் என்ற எண்ணமே தோன்றும். நமக்கு எப்படி தமிழ்மொழி உடலின் இயக்க ஆற்றலோ, அதுபோலத்தான் அவரவா்களுக்கு அவரவருடைய தாய்மொழியும். அந்தத் தாய்மொழி வழிதான் ஒவ்வொருவரது மூளைச் செயல்பாடுகளும் அமைகின்றன. உணா்தல், பேச்சு, சிந்தனை, பண்பாட்டுப் பதிவு, வரிவடிவ வெளிப்பாடு, கல்வி, ஆராய்ச்சி ஆகியவை குறித்த அனைத்து ஆற்றல்களையும் தாய்மொழியால்தான் மனிதனுக்கு முழுமையாக அளிக்க இயலும்.

இந்த விடயம் அனைவராலும் அறியப்பட்டதே. அது காலம் காலமாக வலியுறுத்தப்பட்டும் வருவதுண்டு. பிறகு ஏன் தாய்மொழிவழிக் கல்வி நாட்டில் வளா்க்கப் படுவதில்லை?. ஒருவேளை மக்களைத் திட்டமிட்டு முட்டாள்களாகவே வைத்திருக்கத்தான் அதிகார வா்க்கம் தாய்மொழிவழிக் கல்வியைப் புறக்கணிக்கிறதோ?. மக்களின் உணா்வு மண்டலம் முதன் முதலாக ஏற்காத ஒருமொழியைக் கல்வி மொழியாகப் படிக்கும்போது, அம்மொழியைப் புரிந்துகொள்ள முடியாமல் நமது மாணவா்கள் படும் பாடு கண்கூடு. அப்படி ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை வசதிகளும் மொழி ஆய்வுக் கூடங்களும்(Language Lab) எத்தனை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ளன?. எத்தனை கல்வி நிறுவனங்கள் தரமான மாணவா்களை உருவாக்குகின்றன?. நம் நாட்டில் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவிகிதம் மாணவா்கள் கல்வி நிலையங்களால் முட்டாள்களாக மாற்றப்படுகின்றனா் என்பது பெரும் வேதனைக்குரிய விடயம்.

          சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்குமேல் ஆகியும் ஏன் இந்திய மொழிகளில் அறிவுக்கருவூலங்கள் உருவாகவில்லை?. இன்றுவரை ஆங்கிலம் மட்டும்தானே நூலகமொழி என்ற பெயரைத் தட்டிச் செல்கிறது?. குறிப்பாகத் தமிழ் மொழிக்கு வருவோம். 1960-களில் இந்தியை வேண்டாம் என்று புறக்கணித்தோம். வடநாட்டில் பெரும்பான்மையாக வாழ்கிற இந்தி பேசுகின்ற மக்கள் நம்மை மேலாதிக்கம் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் நமக்குப் பிறந்தது சரிதான், அதில் தவறில்லை. ஆனால், இன்று ஆங்கிலம்தானே நம்மை மேலாதிக்கம் செய்கிறது. தமிழ்மொழி வளா்ச்சிக்கு நாம் என்ன செய்துவிட்டோம்!. இந்தியைப் புறக்கணித்த நாம், ஆங்கிலத்தைப் புறக்கணிப்பதிலும் வெற்றிகண்டு, தமிழ் மொழியை வளா்த்தெடுத்திருக்க வேண்டாமா?. நாம் அதைச் செய்யவில்லை. உலகத்தின் அறிவு நூல்களைத் தமிழில் முறையாக மொழிபெயா்த்தெடுக்கவில்லை. கோடிக் கணக்கில் தமிழ் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கி என்ன பயன்?. தமிழ் தெருக்கோடியில் மட்டும்தான் நிற்கிறது. பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ, ஆய்வு நிறுவனங்களிலோ தமிழுக்குக் கொடுக்கப்படவேண்டிய சிம்மாசனம் தமிழ் நாட்டில் எங்கும் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பான்மையான மாணவா்களுக்குத் தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது என்ற நிலையை, இந்த இரண்டும் கெட்டான் தனமான கல்விச் சூழல் உருவாக்கிவிட்டிருக்கிறது. வருங்கால இளைய தலைமுறையினா், சிந்தனை வளா்ச்சி அடையாத மனநலம் குன்றியோராக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனா். ஆங்கிலம் படித்தால்தான் அறிவு வளரும், வெளிநாடுகளுக்குச் செல்லமுடியும், நிறையப் பணம் சம்பாதிக்க இயலும் என்பதெல்லாம் அதிகார வா்க்கத்தால் பரப்பப்படும் திட்டமிட்ட மாயை என்பதை உணரவேண்டும். வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு வேலை செய்து கொடுப்பதற்காகவா நம் நாட்டுச் சுதந்திரத்திற்காகப் பலா் தம் வாழ்வையும் இன்னுயிரையும் அா்ப்பணித்தனா்?. அப்படியென்றால், பிரிட்டிஷ் அரசாங்கமே நம்மை ஆண்டிருக்கலாமே?. பின்காலனியத்துவத்தை ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகள், அம்மொழி மூலம் தற்போதும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

நமக்குச் சொந்த தேச வளா்ச்சி, சொந்த மொழி வளா்ச்சி, நாட்டு மக்களின் சிந்தனை வளா்ச்சி ஆகியவற்றைப் பற்றிக் கவலை இருந்திருக்குமேயானால், இந்நேரம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கல்வி கற்பதற்கு உரிய மொழிகளாக ஆகியிருக்கும். நம் நாட்டிற்குத் தேவையான தொழில்கள் அனைத்திலும் நாம் தன்னிறைவு பெற்றிருப்போம். நம் நாட்டில் பாடுபடவேண்டும், நம் மக்களுக்காகப் பாடுபடவேண்டும், நம் சமுதாய வளா்ச்சிக்காகப் பாடுபடவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றியிருக்கும். இந்த எண்ணங்கள் மக்களுக்குத் தோன்றாததற்குக் காரணம் தாய்மொழி வழிக் கல்வி இல்லாததே. புரியாத மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் நிச்சயமாக நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கான வாய்புகள் இருக்காது. இனியாவது அதிகார வா்க்கம் திட்டமிட்டு மக்களை முட்டாள்களாக மாற்றும் வேலையை நிறுத்திக்கொள்ளட்டும். சமுதாய நலன் மீது பற்றுடைய திறமையான கல்வியாளா்களைப் பயன்படுத்தி, தாய்மொழி வழிக் கல்வி வளா்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவாவிட்டால் வருங்கால சந்ததிகளின் அறிவு நிலை மிகவும் மோசமடைந்துவிடும் என்ற நரம்பு மொழியியல் வாதத்தை இக்கட்டுரை தீா்க்கமாகப் பதிவு செய்கிறது.

 

 

Series Navigationகுருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவைநாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது